ஆங்கில வழிக் கல்வியைக் கற்பதனால் மட்டும் அறிவாளியாகிவிட முடியாது. தாய்மொழிக் கல்வியே தலையாயது. ஆங்கிலம் பேசுவது வேறு, ஆங்கில மொழி அறிவுத்திறன் வேறு. அதனால், தமிழ் வழியில் படித்தால் எதிலும் பின்தங்கி விடமாட்டோம்''
இந்த வார்த்தைகளைக் கூறுவது இவ்வாண்டுக்கான நல்லாசிரியை விருதினை குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்றுள்ள தாம்பரம் விமானப்படை நிலையத்திலுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியை ரா.ராஜம்மாள்.
விருது பெற்றது இவருக்கு சிறப்பானதாக இருந்தாலும், நீலகிரி மாவட்டத்திலுள்ள படுகர் இனத்தில் நல்லாசிரியை விருது பெறும் முதல் பெண்மணி என்பது நீலகிரி மாவட்டத்திற்கே பெருமை சேர்ப்பதாகும்.
உதகை அருகேயுள்ள கேத்தொரை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜம்மாள். தனது பள்ளிப் பருவத்தில் 8ம் வகுப்பு வரை ஏபிசிடி கூட தெரியாத நிலையிலிருந்தவர், தற்போது 8 மொழிகள் கற்று ஆங்கில ஆசிரியையாகப் பணியாற்றுகிறார். இவரது குடும்பத்தில் பள்ளிக்குச் சென்ற முதல் பெண் இவர்தான். அதே போல கேத்தொரை கிராமத்தின் முதல் பட்டதாரி பெண்ணும் இவர்தான். இவரது தன்னம்பிக்கைதான் இவரை இந்த அளவுக்கு வெற்றி பெற வைத்துள்ளது என்றால் மிகையல்ல. குடியரசு தலைவரிடமிருந்து விருது பெற்றுக் கொண்ட பின்னர் நம்மிடம் தனது வெற்றிப் பயணத்தைப் பகிர்கிறார் ராஜம்மாள்:
""விவசாயக் குடும்பத்தில் பிறந்த நான் 5ம் வகுப்பு வரை கேத்தொரை கிராமத்திலும், 8ம் வகுப்பு வரை தேனலை கிராமத்திலும் படித்தேன். 9ம் வகுப்பிலிருந்து 11ம் வகுப்பு வரை கேத்திபாலடா கிராமத்திலுள்ள என்.எஸ். ஐயா நினைவு மேனிலைப் பள்ளியில் படித்தேன். 8ம் வகுப்பு வரை எனக்கு ஆங்கிலம் எழுதவே தெரியாது. என்னைப்போலவே சக மாணவிகளும் இருந்ததால் யாரும் இதைப் பெரிதாகவும் எடுத்துக் கொள்ளவில்லை. அதனால் 9ம் வகுப்பிலிருந்து ஆங்கில வார்த்தைகளுக்கு அருகே அவற்றை அப்படியே தமிழில் எழுதி வைத்துக் கொண்டு மனப்பாடம் செய்து கொள்வேன். ஆனால் அதற்கான பொருள் தெரியாது. இதைச் சொல்லிக் கொடுக்கவும் ஆளில்லை.
இந்தச் சூழலில்தான் பிரதமராக இருந்த இந்திராகாந்தி உதகைக்கு வந்து பொதுக் கூட்டத்தில் பேசினார். இதைக் கேட்ட எனது தந்தை என்னையும் அந்த அளவுக்கு தைரியமிக்க ஒரு பெண்ணாக உருவாக்க வேண்டுமென தீர்மானித்து, என்னை குன்னூரிலுள்ள பிராவிடன்ஸ் கல்லூரியிலும் சேர்த்துவிட்டார். கல்லூரியில் சேர்ந்தபோது அங்கிருந்த சக மாணவிகள் ஆங்கிலத்தில் சரளமாக பேசிக் கொண்டார்கள். எனக்கு ஒன்றுமே புரியாததால் அங்கிருந்து வெளியேறிவிடலாமா என்ற எண்ணம் கூட ஏற்பட்டது. இருப்பினும் எனது தந்தையின் கனவை நிறைவேற்ற தீவிரமாக உழைப்பதென முடிவெடுத்தேன்.
கன்னியாஸ்திரிகள் நடத்தி வந்த இந்தக் கல்லூரியில் எனக்கு உதவ அவர்கள் முன் வந்தனர். அதேபோல ஆசிரியைகளும் உதவினர். கல்லூரிக் காலத்தில்தான் எனது ஆங்கில மொழி அறிவை வளர்த்துக் கொண்டு, போட்டிகளில் பங்கேற்குமளவிற்கு என்னை தயார்படுத்திக் கொண்டேன். இந்த ஆர்வம்தான் கல்லூரியிலேயே முதல் மாணவியாக என்னை தேர்ச்சி பெற வைத்தது.
எனவே, சூழ்நிலை உருவாகும்போது யாராலும் எந்த மொழியையும் கற்றுக் கொள்ள முடியும். ஆனால், தாய்மொழி என்பது அப்படியல்ல. அது ஒருவரது உயிருக்கு இணையானது. தமிழகத்தில் தற்போது கற்பிக்கப்படும் தாய்மொழிக் கல்வியைத் தைரியமாகப் படிக்க வேண்டும். தாழ்வு மனப்பான்மையை தூக்கியெறிந்தால் ஆங்கிலமென்ன, எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்.
ஆங்கில வழிக்கல்வி என்பது ஒரு மாயை. தற்போது ஆங்கில வழிக் கல்வியில் படிக்கும் எத்தனை மாணவிகளுக்குச் சுயமாக ஒரு கடிதம் எழுதத் தெரியும். கெüரவத்திற்காக ஆங்கில வழிக் கல்வியில் சேர்ந்து விடுவதால் அதிலும் வெற்றி பெறுவதில்லை. தாய்மொழியிலும் தேர்ச்சியடையாமல் ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் என்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
ஆங்கில வழிக்கல்வி மோகத்தின் காரணமாக கிராமங்களில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. இது சமுதாயத்திற்கு ஏற்றதல்ல. கனவு காண வேண்டும். அதே நேரம் அந்த கனவை மெய்ப்பட வைக்கவும் வேண்டும். கல்வி என்பது வியாபாரமாகிவிட்ட சூழலில் இதை பெற்றோர்கள் உணர வேண்டும். தற்போது கணினி மூலம் எண்ணற்ற வசதிகள் பெருகியுள்ளதால் அவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அனைத்து பெண்களும் கல்வி கற்க வேண்டும். எதிர்காலத்தில் அவர்களது சொந்தக்காலில் நிற்குமளவிற்கு தயாராக வேண்டும். ஒரு ஆண் படித்தால் அவருக்கு மட்டுமே பயன். ஆனால், ஒரு பெண் கல்வி கற்றால் அந்த குடும்பத்திற்கு மட்டுமின்றி அந்த சமுதாயத்திற்கே பயனுள்ளதாக அமைகிறது'' என்கிறார் ராஜம்மாள்.
50 வயதான ராஜம்மாள் 7 ஆண்டுகள் தனியார் பள்ளிகளிலும், 23 ஆண்டுகள் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலுமாக கடந்த 30 ஆண்டுகளாக ஆசிரியையாக பணியாற்றுகிறார்.
÷தற்போது கிடைத்துள்ள அகில இந்திய நல்லாசிரியை விருதுக்கு முன்னதாகவே இவர் தேசிய அளவில் இரண்டு விருதுகளை பெற்றுள்ளார்.
கடந்த 2003ம் ஆண்டில் அறிவியலைப் படிப்பதில் புதிய அணுகுமுறைக்கான என்சிஇஆர்டி விருதையும், 2008ம் ஆண்டில் இந்தியா முழுதுமுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சிறந்த நல்லாசிரியை விருதையும் பெற்றுள்ளார். இம்மூன்று விருதுகளையும் பெற்றுள்ளவர் நீலகிரி மாவட்டத்தில் இவர் மட்டுமே எனலாம்.
சமூக தேவை, சாரணீய இயக்கம் என தனது ஓய்வு நேரத்தை செலவிடும் ராஜம்மாள் தகுதியின் அடிப்படையில் கடந்த 2002ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை மாஸ்கோவிலுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியிலும் பணியாற்றியுள்ளார். 8ம் வகுப்பு வரை ஆங்கிலமே தெரியாதிருந்த ராஜம்மாளுக்கு இன்று படுகு மொழியுடன், தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் ரஷ்ய மொழியும் நன்றாகத் தெரியும். நாட்டிலுள்ள 18 மண்டலங்களைச் சேர்ந்த 992 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 50,000 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் 14 பேருக்கு இவ்வாண்டில் தேசிய நல்லாசிரியை விருது கிடைத்துள்ளது. இவர்களில் சென்னை மண்டலத்தில் மூவர் தேசிய விருது பெற்றுள்ளனர். சென்னை மண்டலம் என்பது தமிழகத்துடன் கர்நாடகம், அந்தமான் நிகோபார் மற்றும் கேரளத்தின் ஒரு பகுதியை உள்ளடக்கியதாகும்.
இதில் இன்னொரு சிறப்பு ராஜம்மாள் தான் இதுவரை பெற்றுள்ள விருதுகளின் பரிசுத் தொகை முழுவதையுமே தனது சொந்த கிராமமான கேத்தொரையின் வளர்ச்சிக்காக கொடுத்து விடுவதுதான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.