எனக்கு வயது 32. தலை முழுவதும் ஆங்காங்கே புண்கள் போன்றும் மஞ்சள் நிற மெழுகு போன்றும், சிவப்பு நிறத்தில் இரத்தம் போன்ற திரவமும் தலையைச் சொறிந்தால் கசிகின்றன. கடந்த 15 ஆண்டுகளாக இந்த உபாதை எந்தச் சிகிச்சைக்கும் கட்டுப்படவில்லை. எனக்குத் திருமண ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். இந்த நோய் மாற வழி என்ன?
ஒரு வாசகர், சூலூர்.
கபதோஷத்தின் இருப்பிடமாகிய தலையில், பித்த தோஷத்தின் ஆதிக்க நிறங்களாகிய மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் திரவம் வடிகிறது. இந்த இரு தோஷங்களுக்கும் நகர்ந்து செல்லும் சக்தி கிடையாது. வாததோஷத்தின் "தள்ளுதல்' எனும் குணத்தால் பித்தம் கபத்துடன் சேர்ந்து உறவாடித் தோலைக் கெடுக்கிறது. பித்த கபங்களைக் கெடுப்பதில் உளுந்து முன் நிற்கும். ஆகையால் நீங்கள் உளுந்து சேர்த்துத் தயாரிக்கப்படும் இட்லி, தோசை, வடை போன்றவற்றைச் சாப்பிடக் கூடாது. அதிலும் முக்கியமாகக் காலை உணவாக அவற்றைச் சாப்பிடவே கூடாது.
உளுந்தில் உள்ள பிசுபிசுப்பு, மெழுகு போன்ற திரவத்தை வெளியே தள்ளக்கூடும். கசப்பும் துவர்ப்பும் கொண்டு உணவும் மருந்தும் உங்களுக்கு இந்த உபாதையை விரைவில் குறைக்க உதவும். கசப்புச் சுவை கொண்ட வேப்பிலையையும், துவர்ப்புச் சுவை கொண்ட கடுக்காய்த் தோலையும் விழுதாக அருகம்புல் சாறுடன் அரைத்து தலையில் அப்பி வைத்து சுமார் ஒரு மணி நேரம் ஊறிய பிறகு, காலையில் குளித்து வர, இந்த உபாதையிலிருந்து விரைவில் நிவாரணம் பெற வாய்ப்பிருக்கிறது.
காலை உணவாக வெண்பொங்கல், சின்ன வெங்காயம் வதக்கிச் சேர்த்த, குக்கரில் வெந்த பச்சைப் பயறுடன் சிறிது இந்துப்பு சேர்த்த கஞ்சியோ, கோதுமை ரவை உப்புமாவோ அல்லது வேக வைத்த கறிகாய்களுடன் சப்பாத்தியோ சாப்பிட நல்லது. இவற்றில் ஏதேனும் ஒன்றைச் சாப்பிட்ட பிறகு, கப பித்தங்களின் சீற்றத்தை அடக்கக் கூடியதும், துவர்ப்புச் சுவை கொண்டதுமான கருங்காலிக்கட்டை சுமார் 15 கிராம் எடுத்து 1 லிட்டர் தண்ணீரில் கொதிக்கவிட்டு, அரை லிட்டராகக் குறுகியவுடன் ஆற வைத்து, வடிகட்டிக் குடிக்கப் பயன்படுத்தவும்.
கெட்டியான தயிர், கடுகு, நல்லெண்ணெய், கத்தரிக்காய், மீன், சிக்கன், ஊறுகாய், சிப்ஸ் வகையறா போன்றவற்றைத் தவிர்க்கவும். பகல் தூக்கம், மதுபானம், குளிர்பானம் போன்றவையும் ஆகாது, மணத்தக்காளிக் கீரை, பாகற்காய், வாழைப்பூ, சுண்டைக்காய், வெங்காயம், கோஸ், கேரட், வெண்டைக்காய், வெள்ளரிக்காய், முருங்கைக்காய் போன்றவற்றைச் சாப்பிடலாம். பசி உள்ள நிலையில் ஆப்பிள், இனிப்பு மாதுளை, மலைவாழை, இனிப்பு திராட்சை சாப்பிடலாம்.
பிறர் உபயோகப்படுத்தும் சீப்பு, சோப்பு, துண்டு, தொப்பி, ஹெல்மெட், கைக்குட்டை, தலையணை போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டாம். தலையில் புண் உள்ள நிலையில் தேங்காய் எண்ணெய்யைப் பயன்படுத்தக் கூடாது. புண்ணிலிருந்து வரும் கசிவு நின்று , வறண்ட நிலை ஏற்பட்டால் தலைக்கு எண்ணெய் பூசலாம். அதுவும் குளிப்பதற்கு அரை மணி நேரம் முன்பாக மட்டுமே. தலையில் தூசி படியாதிருக்க, துணியால் தலையைச் சுற்றிக் கட்டிக் கொண்டு அதன் பிறகு இரு சக்கர வாகனத்திலோ, பேருந்திலோ, ரயிலிலோ பயணம் செய்யலாம்.
குடல் சுத்தி முறைகளைச் செய்து கொண்டு அதன் பிறகு நோயை அகற்றும் ஆயுர்வேத மருந்துகளை நீங்கள் சாப்பிடலாம். அந்த வகையில் திக்தகம் அல்லது மஹாதிக்தகம் எனும் நெய் மருந்தை உருக்கி, காலை மாலை 15 மி.லி.வீதம் வெறும் வயிற்றில் சுமார் 7 முதல் 10 நாட்கள் வரை சாப்பிட்டு , குடலுக்குத் தேவையான எண்ணெய்ப் பசையை அடைந்த பிறகு, மாணி பத்ரம் எனும் லேகிய மருந்தை, சுமார் 20-25 கிராம், காலையில் குடித்த கஞ்சி செரித்த பிறகு, மதியம் பசி உள்ளபோது, நக்கிச் சாப்பிட, பேதியாகி குடல் சுத்தமாகிவிடும்.
அதன் பிறகு, சுமாராக மூன்று வாரத்திற்கு மதுஸ்நுஹி
ரசாயனம் எனும் லேகிய மருந்தை காலை மாலை வெறும் வயிற்றில் 10-15 கிராம் சாப்பிட்டு வர, உங்கள் உபாதை குறைய நல்ல வாய்ப்பிருக்கிறது.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.