சினிமாத்துறைக்கு வந்துகொண்டிருக்கும் அரசியல்வாதிகளின் வாரிசுகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள இன்னொரு பெயர் ரோஹித். இவர், அதிமுக புள்ளியும் நடிகருமான எஸ்.எஸ்.சந்திரனின் மகன். இவருடைய இண்டோ பிரெஞ்ச் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் நூற்றுக்கணக்கான ஆங்கிலத் திரைப்படங்களின் உரிமைகளைப் பெற்று இந்தியாவில் வெளியிடவிருக்கிறது. இந்த நிறுவனம் மூலம், மாதம் ஒரு ஹாலிவுட் படத்தை இந்தியாவில் அந்தந்த மாநில மொழிகளில் டப் செய்து வெளியிடுகிறார்கள். அதன் முதல் கட்டமாக உலக அளவில் பெரும் வசூல் சாதனை புரிந்த "லாஸ்ட் சிட்டி ரைடர்ஸ்' படத்தை "மந்திரக்கோல்' என்ற பெயரில் வெளியாகிறது. பூமியில் தொடர்ந்து ஏற்பட்ட தட்ப வெப்ப நிலை மாற்றத்தால் பனிமலைகள் உருகி கடல் நீர் மட்டம் 18 அடியாக உயருகிறது. இதனால் பூமியின் நிலப் பரப்பு குறைகிறது. நீர் மட்டத்தைக் குறைத்து பூமியைப் பழைய நிலைக்குக் கொண்டு வரக் கூடிய சக்தியும் அதற்கான வழிமுறைகளும் எகிப்திய தண்ணீர்க் கடவுளான சோமிக் மோஸஸின் மந்திரக் கோலில் உள்ளது. அந்த மந்திரக்கோலைத் தேடி நாயகனும் அவனது நண்பர்களும் ஆபத்தான பயணத்தை மேற்கொள்கிறார்கள். வில்லன் கூட்டமும் அந்த மந்திரக் கோலைக் கைப்பற்றத் துடிக்கிறது. இறுதியில் என்ன நடக்கிறது என்பதை சாகசக் காட்சிகளுடன் சொல்வதே கதை என்று கூறும் ரோஹித்தின் நிறுவனம், வெளிநாட்டுத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் கார்ட்டூன் தொடர்களையும் தமிழில் டப் செய்து விரைவில் தமிழ் சேனல்களில் ஒளிபரப்பவிருக்கிறது.
நாயகன் ஆகும் வில்லன்
கமல்ஹாசனின் "மகாநதி' படத்தில் அறிமுகமாகி வில்லனாகக் கொடூரம் காட்டிய மகாநதி சங்கர், "மூத்த பங்காளன்' என்ற படத்தின் மூலம் கதாநயகன் ஆகிறார். "வேடப்பன்' படத்தை இயக்கிய ஆனைவாரி ஸ்ரீதர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்குகிறார். இந்தப் படம், தமிழில் முதல்முறையாக பி எஸ் டெக்னிக் வைஸ்காம் கேமிராவில் படமாக்கப்படுகிறது. முழு படமும் ஸ்பாட் எடிட்டிங் முறையில் உருவாகிறது.
மீண்டும் டைரக்ஷன்
தரமான படம் என பல தரப்பிலும் பாராட்டுகளைப் பெற்ற "பீஷ்மர்' படத்தை இயக்கிய ரஞ்சித், நீண்ட இடைவெளிக்குப் பிறகு "உயர்ந்தவன்' என்ற படத்தை சத்தமில்லாமல் இயக்கி வருகிறார். புதுமுகங்களுடன் ரஞ்சித்தும் நடிக்கும் இந்தப் படத்தில் அவருடைய வித்தியாசமான கேரக்டர், சினிமா வட்டாரத்தில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.