பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ!
கடந்த சில நாட்களுக்கு முன், சென்னை, பாரிமுனை சந்திப்பில் இருக்கும் டாக்டர் சென் அண்ட் சென் மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் சென்றிருந்தேன். அங்கிருந்த சீனப் பெண், "வாங்க, என்ன பிரச்னை?' என்று அழகு தமிழி
கடந்த சில நாட்களுக்கு முன், சென்னை, பாரிமுனை சந்திப்பில் இருக்கும் டாக்டர் சென் அண்ட் சென் மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் சென்றிருந்தேன். அங்கிருந்த சீனப் பெண், "வாங்க, என்ன பிரச்னை?' என்று அழகு தமிழில் பேசினார். அவரின் பேட்டியை "தினமணி கதிர்' இதழில் வெளியிடலாமே!'' - என்று நீலாங்கரையைச் சேர்ந்த ஒரு வாசகர் நமக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். நமது வாசகரின் யோசனையை செயல்படுத்த, டாக்டர் சென் அண்ட் சென் மருத்துவமனைக்குச் சென்றோம்.
""நீங்கள் பேசிய தமிழால் உங்களைப் பேட்டி எடுக்க வந்திருக்கிறோம்'' என்றவுடன், கண்களில் ஆச்சரியம் காட்டி, ""வாங்க... வணக்கம்'' என்று நம்மை வரவேற்றார், பல் மருத்துவத்தை மூன்றாவது தலைமுறையாக தொடர்ந்து கொண்டிருக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவரான டாக்டர் ஜெனிஃபர் சென்.
பல் பராமரிப்பு குறித்தும் தமிழில் அவருக்கிருக்கும் ஆர்வம் குறித்தும் ஒளிவீசும் புன்னகையுடன் அவர் நம்மிடம் பேசியதிலிருந்து...
என்னுடைய தாத்தா சே மாசெங். இரண்டாம் உலகப் போர் தொடங்கும் சமயத்தில் சீனாவிலிருந்து சென்னைக்கு வந்து இங்கே பாரம்பரியமான சீன பல் மருத்துவத்தை செய்துவந்தார். இந்த மருத்துவமனையைத் தொடங்கியதும் அவர்தான். அவருக்கு ஐந்து மகன்கள், ஐந்து மகள்கள். நான்காவதாகப் பிறந்தவர் என்னுடைய தந்தை சென். என் அப்பாவுடன் பிறந்தவர்கள் அனைவரும் பல் மருத்துவத் துறையிலேயே நிபுணர்களாக இருக்கின்றனர்.
மூன்றாவது தலைமுறையில் நானும் எனது அண்ணனும் பல் மருத்துவர்களாக இருக்கிறோம். நாங்கள் குழந்தைகளாக இருக்கும்போது பல் செட்டுகளை வைத்துக் கொண்டுதான் விளையாடுவோம். அந்த அளவுக்கு எங்கள் குடும்பத்தோடு பல் மருத்துவம் ஒன்றிப்போய்விட்டது.
காலையில் எழுந்ததும் நம்முடைய ஆரோக்கியத்திற்கான முதல் படி பற்களைச் சுத்தமாக்குவதுதான் என்ற அக்கறையோடு சுத்தம் செய்யவேண்டும். "வருமுன் காப்பது' பல் சிகிச்சைக்குப் பொருத்தமான பொன்மொழி!
நிறையப் பல் மருத்துவமனைகள் இருக்கின்றன. அங்கெல்லாம் தரமான சிகிச்சையும் அளிப்பார்கள். இங்கே நாங்கள் அன்பாக சிகிச்சை அளிக்கிறோம்!
என்னுடைய அப்பா சென் தமிழை ஒரு பாடமாகவே பள்ளியில் படித்திருக்கிறார். மருத்துவமனைக்கு வருபவர்களிடமும் நோயாளிகளிடமும் அப்பா தமிழிலேயே பேசுவார். அதோடு தமிழ்நாட்டில்தான் நான் பிறந்தேன். எனக்கு சீன மொழியை விட தமிழ் நன்றாகப் பேசுவதற்கு வரும். வீட்டில் பணிபுரிபவர்களுடன், பள்ளியில், கல்லூரியில் எனத் தமிழ் பேசுவதற்கு நிறையவே வாய்ப்பு எனக்கு இருந்தது. அதனால் தமிழை மிக இயல்பாகப் பேசுகிறேன்.
"சீனப் பெண்தானே.. இவருக்கு எங்கே தமிழ் தெரியப் போகிறது..' என்று என் காதுபடவே சிலசமயம் கேலி செய்து பேசியிருக்கிறார்கள். அதற்காக நான் கோபப்பட்டு தமிழில் அவர்களைத் திட்டியதில்லை. தமிழை யாரையும் திட்டுவதற்கு இதுவரை பயன்படுத்தவில்லை. அன்பை எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் இன்றி வெளிப்படுத்தும் மொழியாகவே நான் தமிழைப் பார்க்கிறேன்.
"வானவில்' என்ற வார்த்தையைச் சொல்லவும் பார்க்கவும் பிடிக்கும்! தனிமையில் இருக்கும்போது "பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ...' என்னும் பாட்டைப் பாடுவதற்குப் பிடிக்கும்! நண்பர்கள் வீட்டில் நடக்கும் விசேஷங்களுக்குப் புடவை அணிந்துகொண்டும் செல்வேன்!
என்னுடைய தாத்தாவின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதற்காக கடந்த 2000-ஆம் வருடத்தில் குடும்பத்தோடு சீனாவுக்குச் சென்றிருந்தோம். அங்கு தாத்தாவின் பூர்வீக வீடு, உறவுகளோடு சில நாள்கள் இருந்தது மறக்க முடியாத அனுபவமாக நெஞ்சில் நிறைந்திருக்கிறது.
சீனாவிலேயே நிரந்தரமாகத் தங்கிவிடும் எண்ணம் இல்லை. தமிழ்நாட்டின் காற்றும் நீரும் உணவும் எங்களின் உணர்வு முழுவதும் நிறைந்திருக்கிறது. மேற்படிப்புக்காக ஆஸ்திரேலியா போகிறேன். படித்துவிட்டு மீண்டும் இங்கேதான் வாசம்!
என்னுடைய காதல் கணவரின் பெயர் கலீம். அவர் பணிபுரியும் நிறுவனத்திற்காக ஒரு புகைப்படத் தேர்வு நடந்தது. அதில் நானும் பங்கேற்றேன். அதன் மூலம் என்னுடைய புகைப்படம் அந்த நிறுவனத்தின் சார்பாக "காஸ்மாபாலிடன்' புத்தகத்தில் வெளிவந்தது. இதன்மூலம்தான் எனக்கு கலீமின் அறிமுகம் கிடைத்தது.
இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதில் என்னுடைய தந்தை சென்னுக்குப் பெரும் மகிழ்ச்சி. அதனால்தான் அவருக்கு இந்திய மருமகனும், மருமகளுமே கிடைத்திருக்கிறார்கள்!