நடிகர் நாசர், "சுன் சுன் தாத்தா' என்ற மலேசியத் தமிழ்ப் படத்தை இயக்கியிருக்கிறார். முழுக்க முழுக்க மலேசியாவில் படமாக்கப்பட்ட இந்தப் படம், பெற்றோர் இருந்தும் தனித்து விடப்படும் சிறுவனின் வாழ்வைப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறது. தாயும் தந்தையும் பணத்தைச் சம்பாதிக்க நாடு நாடாக ஓடிக்கொண்டிருக்க இருவரின் அன்புக்காக ஏங்கும் சிறுவனின் தனிமைத் தவிப்பை படம் பதிவு செய்திருக்கிறது. விமர்சகர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் இந்தப் படத்தில் நாசர் தந்தையாகவும் அவருடைய சொந்த மகன் அபி குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளனர். "சுன் சுன் தாத்தா' மூலம் நாம் பரபரப்பாக தேடி ஓடி வாழும் மேற்கத்திய நகரியல், நுகர்வியல் கலாசாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் நாசர், ஒரு சிறந்த இயக்குநராகவும் முத்திரை பதித்திருக்கிறார்.
அறிமுகமான ஆரம்ப காலத்தில் சற்றுத் தடுமாறினாலும் அதையடுத்து தான் நடித்த படங்களின் வெற்றியால் தமிழிலும் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் காஜல் அகர்வால். அவரிடம் ஒரு நிருபர் எப்போது திருமணம் என்று கேட்க... ""வாய்ப்பு இல்லாதபோதுதான் நடிகைகள் திருமணம் பற்றி யோசிப்பார்கள். நான் இப்போதுதான் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறேன். அதற்குள் திருமணம் எப்போது என்று கேட்கிறீர்களே? இருந்தாலும் சொல்கிறேன்; எனக்கு இப்போதைக்கு திருமணம் செய்துகொள்ளும் எண்ணமே இல்லை. மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. அவர் படத்தில் நடித்துவிட்டு திருமணம் பற்றி யோசிப்பேன்'' என கூறியுள்ளார் காஜல்.
ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் கவர்ந்து தரத்திலும் வசூலிலும் சாதனை படைத்த "பர்ஃபி' படம் மூலம் ஹிந்திப் படவுலகுக்குச் சென்ற இலியானாவுக்கு ஹிந்தியில் வாய்ப்புகள் குவிகின்றன. தன்னுடைய முழு கவனத்தையும் ஹிந்தியில் செலுத்துவதற்கு வசதியாக மும்பை பாந்த்ரா பகுதியில் வீடு ஒன்றை வாங்கி குடியேறியுள்ளார் இலியானா. தற்போது ஷாஹித் கபூருடன் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வரும் இலியானாவின் கைவசம் மேலும் இரண்டு ஹிந்திப் படங்கள் உள்ளன.
ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த 1997ம் ஆண்டு "மா துஜே சலாம்' என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டார். இதில் இடம்பெற்ற "வந்தே மாதரம்...' என்ற பாடல் சர்வதேச அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இது ரசிகர்கள் மனதில் அவருக்குத் தனி இடத்தை பெற்றுத் தந்தது. "வந்தே மாதரம்'தான் இதுவரை இந்தியாவில் வெளியான சினிமா அல்லாத இசை ஆல்பங்களில் அதிகமாக விற்பனையாகி சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு புதிய இசை ஆல்பம் தயாரிக்க முடிவு செய்துள்ளார். உலக அமைதியை வலியுறுத்தும் பின்னணியில் இந்தப் புதிய ஆல்பத்தை உருவாக்கவுள்ளதாக ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
பொதுவாக திருமணமான பிறகு நடிகைகள்தான் சினிமாவை விட்டு ஒதுங்கி குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுவர். ஆனால் நிரோஷாவைத் திருமணம் முடித்தவுடன் சினிமாவிலிருந்து விலகி தொழில் செய்து வந்தார் ராம்கி. இப்போது கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்கிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் "பிரியாணி' படத்தில் ராம்கி அதிரடியான வில்லன் வேடம் ஏற்றிருக்கிறார்.
திரையுலகில் பாடகியாக அறிமுகமான வசுந்தரா தாஸýக்கு சாரீரத்துடன் சரீரமும் அழகாக அமைந்துவிட்டதால் "ஹே ராம்', "சிட்டிசன்' உள்ளிட்ட சில படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு தமிழிலும் கன்னடத்திலும் வாய்ப்புகள் வந்தாலும் பாலிவுட்டில் பார்வையைத் திருப்பி ஓரிரு ஹிந்திப் படங்களில் நடித்தார். சைஸ் ஜீரோ நடிகைகள் மோகத்தில் இருந்த பாலிவுட் ரசிகர்கள் புஷ்டியான இவரது தேகத்தைப் பார்த்து முகத்தைத் திருப்பிக் கொண்டதால் மீண்டும் சொந்த ஊரான பெங்களூரிலேயே தங்கி ஒரு பிரபல இசைக் குழுவில் பாடிக் கொண்டிருந்தார். தற்போது மீண்டும் தமிழில் பாடகியாக களமிறங்கியுள்ளார். "காமராசு', "அய்யாவழி' படங்களை இயக்கிய பி.சி.அன்பழகனின் "நதிகள் நனைவதில்லை' படத்தில் செüந்தர்யன் இசையில் இரண்டு பாடல்களைப் பாடியுள்ளார் வசுந்தரா.
ஸ்ருதிஹாசன் பற்றி "அவர் அங்கு இருக்கிறார்; இங்கு இருக்கிறார்; அந்தப் படத்தில் நடிக்கிறார்; இந்தப் படத்தில் நடிக்கிறார்' என்ற ரீதியில் பல தவறான தகவல்கள் ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் உலா வருகின்றன. ""இவ்வாறு வரும் செய்திகள் எவற்றிலும் உண்மையில்லை; நான் ஃபேஸ்புக்கிலேயே இல்லை; அதனால் ஃபேஸ்புக்கில் என் பெயரில் வெளியாகும் போலியான செய்திகளை நம்பாதீர்கள்'' என்று கூறியிருக்கிறார் ஸ்ருதிஹாசன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.