முகப்பு
தினமணி கதிர்

மாற்றம்: அறச்சாலையான சிறைச்சாலை!

உயரமான மதில்சுவர்; அதன் உச்சியில் எப்போதும் மின்சாரம் பாயும் மின்வேலி. அனைத்துப் பகுதிகளிலும் கடுமையான காவல். மனதில் பயத்தை ஏற்படுத்தும் வெளித் தோற்றம். வாழ்நாளில் யாரும் ஒரு முறைகூட செல்ல விரும்பாத இ

Updated On : 20 செப்டம்பர், 2012 at 7:21 PM
பகிர்:
Updated On : 25 டிசம்பர், 2023 at 7:19 PM

உயரமான மதில்சுவர்; அதன் உச்சியில் எப்போதும் மின்சாரம் பாயும் மின்வேலி. அனைத்துப் பகுதிகளிலும் கடுமையான காவல். மனதில் பயத்தை ஏற்படுத்தும் வெளித் தோற்றம். வாழ்நாளில் யாரும் ஒரு முறைகூட செல்ல விரும்பாத இடம். இதுதான் வேலூர் மத்திய சிறை.

  இதுதான் ஒவ்வொரு சாமானியனின் மனதிலும் தோன்றும். செய்த குற்றத்துக்குத் தண்டனை பெற்ற கைதிகள் அடைக்கப்படும் இடம் என்பதால், மக்களின் மனதில் இதுபோன்ற தோற்றங்கள் ஏற்படுவதும் இயல்புதான்.

  ஆனால், கல்விக்கூடமாக, தொழிற்கூடமாக, சிறைவாசிகளின் உணர்வுகளோடு உறவாடும் இல்லமாக, அவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும் அறச்சாலையாக விளங்குகிறது வேலூர் மத்திய சிறை. இந்த மாற்றத்துக்குக் காரணம், ""சிறைத்துறை இயக்குனர் ஆர்.நடராஜ் அவர்கள் அளித்து வரும் ஆதரவே'' என்கிறார் வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளரான நா.சேகர். இனி மாற்றங்கள் குறித்து அவர் நம்மிடம் பேசியதிலிருந்து...

 

Advertisement

  ""தூங்கும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் எதையாவது செய்யப் பழகியதன் மூலம் தங்களது வாழ்க்கையை மிகுந்த அர்த்தமுள்ளதாக மாற்றிக்கொண்டிருக்கின்றனர் இங்கிருக்கும் சிறைக் கைதிகள்.

  வளர்கல்வித் திட்டம் மூலம் பெறப்பட்ட 1000 சிலேட்டுகள், 1000 புத்தகங்களைக் கொண்டு எழுதப் படிக்கப் பயின்று வருகின்றனர். சிறைக்குள் இருக்கும் பட்டதாரிகள் 10 பேர், மற்ற 250 சிறைவாசிகளுக்குப் பாடம் நடத்துகின்றனர். கைநாட்டு வைத்து சிறைக்குள் வரும் நபர், விடுதலையாகி வெளியே செல்லும்போது கையெழுத்து போடும் அளவுக்கு மாற்றுகின்றனர். 8ம் வகுப்பு வரை படித்தவர்களை எஸ்எஸ்எல்சி எழுதவும், பிளஸ் 2 வரை படித்தவர்களை பட்டப் படிப்பு படிக்கவும் ஊக்கமளிக்கின்றனர்.

  தற்போது 75 பேர் பட்டப் படிப்புக்கு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளனர். 3 பேர் புழல் சிறையில் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்குப் பட்டப் படிப்புக்கு உதவ, தன்னார்வ அமைப்புகள் மூலம் ஓய்வு பெற்ற பேராசிரியர்களை நியமித்துள்ளனர்.

  அடுத்த விஷயம், தொழில் உற்பத்தியை ஊக்குவிப்பது. தமிழக காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை காவலர்களுக்கான ஷூக்கள் இங்கிருந்தே தயாரித்து அனுப்பப்படுகின்றன. இதன் உற்பத்தியை அதிகப்படுத்த தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  காரணம், சிறையில் உள்ள ஒவ்வொருவராலும் எவரோ ஒருவராவது நிச்சயம் பாதிக்கப்பட்டிருப்பார். சிறையில் வேலைபார்த்து மாதம் ரூ.3 ஆயிரம் வருமானம் ஈட்டும் சிறைக் கைதியின் ஊதியத்தின் 50 சதம் அவரது உணவு, உடை போன்றவற்றுக்குச் செலவிடப்படுகிறது. மற்றொரு 20 சதம், அவரால் பாதிக்கப்பட்ட நபர் சிறுதொழில் செய்ய முழு மானியத்துடன் தரப்படுகிறது. மீதமுள்ள 30 சதம் சிறைவாசிக்குச் சொந்தம்.

  இதேபோல, வேலூர் மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் பெரிய மருத்துவமனைகள் பயன்படுத்தும் பேன்டேஜ் இங்கே விசைத்தறி மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் "பைல் பேடுகள்'  இங்கு தயாரிக்கப்படுகின்றன என்பது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

  ரோட்டரி சங்கத்துடன் இணைந்து 10 தையல் மிஷன்கள் பெற்று, சிறைவாசிகளுக்குத் தையற்பயிற்சியும் அளிக்கப்படுகிறது. 20 ஏக்கர் நிலத்தைத் தோட்டமாக்கி, அங்கு கீரை, காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. இவற்றைத் தினமும் சிறைவாசிகளே பராமரிக்கின்றனர்.

  வருகைப் பதிவேடுடன் தினசரி நடக்கும் வகுப்புகள், மும்முரமாக இயங்கும் தொழிற்சாலைகள், தோட்டப் பராமரிப்புகள் எனப் பரபரப்புக்குப் பஞ்சமில்லை வேலூர் சிறைச்சாலையில்.

  ஆனால் இத்தனையையும் தானாக முன்வந்து செய்கின்றனர் சிறைவாசிகள். இதற்குக் காரணம், அவர்களது உணர்வுகளைத் தொடும் வகையிலான நிகழ்ச்சிகள் சிறையில் நடந்ததே.

  குடும்பத்தைக் காண முடியாமல் தவிக்கும் சிறைவாசிகளின் மனச்சோர்வைப் போக்க, பொங்கல் தினத்தன்று அவர்களது குடும்பத்தாரை அழைத்து நன்கொடையாளர்கள் மூலம் புத்தாடைகள் பெறுவதற்கு ஏற்பாடு செய்தோம். சிறைவாசிகளின் குழந்தைகள் மூலம் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழுப்புரம், "சத்தியாகிரக சாரிட்டபுள் டிரஸ்ட்' இயக்குநர் எம்.ராமகிருஷ்ண சாஸ்திரி, ஒவ்வொரு சிறைவாசிகளின் காலிலும் விழுந்து திருந்தக் கோரினார். மன இறுக்கத்தைப் போக்க யோகா நிகழ்ச்சிகள், சிறைவாசிகளின் குறைகளைக் கேட்க தினசரி நேரம் ஒதுக்கி அவற்றைத் தீர்த்து வைப்பது, உணவைச் சுகாதாரமாக மாற்றியது போன்ற பல நிகழ்ச்சிகள் மூலம் அவர்களது மனதுக்குள் எங்களால் இடம்பெறுவதற்கு முடிந்தது. இதைத் தொடர்ந்தே இத்தகைய சாதனைகளை எங்களால் நிகழ்த்த முடிந்தது'' என்றார் நெகிழ்ச்சியுடன்.

  சிறைவாசிகள் சிலரிடம் பேசியதில், "சிறை கண்காணிப்பாளர் நா.சேகர் பொறுப்பேற்ற கடந்த 3 மாதங்களில் மிகப்பெரிய மாற்றத்தை இச்சிறை கண்டுள்ளது. சிறைவாசிகளிடம் மரியாதை குறைவான சொல்களை சிறைத்துறையினர் பயன்படுத்துவதில்லை. உயரதிகாரியைக் கண்டால் மரத்துக்குப் பின்னால் ஓடி ஒளிந்த காலம் தற்போது மாறியிருக்கிறது. சிறைக்குள் எந்தக் காவலரின் துணையுமின்றி கண்காணிப்பாளரைச் சந்தித்து, குறைகளைத் தெரிவிக்கும் சுதந்திரமும் கிடைக்கிறது. தொழில் ரீதியாக எங்களது தேவையைப் புரிந்து கொண்டு அவற்றையும் நிறைவேற்றுகின்றனர்' என்கின்றனர்.

  1000 பேர் வரை அடைக்கப்படும் இந்த வேலூர் மத்திய சிறையில், நீண்டகால தண்டனை பெற்ற சிறைவாசிகளே இவை அனைத்திலும் ஈடுபட்டுள்ளனர். குற்றங்களைச் செய்து சிறை சென்றாலும், அங்கும் தீய செயல்களில் ஈடுபடுவதைத் தடுத்து, நல்வழிப்படுத்த சிறைத்துறை எடுக்கும் இதுபோன்ற முயற்சிகளுக்குப் பலன் நிச்சயம் கிட்டும்!

படங்கள்: எல்.அனந்தராமன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.