தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பசி அதிகரிக்க... நினைவாற்றல் பெருக...

என்னுடைய மகனுக்கு 8 வயதாகிறது. அவன் பிறந்த மறுநாளே அவனுக்குப் பெரிய அறுவை சிகிச்சை ஒன்று குடற்பகுதியில் செய்தனர். அதற்குப் பிறகு வாந்தி, செரிமானமின்மை போன்ற தொந்தரவுகள் இருந்து வந்தன. படிப்படியாக அவனு

எஸ். சுவாமிநாதன்

என்னுடைய மகனுக்கு 8 வயதாகிறது. அவன் பிறந்த மறுநாளே அவனுக்குப் பெரிய அறுவை சிகிச்சை ஒன்று குடற்பகுதியில் செய்தனர். அதற்குப் பிறகு வாந்தி, செரிமானமின்மை போன்ற தொந்தரவுகள் இருந்து வந்தன. படிப்படியாக அவனுடைய உடல்நிலை தற்போது முன்னேறியிருப்பினும், எடை 19 கிலோதான் இருக்கிறான். உணவில் நாட்டமின்மை உள்ளது. படிப்பிலும் பின்தங்கியே இருக்கிறான். கல்வியில் ஈடுபாடு இல்லாததற்குக் காரணம் உடற்கூறா அல்லது மனநிலையா?

மீனாக்ஷி தியாகராஜன்,

கும்பகோணம்.

"அக்னிமாந்த்யம்' என்று ஓர் உபாதை இருக்கிறது. அக்னி என்றால் பசி என்னும் நெருப்பு. மாந்த்யம் என்றால் மந்தமாகயிருத்தல் என்று அர்த்தம். குடல் அறுவைச் சிகிச்சையினால், பசியைத் தூண்டும் நெருப்பானது, குறைந்த அளவில் வேலை செய்தால், 8 வயதானாலும் 5 வயதுக்கான வளர்ச்சிதான் குழந்தைகளுக்குத் தென்படும். கொழுப்புச் சத்துள்ள ஆட்டுப் பால், பசுவின் பால், தயிர், வெண்ணெய், வெந்தயம் போன்றவற்றை உணவாகக் கொடுத்தால், அக்னிமாந்த்யம் நீங்கி பசி நன்றாக ஏற்படும். அதுபோலவே கொத்துமல்லி, கருவேப்பிலை முதலியவற்றைத் துவையலாக அரைத்து அதைக் கொண்டு சிறிதளவு அன்னம் சாப்பிட்டு,மேல் நன்கு கடைந்த மோர் கருவேப்பிலை போட்ட அன்னம் சாப்பிட உங்கள் மகனை நீங்கள் பழக்க வேண்டும். சாம்பார், ரசம், அதிக மசாலா உள்ள கறி கூட்டு, எண்ணெய்ப் பொரியல்கள் இவற்றைத் தவிர்க்கவும். உணவுச் சத்து உடலில் சேர உதவி செய்யும் கொத்துமல்லி, கறிவேப்பிலை, ஜீரண உறுப்புகளின் சக்தியையும் தூண்ட உதவுபவை. மேலும் புதினாத் துவையல், புளியாரைக் கீரைத் துவையல், நாரத்தை இலைப்பொடி இவற்றில் ஒன்றுடன் நெய் சேர்த்துச் சில கவளங்கள் சாப்பிடுவதும் நல்லதே. இதனால் என்ன நன்மை? செரித்த உணவு குடலில் வெகுவேகமாகச் சென்று உணவுச் சத்து உடலில் சேராமல் அப்படியே வெளியேறுவதை இந்த உணவுத் திட்டம் ஓரளவு தடுக்கும். எளிதில் செரிக்கக் கூடிய கறிகாய்களை வேக வைத்து, மசால் பொருட்கள் சேர்க்காமல் சிறிது மிளகு, சீரகக் தூள் சேர்த்துக் கூட்டாக்கி துணைப் பொருளாகக் கொள்வதும் நல்லது.

பசுவின் மோர் அல்லது எறுமை மோரை நன்கு வெண்ணெய் பிரியுமளவு கடைந்து அதில் ஓமம் அல்லது சீரகம் தாளித்துச் சேர்த்து, உணவில் சேர்ப்பதாலும் குழந்தை நல்ல உடல் மன வளர்ச்சியைப் பெற வாய்ப்பிருக்கிறது. இப்படி உடலில் உணவுச் சத்து இடைவிடாமல் சேர்வதால் புஷ்டி, தானே ஏற்படும்.

அடிக்கடி காய்ச்சல், சளி முதலிய நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள எண்ணெய்க் குளியலைத் தவறாமல் அமைத்துக் கொள்ள வேண்டும். லாக்ஷôதிதைலம், பலாலாக்ஷôதி தைலம், சந்தனபலா லாக்ஷôதி தைலம், அச்வகந்தி பலாலாக்ஷôதி தைலம் முதலியவை இந்நிலையில் ஏற்ற எண்ணெய்த் தேய்ப்புத் தைலங்களாகும்.

வல்லாரை இலையை நிழலில் உலர்த்திச் சூரணமாக்கியோ, இலையை அரைத்த விழுதையோ பாலுடன் சாப்பிட ஞாபக சக்தி அதிகமாகும். கல்வியிலும் ஈடுபாடு வளரும். தலைக்கு பிரம்மீ தைலம் தேய்த்துக் குளிப்பாட்டி வர, புத்திசாலித்தனம் வளரும்.

நவரக் கிழி தேய்த்தல் என்று ஒரு பிரயோகமிருக்கிறது. சித்தாமூட்டி வேர்க் கஷாயத்தில் நவர அரிசியை பாலுடன் வேக வைத்து உடலில் தேய்த்து வர, உடல் புஷ்டியையும் ஆரோக்கியத்தையும் உங்கள் மகன் பெறலாம்.

உடல் வனப்பை அதிகரிக்கவும், மூளை சுறுசுறுப்படையவும் செய்யக் கூடிய அரவிந்தாஸவம், பாலாமிர்தம், சாரஸ்வத சூரணம், சாரஸ்வதாரிஷ்டம், குமார்யாஸவம் போன்ற மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைப்படி, உங்கள் மகன் சாப்பிட்டு வர, உடற்கூறும், மனநிலையும் இணைந்து வளர்ச்சியடைய உதவும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

இறுதிப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா பேட்டிங்..! மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்!

SCROLL FOR NEXT