வெங்காயத்தின் மருத்துவ குணங்கள் எவை?
தூக்கமில்லாமல் கஷ்டப்படும் குழந்தைகளுக்கு, சிறிய வெங்காயத்தைத் தண்ணீரில் கொதிக்க வைத்து எடுத்த தண்ணீரில் இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொடுக்க நல்ல தூக்கம் வரும்.
சிறு குழந்தைகளுக்கு உண்டாகும் டான்சில் வியாதிக்கு ஒரு சிறிய வெங்காயத்தைத் தோல் நீக்கி சிறிது உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டு, மேல் குளிர்ந்த தண்ணீரைச் சாப்பிடச் செய்வதன் மூலம் ஓரளவு குணம் கிடைக்கிறது.
காது வலிக்கு வெங்காயத்தை நறுக்கி அதன் உள்ளே உள்ள குருத்தை இடித்துப் பிழிந்த சாறைச் சில துளிகள் எடுத்து லேசாகச் சுட வைத்து காதில் விட்டால் வலி, குத்தல் நிற்கும்.
வெங்காயத்தைத் தோல் நீக்கி, விளக்கெண்ணெய் விட்டு வதக்கி சூடு ஆறிய பின் அம்மியில் அரைத்துப் பொடி செய்து பனங்கற்கண்டின் சூரணத்தையும் கலந்து லேகியம் போல், ஒரு பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். தினம் காலை மாலை ஒரு பெரிய கொட்டைப் பாக்கு அளவு சாப்பிட்டு, காய்ச்சிய பசுவின் பாலைக் குடிக்க நாட்பட்ட மலச்சிக்கல் நீங்கும்.
தோல் நீக்கிய வெங்காயத்தை நறுக்கிச் சிறு சிறு துண்டுகளாகச் செய்து, தயிரில் போதிய உப்பும் கலந்து ஊற வைத்து மறுநாள் காலை, மாலை இருவேளையும் சாப்பிட்டு வந்தால் மூலத்திலிருந்து வெளிப்படும் ரத்தம், கடுகடுப்பு குறைந்து குணம் ஏற்படும். இம்முறையைத் தினமும் புதியதாக அவ்வப்போது தயார் செய்து கொள்ள வேண்டும்.
வெங்காயச் சாறு அரை அவுன்ஸ் (சுமார் 3 ஸ்பூன்), இஞ்சிச் சாறு 1/8 அவுன்ஸ், பெருங்காயம் 2 சிட்டிகை, இந்துப்பு பொடி 1 ஸ்பூன், தண்ணீர் 2 அல்லது 3 அவுன்ஸ் வரையில் கலந்து உட் கொள்ள வேண்டும். அவசியம் ஏற்பட்டால் மறுபடியும் நான்கு மணிக்குப் பிறகு மேற் சொன்னபடியே சாப்பிட்டால் பசி ருசி உண்டாகும். அஜீரணம் நீங்கிவிடும். மோர் சாதம் அல்லது மோர் சேர்த்து புழுங்கலரிசிக் கஞ்சி மட்டுமே சாப்பிட்டு, மேற்படி வெங்காயத்தைச் சாப்பிட விரைவில் குணம் கிடைக்கும்.
அஜீரணத்தால் வாந்தி பேதி அடிக்கடி மணிக்கு ஒரு தடவை உண்டானால், வெங்காயச் சாறு அரை அவுன்ஸ் வீதம் குளிர்ந்த நீரில் கலந்து அடிக்கடி கொடுத்து வர மப்பு குறைந்து ஜீரண சக்தி உண்டாகி வாந்தி பேதி நிற்கும். விஷப் பூச்சிகளால் உண்டான வாந்தி பேதியில் ஆரம்பத்திலேயே வெங்காயச் சாறு ஒவ்வொரு அவுன்ஸýம் 2 -3 சிட்டிகை பெருங்காயத் தூளும் கலந்து அரை மணிக்கு ஒரு தடவை கொடுக்கக் குணமாகும். இந்த நிலையில் கை, கால் குளிர்ந்து ஜில்லிப்புடன் காணப்பட்டால் வெங்காயத்தின் சாற்றையே பாதங்களிலும் உள்ளங்கைகளிலும் தடவி சூடு வரும்படி தேய்க்க வேண்டும்.
தோல் நீக்கிய வெங்காயத்தைச் சிறு துண்டாக நறுக்கி குளிர்ந்த நீரில் நான்கு அல்லது ஐந்து தடவை அலம்பி தயிர் சேர்த்து தினம் மூன்று முறை உட் கொள்ள வயிற்றுக் கடுப்பு நீங்கும்.
மூக்கிலிருந்து ரத்தக் கசிவு ஏற்படும் போது, வெங்காயத்தைக் கசக்கி முகர்ந்தால், உடன் ரத்தக் கசிவு நிற்கும். தொடர்ந்து வெங்காயம் ஆடைத் தயிருடன் சேர்த்து உபயோகித்து வந்தால் இந்த உபாதையை அறவே நீக்கிவிடலாம்.
முற்றிய பழைய வெங்காயத்தை நசுக்கித் துணியில் முடிந்து கட்டிக் கசக்கி மூக்கின் அருகில் பிடித்தால் வெங்காயத்தில் உள்ள எண்ணெய் சத்தின் வேகமானது, மூக்குத் துவாரங்கள் வழியாக உட்சென்று மூளையைத் தாக்கி நரம்புகளுக்குச் சுறுசுறுப்பைக் கொடுப்பதாலும், ஞாபகத்தைக் கொடுப்பதாலும்,மயக்கம் - வலிப்பு நோயாளி உடன் நினைவு பெற்று எழுந்துவிடுவான்.
புகையிலை அதிகம் உபயோகித்து இதன் விளைவாக தலையில் தாங்க முடியாத வலி, தலை சுற்றுதல் போன்ற உபத்திரவங்கள் உண்டானால் வெங்காயச் சாறு அரை அவுன்ஸ், 2 அவுன்ஸ் குளிர்ந்த நீரில் கலந்து குடிக்கச் செய்தால் உடன் குணமாகிவிடும்.
வெங்காயச் சாறு அல்லது வெங்காயச் சாறும் நல்லெண்ணெய்யும் சம அளவு கலக்கி அதன் சில துளிகளையாவது வலிக்கும் சொத்தைப் பற்களில் வைத்தால் சிறிது நேரத்தில் பூச்சிகளும் இறந்து வலியும் நின்றுவிடும்.
வெங்காயச் சாறு அரை அவுன்ஸýம் சுத்தமான தேன் கால் அவுன்ஸýம் கலந்து காலை, மாலை 2 வேளை வீதம் 25 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால், ஆண்களுக்கு வீர்யம் அதிகரிக்கும்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.