தினமணி கதிர்

பாரம்பரியம்: சிலைமலைப்பட்டியிலிருந்து சிங்கப்பூர் வரை!

தெய்வங்களை அலங்கரிக்க உதவும்  "திரு அச்சு' தயாரிக்கும் தொழில் மிகவும் தொன்மையான தொழில். பல மாவட்டங்களில் சிறிய அளவில் தயாரிக்கப்பட்டாலும் மதுரை மாவட்டம், பேரையூர் அருகே உள்ள சிலைமலைப்பட்டி கிராமத்தினர

எஸ். பாண்டியன்

தெய்வங்களை அலங்கரிக்க உதவும்  "திரு அச்சு' தயாரிக்கும் தொழில் மிகவும் தொன்மையான தொழில். பல மாவட்டங்களில் சிறிய அளவில் தயாரிக்கப்பட்டாலும் மதுரை மாவட்டம், பேரையூர் அருகே உள்ள சிலைமலைப்பட்டி கிராமத்தினர் தயாரிக்கும், திருவாச்சிகளுக்கும் ஐம்பொன் சிலைகளுக்கும் தனி மவுசு உண்டு. இங்கிருந்து இந்தியாவின் பல பகுதிகளில் மட்டுமன்றி சிங்கப்பூர், மலேசியாவிலும் வரவேற்பு அதிகரித்திருப்பதிலிருந்து இதைப் புரிந்து கொள்ளலாம்.

  நாட்டின் பண்பாடு, பழக்க வழக்கங்களைப் பறைசாற்றுவதில் கோயில் சிற்பங்களுக்கு முக்கிய பங்குண்டு. அந்த வகையில், பாரம்பரியம் மிக்க சிற்பங்கள், சுவாமி சிலைகளை அலங்கரிக்கும் திருவாச்சிகளை தயாரித்து உலகளவில் முத்திரை பதித்து வருகின்றனர் இக்கிராம மக்கள்.

  இவர்கள் கடந்த பல ஆண்டுகளாக இத்தொழிலை குலத் தொழிலாகச் செய்து வருகின்றனர். ஆரம்ப காலத்தில் சுமார் 300 குடும்பங்கள் இத்தொழில் செய்து வந்தன.

  ஐம்பொன் தகடுகள் விலையேற்றம் உள்பட பல்வேறு காரணங்களால், இத்தொழிலைத் தொடர முடியாமல் ஏராளமான குடும்பங்கள் நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்ந்ததால், இத்தொழில் புரிவோர் படிப்படியாக குறையத் துவங்கினர். சிலைமலைப்பட்டியில் உள்ள முனியாண்டி ஸ்தபதி சிற்பக் கூடத்தில் மட்டுமே ஐம்பொன் வார்ப்புகள் உள்ளன.

  இங்கு ஐம்பொன் சிலைகள், திருவாச்சிகள், வெள்ளித் தேர், வெள்ளிக் கவசங்கள், கோயில் கொடிமரம், கோபுரக் கலசங்கள் மற்றும் கலைநயம் மிக்க அழகிய சிற்பங்களும் உருவாகின்றன.

  இந்தச் சிற்பங்கள் வெள்ளி, செம்பு, பித்தளை,ஈயம் உள்ளிட்ட ஐம்பொன் கலவைகளினால் செய்யப்படுகின்றன. மண்ணால் உருப்பெற்று அதற்கு மேல் மெழுகு ஊற்றி, அடுத்து ஐம்பொன் கலவையை உருக்கி ஊற்றுகின்றனர்.

  இக்கலவை காய்ந்தவுடன் மண்ணையும் மெழுகையும் பிரித்து விடுகின்றனர். சில நகாசு வேலைகள் செய்த பின்பு சிற்பம் உயிர் பெறுகிறது. இங்கு தயாராகும் இந்த சிற்பங்கள் சிங்கப்பூர், மலேசியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.

  இத்தொழிலில் பரம்பரையாக ஈடுபட்டுள்ள முனியாண்டி ஸ்தபதி கூறியதாவது:

  ""உலோகப் பொருள்களை வைத்து சிறந்த கைவினைஞர்கள் மூலம் சிருஷ்டி சாஸ்திரப்படியும், ஆகம முறைப்படியும் ஐம்பொன் சிற்பங்களைத் தயாரித்துத் தருகிறோம்.

  தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற பல கோயில்களில் எங்களது சிற்பங்கள், திருவாச்சிகள் உள்ளன. அவற்றில்ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வெள்ளிக் கவசம், பாபநாசம் சிவன் கோயில் கருவறைக் கதவு மற்றும் திருவாச்சி, மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் கோயில் பொற்கிழி, சிற்ப வேலைகள், திருநள்ளாறு சனீஸ்வரன் சுவாமிக்கு திருவாச்சி, ஐம்பொன் சிலைகள், சதுரகிரி மகாலிங்கம் கோயில் திருவாச்சி போன்றவை எங்களது கைவண்ணத்தில் உருவானவை என்று கூறுவதில் பெருமைப்படுகிறோம்.

  தவிர, பல்வேறு மாநிலங்கள், நாடுகளில் உள்ள கோயில்களுக்கும் எங்களது தயாரிப்புகள் அனுப்பிவைக்கப்படுகின்றன.

  தற்போது இத்தொழிலில் சற்று தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. சிறந்த கைவினைஞர்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. மேலும் உலோக பொருள்களின் விலை உயர்வு ஆகியவை சறுக்கலை ஏற்படுத்தி உள்ளது. இத்தொழில் பழமையானது என்றாலும் பண்பாடும் கலாசாரமும் இத்தொழில் மூலம் காக்கப்படுகிறது'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT