தினமணி கதிர்

திரைக்கதிர்

"மாசிலாமணி' படத்துக்குப் பின் ஆர்.என்.ஆர். மனோகர் இயக்கும் படம் "வேலூர் மாவட்டம்.' நந்தா, பூர்ணா, சந்தானம் நடிக்கின்றனர். ""ஒரு விவசாயக் கூலியின் மகன், தன் தந்தையின் வாக்கை காப்பாற்ற போலீஸ் அதிகாரியாக

ஜி. அசோக்

"மாசிலாமணி' படத்துக்குப் பின் ஆர்.என்.ஆர். மனோகர் இயக்கும் படம் "வேலூர் மாவட்டம்.' நந்தா, பூர்ணா, சந்தானம் நடிக்கின்றனர். ""ஒரு விவசாயக் கூலியின் மகன், தன் தந்தையின் வாக்கை காப்பாற்ற போலீஸ் அதிகாரியாகிறார். அவருக்கு வேலூர் மாவட்டத்தில் வேலை கிடைக்கிறது. அங்கு அவர் எதிர்கொள்ளும் பிரச்னைகள், அவற்றை தீர்க்க அவர் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள்தான் கதை. போலீஸ் படங்களில் இது கொஞ்சம் வித்யாசப்பட்டு நிற்கும். போலீஸ் குறித்த அரிய விவரங்களை ஹைதராபாதில் உள்ள ஐ.பி.எஸ். அகாதெமிக்கு சென்று சேகரித்தோம். அது படத்தின் திரைக்கதைக்கு வலு சேர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது. போலீஸ்காரராக நடித்துள்ள சந்தானத்தின் காமெடி படத்தின் வேகத்துக்கு பக்க பலமாக இருக்கும். நந்தாவுக்கும் இப்படம் திருப்புமுனையாக இருக்கும்'' என்றார் இயக்குநர் ஆர்.என்.ஆர்.மனோகர்.

 ""1970-களில் நம்மிடையே இருந்த அரும்பெரும் வாழ்க்கை மில் தொழில். அதில் பணிபுரியும் தொழிலாளர்களின் வாழ்க்கை, அது தந்த சந்தோஷம், வலி ஆகியவற்றின் எதார்த்தப் பதிவே "கிருஷ்ணவேணி பஞ்சாலை' படத்தின் கதை'' என்கிறார் புதுமுக இயக்குநர் தனபால் பத்மநாபன். ""மில் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை, அரசுப் பணியாளர்களின் வாழ்க்கையோடு மேம்பட்ட வாழ்க்கையாக இருந்தது ஒரு காலம். கோவை, திருப்பூர் பகுதிகளில் மில் தொழிலாளிகளுக்குப் பெண் கொடுக்கப் போட்டியே இருக்குமாம். அந்த வாழ்க்கையின் பின்னணிதான் கதை. அதில் ஓர் அழகான காதல் கதையின் உயிரோட்டம். 1950-களில் தொடங்கி 1980-களில் முடியும் ஒரு வாழ்க்கைப் பதிவாக இது இருக்கும். ஹேமச்சந்திரன், நந்தனா, சண்முகராஜா நடிக்கின்றனர்'' என்றார் தனபால் பத்மநாபன்.

 புதுமுக இயக்குநர்களின் இயக்கத்தில் விஷால் நடிக்க மறுப்பதாக கூறப்படுகிறது. விஷாலிடம் கேட்டால், ""தெலுங்கில் வெளிவந்த "சவுரியம்' படத்தின் உரிமையை இரண்டு வருடங்களுக்கு முன்பே வாங்கி இருந்தோம். 'அவன் - இவன்' படத்துக்குப் பின் அப்படத்தை ரீமேக் செய்ய முடிவு எடுத்திருந்தோம். அந்த சமயத்தில் பிரபுதேவா தெலுங்கில் இயக்கிய "நு ஒஸ்தானன்ட்டே நேனு ஒத்தன்ட்டனா' என்ற படத்தை பார்த்தேன். உடனடியாக அவரையே "வெடி' படத்தை இயக்க அழைத்தேன். படத்தில் என் கேரக்டர் பெயர் பிரபாகரன். சர்ச்சையில் சிக்க எண்ணம் இல்லை. கதையும் சிக்கலானது அல்ல. எனவே "வெடி' எனப் பெயர் வைக்கப்பட்டது. புது இயக்குநர்களை என்றும் மதிக்கிறவன் நான். நானே ஓர் உதவி இயக்குநராக இருந்தவன்தான். அதனால் புது இயக்குநர்களின் வாழ்க்கையையும் வலியையும் அறிந்தவன் நான்'' என்றார் விஷால்.

 "சுப்பிரமணியபுரம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சுவாதி. தன் இயல்பான நடிப்பால் கவனம் ஈர்த்தவர், அதன் பின் தமிழ் சினிமா வாய்ப்புகளை ஏற்காமல் போனார். இப்போது மீண்டும் "போராளி' படத்தின் மூலம் தமிழ்ப் படத்தில் வருகிறார். இப்படத்தை சமுத்திரக்கனி இயக்குகிறார். சசிகுமார், அல்லரி நரேஷ் நடிக்கின்றனர்.

 ""சுப்பிரமணியபுரம்' படத்துக்குப் பின் 20 படங்களுக்கு மேல் வாய்ப்புகள் வந்தும், "என் கேரக்டரில் துளியும் கவர்ச்சி இருக்கக் கூடாது. சுப்பிரமணியபுரம் படத்தில் வந்தது போல் இருக்க வேண்டும்' என்பதுதான் எனது நிபந்தனையாக இருந்தது. நினைத்த படம் கிடைக்காததால் கன்னட சினிமாக்களில் கவனம் செலுத்தினேன். இப்போது சசிகுமாரின் படம் என்பதால் மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறேன்'' என்கிறார் சுவாதி.

 பிரபுசாலமன் தயாரிப்பில் அவரது மாணவர் அன்பழகன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம் "சாட்டை'. ""ஆசிரியர் பணியே அறப்பணி. அதற்கே தன்னை அர்ப்பணி' என்ற வாசகத்தை முன்னிறுத்தி திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. சமுத்திரக்கனி ஆசிரியராக நடிக்கிறார். படிப்பில் இருந்து வழி மாறும் மாணவர்களை நல்வழிப்படுத்தும் கேரக்டர். "சாட்டை' என்பது பம்பரத்தை அதன் விசையில் சுற்ற வைக்க உதவும் கயிறு. மாணவனை உருவாக்குவதில் ஒரு ஆசிரியருக்கு எவ்வளவு பங்கு இருக்கிறது என்பதை குறிக்கத்தான் "சாட்டை' எனப் பெயர் வைத்துள்ளேன். யுவன், கேரள மாடல் மகிமா நடிக்கின்றனர். பழம் பெரும் இயக்குநர் பீம்சிங்கின் மகன் கோபி பீம்சிங் இப்படத்தில் அறிமுக நடிகராகிறார். தம்பிராமையா முக்கிய பாத்திரம் ஏற்கிறார். மாணவப் பருவங்களை சொன்ன தமிழ் சினிமாக்களில் இது முக்கிய இடம் பிடிக்கும்'' என்றார் இயக்குநர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

பெர்லின் திரைப்பட விழாவில் அசாம் பெண் இயக்கிய படத்துக்கு விருது!

SCROLL FOR NEXT