ஆன்மிகம்: மனிதநேயக் குடில்
கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் உங்கள் கிறித்துவ நண்பர்களின் வீடுகளில் குடில் என்ற கொலு போன்ற ஓர் அமைப்பைப் பார்த்திருப்பீர்கள். யேசு கிறிஸ்துவின் பிறப்பைக் காட்சிப்படுத்தியிருப்பார்கள். வீட்டின் நடுநாய
கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் உங்கள் கிறித்துவ நண்பர்களின் வீடுகளில் குடில் என்ற கொலு போன்ற ஓர் அமைப்பைப் பார்த்திருப்பீர்கள். யேசு கிறிஸ்துவின் பிறப்பைக் காட்சிப்படுத்தியிருப்பார்கள். வீட்டின் நடுநாயகமான ஓர் இடத்தில் சிறிய மலை போன்ற ஓர் அமைப்பும் அதற்குள் ஒரு சிறிய வீடும் சுற்றிலும் புல் தூவியிருக்கும். வீட்டினுள்ளே பாலன் யேசுவின் திருஉருவமும் அவரைச் சுற்றி அன்னை மரியாவும் அன்புத் தந்தை சூசையப்பரும் இருப்பார்கள். சுற்றிலும் ஆடுகளும் மாடுகளும் இடையர்களும் இருப்பார்கள். ஒவ்வொரு வீட்டிலும் அவரவர் கள் ரசனைக்கேற்ப விதவிதமான குடில்கள் அமைக்கப்பட்டிருக்கும்.
இப்படி ஓர் அமைப்பை ஏற்படுத்தும் வழக்கம் 1223}ஆம் ஆண்டு புனித பிரான்சிஸ் அசிஸ் என்ற துறவியால் ஏற்படுத்தப்பட்டது. அவர் யேசு
பிறந்த பெத்லகேம் சென்றபோது அங்கு அவர் கண்ட காட்சி அவர் மனதில் ஏற்படுத்திய பாதிப்பால் இப்படி ஒரு யோசனை அவருக்குத் தோன்றியதாம். அவர் தனது இல்லத்தில் இப்படி ஒரு சிறிய காட்சியை அலங்கரித்து வைத்தார். கிறிஸ்துமஸ் சமயத்தில் அவரைச் சந்திக்க வந்தவர்கள் அங்கு நின்று வணங்கிச் சென்றனர். அவரைப் பார்த்து இன்னும் சிலர் தங்கள் வீடுகளிலும் அதைப் போன்ற சிறிய அமைப்புகளை ஏற்படுத்தி கிறிஸ்து
பிறப்பு விழாவை மேலும் சிறப்பாகக் கொண்டாட ஆரம்பித்தனர்.
இந்த வழக்கம் படிப்படியாக மேற்கத்திய நாடுகள் எங்கும் பரவியது. மெழுகுச் சிலைகள், களிமண் சிலைகள் என்று ஆரம்பித்து இன்று பிளாஸ்டிக், பேப்பர், கண்ணாடி போன்றவற்றிலும் இச் சிறிய சிலைகள் செய்யப்பட்டு அவரவர்களின் கற்பனாசக்திக்கேற்ப விதவிதமான வடிவங்களில் இந்தக் குடில்கள் ஒவ்வொரு நாட்டிலும் அமைக்கப்படுகின்றன.
தேவாலயங்களிலும் இந்த குடில் அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். கிறிஸ்தவர் களின் தலைமைக் குருவான போப்பாண்டவர் வசிக்கும் வத்திக்கான் நகரத்திலுள்ள புனித பீட்டர் ஆலயத்தில் ஆண்டுதோறும் இந்தக் குடில் மிகவும் பிரமாண்டமாக வடிவ மைக்கப்பட்டு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
இந்தக் குடில் அமைக்கும் வழக்கத்தில் மேலும் பல புதுமைகள் புகுத்தப்பட்டு சில நாடுகளிலும் சில ஆலயங்களிலும் உயிருள்ள குடில்கள் அமைக்கப்படும் வழக்கமும் இருந்து வருகிறது. அதாவது குழந்தை யேசு போன்ற உடையலங்காரத்துடன் ஒரு குழந்தையும் மரியன்னை, சூசையப்பர் போன்ற வேடமணிந்த இருவரும் மற்றும் உயிருடன் ஆடுகள், மாடுகள் ஆகியோரைக் கொண்டு அமைக்கப்படும் இத்தகைய குடில்களுக்கு மிகுந்த வரவேற்பிருந்தபோதிலும் மனித உரிமை ஆர்வலர்களிடமிருந்து சற்றே எதிர்ப்பும் இருந்துகொண்டுதானிருக்கிறது.
பைபிளிலுள்ள மத்தேயு, லூக்காஸ் சுவிசேஷங்களில் வர்ணிக்கப் பட்டிருக்கும் இயேசுவின் பிறப்பைப் பற்றிய காட்சிகளைக் கொண்டே இக் குடில்கள் வடிவமைக்கப்படுகின்றன. அகஸ்டஸ் சீசர் காலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டபோது குடிமக்கள் அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களில் இருக்க வேண்டும் என்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அதனால் மரியன்னையும் சூசையப்பரும் தங்கள் சொந்த ஊரான பெத்லகேமுக்குச் சென்ற போது அங்கு தங்குவதற்கு இடம் கிடைக்காததால் ஒரு மாட்டுத் தொழுவத்தில் தங்கினர். அங்குதான் குழந்தை யேசு பிறந்தார் என்பது வரலாறு. இதை முன்னிட்டுத்தான் குடில்களின் பின்புலம் மாட்டுத் தொழுவம் போன்று வடிவமைக்கப்படுகின்றது.
மேலும் இயேசுவின் பிறப்பு முதல் முதலில் அந்த ஊரிலிருந்த இடையர்களுக்கு வானதூதர் ஒருவர் மூலம் அறிவிக்கப்பட்டது. இதனால்தான் குடில்களில் ஆடுகளும் மாடுகளும் இடையர்களும் காணப்படுகின்றன. மேலும் இயேசுவின் பிறப்பை அறிவிக்கும் முகமாக வானில் ஒரு வால்நட்சத்திரம் தோன்றியது. அதன் பொருட்டு வீடுகளிலும் வண்ணவிளக்குகளால் ஒளியூட்டப்பட்ட நட்சத்திரங்கள் தொங்கவிடப்படுகின்றன.
1982}ஆம் ஆண்டு அருள்தந்தை போப் ஜான் பால், வத்திக்கான நகரத்தில் குடில் மற்றும் கிறிஸ்துமஸ் மரம் அமைக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினார். கிறிஸ்துமஸ் மரம் வண்ண விளக்குகளுடன் அலங்காரப் பொருள்களுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும். இம் மரத்தின் கீழ் பரிசுப் பொருள்கள் வைக்கப்பட்டு அங்கு வரும் சிறுவர் சிறுமியருக்கு அவை வழங்கப்படுவது வழக்கம். வீடுகளிலும் சிலர் இந்தப் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.
இந்தக் குடில் மற்றும் கிறிஸ்துமஸ் நட்சத்திரம், கிறிஸ்துமஸ் மரம் அமைத்துப் பரிசுகளை வழங்கிக் கொண்டாடுவதற்கு முன்னுதாரணமாக இருப்பவர் இயேசு கிறிஸ்துதான். ஒவ்வொரு மனிதனும் தன்னைத் தானே நேசிப்பது போல பிறரையும் நேசித்து வாழ்ந்தால் உலகில் எந்தவித சண்டை சச்சரவுகளுக்கும் இடமிருக்காது; எங்கும் அமைதியும் மகிழ்ச்சியுமே காணப்படும். மனிதம் தழைக்கும் என்பதை வலியுறுத்துவதையே தனது வாழ்வில் லட்சியமாகக் கொண்டு வாழ்ந்தவர் இயேசுபிரான். அவர் போதித்த மனிதநேயமே இப்போதைய உலகின் முக்கிய தேவை!