நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாக கொண்டு பாலிவுட்டில் உருவான படம் "டர்ட்டி பிக்சர்ஸ்'. பெரும் வெற்றி பெற்ற இப்படத்தில் நடித்த வித்யாபாலனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது. இதைத் தொடர்ந்து பல மொழிகளிலும் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையைப் படமாக்கி வருகின்றனர். சில்க் ஸ்மிதாவை மலையாளத்தில் அறிமுகப்படுத்திய ஈஸ்ட்மென் ஆண்டனி, சில்க்கின் வாழ்க்கையை "கிளைமாக்ஸ்' என்ற பெயரில் படமாக்கி உள்ளார். இந்தப் படம் தமிழில் "நடிகையின் டைரி' என்ற பெயரில் டப் ஆகிறது. டிஜிட்டல் என்டர்டெயினர்ஸ் நிறுவனம் சார்பில் எச்.கே.ஏ. தயாரிக்கிறார். சில்க் ஸ்மிதாவாக சனாகான் நடிக்கிறார். அரவிந்த் கிருஷ்ணா, சுபின் நடிக்கின்றனர். இறுதி கட்ட பணிகள் முடிந்துள்ள நிலையில் ஏப்ரல் மாத இறுதியில் இப்படம் வெளியாகிறது.
தமிழ் சினிமாவின் நடிப்பு ஒத்திகை வேறொரு கட்டத்துக்குப் போகிறது. ரவி கே.சந்திரன் இயக்கும் "யான்' படத்துக்காக கைக்கோர்த்த ஜீவாவும், நாசரும் இந்த புதிய அத்தியாயத்துக்கு உயிர் கொடுக்கிறார்கள். ஒரு நடிப்புப் பட்டறை முகாமை அவர்கள் ஏற்பாடு செய்கிறார்கள். நாசர் தலைமை ஏற்க உள்ள இந்த நடிப்பு பட்டறையில் தமிழ் சினிமாவின் பிரபல ஹீரோக்கள் ஈகோ பார்க்கமால் பங்கேற்க உள்ளதுதான் இதன் சர்ப்ரைஸ். காஞ்சிபுரம், நெய்வேலி, பண்ருட்டி பகுதி கிராமங்களில் உள்ள நாடக, தெருக்கூத்து கலைஞர்களை அழைத்து வந்து, அவர்களிடம் நடிப்பு டிப்ஸ் கேட்பதுதான் சிறப்பம்சம். மாதம் ஒரு முறை நடக்கும் இந்த ஒத்திகையில், யாரெல்லாம் பங்கேற்பார்கள் என்று கேட்டால், ""பல ஹீரோக்களிடம் பேசி இருக்கிறேன். நிச்சயம் நம் சினிமாவுக்கான மாற்றுப் பாதையாக இது இருக்கும்'' என்றார் நடிகர் ஜீவா.
ஒரே இடத்தில் ஒரே நாளில் நடக்கும் நிகழ்வுகளை மையமாக வைத்து உருவாகும் படம் "கவிதை'. "ஊமை விழிகள்', "உழவன் மகன்', "கருப்பு நிலா' படங்களை இயக்கிய அரவிந்த்ராஜ் இப்படத்தை இயக்குகிறார். ""காதலர் தினத்தன்று காதலை சொல்ல வரும் ஒரு பெண் இயற்கை சீற்றத்தால் தனி இடத்தில் சிக்கி கொள்கிறாள். ஒரு நாள் முழுவதும் அங்கிருந்து தப்பிக்க அப்பெண் செய்யும் முயற்சிகள், அவள் சந்திக்கும் போராட்டங்கள் என மாறுபட்ட அனுபவத்தை தரும் படமாக இது உருவாகிறது. புதுமுகம் மகா கீர்த்தி இதில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு முழுவதும் 28 அடி அறைக்குள் நடத்தப்பட்டுள்ளது'' என்றார் இயக்குநர்.
கிரீன் ஆப்பிள் ஸ்டுடியோஸ் சார்பில் விஜய் ஸ்ரீதர் எழுதி தயாரிக்கும் படம் "அலிபாபாவும் அற்புத காரும்'. சந்தோஷ், ஈடன் நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் 1970-ம் ஆண்டின் மாடல் பென்ஸ் கார் நடிக்கிறது. ஒளிப்பதிவு, செல்வா. இசை, ஸ்ரீகாந்த் தேவா. நீண்ட இடைவெளிக்குப் இப்படத்தில் வசனம் எழுதுகிறார் இயக்குநர் அகத்தியன். திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்குகிறார் மனிஷ்பாபு. மற்றவர்களின் கஷ்டங்களை புரிந்துக் கொள்ளாத ஐவரை மையமாக வைத்து திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. தங்களின் சுயநலத்துக்காக வாழும் இவர்களை, எந்த சுழ்நிலையிலும் யார் மனதையும் துன்புறுத்தக் கூடாது என்ற கொள்கையுடைய பெண் சந்திக்கிறாள். அந்த ஐவரும் அவள் மீது அன்பு செலுத்துவது போல் நடித்து ஏமாற்றுகின்றனர். முடிவு என்ன என்பதும், கார் எவ்வாறு முக்கியத்துவம் பெறுகிறது என்பதும் கிளைமாக்ஸ்.
ஹாஸ்டலில் தங்கி படிக்கும் மூவரில் இருவர், இரு பெண்களைக் காதலிக்கின்றனர். ஹாஸ்டலில் வலம் வரும் ஓர் அனுமாஷ்ய சக்தி, அவர்கள் காதலைத் தடுக்கிறது. அதன் பின் நடந்தது என்ன? அந்த ஜோடி காதலில் ஜெயித்ததா? அனுமாஷ்ய சக்தி ஏன் அவர்களுக்கு தொல்லை கொடுக்கிறது என்பதுதான் "அஞ்சல் துறை' படத்தின் கதை. லதா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் உருவாகும் இப்படத்தில் மோகன், சவுபர்கனிகா, நாராயணன் உள்ளிட்ட புதுமுகங்கள் நடிக்கிறார்கள். திரைக்கதை அமைத்து இப்படத்தை இயக்குகிறார் புதுமுகம் ஏ.ஆர்.ரபி. ""புகழ் பெற்ற ஒரு நாவலின் பாதிப்பில் இக்கதையை உருவாக்கியிருக்கிறேன். எல்லோர் மனதிலும் அனுமாஷ்ய சக்திகள் பற்றி ஒரு பயம் இருக்கும். அப்படிப்பட்ட பயத்தின் ஆழ்நிலைதான் இந்த கதை. நிச்சயம் சுவராஸ்யப்படுத்தும்'' என்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.ரபி.
""மரணம் என்ற ஒன்று இல்லாதவன் மரணத்தைப் பரிசாகத் தருவான்'' என்ற கருவை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் "மான் வேட்டை'. கடவுள் அருளால் மாபெரும் சக்திகளை தனதாக்கிக் கொண்டவன், தன் காதலியை அழைத்துக் கொண்டு மனித நடமாட்டம் இல்லாத மலைப் பிரதேசங்களுக்கு நிம்மதி தேடி செல்கிறான். அப்போது அவர்கள் கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார்கள். சில கால இடைவெளியில் மறு ஜென்மம் எடுத்த அவர்கள் எப்படி கொலைக்காரர்களைப் பழி வாங்குகின்றனர் என்பதுதான் இப்படத்தினன் கதை. சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் இப்படத்தின் திருமலை எழுதி இயக்குகிறார். இதில் ஷரண் - ஷிவாணி, பிரதீப் - மாயா, தேஜஸ் - பிரியா, சுமன்ஷெட்டி - வனிதா என நான்கு ஜோடிகள் நடிக்கின்றனர். ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் விவேகா பாடல்களை எழுதுகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.