தினமணி கதிர்

கழிவு நீரிலிருந்து இயற்கை உரம்!

கழிவுநீரைப் பார்த்தால் பொதுவாக எல்லாருமே மூக்கைப் பொத்திக்கொண்டு ஒதுங்கிச் செல்வோம். அதேபோல காய்ந்த சருகுகளைப் பார்த்தாலும், அவற்றை ஒதுக்கிவிட்டே நடப்போம். இப்படி... நம்மால் ஒதுக்கப்படும் இரண்டு பொருள

ஜெயப்பாண்டி

கழிவுநீரைப் பார்த்தால் பொதுவாக எல்லாருமே மூக்கைப் பொத்திக்கொண்டு ஒதுங்கிச் செல்வோம். அதேபோல காய்ந்த சருகுகளைப் பார்த்தாலும், அவற்றை ஒதுக்கிவிட்டே நடப்போம். இப்படி... நம்மால் ஒதுக்கப்படும் இரண்டு பொருள்களை வைத்து உரம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு, அதில் ஓரளவு வெற்றியும் கண்டுள்ளார் கல்லூரி மாணவர் ஸ்ரீஹரி.மதுரை அருகே உள்ள கே.எல்.என். தகவல் தொழில்நுட்பக் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் ஸ்ரீஹரியின் புதிய முயற்சிக்கு அங்கீகாரம் வழங்குவதுபோல சான்று அளித்துள்ளது மதுரை வேளாண்மைக் கல்லூரியின் மண் மற்றும் சுற்றுப்புறச்சூழல் பிரிவு ஆய்வு மையம்.

ரசாயன உரங்களால் உடல்நலத்துக்கும் சுற்றுப்புறச்சூழலுக்கும் ஏற்படும் பாதிப்பைக்  கருத்தில் கொண்டு, இயற்கை உரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இதுபோன்ற முயற்சிகள் தேவை என வரவேற்றுள்ளனர் விவசாயிகள்.

எளிய முறையில் எல்லோராலும் வீட்டிலேயே தயாரிக்க முடிந்த இப்புதிய உரத்தை உருவாக்கிய பொறியியல் கல்லூரி மாணவர் ஸ்ரீஹரியை நாம் சந்தித்துப் பேசியதிலிருந்து...

உங்களைப் பற்றி கூறுங்களேன்?

சென்னை அசோக் நகரில் நாங்கள் வசிக்கிறோம். அப்பா மாரிச்சாமி சிப்காட்டில் உதவிப் பொது மேலாளராகப் பணியாற்றுகிறார். அம்மா, பிளஸ் டூ படிக்கும் தங்கை என அளவான குடும்பம். சென்னை ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தேன். படிக்கும் போதே ஏதாவது சமூகத்துக்கு நம்மால் முடிந்ததைச் செய்து புகழ்பெற வேண்டும் என்ற சிந்தனையுடனேயே இருந்தேன். அதற்கு இப்போது செயல்வடிவம் கொடுக்க முயன்றுள்ளேன்.

உங்கள் புதிய ஆய்வு முயற்சியைப் பற்றி?

பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டுப் படிப்பில் ஆய்வுப் பாடமும் உள்ளது. அதன்படி, ஒவ்வொரு மாணவரும் ஏதாவது ஒரு பொருளை எடுத்துக்கொண்டு அதை ஆராய்ந்து கட்டுரையாகச் சமர்ப்பிக்க வேண்டும். அதன்படியே நானும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையிலான இயற்கை உரம் தயாரிப்பது குறித்த கருப்பொருளை எடுத்து ஆய்வை மேற்கொண்டேன்.

ஆய்வை எவ்வாறு மேற்கொண்டீர்கள்?

இதுவரை மாட்டுச் சாணம், சிறுநீர் உள்ளிட்ட ஒன்பது வகை இயற்கைப் பொருள்களின் சேர்க்கைகளை வைத்தே இயற்கை சார்ந்த உரம் தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே அதை விடுத்து நேரடியாக சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உகந்தவகையில் உரம் தயாரிக்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஏற்கெனவே, இதுபோன்ற முயற்சியில் ஈடுபட்டோரது கருத்துகளை எல்லாம் அறிந்து அதில் சற்று வேறுபட்டு கழிவுநீர் மூலம் உரம் தயாரிப்பதை ஆய்வாக மேற்கொண்டேன். தற்போது கழிவுநீரை சுத்திகரித்து மீண்டும் அதை பயன்பாட்டுக்கு ஏற்ப மாற்றும் திட்டம் இந்தியாவில் செயல்படுத்தப்படுகிறது.

கொடைக்கானலில் இதுபோன்ற திட்டம் செயல்பட்டுவரும் நிலையில் அங்கு சென்று இயற்கை உரம் தயாரிக்கும் எனது திட்டத்தை பரிசோதனை செய்து பார்த்தேன்.

ஆய்வு குறித்து விளக்கமாகக் கூறுங்கள்...?

கழிவுநீரைச் சுத்தம் செய்யும்போது அதில் மண் கலந்த கலவையான கழிவுப்பொருள்கள் கிடைக்கும். அந்தக் கழிவையும், வீட்டில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிக் கழிவுகளையும் சேர்த்தே இந்தப் புதிய உரத் தயாரிப்பில் ஈடுபட்டேன். இதில் காய்ந்த சருகுகள் மற்றும் உலர்ந்த மலர்களையும் சேர்த்தால் உரத்தினால் தாவரங்களுக்குக் கிடைக்கும் சத்துகள் அதிகரிக்கும். அதன்படியே 100 கிராம் கழிவுப் பொருளுடன், 1 கிலோ காய்கறிக் கழிவுகளை சேர்த்து உரம் தயாரிக்க முடியும்.

உரம் தயாரிக்கும் முறையை விளக்குங்கள்?

சிறிய பூந்தொட்டி அல்லது அதேபோன்ற மண் பாத்திரம் தேவை. அதில் அடியில் கழிவுநீரிலிருந்து சேகரிக்கப்பட்ட கழிவுகளைக் கொட்டவேண்டும். அதன் மேல், காய்கறிக் கழிவுகளை நிரப்பவேண்டும். பின்னர், அவற்றின் மீது காய்ந்த சருகுகள் அல்லது உலர்ந்த மலர்களைப் போடவேண்டும். அதன் மீது தண்ணீரை தெளிக்கவேண்டும். இவற்றை நிழலிலோ, அல்லது வெயிலிலோ பத்து நாள்களுக்குக் காய வைக்கவேண்டும். அவ்வாறு வைத்துவிட்டு எடுத்தால் "கருப்பு வண்ணத்தில்' இயற்கை உரம் தயாராகிவிடும்.

உரத்தை தயாரிக்க பெரிய அமைப்பு வேண்டுமா?

வீடுகளில், ஹோட்டல்களில் இருந்து தினமும் கிடைக்கும் காய்கறிக் கழிவை வைத்தே உரத்தை தயாரிக்கலாம். எவ்வளவு உரம் தேவைப்படுகிறதோ, அந்த அளவுக்குப் பாத்திரத்தை வைத்து தயாரிக்கவேண்டும். உரம் தயாரிப்பதுடன் அதிலிருந்து பெறும் வாயு மூலம் எரிபொருளையும் பெறத்தக்க வகையிலும் ஆய்வை மேற்கொள்ள இருக்கிறேன். உரத்தை நெல் உள்ளிட்ட பயிர்களுக்கும், கத்தரி, தக்காளி செடிகளுக்கும் பயன்படுத்தினால், விளைச்சல் நன்றாக இருக்கும். ஆனால், இந்த உரத்தில் நோய்  தாக்கும் பூச்சிகள் ஏதும் சாகாது. பயிர்களுக்கும், காய்கறிச் செடிகளுக்கும் தேவையான நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் என அனைத்து சத்துகளும் இந்த உரத்தில் இருப்பதால் பயிர்கள் நன்றாக வளர்ந்து பயனளிக்கும்.

கழிவுப்பொருள்கள் மூலம் தயாரிக்கப்படும்  உரத்தால் உற்பத்தியாகும் காய்கறிகளைச் சாப்பிடுவதால் பாதிப்பு ஏதும் இருக்குமா?

பாக்டீரியா என்பவை நல்ல விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடியவைதான். சாக்கடை நீரில் நேரடியாக விளைவிக்கப்படும் கீரைகள், காய்கறிகளைவிட அதிக பாதிப்பை இந்த இயற்கை உரம் ஏற்படுத்தாது என நம்பலாம். என்றாலும், பாக்டீரியா போன்ற நுண்கிருமிகளது பாதிப்பு இல்லாத வகையில் உரம் தயாரிக்க எதிர்காலத்தில் திட்டமிட்டுள்ளேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT