முகப்பு
தினமணி கதிர்

துர்கா பூஜையில் பிரான்ஸ்!

துர்கா பூஜையை ஆங்கில ஆட்சிக்கு அடித்தளமிட்ட ராபர்ட் கிளைவ் கொண்டாடியிருக்கிறார். 1757 இல் பிளாசிப் போரில் கிழக்கிந்திய

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

நவராத்திரி வந்துவிட்டால் இந்தியா முழுக்க விழாக்கோலம்தான்.

மகிஷாசுரனை துர்கை கொன்றழித்ததைக் கொண்டாடும் நிகழ்வே துர்கா பூஜை. "நல்லது தீயதை அழிக்கும்; நல்லதே வெல்லும்' என்ற அடிப்படையில் கொண்டாடப்படுகிறது அது. மனிதனுக்குள் இருக்கும் விலங்குத் தன்மையைக் கட்டுப்படுத்தச் சொல்கிறது.

நவராத்திரியின்போது 5 நாட்கள் துர்கா பூஜை அங்கே நடைபெறும்.

இவ்வாண்டு அக்டோபர் 9 -13 தேதிகளில் துர்கா பூஜை வரப் போகிறது.

இவ்வாண்டு துர்கா பூஜை நடைபெற ஸ்பான்சர் செய்யப் போகிறது பிரான்ஸ் நாடு.

சுதந்திரப் போராட்டக் காலத்தில் அந்நியர் ஆதிக்கம் என்ற தீய சக்தியை அழிக்கும் குறியீடாக துர்கா பூஜையை முன்னிறுத்தினர் சுதந்திரப் போராட்ட  வீரர்கள்.

சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்...

துர்கா பூஜையை ஆங்கில ஆட்சிக்கு அடித்தளமிட்ட ராபர்ட் கிளைவ் கொண்டாடியிருக்கிறார். 1757 இல் பிளாசிப் போரில் கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்தை எதிர்த்தார் வங்காள நவாப் சிராஜ்-உத்-தெüலா. அவரை எதிர்த்துச் சண்டையிட்ட ராபர்ட் கிளைவ் பிளாசி யுத்தத்தில் அவரைத் தோற்கடித்தார். இதைக் கொண்டாட கொல்கத்தாவில் சர்ச் இருக்கிறதா? என்று தேடினார் ராபர்ட் கிளைவ். கல்கத்தாவில் அப்போது இருந்த ஒரு சர்ச்சும் அழிக்கப்பட்டிருந்தது. கிழக்கிந்திய கம்பெனிக்கு விசுவாசமாக இருந்த அன்றைய வியாபாரிகளும், ஜமீன்தார்களும், கிழக்கிந்திய கம்பெனியில் வேலை செய்த வங்காளத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் சேர்ந்து துர்கா பூஜையை நடத்தி, பிளாசிப் போர் வெற்றியைக் கொண்டாடும்விதமாக, ராபர்ட் கிளைவுக்கு மரியாதை செய்திருக்கிறார்கள்.

மேற்கு வங்கத்திலும், திரிபுராவிலும் துர்கா பூஜை அதிக அளவில் கொண்டாடப்படுகிறது. அசாம், பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப், காஷ்மீர், கர்நாடகா மாநிலங்களில் சில பகுதிகளில் கொண்டாடப்படுகிறது.

மே.வங்கத்திலேயே கொல்கத்தாவில்தான் பூஜைக் கொண்டாட்டங்கள் மிக மிக அதிகம்.

கொல்கத்தா காளி, ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், நேதாஜி, கவி தாகூர் போல துர்கா பூஜைக் கொண்டாட்டமும் அவர்களது அடையாளம்.

கொல்கத்தாவின் முக்கிய வீதிகளில் கண்ணைக் கவரும் பந்தல்கள் அமைத்து அவற்றில் துர்கையின் சிலைகளை வழிபாட்டுக்காக வைத்திருப்பார்கள். ஒரு பந்தல், இரண்டு பந்தல் என்று நினைத்துவிடாதீர்கள். சுமார் 2 ஆயிரம் பந்தல்கள்.

மக்கள் ஒவ்வொரு பந்தலாகத் தேடிச் சென்று துர்கையை வழிபடுகிறார்கள். எனவே கூட்ட நெரிசலைத் தாங்க முடியாமல் கொல்கத்தா வீதிகள் நெறிபடும். அப்போது வாகனப் போக்குவரத்து தடை செய்யப்படுகின்றன. தொலைதூரத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு நடந்து சென்றுதான் துர்கையை வழிபட முடியும்.

சிலைகளை வைப்பதற்கான இந்தப் பந்தல்களை ஒவ்வோராண்டும் புதுமையாக அமைப்பார்கள். பந்தல்கள் அமைப்பதற்கு "தீம்'களை முடிவு செய்து அமைப்பார்கள். டைட்டானிக் கப்பல் போன்ற வடிவத்திலும் கூட பந்தல் அமைத்திருக்கிறார்கள். இவற்றில் சிறந்த பந்தல்களைத் தேர்ந்தெடுத்துப் பரிசுகள் வழங்குகிறார்கள்.

துர்கையின் சிலைகளை வடிவமைப்பதிலும் பல நூற்றுக்கணக்கான கலைஞர்கள் ஈடுபடுகிறார்கள்.

பெரிய பெரிய நிறுவனங்கள் விழாக் குழுவினரை அழைத்து, பந்தல்கள் அமைப்பதற்கும், அவற்றை அலங்கரிப்பதற்கும், துர்கை சிலைகளை உருவாக்குவதற்கும் நிறைய நிதியுதவி செய்கிறார்கள்.

துர்கா பூஜையின் போது வங்காளிகள் ஒருவருக்கொருவர் அன்பளிப்புகளைத் தந்து மகிழ்கிறார்கள். பெரும்பாலும் ஆடைகளையே அன்பளிப்பாகத் தருகிறார்கள். தீபாவளிக்கு புது டிரஸ் எடுத்து நாம் அணிந்து கொள்வதைப் போல அவர்கள் புது டிரஸ் எடுத்துப் பிறருக்குத் தருகிறார்கள்.

நினைத்தாலே நாவில் ஊறும் பெங்காலி ஸ்வீட்ஸ் - பாதாம் பர்பி, பெங்காலி ஸ்பெஷல் ரஸகுல்லா போன்ற பல இனிப்பு வகைகள் கைமாறும். கொல்கத்தாவாசிகளுக்கேயுரிய மீன் உள்ளிட்ட "சைவ' உணவுகளுக்கும் பஞ்சமில்லை.

பாட்டுப் போட்டி, நடனப் போட்டி என்று தூள் பரத்துகிறார்கள்.

வழிபாட்டுக்காக துர்க்கை சிலைகளை வைக்கக் கூடிய பந்தல்களை திரைப்பட நடிகர்கள், நடிகைகள் திறந்து வைப்பதும் உண்டு.

இவ்வாண்டு நடைபெறப்போகும் துர்கா பூஜையின் தொடக்க விழாவில் பங்கு கொள்ள பிரான்சின் உலகக் கோப்பை கால்பந்தாட்டக் குழுவைச் சேர்ந்த ஒருவரை பிரான்ஸ் அனுப்பி வைக்கப் போகிறது.

கிராமப்புற மக்கள் சமூகம் நடத்தும் துர்கா பூஜையை படம் பிடித்து 20 நிமிட ஆவணப்படம் ஒன்றை பிரான்சின் தேசிய தொலைக்காட்சி சேனலான பிரான்ஸ் டிவி ஐஐ - தயாரிக்கப் போகிறது.

பாரீஸிலுள்ள லூவர் மியூசியம் போன்ற ஒரு பந்தலை அமைத்து அங்கே துர்கை சிலைகளை வைக்கப் போகிறார்களாம்.

""கடந்த ஆண்டு துர்கா பூஜையை நான் பார்த்தேன். அது என்னை மிகவும் கவர்ந்து விட்டது. இவ்வாண்டு நடக்கவிருக்கிற துர்கா பூஜையில் பங்கேற்பதன் மூலம் இந்திய - பிரான்ஸ் கலாசார உறவை மேம்படுத்த முடியும் என்று நினைக்கிறேன்'' என்கிறார் கொல்கத்தாவில் உள்ள அல்லயன்ஸ் பிராங்கைஸின் இயக்குநர் ஸ்டீபன் அமாலீர்.

பல வெளிநாடுகளிலும் துர்கா பூஜை கொண்டாடப்படுகிறது. துர்கா பூஜையின்போது வழிபாடு செய்யப்பட்ட துர்கையின் சிலைகளை தேம்ஸ் நதியில் கரைத்துக் கொள்ள பிரிட்டிஷ் அரசு அனுமதி வழங்கியிருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

முழு கட்டுரையைப் படிக்க →