தினமணி கதிர்

நாகிரெட்டி நினைவுகள் - 31:எம்.ஜி.ஆரின் முதலாளி

கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார், சந்தன வீரப்பன் பிடியிலிருந்து மீண்டு வந்த பிறகு (2000ஆம் ஆண்டு) சென்னைக்கு வருகை புரிந்து, அவரது விடுவிப்புக்காக குரல் கொடுத்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

வைரஜாதன்

சிவாஜியும் ராஜ்குமாரும்

கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார், சந்தன வீரப்பன் பிடியிலிருந்து மீண்டு வந்த பிறகு (2000ஆம் ஆண்டு) சென்னைக்கு வருகை புரிந்து, அவரது விடுவிப்புக்காக குரல் கொடுத்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

அப்போது, தமது குடும்பத்தினருடன் விஜயா கார்டனுக்கும் வந்து, என் தந்தையாரைச் சந்தித்து ஆசி பெற விரும்பினார்.

அந்த சமயத்தில் என் தந்தையார் படுத்த படுக்கையாக இருந்தார். எனவே ராஜ்குமார் அவர் தம் குடும்பத்தினருடன் காலை நேரத்தில் வந்து, என் தந்தையாரைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. என் தந்தையாரைச் சந்தித்து உடல்நலம் விசாரித்த பின், குடும்பத்தினர் அனைவருக்கும் ஆசி வழங்கக் கோரினார். என் தந்தையாரும் படுக்கையிலிருந்தபடியே குடும்பத்தினருக்கு ஆசி வழங்கினார்.

என் தந்தையார் படுத்திருந்த அறையிலிருந்து வெளியே வந்த ராஜ்குமார் கூறினார்: ""எறும்பு போல, தேனீபோல சுறுசுறுப்பாக செயலாற்றிக் கொண்டிருந்த ரெட்டியாரை படுக்கையில் பார்க்கும்போது, என் நெஞ்சு கனக்கிறது. விரைவில் பூரண நலம்பெற்று, முன்போல பணியாற்றிட பிரார்த்திக்கிறேன்...'' என்று,

ராஜ்குமார், அவர்தம் குடும்பத்தினரை வழியனுப்பிவிட்டு வந்து உட்கார்ந்தவுடன், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் ராஜ்குமார் எங்களது "விஜய சித்ரா' கன்னட இதழில் எழுதிய "எண்ணங்கள்' என் நினைவில் அலைகளாக மோத ஆரம்பித்தன...

மாயாபஜார் (தமிழ், தெலுங்கு) திரைஉலகில் ஒரு மைல்கல்லாக அமைந்த படம். ஒரு படம் திரையிடப்பட்டு 50 ஆண்டுகள் கழித்து மீண்டும் திரையிடப்பட்டு பொன்விழா கொண்டாடப்பட்டது என்றால் அது, "மாயாபஜார்' படம் மட்டுமே. மாயாபஜாரின் வெற்றியைக் கண்ட கன்னடப் பட தயாரிப்பாளர் இயக்குநர் ஜி.வி. அய்யர், என் தந்தையாரைச் சந்தித்து, அதை கன்னடத்தில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டால் பெரும் வெற்றி பெறும் என்று சொல்ல, என் தந்தையாரும் ஒப்புக்கொண்டு, அவரிடமே உரையாடல் எழுத ஒருவரை ஏற்பாடு செய்யும்படி கூறினார். கன்னட படஉலகில் பிரபல கதைவசனகர்த்தா, பாடலாசிரியர் ஹுன்சூர் கிருஷ்ணமூர்த்தி என்பவரை ஏற்பாடு செய்ய, ஒரு மாதமாகியும் அவரால் ஒரு வார்த்தைகூட உருவாக்க முடியவில்லை. காரணம் அவர் அப்போது அவ்வளவு பிசியாக இருந்தார். எனவே இதைப்பற்றி இயக்குநர் விட்டலாச்சார்யாவிடம் என் தந்தையார் சொல்ல, அவர் தமது படத்திற்கு வசனம் எழுதிக்கொண்டிருந்த சதாசிவய்யா என்பவரை ஏற்பாடு செய்து, மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிட "மாயாபஜார்' கன்னடத்திலும் பெரும் வெற்றி பெற்றது.

இதனால் என் தந்தையாருக்கு கன்னடமொழி படங்களைத் தயாரிப்பதிலும் ஆர்வம் ஏற்பட்டது. ராஜ்குமார் நடிக்க "மதுவே மாடி நோடு' (கல்யாணம் பண்ணிப்பார்), "சத்ய ஹரிச்சந்திரா' ஆகிய இரண்டு கன்னட மொழிப் படங்களைத் தயாரித்து வெளியிட்டார்.

ராஜ்குமார் நடித்த அந்த இரு படங்களும் ஒரே ஆண்டில் (1965) வெளியிட, அவை இரண்டுமே தேசிய அரசின் விருதுகளைப் பெற்றுத் தர... ஒரே ஆண்டில் இரு தேசிய விருதுகளைப் பெற்ற நிறுவனம் என்ற சிறப்பைப் பெற்றது விஜயா புரொடக்ஷன்ஸ்.

ஒரே நிறுவனம் இரு படங்களைத் தயாரித்து, ஒரே ஆண்டில் வெளியிடப்பட்டு, ஒரே ஆண்டில் இரு தேசிய விருதுகளையும் பெற்ற ஒரே நிறுவனம் என்ற சிறப்பைப் பெற்றது விஜயா புரொடக்ஷன்ஸ்.

இன்னொரு சிறப்பு, "சத்ய ஹரிச்சந்திரா'

கன்னட படம் 1965ல் வெளியாகி வெள்ளிவிழா கண்டது. அதே படம் 25 வருடங்கள் கழித்து, திரையிடப்பட்டு மீண்டும் வெள்ளிவிழா கண்டு சாதனை படைத்தது.

என் தந்தையார் பணிகள் நிமித்தம் காரணமாக தொடர்ந்து கன்னடப் படங்களைத் தயாரிக்காவிட்டாலும் ராஜ்குமார் உடனான நட்பு மட்டும் தொடர்ந்து கொண்டே இருந்தது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் "தச்சோளி அம்பு' மலையாளப் படத்தில் நடிக்கையில், குதிரை சவாரி செய்யும்போது தவறி விழுந்து கையில் அடிபட்டு விஜயா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

அப்போது அவரைக் காண வந்த ராஜ்குமார் சிவாஜியைப் பார்த்து, ""நீங்க சீக்கிரம் குணமாகி நடிக்கறதுக்கு வரணும். இப்படி நீங்க படுத்திருக்கிறதைப் பார்த்தால் எதையோ இழந்த மாதிரி உணர்கிறோம்'' என்றார்.

""ராஜ்குமார், நீங்க ஒண்ணும் வருத்தப்பட வேண்டியதில்லை. ஒரு வார ட்ரீட்மெண்ட்னாலே எலும்புகள் கூடிக்கிட்டு வருது. இனிமேல் பிரச்னையில்லை. உங்களது அன்பு, பாசம் இருக்கும் வரையில் எனக்கு ஏதும் ஆகாது. சீக்கிரம் குணமாகிவிடுவேன்'' என்றார் சிவாஜி.

அந்த சமயத்தில் என் தந்தையாரும் அங்கே இருந்தார்.

ராஜ்குமார், ""ரெட்டியாருக்கு என்மீது அன்பு, பாசம் அதிகம்... உங்க ஹெல்த் இப்ப எப்படி இருக்கு?'' என்று கேட்க, சிவாஜியிடம் ""ஹெல்தியாகத்தான் இருக்கிறேன்'' என்றார் ராஜ்குமார்.

என் தந்தையார் சிவாஜியிடம், ""ராஜ்குமார் நடிச்ச சங்கர்குரு படத்தை சமீபத்தில் பார்த்தேன். அதில் ராஜ்குமார் அப்பா, இரண்டு மகன்கள் என மூன்று வேடங்களை ஏற்று நடித்ததைக் கண்டு வியந்து போனேன். மூன்று கதாபாத்திரங்களையும் ஒருவரே ஏற்று நடித்திருக்கிறாரா அல்லது வேறு யாராவது பண்ணியிருக்கிறார்களா என்னும் அளவுக்கு வேறுபாட்டுடன் அந்த மூன்று வேடங்களையும் ஏற்று ராஜ்குமார் நடித்துள்ளார். எந்த கதாபாத்திரத்தின் நடிப்பு சிறந்தது என்பதைக் கணிக்க முடியாதபடியான நடிப்பு...'' இப்படி என் தந்தையார் சுமார் 15 நிமிடங்கள் சங்கர்குரு படத்தைப் பற்றி, உள்ளத்தில் இருந்த எண்ணங்களை வெளிப்படுத்தினார்.

இதைக்கேட்ட சிவாஜியும் மிகவும் மகிழ்ந்தார்.

(ராஜ்குமார் நடித்த இந்த சங்கர்குரு படம் தமிழில் சிவாஜிகணேசன் நடிக்க 200வது படமாக திரிசூலம் என தயாரிக்கப்பட்டு 200 நாட்கள் ஓடி வெற்றிப் படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது)

என் தந்தையாரிடம் சிவாஜி, ""அண்ணா... ராஜ்குமார் லெவலைத் தொட எங்களால் முடியாது'' என்று சொல்ல, ராஜ்குமாரோ, ""தயவுசெய்து என்னைப் புகழாதீர்கள். எத்தனையோ வேறுபட்ட, மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து நீங்கள் சாதனை செய்து நடிப்பில் யாரும் எட்ட முடியாத உயரத்தை தொட்டு இருக்கிறீர்கள். நான் இப்போதும் முயற்சிதான் செய்து கொண்டிருக்கிறேன். நீங்கள்தான் எனக்கு வழிகாட்டி. உங்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது'' என்று பணிவுடன் சொன்னார்.

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை

ஆரிருள் உய்த்து விடும்.

அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும், அடங்காமை வாழ்வையே இருளாக்கிவிடும் என்ற திருவள்ளுவரின் வாக்குப்படி அடக்கமே உருவாக சிவாஜி கணேசன் என் தந்தையாருக்கும் ராஜ்குமாருக்கும் நன்றி சொல்ல, ராஜ்குமாரின் தோள்மீது கைவைத்தபடியே வெளியே வந்த என் தந்தையார், ""ராஜ்குமார்... உங்களிடம் ஏதோ ஒரு தெய்வீக சக்தி இருக்கிறது. டிவைன் பவர் என்று சொல்வார்களே, அதுதான் இது. அது என்னவென்பது உங்களுக்குத் தெரியாது. ஆனால் உங்களைப் பார்ப்பவர்களுக்கு, பழகுபவர்களுக்குப் புரியும். மனிதனுக்கு படிப்பு, அடக்கம், நல்ல குணம் ஆகியவை சேர்ந்திருப்பது அபூர்வம். சில நடிகர்களைப் பார்க்கும்போது அவர்களது நிஜவாழ்க்கைகளைப் பார்க்கும்போது இவரா அவர் என்று எண்ணத் தோன்றும்...'' இப்படி சொல்லிக்கொண்டே வந்த என் தந்தையாரின் பாதம் தொட்டு வணங்க முயற்சித்தார் ராஜ்குமார்.

உடனே என் தந்தையார் அவரிடம் அப்படி செய்யவேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார்.

""நீங்கள் எவ்வளவு பெரிய சாதனையாளர். உங்களது பாராட்டும் வாழ்த்தும் என் வாழ்க்கையில் ஒவ்வொரு அடியிலும் நான் முன்னேறிச் செல்ல உதவும்'' என்று என் தந்தையாரிடமிருந்து விடைபெறும்போது குறிப்பிட்டார் ராஜ்குமார்...

இந்திய அரசு ராஜ்குமாருக்கு பத்மபூஷன் விருதினை (1983ல்) வழங்கியபோது என் தந்தையார் சொன்னார்.

""ராஜ்குமார் திறமைசாலியான அனுபவஸ்தர். செல்வாக்கும் புகழும் மிக்க நடிகர். கர்நாடகத்தின் ரசிகர்களால் மிக நேசிக்கப்படும் கலைஞர்.

இவர் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். நவரசங்களையும் தமது நடிப்பில் பிரதிபலித்து, படம் பார்க்கும் ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்துக் கொண்டிருக்கிறார்.

ராஜ்குமார் ஏராளமான சமூக, சரித்திர, புராணப் படங்களில் நடித்து, புகழ்பெற்ற நடிகராக விளங்கி வருகிறார்.

பெரும் ரசிகர் கூட்டம் அவரைத் தொடருவதும், தங்கள் அபிமானத்தை அவரிடம் காட்டுவதும் அவர் புகழ்பெற்ற சினிமா நடிகராக மட்டும் இருப்பதனால் அல்ல, மக்களிடம் அவர் கொண்டுள்ள ஈடுபாடும் காரணமாகும்.

தவிர, அவரது எளிமையும் பண்பும் பணிவும்கூட இதற்குக் காரணம் என்று சொல்லலாம்.

புகழின் உச்சியில் அவர் இருக்கும் நிலையில் கூட, பெரியவர்களிடம் அவர் காட்டும் மரியாதை, நண்பர்களிடம் அவர் கொண்டுள்ள பாசம், ரசிகர்களிடம் அவர் செலுத்தும் அன்பு இவை கொஞ்சம்கூட குறையவில்லை.

படங்களில் பலதரப்பட்ட காரெக்டர்களை ஏற்று நடித்தாலும் சொந்த வாழ்க்கையில் அவர் காரெக்டர் இன்றும் மாறாமல் அப்படியே இருக்கிறது. தற்போதைய செழுமையான நிலையிலும் தமது பழைய பண்பாடுகளை அவர் மறக்கவில்லை.

கட்டுப்பாட்டுடன் ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கை, தொழிலில் அவர் செலுத்தும் ஆழ்ந்த ஈடுபாடு, சமூக நலப்பணிகளில் அவர் காட்டிவரும் ஆர்வம் இவை மக்களுக்கு மிக அருகாமையில் இவரைக் கொண்டுபோய் நிறுத்தி இருக்கிறது.

இந்த சிறப்புகள்தான், இவரை உன்னதமான பத்மபூஷன் விருதைப்பெற தகுதி உள்ளவராக ஆக்கி இருக்கிறது.

திரைப்பட உலகுடன் 1940ஆம் ஆண்டு முதல் எனக்கு தொடர்பு உண்டு. நான் ஏராளமான நடிகர்கள், தயாரிப்பாளர்கள், டைரக்டர்களைப் பார்த்திருக்கிறேன்.

திறமையும், தகுதியும் மட்டுமல்லாமல் வாழ்க்கையில் உயரிய பண்புடன் நடந்து கொண்டவர்களே இங்கு பிரகாசிக்க முடிந்திருக்கிறது மக்களிடையே பெரும் புகழையும் பெற முடிந்திருக்கிறது.

பொதுவாகவே ஒருவருக்கு இந்த நற்பண்புகள் வாழ்க்கையில் தேவை என்றாலும், சினிமாவுக்கு அது இன்னும் ஒருபடி அதிகமாகவே தேவைப்படுகிறது. ஏனெனில் சினிமா உலகில் அகம்பாவம், ஆணவம் இவை எல்லாம் மிக சுலபமாக ஒருவருக்கு வருவதற்கான சந்தர்ப்பங்களும், சூழ்நிலையும் அதிகம். பெயரும் புகழ் வரும்போது மனிதன் மாறுவது சகஜம். ஆனால் இந்த மாபெரும் கலைஞர் அதே எளிமை, அதே பணிவு மாறாமல் அப்படியே பழகி வருகிறார். இம்மாதிரியான பண்பட்ட அவரது வாழ்க்கையே, அவரது முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் கவசமாக இருந்து வருகிறது. தவிர, அவரது இந்த வாழ்க்கையே மற்றவர்களுக்கு ஒரு பாடமாகவும் அமைந்திருக்கிறது.

இத்தனை ஆண்டுகள் அவர் செல்வாக்குமிக்க கதாநாயகராக மக்களிடையே விளங்கி வருவதற்கு முக்கிய காரணம் அவர் கடைப்பிடித்து வரும் கட்டுப்பாடான வாழ்க்கை, கடும் உழைப்பு உடன் நல்ல பண்புகளுமே.

எம்.ஜி.ஆர். அவர்கள் நடிகர் என்ற அளவில் தமிழ்நாட்டில் மிக உன்னதமான பெயர் பெற்றிருக்கிறார். ஆனால் இதனால் மட்டுமே அவர் முதலமைச்சர் பதவிக்கு வந்துவிடவில்லை. அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்களின் தன்மையிலும் மக்களிடையே பெரும் நன்மதிப்பைப் பெற்றார்.

இதேபோன்றுதான் என்.டி.ராமாராவ் அவர்களும் மக்களிடம் பெரும் நன்மதிப்பைப் பெற்றார். ஈடுபடும் துறையில் செலுத்தும் தீவிர முயற்சி, பக்தி, தூய மனம் இவைதான் என்.டி.ராமாராவ் தமது லட்சியங்களை அடையக் காரணமாக அமைந்தன.

இன்றைய இளம் தலைமுறையினர் கடைப்பிடிக்க வேண்டிய நல்ல குறிக்கோள்கள் இவை.

வாழ்க்கையில் அவர்கள் தங்களது லட்சியங்களை அடைய, இவர்களைப்போன்று கடுமையான உழைப்பையும் ஈடுபாட்டையும் தங்களது துறையில் செலுத்த வேண்டும்...'' என்றார் என் தந்தையார்.

(அடுத்த இதழில் நிறைவுறும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சர்வதேச டி20-ல் இருந்து மிட்செல் ஸ்டார்க் ‘திடீர்’ ஓய்வு!

6வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை!

தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி! - முதல்வர் ஸ்டாலின்

முதல்வரின் ஜெர்மனி பயணம்: நயினார் நாகேந்திரனுக்கு டிஆர்பி ராஜா பதில்!

உயரும் யமுனை நீா் மட்டம்: கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT