பீட்ஸா, பாஸ்தா, குழந்தைகள்... பெண்கள்!
இத்தாலிய உணவு வகைகளான பீட்ஸா, பாஸ்தா எல்லாம் இப்போது
இத்தாலிய உணவு வகைகளான பீட்ஸா, பாஸ்தா எல்லாம் இப்போது நம் ஊர் உணவு வகைகளைப் போலாகிவிட்டது.
இவற்றை எல்லாம் ஓட்டலில் மட்டும்தான் சாப்பிட முடியும். வீட்டில் செய்வது அரிது.
நல்ல சுவையான பீட்ஸா, பாஸ்தாவைச் செய்வது எப்படி? என்று சொல்லித் தருகிறார் விபின் சச்தேவ்.
சென்னையில் சப்வே, டஸ்கானா, க்ரிப்டாஸ், பர்கண்டி என்று நிறைய ரெஸ்டாரண்ட்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இவை அனைத்தையும் நடத்துபவர் விபின் சச்தேவ். தனது உணவங்களில் செய்யப்படும் பீட்ஸா, பாஸ்தா உணவு வகைகளைத் "தொழில் ரகசியம்' என்று கூட பார்க்காமல், பிறருக்குக் கற்றுத் தருகிறார் அவர். அவரிடம் பேசினோம்.
""எங்களிடம் கற்றுக் கொள்ள இல்லத்தரசிகள், கல்லூரி மாணவிகள் வருகிறார்கள். அக்கம்பக்கத்தில் உள்ள நான்கைந்து பெண்கள் மொத்தமாகச் சேர்ந்து வருகிறார்கள். பீட்ஸா, பாஸ்தா மட்டுமில்லை, தக்காளி சாஸ் செய்வது எப்படி? நல்ல தக்காளி சாஸ் ரெடிமேடாக எங்கே கிடைக்கும்? என்பனவற்றையெல்லாம் கூட அவர்கள் தெரிந்து கொள்கிறார்கள்.
சில நேரங்களில் எங்களிடம் கற்றுக் கொள்ள வருகிற அம்மாக்களுடன் குழந்தைகளும் வருவார்கள். இவற்றைக் கற்றுக் கொள்வதில் ரொம்பவும் துறுதுறுவென்று ஆர்வமாக இருப்பார்கள். இதைப் பார்த்த நாங்கள், குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க நினைத்தோம்.
ஒவ்வொரு சனிக்கிழமையும் 15 - 20 குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கிறோம். பள்ளி நிர்வாகங்களே இதற்கு ஏற்பாடு செய்கின்றன. ஐஸ் க்ரீம் செய்வது எப்படி? காய்கறிகளை வாங்கி எப்படி அவற்றைச் சுத்தம் செய்து பத்திரமாக ஃபிரிட்ஜில் வைத்துப் பாதுகாப்பது? என்று குழந்தைகள் ஆர்வமாகத் தெரிந்து கொள்ள விரும்பும் எல்லாவற்றுக்கும் பதில் அளிக்கிறோம்.
குழந்தைகளுக்குப் பிறந்தநாள் வரும்போது, அவர்களுடைய நண்பர்களுடன் எங்கள் உணவகத்துக்கு வருகிறார்கள். அவர்கள் சாப்பிடும் பீட்ஸா போன்றவற்றை அவர்களே தங்களுடைய கைகளால் செய்கிறார்கள். நண்பர்களுக்கும் கொடுக்கிறார்கள். "நாங்களே செஞ்சு நாங்களே சாப்பிட்டோம்' என்று பெருமையாக அதை வெளியில் போய்ச் சொல்லி மகிழ்ச்சி அடைகிறார்கள். அவர்களுடைய அந்த மகிழ்ச்சிக்காகவே இந்த நிகழ்ச்சியை நாங்கள் ஏற்பாடு செய்திருக்கிறோம்.
இதற்கு பிறந்த நாள் வருவதற்கு 10 நாட்களுக்கு முன்பாகவே, குழந்தைகளின் பெற்றோர் எங்களிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால் ஒரே நாளில் நிறையப் பேருக்குப் பிறந்தநாள் இருக்கும். எனவே அவரவருக்குரிய நேரத்தை நாங்கள் ஒதுக்கிக் கொடுக்க வேண்டியிருக்கும். மிகக் குறைந்த கட்டணமே இதற்காகப் பெற்றுக் கொள்கிறோம்'' என்கிறார் விபின் சச்தேவ் மகிழ்ச்சியுடன்.