தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மன இறுக்கத்தைப் போக்குங்கள்!

சில பழக்கங்கள் வரம்புக்கு உட்படும்போது ஆரோக்கியத்தைத் தருகின்றன. வரம்பை மீறும்போது நோய்களைத் தருகின்றன. சரகர் எனும் ஆயுர்வேத முனிவர் உடற்பயிற்சி, சிரிப்பு, பேச்சு, வழிநடத்தல், உடல் உறவு, இரவில் நெடுநேரம் தூக்கமின்றி

எஸ். சுவாமிநாதன்

எனது வயது 34. இரவில் நிறைய நேரம் விழித்திருந்து அலுவலக வேலைகளைச் செய்ய வேண்டிய நிர்பந்தம். உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க நிறைய உடற்பயிற்சியும் செய்கிறேன். மனதில் இறுக்கமான சூழ்நிலையால் வீட்டிலும் அலுவலகத்திலும் மகிழ்ச்சி இல்லாததால் நான் சிரித்துப் பழகக் கூட வாய்ப்பில்லாத இயந்திர வாழ்க்கை வாழ்கிறேன். களைப்பாக இருக்கிறது. என் எதிர்கால ஆரோக்கியம் இதனால் பாழாகுமா?

-பரணி, சென்னை.

சில பழக்கங்கள் வரம்புக்கு உட்படும்போது ஆரோக்கியத்தைத் தருகின்றன. வரம்பை மீறும்போது நோய்களைத் தருகின்றன. சரகர் எனும் ஆயுர்வேத முனிவர் உடற்பயிற்சி, சிரிப்பு, பேச்சு, வழிநடத்தல், உடல் உறவு, இரவில் நெடுநேரம் தூக்கமின்றி விழித்திருத்தல் ஆகியவற்றை வரம்புக்கு உட்படுத்த வேண்டிய பழக்கங்கள் என்று கூறுகிறார். இவை அனைத்தும் அளவுக்குட்பட்டிருக்கும் வரை ஆரோக்கிய வாழ்விற்கு இன்றியமையாதவைகளாகின்றன. அளவை மீறும்போது அவையே வாழ்வைக் குலைக்கலாம். வரம்பைப் பகுத்தறிவால் அறிந்து அமைத்துக் கொள்ளக் கூறுகிறார்.

திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இயந்திர வாழ்க்கை வாழும் பலரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நல்ல ஓய்வும், நல்ல நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் மனம்விட்டு மகிழ்ச்சியுடன் பேசுவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொள்வது நலம் தரும். மனம் லேசாவது சிரிப்பினாலும் மகிழ்ச்சியாலும்தான். இயற்கையான சூழலில் நம்மை அறியாமல் நம் மனம் லேசாக பல அரிய வாய்ப்புகள் உண்டு. சிறு குழந்தைகளின் விளையாட்டில் குழந்தையோடு குழந்தையாக மாறப் பழகிக் கொண்டால் முகத்தில் சிரிப்பு தானே தோன்றும்.

மனம்விட்டுச் சிரிக்கும்போது நுரையீரலிலிருந்து மூச்சுக்காற்று சிறிது தொடர்ந்து அதிக அளவில் அதிக வேகத்தில் வெளியாகிறது. வெளியாகும் வேகத்தில் ஆழ்ந்துள்ள நுரையீரல் கோச அறைகளில் தேங்கியுள்ள அசுத்தக்காற்று வெளிப்படுவதும் அதேவேகத்தில் சுத்தமான காற்று உள்ளே செல்வதும் நாமறியாமல் நிகழ்பவை. அதனால் நீங்கள் தினமும் சில நிமிடங்களாவது சிரிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொள்ளுதல் அவசியம்.

களைப்பு நீக்கும் மருந்துகளில் கெடுதி விளைவிக்காதது - நல்லதை நிலைத்திருக்கும்படி தருவது சியவனப்ராசம், தசமூலாரிஷ்டம், அஸ்வகந்தாரிஷ்டம் முதலியவை. பசியைத் தூண்டி உணவைச் செரிக்கச் செய்வதும், உடல் தேய்வை ஈடுசெய்யுமாறு சத்து ஊட்டம் பெற வசதி செய்து தருவது - வில்வாதிலேகியம், ஜீரகவில்வாதி லேகியம், மகாபில்வாதி லேகியம் முதலியன. மன நிம்மதியும் வலிவும் அளிப்பவை - இறைவனின் சிந்தனையும், பிறர் நல்வாழ்வு பெறச் சிந்திப்பதும், அவற்றுக்கான பணிகளில் ஈடுபடுவதும் தசைகளின் இறுக்கத்தைத் தளர்த்தி மன இறுக்கத்தைப் போக்கவல்லவை - அருவிகளில் குளிப்பது, எவ்வகைச் சிந்தனையுமின்றி காலாற நடப்பது, வாரமிருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, நல்லெண்ணத்துடன் பழகும் பெரியோர்கள் நண்பர்களுடன் நற்பணிகளில் ஈடுபடுவது போன்றவை.

வார இறுதி நாட்களில் ஆயுர்வேத மருத்துவமனைகளில் செய்யப்படும் எண்ணெய் தேய்ப்பு, பெட்டியினுள்ளே செலுத்தப்படும் மூலிகை நீராவிக்குளியல், மூக்கினுள் விடப்படும் மூலிகைத் தைலங்களால் தலைப்பகுதியைச் சுத்தப்படுத்திக் கொள்ளுதல், நெற்றியின் மீது தாரையாக விடப்படும் மூலிகை எண்ணெய்கள், தலையில் எண்ணெய்யை நிரப்பி நிறுத்தி வைக்கும் சிரோவஸ்தி சிகிச்சை, ஆசனவாய் வழியாக எண்ணெய் கஷாயம் போன்றவற்றைச் செலுத்தி குடலைச் சுத்தம் செய்து கொள்ளுதல் போன்ற சிகிச்சை முறைகளை சீரான இடைவெளியில் நீங்கள் செய்து வந்தால், உடல் களைப்பு நீங்கி மனமும் இறுக்கம் தளர்ந்து லேசாகும். உங்களுடைய எதிர்கால ஆரோக்கியம் பாழாகாதவாறு இந்த சிகிச்சை முறைகள் உங்களுக்கு உதவிடக்கூடும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT