தொழில்நுட்பம்: விஞ்ஞான விவசாயம்!
மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ற வகையில் விளை நிலங்களை அதிகரிக்க முடிவதில்லை. இதனால் விளைச்சலை அதிகப்படுத்தும் நோக்கில் அதிக உரங்களை நிலத்தில் இடுவதால் எதிர்மறை பலன் கிடைப்பதுடன் நிலத்தின் உயிர்த் தன்
மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ற வகையில் விளை நிலங்களை அதிகரிக்க முடிவதில்லை. இதனால் விளைச்சலை அதிகப்படுத்தும் நோக்கில் அதிக உரங்களை நிலத்தில் இடுவதால் எதிர்மறை பலன் கிடைப்பதுடன் நிலத்தின் உயிர்த் தன்மையும் மாறி வருகிறது.
விவசாயம் பழமையான தொழிலாக இருப்பதனால் பாரம்பரிய முறையிலேயே நடந்து வருகிறது. உயரிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் போது விளைச்சல் அதிகரிக்கிறது என்பதை விவசாயிகளுக்கு விளக்கிடும் வகையில் திண்டுக்கல்லில் 4 நாள் விவசாய கண்காட்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றது. கண்காட்சிக்கான நோக்கம் குறித்து மாவட்ட ஆட்சியர் மா.வள்ளலாரிடம் கேட்டோம்.
""நெல் விவசாயத்தில் எகிப்து, ஜப்பான், சீனா போன்ற நாடுகள் ஏக்கருக்கு 34 முதல் 47 மூட்டைகள் வரை உற்பத்தி செய்கின்றன. ஆனால் இந்தியாவில் ஏக்கருக்கு 16 மூட்டைகள் மட்டுமே விளைகிறது. பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்கள் முதல் இரண்டு இடத்தில் உள்ளது.
Advertisement
நெல் உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் உள்ள தமிழகத்தில் 20 முதல் 23 லட்சம் ஹெக்டேரில் 80 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது போதிய மழையின்மை, வறட்சி, விவசாயத்திற்கான ஆட்கள் கிடைப்பதில் தொய்வு, நெல்லுக்குப் பதில் தோட்டக் கலைப் பயிர்கள் ஆகியவை நெல் உற்பத்தியை பாதிக்கிறது.
எனவே உணவு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தில் உயர் தொழில் நுட்பங்களை கடைப்பிடிப்பதன் அவசியத்தை விவசாயிகள் உணர வேண்டும் என்பதற்காகத் தான் தென் மாவட்ட அளவில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் வேளாண் கண்காட்சி கடந்த ஜன 23 முதல் ஜன 26 வரை நடத்தப்பட்டுள்ளது.
110 அரங்குகள் மூலம் விவசாயத்தில் உயர் தொழில்நுட்பங்களை விளக்கும் வகையிலும் ஒரே இடத்தில் தொழில்நுட்ப இயந்திரங்களைக் காட்சியாக வைத்தும், அதன் பயன்கள், பலன்கள், விலை, மானியம் மற்றும் வங்கிகள் மூலம் கிடைக்கும் கடன் வசதியை வங்கியாளர்களைக் கொண்ட அரங்கின் மூலம் விவசாயிகளுக்கு எடுத்துரைத்து தொழில் நுட்ப முறைக்கு விவசாயியின் மனதைக் கொண்டு செல்வதும் அறுவடைக்குப் பின் உழவு என்பதில் உணவுப் பொருட்களை சிறந்த முறையில் பேக்கிங் செய்து அதிக லாபத்துடன் விற்பனை செய்வது குறித்த தொடர் கருத்தரங்கம் நடத்தப்பட்டுள்ளது. சுருக்கமாகச் சொன்னால் விவசாயத்தையும் ஒரு லாபகரமானத் தொழிலாக மேற்கொள்ள முடியும் என்பதை விளக்கியது இந்தக் கண்காட்சி.
விவசாயத்தில் இயந்திரங்கள் என்று பார்க்கும் போது நேரடி நெல் விதைப்பு கருவி முக்கிய இடத்தைப் பெறுகிறது. நெல் நடவைப் பெண்கள்தான் செய்து வந்தனர். காலை முதல் மாலை வரை இடுப்பை வளைத்து குனிந்தபடியே ஒரு கையில் நாற்றை வைத்துக் கொண்டு மறுகையில் நடும் போது சிறிதுகூட ஓய்வு கிடைக்காது. தற்போது ஆட்கள் பற்றாக்குறை காரணமாக நெல் சாகுபடி பாதிக்கப்பட்டு வருகிறது.
மேலும் நடவு, பராமரிப்பு, அறுவடை கூலி என அதிகளவில் செலவு ஆவதால் சாகுபடியில் லாபம் பாதிக்கப்பட்டுள்ளது. நேரடி நெல் விதைப்பு கருவியைப் பயன்படுத்துவதன் மூலம் 20 செ.மீ. இடைவெளியில் வரிசை வரிசையாக ஒரு ஏக்கரில் ஒரு நபரைக் கொண்டு 3 மணி நேரத்தில் விதைத்திட முடியும். மனித ஆற்றலைக் கொண்டு எளிதாக இக்கருவியை இயக்கிட முடியும். வேளாண் பொறியியல் துறை 3640 ரூபாய் மதிப்புள்ள இக்கருவியை 50 சதவிகித மானியத்தில் ரூ.1,820க்கு வழங்குகிறது. மனிதர்களைக் கொண்டு விதை விதைக்கும் போது ஏக்கருக்கு 30 கிலோ விதை தேவையாகிறது.
இக்கருவியைப் பயன்படுத்தும் போது 8 கிலோ விதை போதுமானது. இம்முறை மூலம் நடவு வரிசையாக இருப்பதால் களைக்கருவியையும் பயன்படுத்தலாம். இந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவது மூலம் மகசூல் பெருகி லாபம் அதிகரிக்கும்.
மெஷின் மூலம் நெல் நாற்று நடும் கருவியை ஒரு நபர் எளிதில் இயக்கி 22 செ.மீக்கு 17 செ.மீ என்ற அளவில் நாளொன்றுக்கு 4 ஏக்கர் என்ற அளவில் நடவு செய்ய முடியும். இதன் மூலம் ஒரு ஏக்கருக்கு நடவு செலவு ரூ.2,500 வரை சேமிக்கலாம்.
வயல்களில் என்னதான் உழுதாலும் நிலத்தின் மேற்பரப்பிலிருந்து 45 செமீக்கு கீழே ஒரு வருடத்தில் தானாகவே கடினத் தன்மை உருவாகி விடுகிறது. பயிரின் வேரில் இருந்து 1.5 மீ அளவுக்கு கீழ்வரை நெகிழ்ச்சியான மண் தன்மை இருந்தால் தான் நீர்சேகரிக்கப்பட்டு பயிருக்குக் கிடைக்கும்.
அப்போது பயிரின் உற்பத்தித் திறன் அதிகரிக்கும். இம் முறையைப் பயன்படுத்துவதே இல்லை. உளிக் கலப்பை என்ற தொழில் நுட்பம் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. ரூ.8 ஆயிரம் விலை உள்ள இந்த உளிக்கலப்பை 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
மரக்கன்றுகள், பழக்கன்றுகள், வாழை போன்ற பயிர்களுக்கு குழிகள் மனித சக்தியைக் கொண்டு எடுத்து வருகின்றனர். ஆனால் இயந்திர தொழில் நுட்பத்தை குழி எடுப்பதற்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். மனித சக்தியைப் பயன்படுத்தி ஒரு ஏக்கரில், 10 வேலையாட்கள் சேர்ந்து 2 நாட்கள் செய்யும் வேலையை இந்த இயந்திரம் 3 மணி நேரத்திற்குள் செய்து முடித்து விடும்.
இதேபோல் ஆழச்சால் அகலபாத்தியுடன் விதைக்கும் கருவி, மினி டிராக்டர், களை எடுக்கும் கருவி, அறுவடைக் கருவி என பல கருவிகளை ஒரே இடத்தில் கொண்டு வந்து விவசாயிகளுக்கு தொழில் நுட்பம் குறித்து விளக்கியும், கருத்தரங்கும் நடத்தப்பட்டுள்ளது'' என்றார் ஆட்சியர்.
இந்த தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயம் மேற்கொள்ளும் போது விளைச்சல் அதிகமாகும். உணவு உற்பத்தி பெருகும், கட்டுப்படியான விலை விவசாயிகளுக்கு கிடைக்கும். "ஒரு விவசாய நாட்டில் விவசாயம் பெருகுவதற்கான வழியை சொல்வதற்கு மீடியாக்களும் முன்வருவதில்லை என்பதுதான் வேதனை' என்பதை காட்சிக்கு வந்திருந்த பலரும் தெரிவித்தனர்.