நான் வயிற்றுவலியால் மிகவும் அவதிப்படுகிறேன். குடலில் அல்சர் (புண்) ஏற்பட்டிருப்பதாக மருத்துவர் சொன்னார். ஒரு நாளைக்கு 5 அல்லது 6 முறை மலம் கழிகிறது. சிறுநீரும் அதிகமாகப் போகிறது. கால்களில் வலியும் உள்ளது. என் உபாதை தீர என்ன செய்ய வேண்டும்?
முத்துகிருஷ்ணா, மருதம்புத்தூர்.
உங்களுக்குக் குடலில் பித்தம் அதிகமாயிருக்கிறது. அதைக் குறைக்க வேண்டும். பித்தத்தைக் குறைப்பதற்கும் அதனால் விளைந்த குடல் புண்ணைப் போக்குவதற்கும் முக்கியமாய் இனிப்புச் சுவை கொண்ட உணவை நீங்கள் சாப்பிட வேண்டும். நிலம் மற்றும் நீரின் ஆதிக்கம் கொண்ட இனிப்புச் சுவையால், நெருப்பின் அம்சம் கொண்ட பித்தத்தை எளிதாகத் தணிக்க முடியும். பற்றி எரியும் வீட்டில், தண்ணீரைக் கொட்டி அணைப்பதுபோலத்தான் இதுவும். நீங்கள் உப்பும் காரமும் சேர்ந்த உணவுப் பண்டங்களை அதிகம் சேர்த்ததால் ஏற்பட்ட வினையாக இருக்கலாம் இந்த உபாதை. சிலர் வீட்டிலும் உப்பு, காரம் அதிகம் சேர்ப்பார்கள். அது பித்தத்தை அதிகப்படுத்தும். உப்புச் சுவைப் பண்டத்தில் எலுமிச்சம்பழம், புளிப்பு மாதுளை, புளிப்பு நாரத்தை இவை ஏதாவதொன்றின் சாறு சேர்க்கவும். ஒரே நொடியில் உப்பு, காரம் மாறி அந்த உணவு இனிப்புச் சுவையாக மாறிவிடும். பித்த சீற்றத்தைக் குறைத்துவிடும். அதனால் நீங்கள் வீட்டில் உப்பு,காரம் மிகுந்த உணவை உண்ணும்படி நேர்ந்தால் உடனே புளிப்புச் சுவையைப் பருகவும். குடல் புண், எரிச்சல் முதலிய உபாதையைக் குறைத்துவிடலாம்.
வயிற்றுப் புண்ணை ஆற்றுவதில் தேனும் நெய்யும் சிறந்தவை. முக்கால் ஸ்பூன் சுத்தமான தேனும் கால் ஸ்பூன் பசு நெய்யும் குழைத்து, காலை மதியம் இரவு உணவிற்கு 1 மணி நேரம் முன்பாக நக்கிச் சாப்பிடவும். புண்ணை ஆற்றுவதோடு, பித்த ஊறலையும் மட்டுப்படுத்தும்.
பித்த தோஷத்திலுள்ள "ஸரம்' எனும் குணத்தினால் உங்களுக்கு அதிக அளவில் மலப்போக்கும், "த்ரவம்' எனும் குணத்தினால் அதிக அளவில் சிறுநீரும் போகிறது. இவை குறைய சந்தனம் நல்ல மருந்தாகும். நல்ல குளிர்ச்சியும் வறட்சியும் கசப்புச் சுவையும் கொண்ட சந்தனக் கட்டையை சந்தனக் கல்லில் பன்னீர்விட்டு அரைத்து வரும் விழுதை உலர்த்திப் பொடித்து, சிறிது தேனுடன் நெய்யுடன் கலந்து காலை இரவு உணவிற்கு முன் சாப்பிட உடல் சோர்வு, உட்புற விஷங்கள், கபம், தண்ணீர் தாகம், குடல் புண், எரிச்சல் போன்றவை குணமடையும் என்று பாவ பிரகாசர் எனும் முனிவர் கூறுகிறார்.
நெய் வெளியில் அனல் ஜ்வாலையில் வார்த்தால் ஜ்வாலையை தீவிரமாய் ஆக்குவது போலவே குடலில் இருக்கும் அக்கினி சக்தியை வளர்க்கிறது. ஆனால் உருக்கின தேன் மெழுகுடன் கலந்து நெய் சாப்பிட்டால் அதிக அக்கினி தோஷமும் அதனால் விளையும் குடல்புண், நிரம்ப அளவு உணவு உண்டதும் அது பூராவும் வெகு சீக்கிரத்தில் பஸ்மமாகி உடனே தாங்க முடியாத பசி ஏற்படும் நிலை போன்றவற்றைக் குணப்படுத்துகிறது. நாக்கையும் தொண்டையையும் வரள வைக்கும் கடும் தாகத்தையும் தேன் மெழுகு சேர்க்கையினால் நெய் அகற்றுவதால், நீங்கள் இதை மருந்தாகப் பயன்படுத்தலாம்.
உணவில் உப்பு, புளிப்பு, காரச்சுவை உள்ள பண்டங்கள் காய்கறிகளைக் குறைக்கவும். கசப்பு, இனிப்புச் சுவை பண்டங்களை விசேஷமாக உபயோகிக்கவும். அரிசி, கோதுமை, பச்சைப்பயறு, வெல்லம்,தேன், நெய் சாப்பிட நல்லது. காய்ந்த கிஸ்மிஸ் திராட்சை, நெல்லிக்காய் மிகவும் நல்லது. தயிர் சாப்பிட வேண்டாம்.
ஆயுர்வேத மருந்துகளில் திக்தககிருதம் என்ற நெய் மருந்தை தினம் ஒரு வேளை 2 டீ ஸ்பூன் அளவு சாப்பிட்டு, அதன் மேல் அரை கிளாஸ் பால் சில நாட்கள் தொடர்ந்து சாப்பிடவும். மாதம் ஒரு முறை பாலும் விளக்கெண்ணெய்யும் (1 கிளாஸ் சூடான பால் + 15 மி.லி. விளக்கெண்ணெய்) கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு பேதி மூலம் பித்தத்தை வெளியேற்றிவிடுவது நல்லது.
(தொடரும்)
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 9444441771
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.