சாதனை : அரசுப் பள்ளியில் படித்து... ஐ.ஏ.எஸ். ஆனவர்!
மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பதவிகளுக்காக நடத்திய தேர்வில் தமிழகத்திலேயே மூன்றாவது மாணவராகவும் இந்திய அளவில் 53-வது ரேங்கிலும் வெற்றி பெற்றிருக்கிறார் க.வீரபாண்டியன் என்னும்
மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பதவிகளுக்காக நடத்திய தேர்வில் தமிழகத்திலேயே மூன்றாவது மாணவராகவும் இந்திய அளவில் 53-வது ரேங்கிலும் வெற்றி பெற்றிருக்கிறார் க.வீரபாண்டியன் என்னும் இளைஞர். "விளையும் பயிர் முளையிலேயே தெரியும்' என்பதற்கு இவர் நடமாடும் உதாரணமாகியிருக்கிறார். இவர் பன்னிரண்டாம் வகுப்பில், புவியியல் பாடத்தில் மாநிலத்திலேயே இரண்டாவது இடம் பெற்ற அன்றே "தினமணி'க்கு அளித்த பேட்டியில், "எதிர்காலத்தில் நான் சட்டம் படித்து, ஐ.ஏ.எஸ். ஆவேன்' என்று கூறியிருக்கிறார். அவ்வாறே இன்றைக்கு ஐ.ஏ.எஸ். ஆகியும் இருக்கிறார்!
இந்த நிலைக்கு இவர் வருவதற்கு இவர் பட்ட கஷ்டங்கள் பலப்பல... அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர் இவர். இவரது தந்தை பாத்திரங்களை தலைச்சுமையாக வைத்து வியாபாரம் செய்து வருபவர். தாயார் வீட்டு வேலை செய்துவருபவர். நினைத்ததை முடித்திருக்கும் வீரபாண்டியன் அவர் கடந்து வந்த பாதையை குறித்து நம்மிடம் பேசியதிலிருந்து....
""மதுரைதான் சொந்த ஊர். நான்தான் குடும்பத்தில் பெரிய பையன். எனக்கு அடுத்து தம்பியும், தங்கையும் இருந்தனர். நான் ஐந்தாவது முடித்தவுடனேயே டீக்கடையில் வேலை பார்த்து வந்தேன். ஆறாவது படிக்கும்போது பட்டறையில் வேலை பார்த்து வந்தேன். ஏழாவது படிக்கும்போது ஹோட்டலிலும், எட்டாவது படிக்கும்போது கோழிக்கறி கடையிலும் வேலை பார்த்தேன். ஒன்பதாவது, பத்தாவது படிக்கும்போது அரவிந்த் கண் மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளராக பணி செய்தேன். பதினொன்று, பன்னிரண்டாவது படிக்கும்போது மதுரை, அண்ணாநகர் பகுதியிலிருக்கும் புரோட்டா கடையில் வேலை பார்த்து வந்தேன். இப்படி வேலை செய்து கொண்டே படிப்பையும் தொடர்ந்து கொண்டிருந்த என்னைப் பற்றிய செய்தியை முதலில் வெளியிட்டது "தினமணி' பத்திரிகைதான்.
அரசுப் பள்ளியில் பிளஸ் டூ தேர்வில் புவியியல் பாடத்தில் மாநிலத்திலேயே இரண்டாவது அதிக மதிப்பெண் பெற்றதற்காக அந்தச் செய்தியை வெளியிட்டனர். அந்தச் செய்தியைப் படித்த அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி, உடனடியாக என்னுடைய பெயரில் கல்விச் செலவுக்காக ரூபாய் 1 லட்சம் பணத்தை வங்கியில் அரசு சார்பில் டெபாஸிட் செய்தார்.
இதைத் தொடர்ந்து பொதிகைத் தொலைக்காட்சியிலும் "வெளிச்சத்தின் மறுபக்கம்' நிகழ்ச்சியில் என்னுடைய பேட்டி ஒளிபரப்பானது. லயோலா கல்லூரி நிர்வாகம் எனக்கு பட்ட மேற்படிப்பு படிப்பதற்கு உதவியது. அங்கு நான் பி.ஏ., சமூகவியல் படித்தேன். தொடர்ந்து பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் பணிபுரிந்து வந்தேன். தற்போது அம்பேத்கர் கல்லூரியில் முதலாண்டு சட்டமும் படித்து வருகிறேன்.
கடந்த பாராளுமன்றத் தேர்தல் தொடங்கும் சமயம் நான் ஐ.ஏ.எஸ். தேர்விற்காக என்னைத் தயார்படுத்தத் தொடங்கினேன். ஐந்தாண்டுகளில் அடுத்த பாராளுமன்றத் தேர்தல் தொடங்கியிருக்கும் சமயத்தில், இறுதியாக என்னுடைய ஐ.ஏ.எஸ். கனவு நனவாகியிருக்கிறது. தமிழ்நாடு ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தின் இயக்குனர் பிரபாகரன், "சினர்ஜி' பயிற்சி மையத்தின் இயக்குனர் ஓ.பி.சித்தார்த், (இந்த பயிற்சி மையத்தில் சிலகாலம் பயிற்சியாளராகவும் இருந்தேன்.) எனக்கு தமிழ் போதித்த மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ் பேராசிரியர் இளங்கோ, லயோலா கல்லூரி பேராசிரியர் அமிர்த லெனின் ஆகியோரின் அன்பான வழிநடத்துதல் நான் வெற்றி பெற்றதற்கு முக்கியக் காரணம்.
அம்பேத்கரின் வாழ்க்கைச் சரித்திரத்தை முழுமையாகப் படித்திருக்கிறேன். தன்னுடைய சொந்த வாழ்க்கையை விட பொது வாழ்க்கைக்கு அவர் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட சம்பவங்கள் எனக்கு தூண்டுகோளாக அமைந்தன. சுருக்கமாகச் சொன்னால், அம்பேத்கரைப் படித்தேன்; ஐ.ஏ.எஸ். ஆனேன் என்று கூடச் சொல்லலாம்!
வறுமை ஒழிப்பு திட்டங்களைச் நடைமுறைப்படுத்துவதில் இருக்கும் சிக்கல்களை தீர்ப்பதை என்னுடைய முக்கிய லட்சியமாக வைத்திருக்கிறேன். நமது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கூட, ""அரசு பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 ரூபாய் ஒதுக்கினால் அதில் 15 ரூபாய்தான் கடைசியாகப் போய் மக்களிடம் சேர்கிறது'' என்று ஒருமுறை கூறியிருக்கிறார்.
ஒரு தனிமனிதனாக இந்தச் சமூகத்திற்கு செய்ய வேண்டிய பணிகள் எவ்வளவோ இருக்கின்றது. நான் ஐ.ஏ.எஸ்.ஆகியிருப்பது என்னுடைய எண்ணத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருப்பதாக நினைக்கிறேன்.