ந வக்கிரகங்களில் 9 வது கிரகம் கேது கிரகமாகும். இதற்கு ஆங்கிலத்தில் நெப்டியூன் என்பார்கள். அரபு நாட்டு வானவியல் சாஸ்திரத்திலும், இந்திய வானவியல் சாஸ்திரத்திலும் இந்த கிரகத்தைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது.
இந்தக் கிரகத்துக்கு நிரந்தர இடம் கிடையாது என்பதால் மற்ற 7 கிரகங்களிலும் சிறிது காலம் தங்கியிருந்து சுற்றிக் கொண்டிருக்கும். இக்கிரகம் ஞானம் தருதல், வம்சத்தை விருத்தி செய்தல், மோட்சம் கொடுத்தல், மரணத்தை உண்டாக்குதல் போன்ற பணிகளையும், தீங்குகளையும் ஏற்படுத்தும் குணம் கொண்டது. இதனால் இந்தக் கிரகத்தின் காலத்தை எமகண்ட காலம் என்று சொல்வார்கள். இந்நேரத்தில் எந்த செயல் செய்தாலும் விபத்தோ, மரணமோ ஏற்படும் என்று மக்கள் நம்புகின்றனர்.
கேது கிரகத்தின் தோஷத்தை நீக்குவதற்காகவும், அதனால் ஏற்பட்ட பின் விளைவுகளையும், கெடுதல்களையும் நீக்குவதற்காகவும், தர்ப்பைப் புல்லைப் பயன்படுத்துவார்கள். தர்ப்பைப் புல் கேது கிரகத்துடன் தொடர்புள்ள பல்வகைத் தாவரமாகும்.
இராமபிரானுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளதாகவும், இரண்டாவது பிள்ளையின் பெயர் குசா எனவும் அவருடைய பெயரைக் குறிக்கும் வகையில் இந்தப் புல்லுக்கு குசா புல் என்று பெயரிடப்பட்டு வடநாட்டு மக்கள் அழைக்கின்றார்கள்.
நம்நாட்டில் நவக்கிரகக் கோவில்கள் உள்ளன. அவற்றில் கேது கிரகத்துக்குத் தனியாக ஒரு விக்கிரகம் அமைத்து அதற்கு பூஜை செய்த பின் தர்ப்பைப் புல்லைத் தொட்டு வணங்கும் பழக்கம் இன்றும் கூட இந்து சமுதாய மக்களிடம் காணப்படுகிறது.
தர்ப்பைப்புல் கேது கிரகத்தின் கதிர் வீச்சுகளை தன் உடல் முழுவதிலும் நிரப்பிக் கொண்டிருக்கும். அதைத்தான் மருத்துவகுணம் என வானவியல் மூலிகை சாஸ்திரம் கூறுகிறது.
பொதுவாக கேது கிரகம் மரணத்தை விளைவிக்கக் கூடிய கிரகம் என்று சொல்லப்படுவதால் மரணத்தை உண்டாக்கும் அபாயகரமான நோய்களுக்கு சிகிச்சையளிக்க தர்ப்பைப் புல்லை மூலிகை மருத்துவர்கள் பயன்படுத்துகின்றார்கள்.
முக்கியமாக சிறுநீரக நோய்கள், சிறுநீரகக் கற்கள், பாம்புக்கடி விஷம், இரத்தம் கலந்த சிறுநீர், சிறுநீர்ப்பைத் தொற்று, புண், இரத்த வாந்தி, காயங்கள், இரத்த மூலம், அளவு கடந்த மாதவிடாய் போக்கு, வெள்ளைப்பாடு போன்ற நோய்களில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.
*தர்ப்பைப் புல் உஷ்ணத்தை அகற்றி உடலைக் குளுமை செய்கிறது.
*உடலில் தாய்ப்பாலை அதிக அளவு சுரக்கச் செய்கிறது.
*சிறுநீரை அதிக அளவில் பெருக்கச் செய்கிறது.
*பாம்புக்கடி விஷத்தை அகற்றுகிறது.
*வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று தோஷங்களை நீக்கிச் சுத்தம் செய்கிறது.
*சிறுநீரகக் கற்களைச் கரைக்கிறது. இரத்தத்தில் தேங்கும் யூரியா, கிரியாட்டினின் கழிவுப் பொருட்களை அகற்றுகிறது.
*உடல் எடையைக் குறைக்கவும் பயன்படுகிறது.
*ஆஸ்துமாவுக்கு நல்ல மருந்தாக அமைகிறது.
கேது கிரகம் 12 ராசிகளுக்கும் உரியது. முக்கியமாக மீனம் ராசியுடன் தொடர்பு கொண்டது. அஸ்வினி நட்சத்திரம், மகம் நட்சத்திரம், மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் பிப்ரவரி 19 முதல் மார்ச் 20 வரை பிறந்தவர்களுக்கும் தர்ப்பைப் புல் பயன்தரும் முக்கியத் தாவரமாகத் திகழ்கிறது.
கேது கிரகத்தின் கெட்ட கதிர்வீச்சுகள், முக்கியமாக கால் பாதங்களைப் பாதிக்கக் கூடியவை. கேது கிரக நேரத்தில் பிறந்தவர்களுக்கு நிலையான ஒரு குணமில்லாமல் இரண்டு குணங்கள் இருக்கும். அனைவருடனும் பகைத்துக் கொள்ளும் குணம் இருக்கும். இந்தக் கிரகத்தின் தோஷத்தைப் போக்க தர்ப்பைப் புல்லைப் பயன்படுத்தலாம்.
தர்ப்பப் புல் வாணியம்பாடியில் உள்ள டாக்டர் அக்பர் கவுஸரின் முகல் கார்டனில் உள்ள வானவியல் மூலிகைத் தோட்டத்தில் வளர்க்கப்பட்டு வருகிறது.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.