தினமணி கதிர்

ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்!

எஸ். சுவாமிநாதன்

என் சகோதரியின் வயது 62. இரண்டு மாதத்துக்கு முன்பு காய்ச்சல் வந்து தலையில் மட்டும் கொதிக்கிறது என்று கூறுகிறார். பெரிய மருத்துவமனைக்கெல்லாம் சென்று காண்பித்துவிட்டோம். நரம்பு மருத்துவரிடமும் காண்பித்தோம். டெஸ்ட் எல்லாம் எடுத்தாகிவிட்டது. எந்த ஒரு நோயும் இல்லை என்றுதான் கூறுகின்றனர். இப்போது படபடப்பாக இருக்கிறது என்கிறார். படுக்கக் கூட முடியவில்லை. தொடர்ந்து நடப்பதும், மாறி மாறி நாற்காலியில் அமருவதுமாக இருக்கிறார். வேலையில் கவனமில்லை. இதற்கு என்ன காரணம்?

மும்தாஜ், தக்கோலம்.

பித்த தோஷத்தின் ஊடுருவும்தன்மை மற்றும் சூடு என்னும் இருவகையான குணங்களின் ஆதிக்கம் பொதுவாகவே காய்ச்சலில் கூடிவிடும். தம் சொந்த இருப்பிடம் விட்டு, மூளைப் பகுதிக்கு வந்து ஆதிக்கம் செலுத்தினால், தலைப்பகுதி கொதிக்கத் தொடங்கிவிடும். அவற்றை அமைதிப்படுத்தி, அங்கிருந்து அகற்றக் கூடிய உணவு - மருந்து - செயல் ஆகியவற்றைக் கவனமாக மேற்கொள்ளாமல், உதாசீனப்படுத்தினால், மூளையிலுள்ள நரம்பு மண்டலங்களின் வழியாக, உடல் பகுதிகளிலெல்லாம் சூடு பரவிவிடும். பரபரப்பும், நிதானமின்மையும், படபடப்பும், கவனமின்மையும் இதனால் ஏற்படக் கூடும். எந்தவிதமான லேப் டெஸ்ட்டாலும் இவை புலப்படாது. குணங்களின் செயல்பாடுகளை அவற்றின் செயல் மூலமாக மட்டுமே அறிய முடியுமே தவிர, உடலை எத்தனை கூறு போட்டு ஆராய்ந்தாலும், அவை தென்படாது என்பது கற்றறிந்த வல்லுநர்களின் கூற்றாகும்.

 காய்ச்சல் விட்டுவிட்டாலும், உணவில் புளி, உப்பு, காரம் ஆகியவற்றை அதிகம் சேர்த்தாலே, பிறர் மீது கோபம், வெறுப்பு கொண்டு கடும் வார்த்தைகளைப் பிரயோகம் செய்தாலோ, நரம்பில் குடி கொண்டுள்ள இந்த இரு குணங்களும் மேலும் மேலும் வலுப்பெற்று உடலைப் படாதபாடு படுத்தும். அவற்றை அங்கிருந்து பிரித்து, குடல் வழியாக வெளியேற்றும் சிகிச்சை முறைகளும் கடுமையாகக் கையாளப்பட வேண்டிய நிலைக்கு மருத்துவர் தள்ளப்படுவார். ஆகையால் உங்கள் சகோதரி செய்ய வேண்டிய செயல்கள், உண்ண வேண்டிய உணவு, சாப்பிட வேண்டிய மருந்து ஆகியவற்றைக் கீழ்காணும் வகையில் அமைத்துக் கொள்வது நல்லது.

செயல்கள்: லேசாகவும் சுத்தமாகவுமுள்ள ஆடைகளை அணிந்து, மல்லிகை, முல்லை போன்ற பூக்களைத் தலையில் சூடி, உடல் மீது வாசனையுள்ள சந்தனத்தை பன்னீர் விட்டு அரைத்துப் பூசி, மாடி வீட்டின் மச்சு மீதமர்ந்து இரவின் முதல் யாமத்தின் இறுதிப் பகுதியாகிய 8 மணி முதல் 10 மணி வரை, சந்திரனின் ஒளிக்கதிர்கள் மேல்படும்படி அமர்ந்திருத்தல் நலமாகும். தவிர்க்க வேண்டிய செயல்கள் - எதிர்க்காற்று உடலில் படும்படி நடந்து செல்லுதல், பகலுறக்கம், பனி பொழியும் இடங்களில் நிற்பது, வயிறு நிறையச் சாப்பிடுதல்.

உணவு: பச்சரிசி, கோதுமை, பச்சைப் பயறு, சர்க்கரை, தேன், புடலை, நெல்லிக்காய், திராட்சை, பழச்சாறுகள், கசப்பும் துவர்ப்பும் புளிப்பும் மிக்க நாரத்தை மாதுளை முதலிய கனிகள், கரும்புச் சாறு, சர்க்கரை கலந்த இனிக்கும் கடைந்த மோர் பருகுதல் போன்றவை நல்லது. புலால் உணவு தவிர்க்கவும். தயிர், எண்ணெய்ப் பொருட்கள் சாப்பிட வேண்டும்.

மருந்து: வாஸôகுடூச்யாதி கஷாயம், திராக்ஷôதி கஷாயம் ஆகியவற்றைக் கலந்து பருகலாம். இவற்றைக் கலந்து சாப்பிட வேண்டிய அளவை ஓர் ஆயுர்வேத மருத்துவரால் மட்டுமே கூற இயலும். காரணம் நோயின் தன்மைக்கேற்ப இவற்றின் அளவைக் கூட்டுவதும் குறைப்பதுமாகச் செய்ய வேண்டும்.

த்ரிவிருத்லேஹ்யம், கல்யாண குலம், அவிபத்தி சூரணம் போன்றவற்றிலொன்றை குடல்வாகை அனுசரித்துத் தேர்ந்தெடுத்து, நன்றாக பேதியாகும் வகையில் சாப்பிட்டால், பித்த நீரைக் குடலிலிருந்து வெளியேற்றலாம்.

சந்தனாதி தைலம், ஹிமசாகரதைலம், திரிபலாதி தைலம், அமிருதாதி தைலம் போன்றவற்றிலொன்றை தலைக்குத் தேய்த்துக் குளித்து வருவது நல்லது.

வீட்டில் நிலவும் அமைதியான சூழ்நிலையும், அன்பான பேச்சும், அவரிடம் மற்றவர்கள் காட்டும் கரிசனமும் அவர் விரைவில் குணமாக வழி அமைத்துத் தரும். அவருடைய மனம் மகிழும்படி பார்த்துக் கொண்டாலே, நரம்புகளில் பற்றியுள்ள பித்த குணங்கள் நெகிழ்ந்து வெளியேறி, மூளைப் பகுதியையும் வலுப்படுத்தி, உபாதைகள் குறைந்துவிட வாய்ப்பை உருவாக்கித் தரும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT