ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மரத்துப் போன கால்கள்!
என் இரு கால்களும் மரத்துப் போன மாதிரி இருக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பு அளவோடு இருக்கிறது. இதற்கு என்ன காரணம்? எப்படி சரி செய்வது? க.நா.இராஜேஸ்வரன், மொரட்டுப்பாளையம் மூன்று தோஷங்களாகிய வாத, பி
என் இரு கால்களும் மரத்துப் போன மாதிரி இருக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பு அளவோடு இருக்கிறது. இதற்கு என்ன காரணம்? எப்படி சரி செய்வது?
க.நா.இராஜேஸ்வரன், மொரட்டுப்பாளையம்
மூன்று தோஷங்களாகிய வாத, பித்த, கபம் ஆகியவை உடலெங்கும் பரவியிருந்தாலும் அவை தமக்கென்று முக்கியமான இடங்களை உடலில் ஆக்ரமித்துள்ளன. அந்த வகையில் இதயத்திற்கு மேல் தலை உச்சி வரை கப தோஷத்தின் இருப்பிடமாகவும், இதயம் முதல் தொப்புள் வரை பித்த தோஷத்தின் வசிப்பிடமாகவும், தொப்புள் பகுதிக்குக் கீழிருந்து கால் விரல் நுனி வரை வாத தோஷத்தின் தங்குமிடமாகவும் மனித உடலில் அமைந்துள்ளன.
இடுப்புப் பகுதியைச் சார்ந்த முதுகுத் தண்டுவடத்தின் உள்ளேயிருந்து வெளியே கிளம்பும் நரம்புகள், கால் பகுதிகளின் உள்ளே வழிநெடுகவும் கிளைகளாகப் பரவி, பாதம் வரை வந்து சேருகின்றன. இவற்றின் செயல்பாடுகள் அனைத்தையும் வாயு தன் பிடியில் வைத்திருக்கிறது. வாயுவின் சீற்றம் அல்லது அதன் செயல்பாடுகளில் ஏற்படும் தொய்வின் மூலம், நரம்புகளின் செயல்களும் மந்தமாவதால் கால்கள் மரத்துப் போகலாம்.
Advertisement
முதுகுத் தண்டுவடத்தின் இடையே அமைந்துள்ள வில்லைகளின் பிதுங்குதல் மூலமாக ஏற்படும் நரம்புகளின் அழுத்தம் காரணமாகவும் கால்கள் மரத்துப் போகலாம். குடலில் ஏற்படும் வாயுவின் தேக்கம் மலச்சிக்கலுக்குக் காரணமானால் அதன் மூலமாகவும் கால் நரம்புகள் துவண்டு மரத்துப் போகலாம்.
தன் சக்திக்கு மீறிய உழைப்பை கால்களுக்குத் தந்து, அவைகளுக்கு ஏற்படும் சோர்வை மதிக்காமல் மேன்மேலும் அதனை உழைக்கச் செய்வதின் காரணமாகவும் கால் நரம்புகள் மரத்துப் போகலாம்.
இப்படியாக ஒரு நோய்க்கான காரணம் ஏதேனும் ஒருவிதமாகவோ அல்லது பலவகையிலோ அமையலாம். காரணம் என்ன என்பதை அறிந்து அதனை மேலும் தொடராமல் நிறுத்தி, ஏற்பட்டுள்ள நரம்புகளின் பலவீனத்தை மாற்றுவதற்கான முயற்சிகளைச் செய்யவேண்டும்.
இதில் முதற்காரியமாக குடலில் ஏதேனும் வாயுத் தேக்கமும் பழைய மலங்களின் அடைசலும் இருந்தால் அவற்றை நீக்குவதற்கான சிகிச்சையைச் செய்யவேண்டும். ஏனென்றால் இவற்றின் தேக்கத்தை வைத்துக் கொண்டு எந்த மருந்து சாப்பிட்டாலும் அது தற்காலிக நிவாரணத்தை மட்டுமே தரும். இதற்கு மிகச் சிறந்த வைத்திய முறையான "வஸ்தி' எனப்படும் எனிமா முறையை ஆயுர்வேதம் பரிந்துரை செய்கிறது.
உடலெங்கும் மூலிகைத் தைலத்தை வெதுவெதுப்பாகத் தடவி, மூலிகை இலைகளால் ஒத்தடம் கொடுப்பதன் மூலம் குடல் பகுதி மிருதுவாகிவிடும். அதன்பிறகு வாந்தி, பேதி போன்ற முறைகளால் குடல் பகுதியை சுத்தமாக்கி, வஸ்தி சிகிச்சையை செய்வது உத்தமமுறையாகும்.
நகர்ந்து செல்லும் வாயுவின் செயலை உடல் சீராக அடைந்துவிட்டால் நரம்புகளின் மரத்துப் போனத் தன்மை குறைந்துவிடும். இருந்தாலும் அவற்றின் பூரணமான செயலுக்குத் திரும்ப, "தைலதாரா' எனப்படும் மூலிகைத் தைலத்தை உடலெங்கும் 12 அங்குலம் மேலிருந்து வெது வெதுப்பாக ஊற்றும் முறையும், "நவரக்கிழி' எனப்படும் அறுபது நாளில் விளையும் அரிசியை சித்தாமுட்டி வேர்க் கஷாயத்துடன் காய்ச்சப்பட்ட பாலில் வேகவைத்து, துணியில் மூட்டை கட்டி உடலெங்கும் தேய்த்து விடும் சிகிச்சை முறைகளாலும் விரைவில் குணம்பெற வாய்ப்பிருக்கிறது.
சாயத்தில் நனைக்கப்பட்ட துணி சாயத்தை ஏற்றுக் கொண்டு நீரை வெளிவிடுவது போல வாந்தி, பேதி, வஸ்தி போன்ற மருத்துவ முறைகளால் உடலில் உள்ள தோஷங்கள் வெளிப்படுகின்றன. கெட்டுப் போகாத தாதுக்களையும் நிலைநிறுத்துகின்றன.
உள் மருந்தாக தான்வந்திரம் 101, சஷீரபலா 101, கந்த தைலம் போன்றவற்றை மருத்துவரின் ஆலோச னைப்படி சாப்பிட்டு வரலாம்.
(தொடரும்)
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை -602 103 (பூந்தமல்லி அருகே)
செல் : 9444441771