தினமணி கதிர்

திரைக்கதிர்

அமெரிக்காவில் உள்ள ரோசஸ்டர் மருத்துவ மைய பல்கலைக்கழகத்தில் பிரியங்கா சோப்ராவின் தந்தைக்கு சில மாதங்களுக்கு முன்பு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட நட்பின் அடிப்படையில், நியூய

மனோஜ் கிருஷ்ணா

அமெரிக்காவில் உள்ள ரோசஸ்டர் மருத்துவ மைய பல்கலைக்கழகத்தில் பிரியங்கா சோப்ராவின் தந்தைக்கு சில மாதங்களுக்கு முன்பு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட நட்பின் அடிப்படையில், நியூயார்க்கில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் நடக்கவுள்ள கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான கருத்தரங்கில் கலந்துகொள்ள முடியுமா? என மருத்துவமனை வட்டாரம் பிரியங்காவிடம் கேட்டுள்ளனர். உடனே சம்மதம் தெரிவித்ததோடு, கடந்த மாதம் நடைபெற்ற கருத்தரங்கிலும் கலந்துகொண்டார். அதோடு தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்த பிரியங்கா சோப்ரா, உடல் உறுப்பு தானம் குறித்து நடக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

சுந்தர்.சி இயக்கிய "கலகலப்பு' படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்றது. இதற்கு படத்தின் தயாரிப்பாளரும் சுந்தர்.சி யின் மனைவியுமான குஷ்பு, படத்தை இயக்கியதற்காக அவருக்குத் தனியாக பணம் ஏதும் தரவில்லை. அதற்குப் பதிலாக பல லட்சம் மதிப்புள்ள "ஆடி க்யூ 5' ரக சொகுசு காரை வாங்கி பரிசளித்துள்ளார்.

கோலிவுட்டில் "வெயில்', "கிரீடம்', "குசேலன்', தற்போது "தாண்டவம்' என 25 படங்களுக்கு ஜீ.வி பிரகாஷ் குமார் இசையத்துள்ளார். "விஜய் ஆண்டனி தனது 25 வது படத்தில் கதாநாயகனாக நடித்துவிட்டாரே... நீங்கள் எப்போது நடிக்கப் போகிறீர்கள்?' என பலரும் ஜீ.வி.பிரகாஷிடம் கேட்கிறார்களாம். பிரபலமான பாலிவுட் நடிகைதான் ஜோடி என்றால் நடிக்கத் தயார் என்று கூறும் ஜீ.வி.பிரகாஷிடம் "உங்களுக்குப் பிடித்த இசையமைப்பாளர் யார்?' என்று கேட்டால் "வாகை சூட வா' படத்துக்கு இசையமைத்த ஜிப்ரான் என்கிறார்.

செல்வராகவன் இயக்கும் "இரண்டாம் உலகம்' படத்தில் நடித்த அனுஷ்காவைப் பற்றி பட யூனிட் முழுவதும் பாரபட்சமின்றி பாராட்டி வருகிறது. நாயகன் ஆர்யாவிடம் கேட்டால்... "அனுஷ்கா நடித்த "அருந்ததி' பார்த்து மிரண்டுவிட்டேன். "அருந்ததி'யை விட இந்தப் படம் அவருக்கு பெரிய பெயரைப் பெற்றுத் தரும். குறிப்பாக, ஜார்ஜியா காடுகளில் இரண்டு மாதங்களுக்கு மேல் ஷூட்டிங் நடந்தது. எண்பத்து ஐந்து ஆண்களுக்கு மத்தியில் அவர் ஒருவர் மட்டுமே பெண் நடிகை. சொகுசான ரூம், கட்டில், மின்சாரம் என எதுவும் இல்லாதபோதும், பந்தா இல்லாமல் நடித்துக்கொடுத்தார். அதனால் அவர் மீது எனக்கு மரியாதை அதிகரித்துள்ளது'' என்கிறார் ஆர்யா.

மூன்று வருடங்களுக்கு முன்பே தொடங்கினாலும் நாயகன் சிம்புவின் தடாலடிகளால் தாமதமான "போடா போடி' ஒரு வழியாக இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாவது தனக்குப் பிளஸ் பாய்ண்ட்டாக இருக்கும் என நம்புகிறார் படத்தின் நாயகியும் சரத்குமாரின் மகளுமான வரலட்சுமி.

"சில்லுனு ஒரு சந்திப்பு' படத்தில் நாயகிகளாக நடித்து வரும் ஓவியா - தீபாஷா ஆகிய இருவருக்கிடையே நடைபெற்று வந்த நேரடிச் சண்டை இன்னமும் தொடர்கிறதாம். அவர்களிருவரையும் "பழம்' விடச் செய்ய நாயகன் விமல் உள்ளிட்ட படக் குழுவினர் மேற்கொண்ட அத்தனை முயற்சிகளும் வீணாகிவிட்டன. சமாதானத்துக்கு இடமே இல்லை என இருவரும் முட்டிக்கொண்டிருக்கிறார்கள். இருவர் சம்பந்தப்பட்ட காம்பினேஷன் காட்சிகளை ஏற்கெனவே படமாக்கிவிட்டதால் நிம்மதியாக இருக்கிறார் இயக்குநர் ரவி லல்லின்.

தனக்கு நல்ல பெயரையும் வாய்ப்புகளையும் பெற்றுத் தந்த "எங்கேயும் எப்போதும்' படத்தில் நடிக்க வாய்ப்பளித்ததற்காக நன்றி கூறும் வகையில் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில்  அவருடைய தம்பி திலீபன் நடிக்கும் "வத்திக்குச்சி' படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்துக்கொடுத்திருக்கிறார் அஞ்சலி.

பல ஆண்களை மணந்து ஏமாற்றியதாகக் கூறப்படும் சஹானாஸ் பற்றி அறிந்த ராம்கோபால் வர்மா அவருடைய கதையைப் படமாக்க முடிவு செய்திருக்கிறார். கதாநாயகியாக நடிக்க மல்லிகா ஷெராவத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

தமிழில் சூர்யாவுடன் "மாற்றான்', விஜய்யுடன் "துப்பாக்கி', கார்த்தியுடன் "அழகு ராஜா' படங்கள் தெலுங்கிலும் முன்னணி நடிகர்களின் படங்கள் என பிஸியாக இருப்பதால் தென்னிந்தியாவின் நம்பர் ஒன் நடிகை நீங்கள்தான் என காஜல் அகர்வாலுக்கு பலரும் "ஐஸ்' வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களிடம் "எங்கே இன்னொரு தடவை சொல்லுங்கள்...' எனக் கூறுவதோடு அவர்களுக்குப் பார்ட்டியும் கொடுத்து அசத்தி வருகிறார் காஜல்.

விருதுநகர் அருகே உள்ள தனியார் பட்டாசு ஆலையில் கடந்த செப்டர் 5-ம் தேதி நிகழ்ந்த  வெடி விபத்தில் 38 பேர் பலியாகினர். நூற்றுக்கும் அதிகமானோர் கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீக்காயமுற்றோருக்குத் தேவையான மருந்துகளை வாங்க கேரள மாநிலம் பாலக்காடு அருகேயுள்ள ஒற்றப்பாலத்தில் அமைந்துள்ள பதஞ்சலி ஆயுர்வேத மருத்துவமனையில் ஆர்டர் கொடுக்கப்பட்டது. மருந்துகளின் மொத்த மதிப்பு ரூ.35 லட்சம். இந்தத் தகவல் அதன் முதலாளிக்குத் தெரிவிக்கப்பட்டது. அதைக் கேள்விப்பட்டவுடன் "தமிழக மக்கள் எனக்கு மிகப் பெரிய மரியாதையை அளித்து வருகிறார்கள். அதற்கு நன்றிக் கடனாக ஒரு பைசா கூட வாங்காமல் உடனடியாக மருந்துகளை அனுப்புங்கள்; மேலும் ஆர்டர் கொடுத்தாலும் பணம் வாங்காமல் மருந்துகளை உடனே அனுப்புங்கள்' எனக் கூறியிருக்கிறார் முதலாளி. பணத்தைப் பொருள்படுத்தாமல் மனிதநேயத்துடன் செயல்பட்ட அந்த முதலாளி - மலையாள நடிகர் மம்முட்டி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT