சேவை: சர்வதேசத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள்!
மாற்றம் ஒன்றுதான் மாறாமல் இருப்பது என்பார்கள். இந்தப் புவியில் மனித இனத்தைத் தவிர பிற உயிர்களும் வளமாக வாழ்வதற்கான சூழ்நிலைகளை ஆராயும் நோக்கத்தோடு, அதற்கான யோசனைகளை கருவாகக் கொண்டு பள்ளி மாணவர்கள் தயா
மாற்றம் ஒன்றுதான் மாறாமல் இருப்பது என்பார்கள். இந்தப் புவியில் மனித இனத்தைத் தவிர பிற உயிர்களும் வளமாக வாழ்வதற்கான சூழ்நிலைகளை ஆராயும் நோக்கத்தோடு, அதற்கான யோசனைகளை கருவாகக் கொண்டு பள்ளி மாணவர்கள் தயாரிக்கும் குறும்படப் படங்களுக்கான போட்டியை "டிசைன் ஃபார் தி சேஞ்ச்' என்னும் உலகளாவிய அமைப்பு சமீபத்தில் நடத்தியிருக்கின்றது. பள்ளிக் குழந்தைகள் எடுக்கும் குறும்படங்களை இணையம் வழி நடக்கும் போட்டிகளுக்கு அனுப்பியிருக்கின்றன உலகம் முழுவதும் இருக்கும் 20 ஆயிரம் பள்ளிகள். தமிழ்நாட்டளவில் 200 பள்ளிகள் தங்களின் குறும்படங்களை அனுப்பியிருக்கின்றன. "இதில் சமூகத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த முதல் தலைமுறைக் குழந்தைகள் பலர் படிக்கும் ஆவடியை அடுத்துள்ள பாலவேடுபேட்டை கிராமத்தில் செயல்படும் "சிறகு மாண்டிசோரி பள்ளியும் ஒன்று..' என்னும் தகவல் நமது ஆவலை அதிகரித்தது. சுயம் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் ஓர் அங்கம் "சிறகு' மாண்டிசோரி பள்ளி. சுயம் அறக்கட்டளையின் அறங்காவலரான டாக்டர் உமா, "சிறகு' மாண்டிசோரி பள்ளி எந்தெந்த வகைகளில் மற்ற பள்ளிகளிலிருந்து வித்தியாசப்படுகிறது என்பதைச் சொன்னதிலிருந்து...
""தனிமனிதனாக, குடும்பத்தோடு, சமூகத்தோடு, இயற்கையோடு கைகோர்த்து, இந்த உலகைக் காப்பதற்கான சிறிய மாற்றத்தை தங்களின் நடைமுறை வாழ்க்கையில் ஒருவர் பின்பற்றினாலே போதும் என்பதை விளக்கும் குறும்படத்தை எங்களின் குழந்தைகள் தயாரித்து அனுப்பியிருக்கின்றனர். ஒவ்வொருவரின் சுயத்திலும் ஏற்படவேண்டிய மாற்றம் குறித்த இந்த குறும்படம் முழுக்க முழுக்க குழந்தைகளுக்காகக் குழந்தைகளால் குழந்தைகளின் உதவியோடு எடுக்கப்பட்டிருக்கும் படம். இதற்கு வேல்டெக் என்ஜினீயரிங் மாணவர்
கள் தொழில்நுட்ப உதவிகளும் செய்திருக்கின்றனர்.
பிளாஸ்டிக் பக்கெட் ரிப்பேர் செய்பவர்கள், பிளாஸ்டிக் கவர்களைச் சேகரித்து அதை விற்பவர்கள்... என நாடோடிகளாக ஊர் விட்டு ஊர் இடம் மாறிக் கொண்டிருப்பவர்கள் பலர். நிரந்தர வருமானத்திற்கு வழியில்லாத அவர்களின் பிள்ளைகளும் நாளடைவில் அவர்கள் செய்யும் தொழிலையோ அல்லது பிச்சை எடுக்கும் நிலைக்கோ தள்ளப்படுவார்கள். அவர்களின் குழந்தைகளின் நிலையைக் கருத்தில் கொண்டு அந்தக் குடும்பங்களுக்கு நிரந்தர வருவாய்க்கு ஏற்பாடு செய்கிறோம். அதன்பின் அவர்களுடைய குடும்பங்களிலிருக்கும் குழந்தைகளுக்குக் கல்வி அறிவு கிடைப்பதற்கு வழிசெய்தோம். அதற்காக கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட பள்ளிதான் சிறகு. முதல் தலைமுறைக் குழந்தைகளுக்குக் கல்வி கொடுக்கிறோம் என்னும் பெருமையுடன் இன்னும் சில பெருமைகளும் எங்களின் பள்ளிக்கு உள்ளன.
வேத காலத்து கணிதத்தை எங்களின் பாடத்திட்டத்திலேயே சேர்த்திருக்கிறோம். தமிழ், இந்தி, ஆங்கிலம் மும்மொழிகளிலும் படிக்கின்றனர். 20 மாணவர்கள் "ராஷ்டிரபாசா' தேர்வு எழுத உள்ளனர். கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் நடத்தும் பத்தாவது வகுப்புக்கான சர்வதேசத் தேர்வை எங்கள் பள்ளியில் படிக்கும் மூன்று மாணவர்கள் எழுதுகின்றனர். தேசிய அளவில் நடத்தப்படும் சைபர் ஒலிம்பியாட், சயன்ஸ் ஒலிம்பியாட்... போன்ற தேர்வுகளை எங்களின் மாணவர்கள் எழுதுகின்றனர். இதெல்லாம் வசதியான பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் மட்டுமேதான் எழுதும் நிலை இருந்தது.
எட்டாவது வகுப்பு வரை இருக்கும் எங்கள் பள்ளியில் 400 குழந்தைகள் படிக்கின்றனர். ஏறக்குறைய 130 ஏழைக் குழந்தைகளுக்கு உறைவிடமும், உணவும் அளித்திருக்கிறோம். பயிர் செய்வது முதல் "ரோபோ'வை உருவாக்குவது வரை அனைத்தையும் எங்கள் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் தெரிந்து கொள்ளவேண்டும் என்று நினைக்கிறோம். இதற்கான செலவுகளை அன்புள்ளங்கள் தரும் நன்கொடைகள் மூலமே நடத்திவருகிறோம். எங்களின் பத்தாண்டுகளுக்கும் மேலாக தன்னார்வ சேவையில் ஈடுபட்டு வரும் எங்களின் அமைப்பைப் பற்றிய விவரங்கள் அனைத்தையும் எங்களின் ள்ன்ஹ்ஹம்.ர்ழ்ஞ் என்னும் இணைய தளத்தில் பார்க்கலாம். இணையத்தில் எங்களைப் பற்றி படிக்கும் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களும், தமிழர்களும் எங்களுக்கு உதவி செய்து வருகின்றனர். அவரவர் செய்யும் உதவியைக் கொண்டு என்ன செய்கிறோமோ அதற்கு அவர்களின் பெயரையே வைத்துவிடுவோம். சமீபத்தில் எங்களின் சேவைகளைக் குறித்துத் தெரிந்துகொண்ட குவைத் தமிழ்ச் சங்கம், தனது செயலாளர் செல்லதுரையின் மூலம் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை நன்கொடையாக வழங்கினர். குவைத் தமிழ்ச் சங்கத்தின் உதவியோடு 400 குழந்தைகளும் பயன்படும் வகையில் நீர் சுத்திகரிப்பு சாதனத்தை அமைக்க உள்ளோம்!'' என்றார்.