கதை கதையாம் நாட்டியமாம்
சென்னை நாரத கான சபா, தனது சிறப்பு நிகழ்ச்சியாக ஆண்டுதோறும் ஒரு கருப்பொருளை எடுத்துக்கொண்டு அதற்கேற்ப ஆறு நாட்கள் நடன வடிவம் தந்தும், அதே கருப்பொருளில் புராண, இதிகாச கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நா
சென்னை நாரத கான சபா, தனது சிறப்பு நிகழ்ச்சியாக ஆண்டுதோறும் ஒரு கருப்பொருளை எடுத்துக்கொண்டு அதற்கேற்ப ஆறு நாட்கள் நடன வடிவம் தந்தும், அதே கருப்பொருளில் புராண,
இதிகாச கதாபாத்திரங்களைத்
தேர்ந்தெடுத்து நாட்டிய நாடகமாகவும் நடத்திப்
Advertisement
பாராட்டுகளைக் குவித்து வருகிறது. இந்த ஆண்டு தலைசிறந்த பன்னிரண்டு எழுத்தாளர்களின் சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து, அந்தக் கதைகளுக்கேற்ற புராண- இதிகாச கதாபாத்திரங்களைத்
தேர்ந்தெடுத்து, "பரதம்-கதை கதையாம்' எனச் சிறப்பு நிகழ்ச்சியை நடத்தியது.
இதென்ன கலாட்டா என்கிறீர்களா? உண்மைதான். சிறுகதைச் சிற்பிகளின் மணியான 12 படைப்புகளுக்கு நடன வடிவம் அமைத்துப் பிரமிக்க வைத்தனர் பிரபல நாட்டியக் கலைஞர்கள். ஒரு நாளைக்கு இரண்டு நிகழ்ச்சிகள் வீதம் ஆறு நாட்களுக்கு ஒரு நாட்டிய
வேள்வியே நடந்தது.
புதுமைப்பித்தனின் "சங்குத்தேவனின் தர்மம்',
தி.ஜானகிராமனின் "தீர்மானம்', லா.ச.ராமாமிர்தத்தின் "தாரைகள்', அசோகமித்திரனின் "சுந்தர்',
சுஜாதாவின் "அம்மா மண்டபம்', சுந்தரராமசாமியின் "தண்ணீர்', அம்பையின் "சூரியன்', ஆர்.சூடாமணியின் "நாமாவளி', இந்திரா பார்த்தசாரதியின் "அசலும்
நகலும்', ஜெயகாந்தனின் "பூ உதிரும்', சிவசங்கரியின் "அணில்கள்', பூமணியின் "மாற்றம்' ஆகியவை
இந்த நூதனமான நாட்டிய விழாவில் எடுத்துக் கொள்ளப்பட்ட சிறுகதைகள்.
நிகழ்ச்சியின் முதல் பகுதியில் சிறுகதையின் மையக் கருத்தையும், கதாபாத்திரங்களையும், பாடல்கள் ஏதுமின்றி குழல், வயலின், வீணை போன்ற வாத்தியங்களின் இசையை மட்டுமே பின்னணியாகக் கொண்டு, ஆங்காங்கே ஜதிகள் சேர்த்து
நம் கண் முன் உலவவிட்டனர் கலைஞர்கள்.
அடுத்தப் பகுதியில் எடுத்துக் கொண்ட கதைக்குப் பொருத்தமான புராணக்கதையை பாடலுடன் நாட்டிய வடிவில் தந்தனர்.நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் கதைச் சுருக்கமும் வாசிக்கப்பட்டது.
நிகழ்ச்சிகளை அளித்தவர்கள், நாட்டிய உலகில் தடம் பதித்த பிரபலங்களான அனுராதா ஸ்ரீதர், ஸ்ரீதர் தம்பதியர், பார்வதி-ஷீஜித் கிருஷ்ணா, வசந்தலட்சுமி-நரசிம்மாச்சாரி தம்பதியர், சித்ரா சந்திரசேகர், தாஸரதி, வித்யாசுப்ரமண்யம், நவ்யா நடராஜன், நர்த்தகி நடராஜ், சங்கீதா ஈஸ்வரன், கருணா ஸôகரி ஆகியோர்.
கற்பனையில் ஒருவருக்கொருவர் சளைக்கவில்லை. ஆறு நாட்களும் நாரத கான சபா அரங்கம் நிரம்பியிருந்தது நிகழ்ச்சிகளின் தரத்திற்குச் சான்று.
சென்னைவாசிகள் கலையின் புதுமையை வரவேற்பவர்கள்; ஆதரிப்பவர்கள் என்ற உண்மை நிதர்சனமாகியது.
ஓரிரண்டு கதை-நாட்டியத்தைப் பார்க்கலாமா?
புதுமைப்பித்தனின் "சங்குத்தேவனின் தர்மம்' என்ற கதையில் முறுக்கு விற்கும் வயதான ஏழை முத்தாச்சி பாட்டி, தனது மகள் திருமணத்திற்குத் தனது காதிலுள்ள பாம்படத்தை ஆசாரியிடம் கொடுத்து வேலைப்பாடு நிறைந்த அணிகலனாக உருமாற்றுகிறாள். அதைப் பெற்றுக்கொண்டு வீடு திரும்புவதற்குள் இருட்டத் தொடங்குகிறது. சங்குத்தேவன் என்ற கொள்ளைக்காரன் அந்தப் பகுதியில் நடமாடுவது அறிந்து, ஒவ்வொரு அடியையும் பயந்தபடி வைக்கிறாள்.
அவளுடன் துணைக்குச் சேர்ந்து கொள்கிறான் ஓர் இளைஞன். "அப்பாடி' என்று நிம்மதிப் பெருமூச்சுவிட்டபடி, அவனிடம் தன் வறுமையின் கஷ்டங்களை, கொள்ளை பயத்தைக் கூறியபடி நடக்கிறாள். அவளது இருப்பிடம் வந்ததும், அந்த இளைஞன் அவளிடம் ஒரு பணப்பையைக் கொடுத்து "திருமணத்தை நன்றாக நடத்து! பேரனுக்கு என் பெயரை வை' என்கிறான் சிரித்தபடி. "உன் பெயர் என்ன' என்று கேட்ட மூதாட்டியிடம் கம்பீரமாகச் சொல்கிறான் "சங்குத்தேவன்' என்று. அவனுக்குள்ளும் ஒரு தர்மம் உண்டு என்ற முத்தாய்ப்புடன் கதையை முடிக்கிறார்.
வயதான பெண்மணியாக நடித்த அனுராதா தளர்ந்த நடையோடு இனம் அறியாத பயத்தையும், ஏழ்மையின் வேதனையையும் நன்றாக வெளிப்படுத்தினார்.
இதன் தொடர்பான வழியில் புராணக் கதையாக, வழிப்பறி திருடனாக வாழ்ந்து பின்பு கடவுள் அருளால் திருந்திய திருமங்கையாழ்வார் கதையை நேர்த்தியாகச் சித்திரித்தனர். சங்குத் தேவனாகவும், நகை செய்யும் பொற்கொல்லனாகவும், திருமங்கை ஆழ்வாராகவும் ஸ்ரீதரின் ரசிக்கத்தக்க பாவங்களும் கம்பீரமான அடவுகளும் இன்னமும் நம் கண் முன் நிற்கின்றன.
இத்தனைக்கும் நடன நிகழ்ச்சியன்று கடும்
ஜூரத்தில் இருந்தாராம் ஸ்ரீதர். கன்னடத்தைத் தாய்மொழியாகக்கொண்ட இவரின் அர்ப்பணிப்பு நடனத்தில் நன்கு புலப்பட்டது. எவ்வளவு பாராட்டினாலும் தகும். பக்கவாத்தியக்காரர்களைக்கூட பெங்களூரிலிருந்தே அழைத்து வந்தது நிகழ்ச்சி மேலும் சிறக்க காரணமாயிற்று.
இவர்தான் "மனதில் உறுதி வேண்டும்' படத்தில் நடனக்கலைஞராகவும் கதாநாயகனாகவும் நடித்தவர் என்கிறார்கள். இனி படங்களில் நடிப்பதில்லை என்று உறுதி பூண்டிருக்கிறாராம். பரத உலகிற்கு லாபம்!
எழுத்தாளர்
ஜெயகாந்தனின் "பூ மலரும்' கதையை எடுத்துக்கொண்டு நவரசங்களும் வெளிப்படுத்தி ஆடினார் நர்த்தகி நடராஜ். ராணுவ வீரனான தந்தை, தன் ஒரே மகனையும் ராணுவத்தில் சேர்க்கிறார். அவனுக்குப் பிடிக்கும் என்பதால் அன்னை பல பூஞ்செடிகள் வளர்க்கிறாள். அது ஒரு சோலையாகிவிடுகிறது. வீணாகிக் கொண்டிருக்கும் பூக்களைப் பறிக்க வந்த கெüரி அந்த வீட்டு மருமகளாகிறாள். ஆசைக் கணவன் மீண்டும் போர் முனைக்குச் சென்றுவிட, அவன் அளித்த அன்புப்பரிசு அவள் வயிற்றில்! காதலுடன் புது மனைவி காத்திருக்க, போரில் அந்த ராணுவப் பூ உதிர்கிறது! ஒரு பூ போனால் என்ன? இன்னொரு புதிய பூ மலரும் உன் வயிற்றில் என்று கணவன் கூறுவதைத் துணிவுடன் ஏற்று சபதமும் கொள்கிறாள் குழந்தையையும் வீரனாக வளர்க்க!
இந்தக் கதையை நாட்டிய வடிவில் வெளிப்படுத்தி மெய்சிலிர்க்க வைத்தார் நர்த்தகி. இதன் புராண சம்பந்தமுள்ள கதையாக வீர அபிமன்யுவின் கதையை நிகழ்த்தினார். அபிமன்யு தன் மனைவி உத்தரையின் வயிற்றில் தன் வாரிசு வளர்வதை அறிந்து உல்லாசமாக இருக்கும் தருணத்தில், போருக்குச் செல்ல நேரிடுகிறது. பத்மவியூகத்தை உடைக்க மட்டுமே அறிந்த இளைஞன் அபிமன்யு வீரத்துடன் போரிட்டு வெளிவரத் தெரியாமல் பகைவர்களால் கொல்லப்படுகிறான். உத்தரை தன் மகன் பரீட்சித்துவை வீரனாக வளர்க்க உறுதி கொள்கிறாள்.
பாசம் மிகுந்த தந்தையாகவும், தாயாகவும், நாணமும், காதலும் பொங்கும் காதலியாகவும் இளம் மனைவியாகவும், வீரப்போர் புரியும் துடிப்பான இளைஞனாகவும் நவரசங்கள் காட்டினார் நர்த்தகி நடராஜ். நிகழ்ச்சியின் இறுதியில் "வந்தே மாதரம்' பின்னணி இசையுடன் ஒலிக்க, ஐந்து நிமிடங்கள் கொடி வணக்கம் செய்தது, சுதந்திர தின வீர வணக்கமாக அமைந்தது. நாட்டிய அரங்க அமைப்பாளர்களுக்கு மனம் நிறைந்த சபாஷ்!
வண்ணப்படங்கள்: "யோகா'