சிறுகதை: வேர்
உச்சி வெயிலில் பிடுங்கிய செடி வாடி, துவண்டுகிடப்பதைப் போல மருத்துவமனைப் படுக்கையில் கண்மூடிக் கிடந்த அம்மாவைப் பார்க்கையில் துக்கம் தொண்டைக் குழியில் அடைத்து நின்றது. உடலில் எந்த விதமான அசைவுகளோ, சலனங
தினமணி கதிர்சிறுகதை: வேர்
உச்சி வெயிலில் பிடுங்கிய செடி வாடி, துவண்டுகிடப்பதைப் போல மருத்துவமனைப் படுக்கையில் கண்மூடிக் கிடந்த அம்மாவைப் பார்க்கையில் துக்கம் தொண்டைக் குழியில் அடைத்து நின்றது. உடலில் எந்த விதமான அசைவுகளோ, சலனங
உச்சி வெயிலில் பிடுங்கிய செடி வாடி, துவண்டுகிடப்பதைப் போல மருத்துவமனைப் படுக்கையில் கண்மூடிக் கிடந்த அம்மாவைப் பார்க்கையில் துக்கம் தொண்டைக் குழியில் அடைத்து நின்றது. உடலில் எந்த விதமான அசைவுகளோ, சலனங்களோ இல்லை. தோல் சுருங்கி, விழிகள் புதைந்து, உதடுகள் காய்ந்து கிடந்த தேகத்தை விசிறி விடுவது போல் அங்குமிங்கும் அலைபாய்ந்து ஆடிக் கொண்டிருந்தது ஈரப்பசையற்ற வெளுத்தத் தலைமுடிகள்.
அம்மா படுக்கையில் விழுந்து ஆறு மாத காலமாயிற்று. "இந்த நோய்' என்று சொல்லமுடியாத அளவிற்கு நான்கைந்து வியாதிகள் சூழ்ந்து கொண்டு அம்மாவை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தன. முக்கியமாக மூச்சிறைப்பு வரும்போது பக்கத்தில் நிற்பவர்களே பயந்து போகிற அளவிற்கு வாட்டி வதைத்துவிடும். அந்த நேரத்தில் பிதுங்கி வெளித்தள்ளும் விழிகளைப் பார்க்கையில் குழந்தைகள் நடுங்கி கிட்ட வரவே பயந்து ஓடிவிடுவார்கள்.
பெரியவர்கள் "இதுதான் கிழவிக்குக் கடைசி மூச்சு' என்று காதுபடவே பேசுகிற அளவிற்கு நோயின் தீவிரம் எழுவதும் அடங்குவதுமாய் நாள்கள் கழிந்து கொண்டிருக்கின்றன. அப்பாவை இழந்து ஓர் ஆண்டு முடிவதற்குள் அம்மாவையும் கைகழுவி விடுவோமோ என்கிற பயம் ஈரக்குலையை நடுங்கச் செய்தது.
அம்மாவிற்கு நான் ஐந்தாவது பிள்ளை. ஐந்துமே ஆண் பிள்ளைகள். அம்மாவும் அப்பாவும் எங்களுக்கு ஐந்து சிங்கக்குட்டிகள் எனப் பெருமை பேசிக் கொண்டிருந்தாலும், ஒரு பெண்பிள்ளை இல்லையே என்ற ஏக்கம் அவர்கள் வாழ்வின் கடைசி வரையிலும் நீடித்துக் கொண்டிருந்தது.
அண்ணன்கள் நால்வரும் சிறு வயதிலிருந்தே நன்றாக படித்தார்கள். நான் மட்டும்தான் படிப்பில் மந்தம். ஆகவே அவர்கள் நால்வருமே நல்ல சம்பளம் உள்ள அரசாங்க வேலை கிடைக்க ஆளுக்கொரு நகர்ப்புறத்தில் நல்ல நிலையில் வீடு, வாசல், என்று செட்டிலாகிவிட்டார்கள்.
அப்பா, அம்மாவின் பேர் சொல்லும் பிள்ளையாக பிறந்த பூர்வீக வீட்டில் மனைவி, குழந்தைகள் மற்றும் அம்மா அப்பாவோடு வாழ்கிற பாக்கியம் நான் சரியாகப் படித்து அரசாங்க உத்தியோகம் எதற்கும் செல்லாததால் கிடைத்தது. இருக்கும் பழைய ஓட்டு வீடும் இரண்டு ஏக்கர் நஞ்சை நிலமும் பூர்வீக சொத்துக்கள். அண்ணன்கள் எல்லாம் நல்லபடி செட்டிலாகிவிட்டதால் என் மீது உள்ள பிரியத்தில் யாரும் சொத்து பிரிவினையேதும் கோராமல் அப்படியே விட்டுவிட்டார்கள்.
இதில் வருகிற வருமானமும் இரண்டு கறவை மாடுகளுமே வாழ்க்கையை ஓரளவு ஓட்டுவதற்கு துணைபுரிகின்றன.
அம்மாவுக்கும், அப்பாவுக்கும் எப்போதும் என் கவலைதான். பெரிய பிள்ளைகளெல்லாம் படித்து ஊர் உலகம் போற்ற வாழ்கையில், கடைசி மகன் மட்டும் இப்படி கஷ்டப்படுகிறானே என்று நெருக்கமானவர்களிடமெல்லாம் சொல்லிச் சொல்லி புலம்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.
அண்ணன்கள் நால்வருமே வருடத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ ஊருக்கு வந்து போவார்கள். குழந்தைகளுக்குப் பள்ளி விடுமுறை என்றால் குடும்பத்தோடு வந்து பார்த்துவிட்டுப் போவார்கள். மற்றபடி எல்லாமும் தொலைபேசியிலும், அலை பேசியிலும் தான். எல்லாமும் சம்பிரதாயத்திற்காக.
அண்ணன்களின் குடும்பங்களெல்லாம் நவ நாகரீக குடும்பங்களாக உருமாறிவிட்டன. அண்ணிகள் ஊருக்கு வரும்போது போட்டு வருகிற கழுத்து, காது நகைகளை பார்த்து ஊரே வாய் பிளந்து நிற்கும். அதுபோலவே அண்ணன்களின் குழந்தைகளும் ஸ்டைலாக தலைமுடியை வெட்டிவிட்டுக்கொண்டு. விதவிதமாய் ஜீன்ஸ் பேண்ட், பனியன் என்று மாட்டிக் கொண்டு காரில் வந்து இறங்கும் போது ஊர்க்குழந்தைகள் போலவே என் குழந்தைகளும் ஏக்கத்தோடு பார்ப்பதைப் பல முறை பார்த்திருக்கிறேன்.
அவர்கள் பேசுகிற ஆங்கிலமும் தின்பதற்குக் கொண்டுவரும் உயர்ரக சாக்லேட் அயிட்டங்களும் கண்டு குழந்தைகளோடு சேர்ந்து நானும் தள்ளி நின்று ஏக்கத்தோடு ரசித்திருக்கிறேன். என்னவோ என் மனைவியைத் தவிர மற்ற அண்ணிகள் நெருக்கமாக பேசிக் கொள்வதைப் போலவே, மற்ற நால்வரின் குழந்தைகளும் அன்னியோன்யமாக விளையாடிக் கொண்டிருக்கையில், என் குழந்தைகள் மட்டும் சற்று தள்ளியே நிற்பதற்குக் காரணம் ஒருவிதத்தில் கிராமத்து தாழ்வுமனப்பான்மையாகக்கூட இருக்கலாம்.
அண்ணிகளுக்கு எப்படி என் மனைவி ஏவலாளியோ அதைப் போலவே அண்ணன்களின் குழந்தைகளுக்கும் என் பிள்ளைகள்தான் விளையாட்டுப் பொம்மைகள். அவர்கள் என்னென்ன விளையாட விரும்புகின்றார்களோ எப்படியெல்லாம் நடந்துகொள்ள விரும்புகின்றார்களோ அதற்கு உடன்பட்டே என் குழந்தைகள் எப்படியோ அவர்களுக்குத் தெரியாமல் சகித்துக் கொண்டிருக்கக் கற்றுவிட்டார்கள்.
அண்ணன்கள் யாரும் என்னை பிரித்துப் பார்த்ததில்லை. இவன் படிக்காதவன் தானே என்று புறக்கணித்ததில்லை. ஊருக்கு வந்தால் எல்லாவற்றிற்கும் யோசனை கேட்பதும், ஆலோசிப்பதுமாக இருக்கிறார்கள். அம்மாவை, கவனமாக பார்த்துக் கொள்ளச் சொல்லி ஐம்பதோ, நூறோ எப்போதும் கொடுத்து விட்டுச் செல்வார்கள். அம்மாவை, இங்கேயே வைத்திருக்க என்னை மனதளவில் தயார்படுத்தி வைத்திருக்கிறார்கள்.
அம்மா, அவர்கள் அழைத்தாலும் போகப் போவதில்லை என்றாலும் நால்வரில் ஒருவர் கூட வாய்தவறி அழைத்ததும் இல்லை. அம்மாவிற்கும் அவர்களைவிடவும் என் மீதும் என் மனைவி மீதும் குழந்தைகள் மீதும் சொல்லிக் கொள்ள முடியாத பாசமும் நேசமும் உண்டு என்பதற்குப் பல காரணங்கள் உண்டு.
அண்ணன்களோ, அண்ணிகளோ, எதற்கும் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. தன் பெண்டு, தன் பிள்ளை என்று தங்களின் வட்டத்தைவிட்டு பெரிதாக எவர் மீதும் பற்றோ பாசமோ, கொண்டு வாழ்ந்ததில்லை.
அப்பா இறந்தபோதுகூட என் மனைவியும் குழந்தைகளும் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு கதறினார்கள். "தாத்தா... தாத்தா...' என்று என் குழந்தைகள் தலைமாட்டிலேயே உட்கார்ந்து தேம்பினார்கள்.
நான் நிதானமற்று பேதலித்து விம்மிக்கொண்டே இருந்தேன். ஒரு தேநீர் கூட குடிக்க மனமில்லாமல் அப்பாவின் இழப்பு எங்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது.
அண்ணன்களும், அண்ணிகளும், காரில் வந்து இறங்கினார்கள். எந்தச் சங்கடமோ, சலனமோ இல்லாமல் மெல்ல நடந்து வந்தார்கள். அண்ணிகள் நால்வரும் சற்று நேரம் அப்பாவின் சடலத்துக்கு அருகே உட்கார்ந்து இருந்தார்கள். என் மனைவி அவர்களை கட்டிக் கொண்டு "ஓவெனக்' கதறி அழுகையில், அவர்கள் அவளைவிட்டு விலகி முகம் சுழித்தார்கள்.
அதிலும் நடு அண்ணனின் மனைவி ""கொஞ்சமாவது டீசன்டா நடக்கத் தெரியுதா பாரு... சரியான நாட்டுப்புறம்'' என்று காதுபடவே சலித்துக் கொண்டு எழுந்து போய் உள்ளே உட்கார்ந்து கொள்ள, அவரைப் பின்தொடர்ந்த மூன்று அண்ணிகளும் ஊர் உலகக் கதைகளைப் பேசி சிரிக்கத் தொடங்கிவிட்டார்கள். அண்ணன்களின் பிள்ளைகளில் ஒருவரைக்கூட அழைத்து வரவில்லை. எல்லாருக்கும் எக்ஸôம் டைமாம். அண்ணன்களைப் பார்த்ததும் என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. துக்கம் நெஞ்சைப் பற்றி அழுத்தியது.
""அண்ணே... அப்பா நம்மளவிட்டு போயிட்டாருண்ணே...'' என்று பெரும் குரல் எடுத்து தேம்பி அழுகையில் அவர்களின் விழிகளில் லேசான கலக்கத்தை தவிர, வேறு எதுவும் பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை.
""எலே.... தம்பி... விடுடா... அழுறதாலே திரும்ப வரப்போறதில்லை. வா அடுத்தக் காரியத்தைப் பார்ப்போம்'' என்று சர்வ சாதாரணமாக அழைப்பு விடுத்தார் பெரியவர்.
""இவன் உலகம் புரியாதவன். பொறந்தவன் பூரா ஒரு நாள் செத்துதாண்டா ஆகணும்'' இது நடு அண்ணனின் தத்துவ தரிசனம்.
""டவுன்ல எல்லாம் எவன் செத்தான் போனான்னே தெரியாது. முக்கியமா உள்ளவங்கள மட்டும் வரச்சொல்லி மயானத்துக்கு எடுத்துட்டுப் போய், மின்சார சுடுகாட்டில ஒரு டப்பா சாம்பல் மட்டும்தான் தருவான். கிராமத்துலதான் இதுக்கு ஒரே ஆரவாரம், களேபரம்'' }அடுத்த அண்ணன்.
""இவன் கடைகுட்டிப்பய. படிக்காததாலே உலகம் புரியல... வயசாகிதானடா அப்பா செத்துருக்காரு... இதுக்கெல்லாம் அழுதுக்கிட்டு''- எனக்கு முந்தியவர்.
நால்வரும் நாலுவிதமாகப் பேசினாலும் ஒரே கோட்டில் நின்றார்கள். அடுத்த பத்து நிமிடத்தில் உறவினர்களோடு சகஜமாகப் பேசுவதும், சிரிப்பதும், கதைப்பதுமாக கலந்து போனார்கள்.
ஆக, இப்போது அம்மாவிற்கு ஏதும் விபரீதமாகி மூச்சு நின்று போனாலும் இதே நிகழ்வுகள் தான் நடக்கப் போகின்றன. ஆனால் வீட்டில் எங்களோடயே வாழ்ந்து எம்மை துறந்து வெறுமையாக்கிவிட்டுப் போகிற துக்கம் தாங்கக் கூடியதா? அதுவும் பெற்ற தாய் போகும் துக்கத்தை மாற்றும் சக்தி வேறு எதற்கும் உண்டா?
அம்மாவையே பார்த்துக் கொண்டு நிற்கிறேன். என்னையும் அறியாமல் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அம்மாவிற்கு ஏதும் ஆகிவிடக் கூடாது என்று வேண்டாத தெய்வங்களை எல்லாம் இடையிடையே கண்ணை மூடி வேண்டிக் கொண்டே நிற்கிறேன்.
பழைய நினைவுகள் புரண்டு படுக்கின்றன.
அம்மா எங்களை தூக்கி வளர்த்தது, அரவணைத்தது, சுற்றிலும் அமர வைத்துக் கொண்டு சோறு உருட்டி ஊட்டிவிட்டது, முத்தம் கொடுத்துப் பாசம் பொழிந்தது, வயல் வேலைக்குச் சென்று தன் வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி வளர்த்தெடுத்தது. அப்பா அடிக்கும் போதெல்லாம் கோழி தன் குஞ்சுகளை இறக்கைக்குள் பொத்துவது போல் அணைத்துக் கொண்டது, என சகலமும் நினைவில் நிழலாடி துக்கத்தை மேலும் பெருக்குகின்றன.
கடைசியாக பெரியண்ணன் வந்து பார்த்தபோது அம்மா நடுங்கும் குரலோடு சொன்ன வார்த்தைகளை நினைக்கையில் தொண்டையை அறுக்கிறது துக்கம்.
""எப்பா.... எல்லாரையும் தான் வளர்த்தோம், படிக்க வச்சோம். கடக்குட்டி மட்டும் அப்ப சொன்ன பேச்சே கேட்க மாட்டேனுடுச்சு. ஆனாலும் கடைசி காலம் வரைக்கும் எனக்கு கஷ்டத்தோட கஷ்டமா அதுதான்யா கஞ்சி ஊத்துது. உன் புள்ளைங்கள்ளாம் வளர்ற மாதிரியே இவன் புள்ளைங்களையும் படிக்க வச்சி ஒரு வழிய காட்டுய்யா. அத மட்டும் செஞ்சிங்கன்னா போதும். கடைசிப் புள்ள... இவன் அப்பாவிடா அவனையும் கொஞ்சம் பார்த்துக்கங்கடா''
அம்மாவுக்குக் கண்கள் பொங்கி முந்தானையால் துடைத்துக் கொண்ட நிகழ்வு படுத்தி எடுத்தது.
""அம்மா அம்மா ஏமாத்திடாதம்மா. நீ சும்மாவே படுத்திருந்தாலும், ஆயிரம் யானை பலம் எனக்கும்மா. என் புள்ளைங்க ஆத்தா எங்கேன்னு கேட்டு தவிச்சு போயிடும்மா...''
மனசு கிடந்து அலை பாய்கிறது.
அண்ணன்களுக்கு சீரியஸ் எனச் செய்தியைச் சொல்லி அனுப்பி, ஊரிலிருந்து வந்து கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல் வந்தது.
மருத்துவர் வந்து என்னை தன் அறைக்கு அழைக்கிறார். ஓடி தவிப்பாய் நிற்கிறேன்.
""தம்பி மனச தேத்திக்குங்க. கொஞ்சம் கஷ்டம். வீட்டுக்கு வேணா சேஃப்டியா இப்பவே அழைச்சிட்டுப் போங்களேன். ரெண்டு, மூணு மணி நேரத்துல முடிஞ்சிடும்..''
""ஐயா அப்படிச் சொல்லாதீங்க. நீங்கதான் எப்படியாவது காப்பாத்தணும்...''
அவர் கரங்களைப் பற்றி மன்றாடுகிறேன்.
""இல்லப்பா.... சொல்றதப் புரிஞ்சிக்கங்க... வயசுவேற ஆயிடுச்சில்ல... அவ்வளவுதான்... இனிமே தாங்காது''
மருத்துவர் உறுதியாகச் சொல்லிவிட்டார்.
வெளியில் உறவினர்கள் கூடிவிட்டார்கள். எல்லோரும் வீட்டுக்கு அம்மாவை இப்போதே கொண்டு போவதே நல்லது என்றார்கள்.
ஒரு டாக்ஸியைப் பிடித்து வந்து, அம்மாவை அழைத்துச் செல்ல முடிவாயிற்று. மருத்துவரிடம் சொல்லிவிட்டு கிளம்ப எத்தனிக்கையில் யாரோ ஒருவர் ""பக்கத்து டவுன் திருச்சியில் உள்ள மருத்துவமனையைச் சொல்லி அங்கு போனால் எப்படியும் காப்பாத்திடலாம்'' என்றார்.
பக்கத்திலிருந்த மருத்துவர் சற்று காட்டமாக குரலை உயர்த்தி, ""யாருய்யா அது? அவங்க அந்தக் கட்டத்தையெல்லாம் தாண்டிட்டாங்க. வீணா காசைக் கரியாக்காம ஆகுறதைப் பாருங்க'' என்றார்.
அம்மாவை டாக்ஸியில் ஏற்றி வெளியில் வந்து ஊருக்கு திரும்ப நினைக்கையில், என்னவோ மனது சஞ்சலப்பட்டது. எதையும் யோசிக்காமல், ""டிரைவர்... வண்டியை திருப்பி திருச்சிக்கு விடுங்க'' என்றேன். கூட வந்தவர்கள் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள்.
""டாக்டர் இவ்வளவு சொல்லியும் நீயா இப்படி முடிவு பண்றியே..?'' என்று ஆளாளுக்குத் திட்டிக் கொண்டே வந்தார்கள்.
எதைப்பற்றியும் நான் பொருட்படுத்தவில்லை. வண்டி 5 கி.மீ. தாண்டுவதற்குள் மூச்சுப் பிசாசு எகிறிக் கொண்டு அம்மாவை படுத்தத் தொடங்கியது. அம்மா... அம்மா... என்று அழுதபடியே நெஞ்சை தடவி விட சற்று நேரத்திற்கெல்லாம் விழிகள் மூடி தலை சாய்ந்து போனது. வந்தவர்கள் எல்லாம் என்னைத் திட்டிக் கொட்டினார்கள்.
""அதிகப்பிரசங்கி வேலையெல்லாம் செய்யறத முதல்ல நிறுத்து'' என்றார்கள். என் அழுகையினூடே அவற்றைப் பொருட்படுத்தும் மனநிலையில் இல்லை நான்.
காரியங்கள் முடிந்து போயிருந்தன.
அம்மா புகைப்படத்தில் சுவற்றில் சிரித்துக் கொண்டிருந்தார்கள். வேதாச்சலம் மாமா என்னை நெருங்கி வந்து ""எவ்வளவு சொல்லியும் கேட்காம உனக்கு என்ன அப்படி ஒரு குறுக்கு புத்தி? வர்ற வழியிலேயே திரும்பவும் ஆஸ்பத்திரிக்குப் போடான்னு எவ்வளவு வீண் செலவு பாதியிலேயே உசிரும் நின்னு போச்சு'' என்றார்.
""இல்லை மாமா உசிரு போயிடும்னு தெரிஞ்சிதான் ஆஸ்பத்திரிக்கு விடச் சொன்னேன்'' என்றேன். வேதாச்சலம் அதிர்ச்சியாய் என்னை பார்த்தார்.
அண்ணன்கள் எல்லாம் என்னை பலவாறாக வறுத்தெடுத்தார்கள்.
""டாக்டரே சொன்ன பிறகும் உனக்கென்ன புத்தி பேதலிச்சிப் போயிட்டா'' என்று வாய்க்கு வந்தபடி அண்ணன்கள் மாறி மாறி என்னை வசைபாடினார்கள்.
நான் துக்கத்தை அடக்க முடியாமல் உடைந்த குரலில் சொன்னேன்.
""காசு பணத்தை சம்பாதிச்சிடலாம். யாரோ திருச்சிக்குக் கொண்டு போனா காப்பாத்திடலாம்னு சொன்னதைத் தவிர்த்து என்னால வீட்டுக்கு வர முடியல... நாம முயற்சி பண்ணியிருந்தா அம்மா பொழச்சிருக்குமோன்னு எப்பவாவது மனசு குறுகுறுக்க ஆரம்பிச்சிட்டா... காலத்துக்கும் என்னால நிம்மதியா வாழ முடியாது... அதான் அப்படி நடந்து கிட்டேன்'' அதற்கு மேல் என்னால் பேசமுடியவில்லை.
வேதாச்சலம் கண்கள் கலங்க என் கரங்களைப் பற்றிக் கொண்டார். அண்ணன்கள் ஊமைகளாய் உருமாறியிருந்தார்கள்.