முகப்பு
தினமணி கதிர்

ஏன் இந்த அவசரம்?

ஒரு பிரபல மருந்து தயாரிப்பு கம்பெனியொன்று உலகில் இளம் வயதிலேயே நம்மைவிட்டுப் பிரிந்த பிரபலங்களை பட்டியலிட்டு அவர்களது புகைப்படங்களையும் வெளியிட்டு,

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:22 PM
பகிர்:

ஒரு பிரபல மருந்து தயாரிப்பு கம்பெனியொன்று உலகில் இளம் வயதிலேயே நம்மைவிட்டுப் பிரிந்த பிரபலங்களை பட்டியலிட்டு அவர்களது புகைப்படங்களையும் வெளியிட்டு, எங்கள் கம்பெனி மருந்துகள் மட்டும் அப்போது கிடைத்திருந்தால் உயிர் பிழைத்திருப்பார்கள் என்று விளம்பரப்படுத்தியது. அவர்களைப் பற்றிய தகவல்களை படிக்கும் போது இந்த உலகைவிட்டு போக உண்மையான காரணம் என்ன என்ற கேள்வி நிச்சயம் எழும்.

1821-ஆம் ஆண்டு 26 வது வயதில் கவிஞர் ஜான்கீட்ஸ், காசநோயால் இறந்த போது உண்மையில் அப்போது ஸ்டெப்ரோமைசின் கண்டுபிடிக்கப்பட்டிருக்குமானால் நிச்சயம் அவர் உயிர் பிழைத்திருப்பார். மேலும் காசநோய் அவரது பரம்பரை நோயாக இருந்தது. அவர் மரணத்தை நெருங்கிக் கொண்டிருந்த போது டாக்டர்கள் அவரை கடற்கரைப் பிரதேசத்தில் வசிக்கும்படியும், நாள்தோறும் அருகில் உள்ள மலைமீது ஏறி இறங்கும்படியும் கடினமான வேலைகளைச் செய்யும்படியும் அறிவுறுத்தினார். அவரது காதலி ஃபெனிபிரவுன் அவருக்கு ஆதரவாக இல்லை. 1820ஆம் ஆண்டு இத்தாலி சென்ற கீட்ஸ், சில மாதங்களில் இறந்து போனார். இறப்பதற்கு முன் தன் கல்லறையில் பொறிக்க சொன்ன வாக்கியம் இது தான் "இங்கு உறங்குபவன் பெயர் தண்ணீரில் எழுதப்பட்ட சாசனம்'.

அவரது சமகாலத்தில் வாழ்ந்த ஷெல்லி, கீட்ஸின் கவிதைகள் " ஜான் கீட்ஸின் கவிதைகள்' என்ற தலைப்பில் வெளியிட உதவினார். இவரும் இத்தாலி அருகில் ஸ்பெர்சியாவில் கடற்பயணம் மேற்கொண்டிருந்த போது கடலில் தவறிவிழுந்து இறந்தார். அப்போது அவருக்கு வயது 30. இவருடன் பயணம் செய்த 19வயது மனைவி ஹாரியத்தும் உடன் மூழ்கி இறந்துபோனார்.

1816 ஆம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து இத்தாலி சென்ற ஷெல்லி மிகவும் பிரபலமான ""ஒ வோர்ல்ட் ஒ லைஃப் ஓ டைம்'' கவிதை உள்பட  பல பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். வாழ்க்கையின் இறுதி நாட்களில் பல அருமையான காதல் கவிதைகளை எழுதிய ஷெல்லியின் உடல் ரோம் நகரிலேயே புதைக்கப்பட்டது.

1824 ஆம் ஆண்டு 36வது வயதில் காலமான பைரனின் கவிதைகள், கடும் விமர்சனத்திற்குள்ளாகியிருந்தாலும் பெருமளவில் ரசிக்கும் வகையில் பிரபலமாகியிருந்தது. 1798 ஆம் ஆண்டிலேயே வோர்ட்ஸ் வொர்த், கொலோரிட்ஜின் உரைநடைக் கவிதைகள் வெளியாகி வாசகர்களிடையே காதல் உணர்வுகளைத் தூண்டியிருந்ததால் பைரனின் படைப்புகள் அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றன. அழியாத காதல் கவிதைகளை கிரேக்க கிளர்ச்சியாளர்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டுமென்ற இவரது கனவு நிறைவேறுவதற்கு முன்பே விஷ சுரத்தால் இறந்து போனார். நாட்டிங்ஹாம் அருகில் இருந்த இவரது குடும்பத்தினர் கல்லறைக்கே இவரது உடல் கொண்டுவரப்பட்டு புதைக்கப்பட்டது.

1791 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி 35 வயதில் தன் பிறந்த ஊரான சால்ஸ்பர்க்கில் மரணமடைந்த இசைமேதை மொகார்ட்டின் நினைவிடத்திற்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் சென்று அஞ்சலி செலுத்திவருகின்றனர். இந்த உலகத்திற்கு ஏராளமான இசைக் குறிப்புகளையும், பியோனோ, ஆர்கெஸ்ட்ரா, பயன்படுத்திய மேடை அனைத்தையும் விட்டுச்சென்ற அவரது 250வது பிறந்தநாளை இசை உலகமே பிரம்மாண்டமாக கொண்டாடியது. அவரைப் போன்ற இசை மேதை இனி உலகில் பிறப்பது அரிது எனப் புகழ்ந்தது. நான்கு வயதிலேயே நல்ல நினைவாற்றலுடன் இசையமைக்கும் திறமை பெற்றிருந்தாலும் வாழ்க்கையில் அவருக்குகிருந்த நீண்டகால பணப் பிரச்னை, உடல்நலக் குறைவு காரணமாகவே அவர் அகால மரணமடைந்தார். இதைப்பற்றி அவரது மகள் "குறிப்பிடுகையில் உண்மையான குறிக்கோளே அவரது மரணம்' என்றாராம்.

பிரெஞ்ச் தந்தைக்கும் போலந்து தாய்க்கும் பிறந்த பெடரிக்சாப்பின், 1849ஆம் ஆண்டு இறந்தபோது வயது 39. பியானோ கவிஞர் என அழைக்கப்பட்ட அவரது கல்லறை மீது போலந்து நாட்டு மண், வெள்ளிக் கிண்ணத்தில் கொண்டு வரப்பட்டு தூவப்பட்டது.

17வது வயதில் ""ஒவர்ச்யூர்ஸ் டு எ மிட்சம்மர் நைட்ஸ் ட்ரிம்'' என்ற பாடலை இயற்றி இசைமைத்த மேன்டல்ஷோன், 1847 ஆம் ஆண்டில் 38வது வயதில் இறந்து போனார்.

வியாபாரத்தில் நஷ்டமேற்பட்டதால் மதபோதகராக மாறி பின்னர் 27வது வயதில் ஓவியராக மாறிய வான்கோ, 37வது வயதில் காலமானபோது சுமார் ஏழாயிரம் ஓவியங்களை இந்த உலகிற்கு விட்டுச்சென்றார். தவறான அபிப்பிராயத்தால் வெறுத்து ஒதுக்கப்பட்ட அவர் விரக்தியால் 1890 ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி தன்னைத் தானே சுட்டுக் கொண்டார். ஆனால் இருதினங்கள் கழித்து சகோதரனின் கைகளில் மரணமடைந்தார்.

பிரான்ஸில் கவுரவமான குடும்பத்தில் பிறந்த டௌலஸ் லாடெர்க், நாவல்கள் சினிமா மூலம் பொஹமியன் வாழ்க்கை முறையைப் பின்பற்றினார். இவரது சம காலத்தில் வாழ்ந்த ஓவியர்களைப் போலின்றி இவரது ஓவியங்கள் வித்தியாசமாக இருந்தன. பணத் தட்டுப்பாடும் இல்லை. ஆனால் இவரது உடலின் அடிபாகத்தில் வளர்ந்த தவறான எலும்பினால் உடல் தோற்றம் அருவெறுப்பாகவும் ஒழுங்கீனமாகவும் இருந்தது. முறையான அங்கீகாரமும் இல்லை. விகாரமான தோற்றம்,  அதிர்ஷ்டமின்மை எல்லாம் சேர்ந்து அவரது மனநிலை பாதிக்கப்பட்டது. 1901 ஆம் ஆண்டு 37வது வயதில் அவர் மரணமடைவதற்கு முன் இருமுறை பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டார்.

1920ஆம் ஆண்டு 37வது வயதில் காசநோயினால் மரணமடைந்த மொடிக் லியானி, அவரது காலத்தில் வாழ்ந்த ஓவியர்களைப் போலின்றி கடைசி காலத்தில் நல்ல வசதியுடன் வாழ்ந்தார். ஆனால் குடிப்பழக்கத்தினால் உடல்நிலை பாதிப்படைந்தது. உடல்நலனைப் பற்றி அக்கறை கொள்ளாத அவர் இறந்தவுடன் இருதினங்கள் கழித்து ஒன்பது மாதம் கர்ப்பமாக இருந்த அவரது மனைவியும் தற்கொலை செய்து கொண்டது தான் பரிதாபம்.

1483ஆம் ஆண்டில் பிறந்து மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மதபோதகர்களில் ஒருவராக கருதப்பட்ட ஏஃபேல் வரைந்த குழந்தை ஏசுவுடன் கூடிய கன்னிமேரி ஓவியம் அவரது திறமைக்கு ஒரு சான்றாகும். 1520ஆம் ஆண்டில் இவர் மரணமடைந்த போது வயது 37.

சரித்திரப் புகழ்பெற்ற பல ஹீரோக்கள் இளம் வயதிலேயே இந்த உலகைவிட்டு மறைந்துவிட்டனர். இந்தியாவின் சில பகுதிகளை பிடித்த அலெக்ஸôந்தர் பெர்சியாவுக்கு சென்றடைந்தவுடன் ஓராண்டுகழித்து பாபிலோனில் 33வது வயதில் காலமானார். சிராஜ் உதல்லா பிளாஸி யுத்த களத்தைவிட்டு புறப்படும்போது அவரது படைத் தளபதிகளால் படுகொலை செய்யப்பட்ட போது அவரது வயது 24.

கேரளாவில் பிராமண குடும்பத்தில்  பிறந்த ஆதி சங்கராச்சார்யா நாடுமுழுவதும் பயணம் செய்து ஆன்மிக தத்துவங்களைப் போதித்து பின்னர் சிருங்கேரி, துவாரகா, பூரி, பத்ரிநாத், காஞ்சி ஆகிய இடங்களில்  மடங்களை அமைத்தார். இந்துமதத்தின் மிகப் பெரிய தத்துவஞானியாக விளங்கிய அவர் இறந்தபோது வயது 32.

ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர்களில் மிகவும் பிரபலமாக விளங்கிய சுவாமி விவேகானந்தர், தன் குருநாதரின் போதனைகளை உலகுக்குப் பரப்ப ராமகிருஷ்ண மடத்தை நிறுவினார். அளவுக்கு மீறிய வேலைப் பளுவினால் உடல் நலம் பாதிக்கப்பட்டு அடுத்த பிறந்தநாள் வரை நான் உயிரோடிருப்பது சந்தேகம் என்று தன் சீடர்களிடம் கூறியதைப் போலவே 1902 ஆம் ஆண்டு அவரது 40வது பிறந்தநாளுக்கு ஏழுமாதங்கள் இருக்கும் போதே இறந்து போனார்.

சிலுவையில் அறையப்பட்டு ஏசுநாதர் உயிர் துறந்த போது அவரது வயது 33. தமிழகத்திலும் கணிதமேதை ராமானுஜம், மகாகவி பாரதியார் ஆகியோரும் இளம் வயதிலேயே மரணமடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.