முகப்பு
தினமணி கதிர்

கலை: பேசா மழலைகள்; பேசும் ஓவியங்கள்!

ஓடையில் நீரைக் குடித்தபடி நம்மை மிரட்டும் தொனியில் பார்க்கும் புலி, பச்சைப் பசேல் புல்வெளிகள், கீழ் வானைக் கீறியபடி வெளிக் கிளம்பும் சூரியன், தகதகக்கும் மலைச் சிகரங்கள்.. என தத்ரூபமாக வரையப்பட்டிருக்க

Updated On : 27 டிசம்பர், 2023 at 4:16 PM
பகிர்:

ஓடையில் நீரைக் குடித்தபடி நம்மை மிரட்டும் தொனியில் பார்க்கும் புலி, பச்சைப் பசேல் புல்வெளிகள், கீழ் வானைக் கீறியபடி வெளிக் கிளம்பும் சூரியன், தகதகக்கும் மலைச் சிகரங்கள்.. என தத்ரூபமாக வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. சென்னை, திருவான்மியூர், லேடஸ் பிரிட்ஜ் சாலை, ஆனந்த் அபார்ட்மென்ட்ஸில் இயங்கும் 'தர்ஷன் ஆர்ட் கேலரி'யில் நிரந்தரக் கண்காட்சியாக வைக்கப்பட்டிருக்கும் இந்த பேசும் ஓவியங்களை வரைந்திருப்பவர்கள் காது கேட்காத, வாய் பேசமுடியாத குழந்தைகள் என்பது நம் இதயத்தைப் பிசையும் நிஜம்!

மாற்றுத் திறனாளிகளை இனம் கண்டு அவர்களின் ஓவிய, இசைத் திறமைகளை வளர்த்து, அவர்களை இந்தச் சமூகத்தில் நம்பிக்கையோடு வாழ்வதற்கான வழிகளைச் செய்வதை நோக்கமாகக் கொண்டது 'ஃப்ரீடம் அறக்கட்டளை' என்னும் தன்னார்வ அமைப்பு. இதன் நிறுவனராக இருக்கும் டாக்டர் சுந்தர் மறுவாழ்வு மருத்துவத்துறையில் பல ஆண்டுகளாக சேவை செய்துவருபவர். மாற்றுத் திறனாளிகளின் ஓவியப் படைப்புகளை எல்லோரும் எப்போதும் பார்ப்பதற்கு வசதியாக தன்னுடைய வீட்டையே ஓவியக் கண்காட்சி கூடமாக்கியிருக்கிறார்.

மேதாப் ஆலம், சுவேதா, மானஸி, லோகேஷ், தினேஷ், கார்த்திகேயன் என்னும் ஆறு பேரின் கைவண்ணத்தை இந்தக் கண்காட்சியில் காணமுடிந்தது. இவர்களின் மொழி மெüனமாக இருந்தாலும், இவர்களைப் பற்றி பிறர் புகழ்ந்து பேசும் வகையில் இருக்கின்றன இவர்களின் படைப்புகள்.

மேதாப் ஆலம் - பார்வையிலே இருபது வயது வாலிபன். பழக்கத்திலே... நான்கு, ஐந்து வயது சிறுவன்! மூளை வளர்ச்சி அந்தளவுக்கே இருக்கும் இவரின் நீர் வண்ண ஓவியங்கள் நம்மை ஆச்சரியப்படவைக்கின்றன. குறிப்பாக நீர் வண்ண ஓவியங்களை மிக நேர்த்தியாக கையாள்கிறார். 2006-ஆம் ஆண்டு குடியரசுத் தலைவரின் தேசிய விருதும், 2007-ஆம் ஆண்டு யுவகலா பாரதி விருதும் பெற்றிருப்பவர் மேதாப் ஆலம். அவரின் ஓவியத் திறமைக்கு ஒரு சல்யூட்!

சுவேதா - பேச்சு, செவித் திறன் குறைந்தவர். தற்போது அரசு கவின்கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவி. பலவிதமான முக அமைப்புள்ள மனித உருவங்களையும், அரூப ஓவியங்களையும், இயற்கை காட்சிகளையும் கேன்வாஸில் அஃரிலிக் ஓவியங்களாக பிரமிக்கும் வகையில் கொண்டு வந்திருக்கிறார். இவர், இந்தியன் ஆயில் நிறுவனம் நடத்திய எரிபொருள் சேமிப்பு வாரவிழா போட்டிகளில் தொடர்ந்து நான்காண்டுகள் முதல் பரிசு பெற்றுள்ளாராம்!

மானஸி - செவித் திறன் குறையுடைய இவர் லிட்டில் ஃபிளவர் கான்வென்டில் பதினொராம் வகுப்பு மாணவி. இவரின் கோட்டோவியங்கள் சிறப்பாக இருக்கின்றன. கேன்வாஸிலும் அஃரலிக் முறையில் தன்னுடைய திறமையை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். பரந்த நிலப்பரப்பில் நம் கண்களுக்கு மிக அருகில் பிரம்மாண்டமான யானை வந்தால், அதன் கரிய விளிம்புதானே நமக்குத் தெரியும். அதே காட்சி மயக்கத்தில் இருக்கும் மானஸியின் ஓவியம், அவரின் தூரிகைத் திறமைக்கு ஒரு சான்று!

லோகேஷ் - செவித்திறன் குறையுடைய இவர், சென்னை, புனிதலூயி மேனிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு மாணவர். இவரின் ஓவியங்கள் பலவும் பசுமையை நாம் மறந்தால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும்? புவி வெப்பமடைவதின் விளைவுகள் எப்படி இருக்கும்? என்பதை மையப்படுத்தி இருந்தன.

கார்த்திகேயன் - இவரும் புனிதலூயி மேனிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவர். இயற்கையின் அற்புதமான தரிசனங்களை தன்னுடைய ஓவியங்களில் கொண்டுவந்திருக்கிறார் இவர்.

உங்களின் வீட்டு வரவேற்பு அறையை அலங்கரிக்க, உங்களுக்கு மிகவும் பிடித்தவர்களுக்குப் பரிசுப் பொருளாக அளிக்க, உங்களின் நண்பருக்கு கல்யாணப் பரிசாக அளிக்க.... இப்படி பல சந்தர்ப்பங்களுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும் இவர்களின் ஓவியங்கள்.

தகவல் தொழில்நுட்பத் துறை, ஊடகத் துறையில் பணியிலிருப்பவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் இந்த நிரந்தர ஓவியக் கண்காட்சிக்கு ஒருமுறை வருகை தரலாம்!

வீட்டிலிருக்கும் குழந்தைகளை அவசியம் இந்தக் கண்காட்சிக்கு அழைத்து வந்து காட்டுங்கள். குழந்தைகளுக்கு படிப்பதற்குப் பயிற்சி கொடுக்கும் நாம் ஓவியங்களைப் பார்ப்பதற்குப் பயிற்சி கொடுப்பதில்லை. காட்சி இன்பம் என்னும் அனுபவத்தை உங்களின் குழந்தைகளுக்கும் அளியுங்கள்!

முழு கட்டுரையைப் படிக்க →