தினமணி கதிர்

திரைக் கதிர்

சராசரி மனிதன் ஒருவனின் எண்ணமும், செயல்பாடுகளும் மக்களோடு ஒத்துப் போகிறதா? பிரதிபலனாக அவன் எதிர்கொள்வது என்ன?

ஜி. அசோக்

விரைவில் இயக்குநர் அவதாரம் எடுக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். ஆஸ்கர் விருதுகள் வென்ற பின் குறிப்பிட்ட இயக்குநர்களின் படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வரும் ரஹ்மான், தன்னுடன் ஆஸ்கர் விருது பெற்ற ஒளிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டியுடன் இணைந்து படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார். சமீப காலமாக படத்துக்கான ஸ்கிரிப்ட் தயாரிப்பில் மும்முரமாக ரஹ்மான் இருந்து வருகிறார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தங்கியிருந்த போது ஸ்கிரிப்ட் மற்றும் திரைப்பட இயக்கம் பற்றிய படிப்பை ரஹ்மான் படித்துள்ளார். ரஹ்மானின் வட்டாரங்களில் விசாரித்த போது, ""ரசூலுடன் இணைந்து ஸ்கிரிப்ட் தயாரிப்பில் ரஹ்மான் ஈடுபட்டு வருவது உண்மை. கதைக்கான ஹீரோக்கள் தேர்வு நடந்து வருகிறது. சம்பந்தப்பட்ட இரண்டு ஹீரோக்களிடம் கால்ஷீட் கேட்டும் பேச்சு நடக்கிறது. உலக மார்க்கெட்டை குறி வைத்து படம் உருவாகும் என்பதால் இப்போது அது பற்றி எதையும் வெளிப்படையாக பேச முடியாது'' எனத் தெரிவித்தனர்.

ராயல் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் படம் "துணிந்து செல்'. "புதுமுகங்கள்' சுரேந்தர், ஹென்னா நடிக்கின்றனர். இயக்குநர் மகேந்திரனின் உதவியாளர் லேனா மூவேந்தர் இப்படத்தை எழுதி இயக்குகிறார். ""கண்ணுக்குள்ளே' படத்துக்குப் பின் இப்படத்தை இயக்குகிறேன். எந்த தடையாக இருந்தாலும் சரி, அதை தகர்த்து தூளாக்கும் மந்திரச் சொல் துணிந்து செல் என்பதுதான். கதைக்கு பொருத்தமாக இருந்து விட்டதால், அதையே தலைப்பாக்கி விட்டேன். மக்களின் அத்தியாவசியப் பொருளான வாட்டர் கேன் கம்பெனியை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. காதலுக்காக தன் காதலியை சிறையெடுக்கும் காதலனின் கோணத்தில் கதை நகருகிறது. நாகர்கோவில், தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் ஷூட்டிங் நடந்து வருகிறது என்றார் இயக்குநர் லேனா மூவேந்தர்.

மனோஜ் கிரியேஷன்ஸ் சார்பில் பாரதிராஜா தயாரித்து இயக்கும் படம் "அன்னக்கொடியும் கொடி வீரனும்'. புதுமுகம் லக்ஷ்மண், கார்த்திகா, மனோஜ், மீனாள், சுபிக்ஷா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். படம் குறித்து பாரதிராஜாவிடம் பேசுகையில், ""என் வழக்கமான களம்தான் இதன் திரைக்கதை. சிறு வயதில் என் ஊர் மக்கள் கொடி வீரனை பற்றி நிறைய சொல்லியிருக்கிறார்கள். அதை மையமாக வைத்துதான் கதை எழுதியுள்ளேன். கொடிவீரன் என்ற மனிதன் வாழ்ந்த கிராமத்துக்குச் சென்று, பலரைச் சந்தித்து திரைக்கதை எழுதியுள்ளேன். செருப்பு தைக்கும் சமூகத்தை சேர்ந்த ஒருவன், காதலில் விழுந்ததும், பின்பு எழுந்ததும்தான் கதை. அலைகள் ஓய்வதில்லை, வேதம்புதிது ஆகிய படங்கள் ஏற்படுத்திய அதிர்வுகளை விட இப்படம் கூடுதலான அதிர்வுகளை ஏற்படுத்தும். மேடை ஏறி சொல்ல முடியாததை, நீண்ட பிரசாரத்தின் மூலம் சொல்ல முடியாததை இந்தப் படத்தின் மூலம் பேசியிருக்கிறேன். மனோஜின் இன்னொரு முகத்தை இதில் நீங்கள் பார்க்கலாம்'' என்றார் பாரதிராஜா.

நடிகர் டாக்டர் ராஜசேகரின் தங்கை மகன் மதன் எழுதி, இயக்கி, கதாநாயகனாக அறிமுகமாகும் படம் "சும்மா'. ஏற்கெனவே தமிழில் "பார்வதிபுரம்', தெலுங்கில் "கமனம்' ஆகிய படங்களில் சிறு வேடங்களில் நடித்து இருக்கிறார். இப்படத்தின் மூலம் பாலிவுட்டின் ப்ரணிதா சோப்ரா தமிழுக்கு வருகிறார். சுமன் ஷெட்டி, பிரம்மானந்தம், டி.பி.கஜேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்கள் ஏற்க, தெலுங்கிலும், தமிழிலும் ஒரே நேரத்தில் தயாராகிறது இப்படம். "" அடர்ந்த வனப்பகுதிகளில் நடக்கும் சம்பவங்கள்தான் கதை. ஆனால் காட்டின் வளங்களை வைத்து திருட்டுத் தொழில்கள் எப்படி நடக்கிறது என்பதை திரைக்கதைக்கு பலமாக சேர்த்திருக்கிறேன். தெலுங்கில் கமர்ஷியல் படங்களுக்கு மட்டுமே அமோக வரவேற்பு. ஆனால் தமிழில் கதை நன்றாக இருந்தால்தான் எடுபடும். இரண்டையும் கவனத்தில் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அடர்ந்த காடுகளுக்குள் புதைந்து கிடக்கும் பல ரகசியங்களை வெளிக் கொண்டு வரும் படமாகவும் இது அமையும்'' என்றார் மதன்.

தொடர்ந்து வந்த பாலிவுட் வாய்ப்புகளால் ஓய்வு இல்லாமல் நடித்து வந்த அசின், ஒரு வார காலத்துக்கு மேல் கால்ஷீட் ஒதுக்கி தன் பள்ளித் தோழிகளுடன் அமெரிக்கா சென்று வந்திருக்கிறார். அமெரிக்க அனுபவம் எப்படி இருந்தது எனக் கேட்ட மீடியாக்களுக்கு அவர் சொன்ன பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ""ஹிந்தியில் "கஜினி' படத்தின் மூலம் அறிமுகமான போது, கான் மற்றும் குமார் நடிகர்களுடன் நடித்தால்தான், பாலிவுட்டில் நிற்க முடியும் என்றார்கள். அதன்படி முன்னணி நடிகர்களுடன் நடித்தேன். ஆனால் இன்னும் முழுமையான நடிப்பை வெளிப்படுத்திய திருப்தி கிடைக்கவில்லை. தமிழ், மலையாள மொழிப் படங்களில் நடித்த போது இருந்த மன நிறைவை நான் அடையவில்லை. பெரிய பட்ஜெட், ஸ்டார் நடிகர்கள் என்று கவனம் செலுத்தியதுதான் அதற்கு காரணம் என்று நினைக்கிறேன். இனி கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டுமே பாலிவுட்டில் நடிக்க போகிறேன். பெரிய நடிகர்களை எத்தனை காலம்தான் நம்பி நல்ல சினிமாக்களை விட்டுக் கொடுக்க முடியும்?'' என மனம் திறந்து இருக்கிறார் அசின்.

சராசரி மனிதன் ஒருவனின் எண்ணமும், செயல்பாடுகளும் மக்களோடு ஒத்துப் போகிறதா? பிரதிபலனாக அவன் எதிர்கொள்வது என்ன? என்ற கருவை வைத்து உருவாகும் படம் "கரிசல்பட்டியும் காந்திநகரும்'. கிராமமும், நகரமும் சார்ந்த கதையான இதற்கு இரண்டு ஒளிப்பதிவாளர்கள் பணியாற்றுகின்றனர். கிராமத்துப் பகுதியை அன்புராஜ், நகரத்து பகுதியை கோகுல் படமாக்குகிறார்கள். ""வறட்சி என்பது மண் சார்ந்தது மட்டுமல்ல. மனிதர்களின் உணர்வும் சார்ந்தது. அவர்களது உணர்வுகளை படம் பிடிக்க ராமநாதபுரம் மாவட்டத்தில் வாலி நோக்கம் என்ற வறண்ட கரிசல் மண் பிரதேசத்தில் ஐந்து கிலோ மீட்டர் நடந்து சென்று அங்குள்ள மனிதர்களின் வாழ்க்கையை படமாக்கி இருக்கிறோம். உதயகுமார், ரிதமிகா ஆகிய புதுமுகங்கள் நடிக்கின்றனர்'' என்றார் இயக்குநர் கார்த்திகை முருகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரு சம்பவங்களில் பெண்களிடம் நகை பறிப்பு

சமூகத்தின் உடனடி தேவை உணவு விழிப்புணா்வு! - மருத்துவா் கு. சிவராமன்

தவெகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏ மகன்

கொடைக்கானலில் கபடிப் போட்டி

பெங்களூரு - நாா்த் ஈஸ்ட் யுனைடெட் ஆட்டம் டிரா!

SCROLL FOR NEXT