முகப்பு
தினமணி கதிர்

குறும்படம்: ஐந்து விரல்களும் ஒன்றாகவா இருக்கின்றன?

விடிந்தும் விடியாத அதிகாலைப் பொழுது. சந்தீப்பின் மார்பின் மீது அவனுடைய பன்னிரண்டு வயது மகன் சித்தார்த். ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் சந்தீப், அவனை யாரோ சித்திரவதை செய்வதாக கனவு காண்கிறான். திடுக்கிட்டு

Updated On : 27 டிசம்பர், 2023 at 5:33 PM
பகிர்:

விடிந்தும் விடியாத அதிகாலைப் பொழுது. சந்தீப்பின் மார்பின் மீது அவனுடைய பன்னிரண்டு வயது மகன் சித்தார்த். ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் சந்தீப், அவனை யாரோ சித்திரவதை செய்வதாக கனவு காண்கிறான். திடுக்கிட்டு கண் விழிக்கிறான். இது அவனை அடிக்கடி வறுத்தும் கனவு. அன்று அவனுடைய மகனின் பிறந்தநாள்.

""அப்பா, இந்தப் பிறந்த நாளிலாவது எனக்கு ஒரு துணைப் பெயரைச் சொல்வீங்களா... ஸ்கூலில் எல்லாப் பசங்களுக்கும் துணைப் பெயர் இருக்குப்பா...'' என்கிறான் சித்தார்த்.

""துணைப் பெயரா?'' முகம் மாறுகிறது சந்தீப்புக்கு.

மனைவி, மகனோடு காந்தி ஆஸ்ரமத்திற்குச் செல்கிறான். ஒவ்வொரு வருடமும் தன்னுடைய பெயரை போடச் சொல்லாமல் அந்த ஆஸ்ரமத்திற்கு | 1 லட்சம் கொடுப்பது சந்தீப்பின் வழக்கம். இந்தமுறை தன்னுடைய மகனின் பெயரில் அவனுடைய துணைப் பெயரையும் சேர்த்தே அறிவிப்புப் பலகையில் போடுங்கள் என்று ஆஸ்ரம நிர்வாகியிடம் வேண்டுகோள் வைக்கிறான் சந்தீப்.

ஆஸ்ரமத்திலிருந்து மனைவி, மகனுடன் காரில் வீட்டிற்குத் திரும்புகிறான் சந்தீப். இதற்கிடையில் உள்துறை மந்திரியை யாரோ மனித வெடிகுண்டைப் பயன்படுத்தி கொன்றுவிடுகிறார்கள். இந்தச் சதிச் செயலுக்குக் காரணமான ஒருவனின் உத்தேசமான படத்தை வைத்துக் கொண்டு வழியில் காவலர்கள் எல்லா வாகனங்களையும் சோதிக்கிறார்கள். சந்தீப்பின் காரையும் நிறுத்துகிறார்கள். "உன்னுடைய அடையாள அட்டையை எடு..' என்கிறார் காவல் அதிகாரி. கையில் இருக்கும் உத்தேச படத்திலிருப்பவனின் முகமும் காரில் இருப்பவனின் முகமும் லேசாக ஒத்துப்போவதாக உணர்கிறார் அதிகாரி.

தன்னுடைய அடையாள அட்டையை காண்பிக்கிறான் சந்தீப்.

"சந்தீப் கோட்சே!' பெயரைப் படித்த அதிகாரியின் முகம் கோபத்தில் சிவக்கிறது. இன்னும் என்னென்ன திட்டத்தோட இங்க வந்திருக்கறே... எங்கிருந்து வந்திருக்கிறே... என்று கேட்டபடி சந்தீப்பின் சட்டையைக் கொத்தாகப் பற்றி காருக்குள்ளிருந்து வெளியே இழுக்கிறார். அடித்து துவைத்து ஜீப்பில் ஏற்றிக்கொண்டு போய்விடுகிறார் அதிகாரி. "நீங்கள் எத்தனை பேர்? அடுத்து உங்களின் திட்டம் என்ன?' என்று கேள்வி மேல் கேள்வி கேட்டபடி காவல் நிலையத்தில் வைத்து சந்தீப்பை சித்திரவதை செய்கிறார்கள்.

""அனாதையான தன்னை மேஜர் ஒருவர் எடுத்து வளர்த்தார். அவரின் துணைப் பெயரான "கோட்சே'வை என்னுடைய பெயரில் சேர்த்துக் கொண்டேன். அந்த துணைப் பெயரின் காரணமாகவே என்னை வளர்த்த தந்தையும் அவருடைய சகாக்களாலேயே கொல்லப்பட்டார். அதனாலேயே என்னுடைய துணைப் பெயரை நான் யாருக்கும் தெரிவிக்காமல் இருந்தேன். நான் சந்தீப் கோட்சே; ஆனால் நான் காந்தீயக் கொள்கைகளை நேசிப்பவன்...'' என்கிறான் சந்தீப்.

""ஒருவரின் துணைப் பெயர் "கோட்சே' என்று இருப்பதாலேயே காவல் துறை ஒருவரை குற்றவாளி என்று முடிவுசெய்து இப்படி காட்டுமிராண்டித்தனமாக சித்திரவதை செய்வதை கண்டிக்கிறோம். சந்தீப்பை விடுதலை செய்கிறோம்...'' என்கின்றனர் நீதிபதிகள்.

சட்டம் விடுதலை செய்கிறது. சந்தீப் காவல் நிலையத்தை விட்டு வெளியே வருகிறான். கண்ணீருடன் அவனுடைய மகனும், மனைவியும் நிற்கின்றனர். காவல் நிலையத்திற்கு வெளியே கூடியிருக்கும் கும்பலிலிருந்து ஒருவன், ""ராமனின் மகன் ராமனாக இருக்கலாம். ராவணனின் மகன் ராமனாவதை நாங்கள் ஒத்துக்கொள்ளமாட்டோம்...'' என்று சந்தீப் கோட்சேவை சுட்டுவிடுகின்றனர்

- "கோட்சே... காந்தீயக் கொள்கைகளின் நேசர்' என்னும் பத்தொன்பது நிமிடமே ஓடும் குறும்படத்தின் கதைதான் நீங்கள் மேலே படித்தது. இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதி இயக்கியிருப்பவர் நட்ராஜ் மகரிஷி. குறும்படத்தைத் தயாரித்து சந்தீப்பாக நடித்திருப்பவர் சந்தீப் கிரண்.

நட்ராஜ் மகரிஷியின் இயக்கத்தில் ஏற்கனவே சுனாமியின் பேரழிவை விளக்கும் "ஃபார் யு' என்ற குறும்படமும் கணவன், மனைவி இருவருமே வேலை வேலை என்று பறந்து கொண்டிருக்கும் போது, தனியாக தவிக்கும் குழந்தையின் தவிப்பைச் சொல்லும் "ஷப்த்' குறும்படமும் பல உள்நாட்டு, வெளிநாட்டு குறும்படத் திருவிழாவில் திரையிடப்பட்டிருக்கின்றன.

""பொதுவாகவே துணைப் பெயர்கள் ஒவ்வொரு தனிமனிதரின் வாழ்விலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. தென்னிந்தியாவை விட, வட இந்தியாவில் இந்த துணைப் பெயர்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஒருவரின் துணைப் பெயரை வைத்து, அவர் இப்படிப்பட்டவர் என்று முடிவெடுப்பது கூடாது. நமது கையில் இருக்கும் ஐந்து விரல்களும் ஒன்றுபோலா இருக்கிறது? துணைப் பெயரைக் கொண்டு ஒரு சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் மேல் இன்னொரு சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் பகைமை பாராட்டுவதும் பழிவாங்குவதும் இந்தியாவில் தற்போது பரவலாக நடந்து கொண்டிருக்கின்றன. காந்தியை கோட்சே ஒருமுறைதான் கொன்றார். நாம் காந்தீயத்தை ஒவ்வொரு நாளும் கொன்று கொண்டிருக்கிறோம். இந்த நிலை மாறவேண்டும். அதற்காகத்தான் இந்த குறும்படத்தை வியாபார நோக்கமில்லாமல் எடுத்திருக்கிறோம். இதை மாணவச் சமுதாயத்திற்கும், சாதாரணக் குடிமகன் முதல் இந்தியாவின் முதல் குடிமகன் வரை எல்லோருக்கும் திரையிட இருக்கிறோம். இந்த குறும்படம் வரும் 24 அன்று ஹைதராபாத்தில் நடக்கும் தேசிய அளவிலான குறும்படத் திருவிழாவிலும், அடுத்து நடக்கவிருக்கும் கொல்கத்தா திரைப்பட விழாவிலும், உலக அளவில் புகழ்பெற்ற "கேன்ஸ்' திரைப்பட விழாவிலும் திரையிடப்பட இருக்கின்றது. தெலுங்கு மொழியில் படம் இருந்தாலும், நாடு முழுவதும் பார்ப்பதற்கு வசதியாக ஆங்கிலத்தில் வசனங்களை மொழிமாற்றம் செய்து சப்-டைட்டிலும் போட்டிருக்கிறோம். அதிகார மையங்களில் இருப்பவர்களுக்கும், அடுத்த தலைமுறைக்கும் இந்த குறும்படத்தை கொண்டு சேர்ப்பதே எங்களின் லட்சியம்!'' என்று ஆதங்கத்தோடு பேசும் நட்ராஜ் மகரிஷி (இதுவும் துணைப் பெயர்தான்!) ராம் கோபால் வர்மாவிடம் உதவி இயக்குனராக ஒரு ஹிந்தி படத்திற்கு பணிபுரிந்திருக்கிறார்.

""ஆத்ம திருப்திக்காக குறும்படங்களை எடுக்கிறேன். என்னை ஜனரஞ்சக இயக்குநராக நிரூபிப்பதற்காக சீக்கிரமே வணிக ரீதியான படமும் எடுப்பேன்'' என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →