தினமணி கதிர்

எம்.ஜி.ஆரின் முதலாளி

என் தந்தையார் 1997இல் நோய்வாய்ப்பட்டவுடன் அவரது பணிகள் வரையறுக்கப்பட்டன

வைரஜாதன்

• நாகிரெட்டி நினைவுகள்
• மகன் விஸ்வம் எழுதுகிறார்

32. கனவு இதுதான்... நிஜம் இதுதான்...

என் தந்தையார் 1997இல் நோய்வாய்ப்பட்டவுடன் அவரது பணிகள் வரையறுக்கப்பட்டன. தமது இயலாமையை உணர்ந்த அவர், அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மருத்துவமனையை நிர்வகிக்க ஒரு குழுவை நியமித்தார்.
 அக்குழுவில் அறங்காவலர்களான ரமணா ரெட்டி, உத்தம் ரெட்டி, சந்திரமெüலி ரெட்டி ஆகியோரும் என் தந்தையாரின் பிரதிநிதியாக நானும், மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் டாக்டர் நஞ்சுண்டையாவும், பொதுமேலாளர் டி.ராம் பாபுவும் நியமிக்கப்பட்டோம்.
 மருத்துவமனை சம்பந்தப்பட்ட எந்த வேலையாக இருந்தாலும் அது பெரியதோ, சிறியதோ இக்குழுவினர் விவாதித்து எடுக்கும் முடிவை உடனே என் தந்தையாரிடம் தெரிவித்து, அவரது ஒப்புதலைப் பெற்ற பிறகே செயலாக்கப்படும்.
 இதுபோலவே மருத்துவத்துறைக்கும் ஒரு குழு நியமிக்கப்பட்டது. அந்தக் குழு, நிர்வாகக் குழுவின் ஒத்துழைப்புடன் பணிகளைச் செய்து வந்தது. இப்படி ஓர் ஏற்பாட்டினை சிறந்த நிர்வாக வசதிக்காக என் தந்தையார் செய்திருந்தார்.
 அப்போது தினமும் மாலையில் என் தந்தையாரைச் சந்தித்து, மருத்துவமனைப் பணிகளைப் பற்றிய நிர்வாகத் தகவல்களைத் தந்து, அவரது ஆலோசனைகளை அப்படியே பின்பற்றி செயலாற்றிய விஜயா மருத்துவமனையின் நிர்வாகி டாக்டர் நஞ்சுண்டையா, பொதுமேலாளர் டி. ராம்பாபு ஆகியோரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
 என் தந்தையார் சக்கர நாற்காலியில் அமர்ந்து மருத்துவமனைப் பணிகளை கவனித்து வந்த சமயத்தில் அன்றாடம் அவரைச் சந்தித்து உரையாட பல பிரமுகர்கள் வருவார்கள். அவர்களில் படவுலகைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். அவர்களிடம் படவுலக நிலையைப் பற்றி விரிவாகப் பேசும்போதெல்லாம் என் தந்தையாரின் மனதில் மீண்டும் திரைப்படம் எடுக்க முடியவில்லையே என்கிற ஆதங்கம் தலைதூக்கும். எனினும் அவர் ஏற்கெனவே படமாக்கத் தேர்ந்தெடுத்து வைத்திருந்த இரண்டு கதைகளில் ஒன்றான "பணமா? குணமா' என்னும் கதையைப் படமாக்க விரும்பினார். ஆனால் திரைப்படத் தயாரிப்புக்கு அவரது உடல் நலம் ஒத்துழைக்கவில்லை.
 அந்த சமயத்தில் வாகினியில், 2000}ஆம் ஆண்டின் விழாவை சந்தமாமா சார்பில் கார்னிவல் என நடத்தும்போது, அதன் ஊடக பங்குதாரர்களான ஜெயா டி.வி. தொலைக்காட்சியின் ஒத்துழைப்பைக் கண்டு, "பணமா? குணமா' கதையை "எங்க வீட்டுப் பெண்' என தொலைக்காட்சித் தொடராக நான் தயாரித்து வெளியிட, என் தந்தையார் ஒப்புக்கொண்டார்.
 கலை உலகில் என் தந்தையார் கடைசியாக, ஒரு கதாசிரியராக ஈடுபட்ட தொலைக்காட்சித் தொடர் "எங்க வீட்டுப் பெண்'. 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி முதல் ஜெயா டி.வி.யில் 45 வாரங்கள் தொடர்ந்து, திங்கள்தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பானது.
 ஒளிபரப்புக்கு முதல் நாள் ஞாயிற்றுக் கிழமை மாலை என்னை அழைப்பார். அடுத்த நாள் ஒளிபரப்பாகவிருக்கும் எபிசோட் பற்றி காட்சிவாரியாகக் கேட்டறிவார்.
 திங்களன்று இரவு 8.30 மணிக்கு தொலைக்காட்சி பெட்டிக்கு அருகில் அமர்ந்து தொடரைப் பார்ப்பார். அடுத்தநாள் என்னை அழைத்து, தாம் முதல்நாள் பார்த்த எபிசோடில் இருந்த நிறை, குறைகளையும் வசனம், கதாபாத்திரங்களின் ஆடை, அணிகலன்கள் உட்பட அனைத்தையும் சொல்லி இன்னும் சிறப்பாக எப்படி செய்யலாம் என்று ஆலோசனை வழங்குவார். 90 வயதிலும் அவருக்கிருந்த ஆர்வத்தை நினைத்தால் இன்றும் வியப்பாக இருக்கிறது.
 
 என் தந்தையாரின் விருப்பப்படி, விஜயா ஹெல்த் சென்டரில் புற்றுநோயாளிகளுக்கு பொருளாதாரரீதியில் குறைந்த செலவில் நிறைந்த மருத்துவம் தர, டாக்டர் எஸ். விஜயராகவன் தலைமையில் பெட்டர்சன் கேன்சர் சென்டரின் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
 விஞ்ஞானி டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம், அப்பணிகளைக் காண 2002ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் விஜயா ஹெல்த் சென்டருக்கு வருகை புரிந்தார். அப்போது அவர் பெட்டர்சன் கேன்சர் சென்டர் என்ற அமைப்பின் இயக்குநர்களில் ஒருவராக இருந்தார்.
 விஜயா ஹெல்த் சென்டரின் அனைத்து துறைகளையும் பொது மேலாளர் டி. ராம்பாபு உடன் சென்று சுற்றிப் பார்த்து வியந்து மகிழ்ந்த டாக்டர் கலாம், கண்ணுக்குக் குளிர்ச்சியாக இயற்கையெழில் தவழும் இந்த ஹெல்த் சென்டரை உருவாக்கிய மாமனிதர் யார் என்று கேட்டார்.
 ""நாகிரெட்டி''
 ""சந்தமாமா நாகிரெட்டியா?'' கேட்டார் டாக்டர் கலாம்.
 ""ஆம். அவர்தான்''
 ""அவரா இதை உருவாக்கியவர்? நான் சிறுவயதில் சந்தமாமாவை படித்து மகிழ்ந்திருக்கிறேன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மகிழ்வித்த இதழ் ஆயிற்றே அது. அவர்தான் இவர் என்பதனால் அவரை நேரில் கண்டு பாராட்ட விரும்புகிறேன்'' என்றார்.
 என் தந்தையார் உடல் நலம் குன்றி இருந்த சமயம் அது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி, பார்வையாளர்களைத் தவிர்த்து வந்தார். எனினும் டாக்டர் கலாமின் விருப்பம் என் தந்தையாரிடம் தெரிவிக்கப்பட்டது. என் தந்தையார் மனமுவந்து டாக்டர் கலாமைச் சந்திக்க ஒப்புக்கொண்டார்.
 டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் உங்களைக் காண வந்திருக்கிறார் என்று கூறியவுடன், என் தந்தையார் அவரது கைகளைப் பிடித்துக்கொண்டு, ""நீங்கள் மிகுந்த பெருமைக்குரியவர். நம் நாட்டிற்கு உங்களால் எத்தனை நல்ல பெயர். உங்களைச் சந்தித்ததில் பெருமகிழ்ச்சியடைகிறேன்'' என்று கூறினார்.
 டாக்டர் கலாம் என் தந்தையாரிடம், ""என் நெடு நாளைய விருப்பம் இன்று நிறைவேறியது. உங்களைச் சந்திக்க வேண்டும் என்பதே அது. சமுதாயத்திற்கு எத்தனையோ சேவை புரிந்துள்ளீர்கள். சந்தமாமா பத்திரிகை மூலமாக, நல்ல திரைப்படங்கள் மூலமாக, சிறந்த மருத்துவ சேவை மூலமாக... இப்படிப் பலப்பல. ஆகவே உங்களைப் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நீங்கள் விரைவில் உடல் நலம்பெற வேண்டும்'' என்று கூறினார்.
 இந்நிகழ்ச்சிக்குப் பின்... சில மாதங்களில் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் மேதகு இந்தியக் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தச் செய்தியை என் தந்தையாரிடம் தெரிவித்தபோது, ""டாக்டர் கலாம் நீடூழி வாழ்ந்து... நாட்டிற்கும் மனித சமுதாயத்திற்கும் ஆற்றி வரும் பணி மேலும் சிறக்க வேண்டும்'' என்று வாழ்த்தி மகிழ்ந்தார்.
 சென்னை விஜயா ஹெல்த் சென்டர் வளாகத்தில் நிறுவப்பட்ட பெட்டர்சன் கேன்சர் சென்டரை 2003ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19ஆம் நாள் மேதகு இந்தியக் குடியரசுத் தலைவராக டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் தமது பொற்கரங்களால் துவக்கி வைத்து சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 என் தந்தையார் அவார்டுகளைவிட அங்கீகாரத்தையே பெரிதும் விரும்பினார்.
 தாம் சம்பாதித்த பொருளை அந்த சமுதாயத்திற்கே பயன்படுத்தவேண்டும் என்ற கொள்கை உடைய என் தந்தையார் ஆற்றிய பணிகளை அங்கீகரித்து அவருக்கு வழங்கப்பட்ட குறிப்பிடத்தக்க விருதுகள்:
 சென்னையில் நடைபெற்ற இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டில் ஊர்தி அலங்காரம் செய்தமைக்காக முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களிடமிருந்து விருதினைப் பெற்றார் (1968).
 தமிழக அரசின் கலைமாமணி விருதினை தமிழக ஆளுநர் மேதகு கே.கே. ஷா அவர்களிடமிருந்து பெற்றார் (1972).
 அமெரிக்க வாழ் தெலுங்கு பேசும் மக்கள் கூட்டமைப்பு 1977ல் என் தந்தையாருக்கு சிரோமணி என்னும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கெüரவித்தது.
 ஆல் இந்தியா மாஸ்டர் பிரிண்டர்ஸ் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியாவின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் ஜோன்ஸ் கூடன்பர்க் ஃபெல்லோ என்னும் விருது வழங்கப்பட்டது (1978).
 சென்னை தென்மேற்கு ரோட்டரி சங்கம் வழங்கிய மரியாதைக்குரிய மாமனிதர் விருதினை அமைச்சர் ஆர்.எம். வீரப்பனிடமிருந்து பெற்றார் (1981).
 திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம் கெüரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது (1982).
 மருத்துவத் துறையில் அல்லாதவர்கள் மருத்துவமனை நிறுவி சிறப்பாக சேவை செய்தமைக்காக, என் தந்தையாரைப் பாராட்டி மணிபால் அகாடமி ஆஃப் ஜெனரல் எஜுகேஷன் என்னும் அமைப்பு டி.எம்.ஏ.பய் விருதினை வழங்கி பெருமைப்படுத்தியது (1989).
 அனந்தப்பூர் ஸ்ரீகிருஷ்ணதேவராயர் பல்கலைக்கழகம் கெüரவ டாக்டர் பட்டம் அளித்து கெüரவித்தது (1990).
 இப்படி பல விருதுகள் பாராட்டுக்கள் வழங்கப்பட்டாலும் 1987ஆம் ஆண்டில் திரைப்பட பணிக்காக அவர் பெற்ற இரு விருதுகள் மறக்க இயலாதவை.
 ஒன்று, ஆந்திர மாநில அரசின் உயரிய ரகுபதி வெங்கய்யா விருது. மற்றொன்று, இந்திய திரைப்பட உலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே 1986ஆம் ஆண்டின் விருது 1987ல் வழங்கப்பட்டது.
 இத்தனைக்கும் என் தந்தையார் எந்த ஒரு பல்கலைக் கழகத்திலும் படித்தவரல்லர். எந்தத் தொழில்நுட்பக் கல்வியும் பயின்றவரல்லர். இளம் வயதில் பள்ளிப் படிப்புடன் அவரது குரு ராமராஜூ கற்றுத் தந்த வாழ்க்கைக்கான இதிகாசக் கல்விதான் அவருக்கு அடிப்படையாக அமைந்தது.
 ""ஒரு நூலைப் படிப்பதன் மூலமாகவோ, அதைப்பற்றி சொல்வதன் மூலமாகவோ ஏற்படும் பயனைவிட, அதனை நடைமுறையில் கடைப்பிடிக்கும்போதுதான் பயன், பலன் அதிகம்'' என்பார்.
 என் தந்தையார் சிறுவயதில் கற்றுணர்ந்த இந்தியத் திருநாட்டின் முப்பெரும் இதிகாச புராணங்களான ஸ்ரீமத் ராமாயணம், மகாபாரதம், பாகவதம் ஆகியவற்றிலிருந்து நீதி நெறிகளை தேவைப்படும்போதெல்லாம் தமது வாழ்க்கையில் செயல்படுத்தி வந்தார்.
 ஸ்ரீராமன் மன்னனாக இருந்தும் மரவுரி தரித்து கானகம் போய் எளிய வாழ்க்கையை மேற்கொண்டதை என் தந்தையார் அடிக்கடி நினைவு கூறுவார். அவரும் தமது வாழ்நாளில் எளிய வாழ்க்கையை மேற்கொண்டார் என்றே சொல்லலாம்.
 
 ஒரு நிகழ்ச்சி
தென்னிந்தியாவிலேயே முதன் முறையாக சென்னையில் விஜயா ஹெல்த் சென்டரில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன், நியூக்ளியர் ஸ்கேன் என்னும் நுண்ணிய ஊடுகதிர் இயந்திரங்களைப் பொருத்தவேண்டும் என விரும்பி, விப்ரோ ஜி.இ. நிறுவனத்தின் தெற்காசிய பிராந்தியத்தின் பிரதிநிதி, ஹாங்காங்கில் இருந்து என் தந்தையாரைச் சந்திக்க விஜயா ஹெல்த் சென்டருக்கு வந்தார். அவரை விஜயா மருத்துவமனையின் பொதுமேலாளர் டி.ராம்பாபு என் தந்தையாரிடம் அழைத்து வந்தார். அப்போது என் தந்தையார் ஹெல்த் சென்டரில் கட்டுமான வேலைகள் நடைபெறும் இடத்தில் சிமெண்ட், ஜல்லி, செங்கற்களுக்கிடையே வேலையாட்கள் மத்தியில் ஒரு மரத்தடியில் பிரம்பு நாற்காலியில் அமர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்.
 அந்த இடத்திற்கு ஹாங்காங் வி.ஐ.பி.யை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தியவுடன்... என் தந்தையாரைப் பார்த்து... இவ்வளவு பெரிய மருத்துவமனையை நிறுவியவர், கல்லூரிப் படிப்பில்லாதவரா... தனியாக ஒரு அறையோ... டெலிபோனோ... ஒரு காரியதரிசியோ இல்லாதவர் என்பதை அறிந்து, வியந்து... அவர், ""நான் உங்களிடம் பயிற்சி பெற விரும்புகிறேன்'' என்று என் தந்தையாரிடம் கேட்க, ""ஓ... பேஷாக. ஆனால் இப்போது ஊருக்குப் போய் நிலுவையில் இருக்கும் பணிகளை முடித்து வாருங்கள்'' என்று கூற, அவர் என் தந்தையாரை வணங்கி, ""உங்களைப் பார்த்ததிலேயே எளிமையில் உங்களுடைய வெற்றியை புரிந்துகொண்டு விட்டேன்'' என்று சொல்லி விடைபெற்றார்.
 அவருடைய பாராட்டுக்கு நன்றி தெரிவித்த என் தந்தையார் கூறினார்:
 ""எளிமையாக வாழ்ந்து, இணக்கமான அணுகுமுறையுடன் திறம்பட செயலாற்றினால் பெரும் வெற்றியைப் பெறலாம். அவரது பாராட்டினால் நமக்கு கர்வம் ஏற்படக்கூடாது. நம்மால்தான் செயல்கள் நடைபெறுகின்றன, இந்த சுகம் நிரந்தரம் என்னும் சிந்தனை நிரந்தரமல்ல. காரணம் நமது வாழ்க்கைச் சக்கரம் நிரந்தரமாக இருக்காது. சுழன்றுகொண்டே இருக்கும். சுகமும் துக்கமும் மாறி மாறி வந்து கொண்டேயிருக்கும்.''
 கர்மயோகியாக வாழ்ந்த என் தந்தையார், தமக்குப் பின் தம்முடைய நிறுவனங்கள் எப்படி நிர்வகிக்கப்படவேண்டும் என்பதிலும் புதுமைப்படுத்தியவர்.
 "பொம்மை' பிப்ரவரி 1995 இதழில் என் ஆசை என்னும் தலைப்பில் அவர் குறிப்பிட்டிருந்த கருத்து:
 ""எனக்குப் பிறகு இந்த இரு நிறுவனங்களின் பொறுப்பை ஏற்பவர் சுயநலமில்லாதவராக, தொண்டு மனப்பான்மை உள்ளவராக இருக்க வேண்டும்.
 இந்த நிறுவனங்களில் இருந்துவரும் வருமானத்தை இந்த நிறுவனங்களின் மேம்பாட்டுக்கும் பராமரிப்புக்கும் மட்டுமே செலவிடவேண்டும்.
 அதிலும் ஒரு நிபந்தனை, இந்த இரு நிறுவனங்களையும் அமைக்க என்னுடன் இணைந்து ஆறுபேர் தோள் கொடுத்து பாடுபட்டிருக்கிறார்கள். எனக்குப் பிறகு இதை ஏற்க வருபவர் எனக்குப் பின் இதை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்பவர் என் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, அல்லது இங்கே பணிபுரியும் தொழிலாளியாக இருந்தாலும் சரி, பொறுப்பை ஏற்குமுன் இந்த ஆறுபேரின் ஒப்புதலைப் பெறவேண்டியது அவசியம்.
 இந்த நிபந்தனையை ஏற்று இந்த இரு நிறுவனங்களின் பொறுப்பை ஏற்க யார் முன்வந்தாலும் அவர்களிடம் என் பொறுப்பை ஒப்படைக்கத் தயாராக இருக்கிறேன். இதுதான் என் பிறந்தநாள் செய்தி, பிறந்தநாள் ஆசை, பிறந்தநாள் பரிசு'' என்று சொல்லியிருந்தார்.
 
 நாளாக நாளாக என் தந்தையாரால் முன்புபோல் துடிப்பாக இயங்க முடியவில்லை. ஏழு வருடங்கள் தமது உடல் இயலாமையை ஒருவாறாகச் சமாளித்தார். நாளடைவில் அவரது கண் பார்வையும் மங்கத் தொடங்கியது. ஆனால் அவருடைய ஞாபகசக்தியைக் கொண்டே அருகில் வருபவர் யார் என்பதை அடையாளம் கண்டுவிடுவார்.
 அன்றாடம் மாலை ஐந்து மணியளவில் சக்கர நாற்காலியில் உட்கார்ந்தபடியே ஹெல்த் சென்டரில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கும் முருகன் கோயிலுக்கும் சென்று தரிசிப்பார். இறுதிவரையில் அவர் மரியாதைக்குரிய மனிதராகவே விளங்கினார்.
 2003ஆம் ஆண்டு அவரது பிறந்த நாளான டிசம்பர் மாதம் முதல் தேதியன்று அவருக்கு உடலில் தாக்கம் ஏற்பட்டது. விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். உடல் தேறாது என்ற நிலையில், அவர் விரும்பி வாழ்ந்த விஜயாவின் கார்டனுக்கு அழைத்து வந்த சில நிமிடங்களில்...
 2004ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி, நடுப்பகலில் 92ஆவது வயதில் அவரது உயிர்ப்பறவை உடற் கூட்டிலிருந்து பிரிந்தது. விஜயா மருத்துவமனை வளாகமே மீளாத் துயரில் மூழ்கியது.
 பாரதப் பிரதமர் ஏ.பி. வாஜ்பாய், தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா உட்பட உலகின் பல இடங்களிலிருந்தும் ஏராளமான முக்கியஸ்தர்கள் அவருக்கு இரங்கல் செய்தி அனுப்பியிருந்தார்கள். படவுலகப் பிரமுகர்கள் நேரில் வந்திருந்து அஞ்சலி செலுத்தினார்கள்.
 தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் செல்வி. ஜெ. ஜெயலலிதா என் தந்தையார் மறைவுக்கு அப்போது அனுப்பியிருந்த இரங்கல் செய்தியில், "நாகிரெட்டியின் துயரமான மறைவுச் செய்தி கேட்டதும் அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் அடைந்தேன்.
 அவரது மறைவு தென் இந்திய சினிமா தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மட்டும் பெரிய கவலை என்று இல்லாமல் ஏதாவது ஒருவகையில் அவருக்கு நன்றிக்கடன் பட்டுள்ள பல்வேறு தரப்பில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்கும் பெரும் கவலை அளிக்கக்கூடிய ஒன்றாகும்.
 பல துறைகளில் மேதையாகத் திகழ்ந்த நாகிரெட்டி சாதாரணமாக தனது வாழ்க்கையை தொடங்கி, பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி சினிமா உலகில் அழிக்க முடியாத முத்திரையைப் பதித்துவிட்டு சென்று இருக்கிறார்.
 இந்தியாவில் உள்ள எல்லா தலைமுறையின் கற்பனைகளையும் கவரும் வகையில் எண்ணற்ற வெற்றிப் படங்களை உருவாக்கினார்.
 அவரது படங்கள் தரமான குடும்பப் படங்கள் என்ற முத்திரையை பதித்தன. தென்இந்திய திரைப்பட தொழிலுக்கு முதுகெலும்பாக திகழும் விஜயா கலர் லேபரட்டரி மற்றும் விஜயா வாகினி ஸ்டூடியோக்களை அவர் உருவாக்கினார்.
 புகழ்பெற்ற தாதாசாகேப் பால்கே விருதுபெற்றவர் அவர். நாகிரெட்டியின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் துயரம் அளிக்கிறது.
 ஏனெனில் நாகிரெட்டி பேனரில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருடன் பணியாற்றிய பெருமை எனக்கு உண்டு.
 திரைப்பட தொழில் மட்டுமல்லாமல் மற்ற துறைகளிலும் நாகிரெட்டி சாதனை படைத்துள்ளார்.
 குழந்தைகளுக்கான மாத இதழான "சந்தமாமா' என்ற இதழை தொடங்கினார். சிறந்த நன்கொடையாளராக திகழ்ந்தார்.
 இந்தியா முழுவதும் இருந்து வரும் உலகத் தரம் வாய்ந்த விஜயா ஆஸ்பத்திரியை அவர் உருவாக்கினார். இதேபோல நாட்டிலேயே பெரிய அச்சகத்தை உருவாக்கினார்.
 நாகிரெட்டியின் மறைவு மூலம் சிறந்த திரைப்பட தயாரிப்பாளருமான, சிறந்த மனிதாபிமானவாதியுமான ஒரு அபூர்வ மனிதரை நாம் இழந்துவிட்டோம்' என குறிப்பிட்டு என் தந்தையாரை பெருமைப்படுத்தியிருந்தார்.
 காற்றாண்டு கொண்டிருக்கும் இப்பூவுலகில், நூற்றாண்டுகளுக்குப் பின்னும் எம்.ஜி.ஆரின் புகழுடன், எம்.ஜி.ஆரின் முதலாளியின் புகழும் வாழ்ந்து வரலாறு படைத்துக் கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.
 தொகுப்பு: வைரஜாதன்
 (நிறைவு பெற்றது)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சர்வதேச டி20-ல் இருந்து மிட்செல் ஸ்டார்க் ‘திடீர்’ ஓய்வு!

6வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை!

தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி! - முதல்வர் ஸ்டாலின்

முதல்வரின் ஜெர்மனி பயணம்: நயினார் நாகேந்திரனுக்கு டிஆர்பி ராஜா பதில்!

உயரும் யமுனை நீா் மட்டம்: கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT