இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பின் கடந்த வாரம் மீண்டும் ஷூட்டிங்கில் கலந்து கொண்டார் வடிவேலு. "ஜெகஜால புஜபல தெனாலிராமனும் கிருஷ்ண தேவராயரும்' என்ற படத்தில் தெனாலிராமனாக வேடம் ஏற்கிறார். சரித்திர பின்னணியில் நகைச்சுவையுடன் இக்கதை அமைக்கப்பட்டுள்ளது. "போட்டா போட்டி' படத்தை இயக்கிய யுவராஜ் இப்படத்தை எழுதி இயக்குகிறார். வசனம் ஆரூர்தாஸ். இப்படத்துக்காக ஏவி.எம்.ஸ்டூடியோவில் பிரம்மாண்ட அரங்கு அமைக்கப்பட்டு படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. வடிவேலுக்கு ஜோடியாக மீனாட்சி தீட்சித் நடிக்கிறார். இவர் விஜயகாந்த் இயக்கி நடித்த "விருதகிரி' படத்தில் ஹீரோயினாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ ட்ரீம்ஸ் நிறுவனத்தின் சார்பில் உருவாகும் படம் "கல்லாப்பெட்டி'. புதுமுகங்கள் அஸ்வின் பாலாஜி, ரோஷின் ஷாலி ஜோடியாக நடிக்கின்றனர். ஜெயப்பிரகாஷ், பிளாக் பாண்டி, ஜோதிஷா நாராயணன் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்கள் ஏற்கிறார்கள். பணத்தாசையால் காதல் ஜோடி படும் பாட்டை சுவாரஸ்யத்தோடு சொல்லுவதுதான் கதை. ""எல்லோருக்குமான இந்த உலகத்தில் ஒவ்வொருவரின் பார்வையில் இந்த உலகம் எப்படி மாறுபடுகிறது என்பதுதான் படக் கதையின் ஒன் லைன். கல்லாப்பெட்டி நிரம்பினால் மனசு நிறையுமென்று சிலர் நினைக்கிறார்கள். மனம் நிறைவதற்கு பணம் மட்டும் தீர்வாகாது என்று சிலர் நினைக்கிறார்கள். இந்த குழப்பத்துக்கு என்ன விடை என்பதை மையமாக வைத்து கதை பின்னப்பட்டுள்ளது'' என்றார் இயக்குநர் ரா.ரா.
வழக்கமாக தான் இசையமைக்கும் படங்களுக்கு கதை கேட்கும் ஏ.ஆர்.ரஹ்மான், "மரியான்' படத்தின் கதையைக் கேட்காமல் அப்படத்துக்கு இசையமைத்துள்ளார். "மரியான்' படத்தின் இசையமைப்பு குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் ""பரத் பாலாவுக்கு படம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் எனக்கு இருந்தது. அதனால் கதை கேட்காமலேயே இப்படத்தை ஒப்புக் கொண்டேன். அவர் எதைச் செய்தாலும் சிறப்பாகச் செய்து வருவதை கடந்த 10 ஆண்டுகளாகப் பார்த்து வருகிறேன். தனுஷ், செல்வராகவன், யுவன்ஷங்கர்ராஜா காம்பினேஷன் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். இதில் ஒரு பாடலை நான் பாடினேன். அதற்கு என் குரல் பொருத்தமாக இல்லை. இன்னும் நல்ல குரலை தேடிய போது யுவனின் குரல் பொருத்தமாகப்பட்டது. அதனால் அவரையே இதில் பாட வைத்தேன். ஒரு மணி நேரத்திலேயே முழுப் பாடலையும் பாடிக் கொடுத்து விட்டார்'' என கூறியிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.
விஷால் தற்போது விஷால் ஃபிலிம் பேக்டரி என்ற பெயரில் சொந்த நிறுவனம் தொடங்கி "பாண்டிய நாடு' என்ற படத்தைத் தயாரிப்பதுடன் ஹீரோவாகவும் நடிக்கிறார். இப்படத்தை சுசீந்திரன் இயக்குகிறார். கதாநாயகியாக லட்சுமிமேனன். தயாரிப்பாளரானது குறித்து விஷாலிடம் பேசிய போது, "" ரசிகர்கள் என்னை மதுரைக்காரன் என்றே கூறுகிறார்கள். இது எனக்குப் பிடித்திருக்கிறது. இந்நிலையில்தான் சுசீந்திரன் "பாண்டிய நாடு' கதையைச் சொன்னார். மதுரைக்காரன் என என்னை அழைப்பதற்கும், இந்த பட டைட்டிலும் பொருத்தமாக இருந்ததால் உடனே ஒப்புக் கொண்டேன். அத்துடன் படத்தை நானே தயாரிக்கிறேன். தயாரிப்பாளர் ஆனது குறித்து கேட்கிறார்கள். இந்த திட்டம் வெகு நாள்களாகவே இருந்தது. இப்போதுதான் அதற்கு நேரம் வந்திருக்கிறது. இயக்குநர் பாரதிராஜா, சூரி முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்'' என்றார் விஷால்.
சில ஆண்டுகளுக்கு முன் பெங்களூர் அருகே தண்டுபாளையம் என்ற இடத்தில் தொடர்ந்து நடந்த கொலைகள், பலாத்காரம் மற்றும் கொள்ளைச் சம்பவங்களை மையமாக வைத்து "கரிமேடு' என்ற படம் உருவாகி இருக்கிறது. ஆந்திரம், கர்நாடகத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய இப்படம் "கரிமேடு' என்ற பெயரிலேயே திரைக்கு வருகிறது. "அருந்ததி' உள்ளிட்ட படங்களை வெளியிட்ட தயாரிப்பாளர் இராம.நாராயணன் இப்படத்தை வெளியிடுகிறார். படம் பற்றி அவர் கூறும் போது, ""அக்கிரமங்களில் ஈடுபட்டவர்களை போலீஸôர் உயிரைப் பணயம் வைத்து எப்படி வேட்டையாடினார்கள் என்ற உண்மைகள் மறைக்கப்படாமல் இப்படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது'' என்றார்.
""ராமய்யா வஸ்தாவய்யா'' என்ற பாடல் வரியை தான் இயக்கும் ஹிந்தி படத்துக்கு தலைப்பாக வைத்திருக்கிறார் பிரபுதேவா. தமிழில் வெளியான "உனக்கும் எனக்கும்' படம்தான் இது. இப்படத்துக்குதான் இந்த தலைப்பை வைத்துள்ளார். இதில் புதுமுக ஹீரோவுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். ஷூட்டிங் முடியும் நிலையில் உள்ளது. இதற்கிடையே "ராமய்யா வஸ்தாவய்யா' என்ற பெயரில் தெலுங்கிலும் ஒரு படம் உருவாகிறது. இதில்
ஜூனியர் என்.டி.ஆர். ஹீரோ. ஹீரோயின் சமந்தா. இன்னொரு ஹீரோயின் வேடத்தில் பலரிடம் பேசினர். கடைசியாக ஒப்பந்தமாகியுள்ளார் ஸ்ருதிஹாசன். இது குறித்து தன் டுவிட்டரில் ""நான் நடிக்கும் இரண்டு படங்களுக்கும் ஒரே பெயர் அமைந்தது ஏதேச்சையானது'' என தெரிவித்திருக்கிறார் ஸ்ருதிஹாசன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.