தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: தும்பைப் பூ, நல்லெண்ணெய் குளியல்

எனக்கு சர்க்கரை நோய், இரத்த அழுத்த உபாதை எதுவும் கிடையாது. சுமார் ஓர் ஆண்டாக சாப்பிட ஆரம்பிக்கும் சமயம் காலை, மதியம், இரவு மூக்கிலிருந்து சளி வருகிறது. உண்ட பிறகும் கால் மணி நேரம், அரை மணி நேரம் வரை ந

எஸ். சுவாமிநாதன்

எனக்கு சர்க்கரை நோய், இரத்த அழுத்த உபாதை எதுவும் கிடையாது. சுமார் ஓர் ஆண்டாக சாப்பிட ஆரம்பிக்கும் சமயம் காலை, மதியம், இரவு மூக்கிலிருந்து சளி வருகிறது. உண்ட பிறகும் கால் மணி நேரம், அரை மணி நேரம் வரை நீடிக்கிறது. மற்ற நேரங்களில் வருவதில்லை. மார்புச் சளி, கபம், மூச்சுத் திணறல், அஜீரணம் என்று எந்தத் தொல்லையுமில்லை. இது எதனால் ஏற்படுகிறது? சளியை நிறுத்த என்ன செய்ய வேண்டும்?

ஆ.குலசேகரன், புதுச்சேரி.

அவஸ்தாபாகம் என்று ஒரு சமாச்சாரம் இருக்கிறது. அறுசுவையுள்ள உணவு முதலில் இரைப்பையில் வந்து சேர்ந்து கொண்டு இருக்கும்போதும், வந்து சேர்ந்த பிறகும், அங்குள்ள ஜாடராக்னி எனப்படும் பசித்தீயானது, பானையிலுள்ள நீர் கலந்த அரிசியைச் சாதாரண நெருப்பானது எப்படி வேகச் செய்யுமோ, அதுபோல வேகச் செய்யும். அப்படி வெந்து கொண்டிருக்கும் நிலையில், உணவானது இனிப்புச் சுவையாக மாறி நுரைத்துக் கபம் எனும் தோஷத்தை அதிகரிக்கச் செய்யும். இதுமாதிரியான பாக விசேஷத்துக்கு அவஸ்தா பாகம் என்று பெயர்.

இந்த இனிப்பும் நுரையும் கபமாக மாறுவதால், அதன் தாக்கம் தலைப் பகுதியில் உணரப்படுவதால் சாப்பிட ஆரம்பித்ததும், சாப்பாட்டின் இறுதியிலும் உங்களுக்கு மூக்கிலிருந்து சளியாக வருகிறது. அதைக் கட்டுப்படுத்த சில எளிய வழிகள் உள்ளன. கோரைக் கிழங்கு 10 கிராம், சுக்கு 5 கிராம் சேர்த்து 1 லிட்டர் தண்ணீரில் வேக வைத்து அரை லிட்டராகக் குறுக்கிக் குளிர்ந்த பிறகு வடிகட்டி, உணவுக்குப் பிறகு சிறிது குடித்து வரவும். உங்களுடைய உபாதை விரைவில் குணமடையும்.

நிலம், நீர், நெருப்பு ஆகியவற்றை ஆதிக்ய பூதங்களாக்கி உற்பத்தி செய்யப்பட்ட இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவையின் சேர்க்கையை உணவில் நீங்கள் குறைத்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தும் கபத்தைத் தூண்டி சளியை உற்பத்தி செய்யும் சுவைகளாகும். மேலும் சாப்பிடும் சமயத்தில் இரண்டு வெற்றிலையில் சுண்ணாம்பு தடவி, நடு நரம்பை நீக்கி, சிட்டிகைப் பாக்குடன் உடனே சாப்பிடவும். சளி உற்பத்தியை நன்கு கட்டுப்படுத்தும்.

ஆயுர்வேத மூலிகைப் பொடி மருந்தாகிய ராஸ்னாதி சூரணத்தை, சிறிது எடுத்து இஞ்சிச் சாறுடன் குழைத்து சிறிது சூடாக்கி, நெற்றியில் பற்று இட்டு, அதன் பிறகு உணவை நீங்கள் சாப்பிட்டால் தலைப் பகுதியில் சளி உற்பத்தி ஏற்படாமல் தடுக்கும் பல உபாயங்களில் ஒரு சிறந்த உபாயமாகும்.

அணு தைலம் எனும் மூலிகை எண்ணெய்யை உணவுக்கு முன், மூக்கினுள் 2 சொட்டு விட்டு, தலையினுள்ளே சேர்ந்திருக்கும் கபத்தைக் காறித் துப்பிய பிறகு, உணவைச் சாப்பிடுவதால் சாப்பிடும்போது சளித்தொல்லை ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

சுக்கு, மிளகு, திப்பிலியின் சேர்க்கை திரிகடுகம் எனப்படும்.

அதன் சூரணத்துடன் அதி மதுர சூரணமும், திரிபலா எனப்படும் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காயின் சூரணத்தையும் கலந்து இந்தக் கலவையிலிருந்து அரை ஸ்பூன் (2.5 கிராம்) எடுத்து, 1 ஸ்பூன் (5 மி.லி.) சுத்தமான தேன் குழைத்து ஒவ்வொரு உணவின் இறுதியிலும் நக்கிச் சாப்பிட்டு வர மூக்கிலிருந்து சளி வரும் உபாதையை நீக்கிவிடும்.

திங்கள், புதன், சனிக்கிழமைகளில் தலைக்கு தும்பைப் பூ, காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம் போட்டுக் காய்ச்சிய நல்லெண்ணெயைத் தலைக்குத் தேய்த்து அரை மணி நேரம் ஊறிய பிறகு, காலையில் குளித்துவர, நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்து, உங்கள் உபாதைக்கான தீர்வையும் ஏற்படுத்தித் தரும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.50,000 கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற விவசாயி: மகாராஷ்டிரத்தில் அவலம்

தோட்டத்தில் திருடிய மூவா் கைது

பூலாங்குறிச்சியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

பிரதமா், முதல்வா்களைப் பதவி நீக்கும் மசோதா: நாடாளுமன்றக் குழுவின் கால அவகாசம் நீட்டிப்பு

ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT