என்னுடைய வயது 73. வலது கணுக்காலைச் சுற்றி வீக்கம் கடந்த ஐந்து ஆண்டுகளாக இருக்கிறது. வலியும் கடுமையாக உள்ளது. எத்தனையோ மருத்துவர்களைப் பார்த்தும் குணமாகவில்லை. இந்த உபாதை தீர வழி என்ன?
தொடர்ந்து மழை பெய்தால் தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கிவிடுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். அந்த நீரை வெளியேற்ற, பெரிய குழாய் ஒன்றை மோட்டாருடன் இணைத்து, அதை ஓடச் செய்து, நீரை மேலேற்றி, அப்பகுதியில் சூழ்ந்துள்ள நீரை வற்றச் செய்வார்கள். இதே போன்றதொரு நிலை உங்கள் உடலிலும் காணப்படுகிறது. கணுக்கால் எனும் உடலின் கீழே அமைந்துள்ள தாழ்வான பகுதியில் தேவையற்ற நீரின் சேர்க்கை ஏற்பட்டுள்ளது. இந்த நீரை அங்கிருந்து அகற்றி இரத்தத்தின் மூலம் எடுத்துச் செல்ல, ஓர் உந்து சக்தி தேவைப்படுகிறது. அந்த சக்தி விசேஷமானது. அந்த சக்தி உங்களுக்கு மந்தமான நிலையில் செயல்பட்டால், நீரின் தேக்கம் ஏற்படுவது இயற்கையே.
உடலில் எந்த ஒரு பொருளை நகர்த்தவும், வேறு இடங்களுக்குக் கொண்டு சென்று வெளியேற்றவும் வாயுவின் செய்கையால் மட்டுமே முடியும். கரு மேகங்கள் எங்கோ ஒரு பகுதியில் சூழ, காற்று அதைத் தள்ளி பல இடங்களுக்குக் கொண்டு சென்று மழை பெய்யச் செய்வதை ஓர் உதாரணமாக இங்கு நாம் எடுத்துக் கொள்ளலாம். இச்செயலைத் திறம்பட நிர்வகிக்கும் சாமர்த்தியம் வியானன் எனும் இதயப் பகுதியிலிருந்து வேலை செய்யும் வாயுவுக்கு உண்டு. இதனுடைய மந்தமான செயல்பாடு, இதயத்திலுள்ள தசைகளின் வேலைத் திறனை மந்த கதிக்கு உட்படுத்திவிடும். அதன் விளைவாக, இரத்த ஓட்டத்துக்கு ஏற்படும் வேகத் தடை, கால்களில் அதிலும் முக்கியமாக பூட்டுகளில் நீரை மேலேற்ற முடியாமல் தடுமாறி அங்கேயே விட்டுவிடச் செய்யும். இந்த வேகத் தடையை துரிதப்படுத்த, தமனி எனும் ரத்தத்தை ஏந்திச் செல்லும் குழாய்கள் தம்மில் அடங்கியுள்ள ரப்பர் போன்ற தன்மையை செயலாற்றச் செய்கின்றன. அதற்கும் அபானன் என்ற வாயுவின் உதவி தேவைப்படுகிறது. இந்த வாயுவும் செயலாற்றத் துணிந்தாலும் வியான வாயுவின் கட்டுப்பாட்டுக்குள்தான் இயங்குகின்றன.
ஆக, உங்களுடைய விஷயத்தில் வியான, அபான வாயுக்களின் செயல் திறனைக் கூட்டி, மோட்டார் மூலம் வெளியேறும் தாழ்வான நீரைப் போல, கணுக்கால் வீக்கத்தை நீக்க முயற்சி செய்ய வேண்டும். வியான வாயுவின் இருப்பிடம் இதயம் என்பதால், இதயத்தின் வேலைத் திறனை மேம்படுத்தினால், வியான வாயுவின் இருப்பிடம் உறுதிப்படுத்தப்படுகிறது. தசமூலம் எனும் ஓர் ஆயுர்வேத கஷாய மருந்து இருக்கிறது. 15 மி.லி. கஷாயத்தில் 60 மி.லி. வெதுவெதுப்பான தண்ணீர் கலந்து, சிட்டிகை பெருங்காயம் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் சுமார் 48 நாட்கள் சாப்பிட்டு வர, இதயத்தைச் சார்ந்த தசைகளும், நார்களும், நரம்புகளும், குழாய்களும் வலுப்படும்.
கணுக்கால் வீக்கம், வலி குறையவும் மருந்து சாப்பிட வேண்டும். கோகிலாக்ஷம் என்ற கஷாய மருந்தை, மேற்குறிப்பிட்ட காலையில் சாப்பிடும் கஷாயத்தைப் போலவே, மாலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவும். ஆனால் பெருங்காயம் தேவையில்லை. கஷாயம் மட்டுமே போதுமானது. கோகிலாக்ஷம் என்றால் நீர் முள்ளி. நீர் முள்ளி இலையைப் பொரியல் செய்து சாப்பிடுவது முன் வழக்கத்திலிருந்தது. கருணை எனும் தயையைத் தொடர்ந்து அப்யாஸம் செய்து வந்தால் கோபம் வருவதைத் தடுத்துவிடலாம். அதுபோலவே நீர் முள்ளியைத் தொடர்ந்து உபயோகித்தால், பூட்டுகளில் ஏற்படும் வீக்கம், வலி ஆகியவற்றை வென்று விடலாம் என்று அஷ்டாங்க ஹிருதயம் எனும் ஆயுர்வேத நூல் கூறுகிறது. முன் குறிப்பிட்ட தசமூலம் கஷாயத்தை பாலுடன் காய்ச்சி கணுக்கால் வலி வீக்கமுள்ள பகுதியில் வெதுவெதுப்பாக ஊற்றுவதும் நல்லதே. பிண்ட தைலம் எனும் மூலிகை தைலத்தை தடவவும் செய்யலாம். உணவில் புளி, உப்பு குறைக்கவும். புலால் உணவைத் தவிர்க்கவும்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.