முதல் ஆங்கிலப் பதிப்பாளர்!
கென்ட் நகரைச் சேர்ந்த வில்லியம் காக்ஸ்டன், லண்டனில் டெக்ஸ்டைல் டீலராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றி வந்தார்
கென்ட் நகரைச் சேர்ந்த வில்லியம் காக்ஸ்டன், லண்டனில் டெக்ஸ்டைல் டீலராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றி வந்தார். அவர் 1415ஆம் ஆண்டிலிருந்து 1424ஆம் ஆண்டிற்குள் பிறந்திருக்கலாமென்று கருதுகிறார்கள். 1440ஆம் ஆண்டு துவக்கத்தில் ப்ரூக்ஸ் நகரில் அவர் மொழி பெயர்ப்பாளராகச் சிறந்து விளங்கியதால், 1462ஆம் ஆண்டு "இங்கிலீஷ் டிரேடிங் கம்பெனி' அவரைத் தன்னுடைய நிறுவனத்தின் கவர்னராக நியமித்தது.
1469ஆம் ஆண்டில் அவர் முதன்முறையாக பிரெஞ்சு நாவல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கத் தொடங்கினார். ஆனால் அதை அவரால் முழுமையாக முடிக்க முடியவில்லை. 1471ஆம் ஆண்டு கொலோன் நகருக்குச் சென்ற அவர் 18 மாதங்கள் அங்கு தங்கி அச்சுக்கலை பற்றி பயிற்சி பெற்றுவந்தார். மீண்டும் ப்ரூக்ஸ் நகருக்கே திரும்பிய அவர் "ப்ளிமெஷ் காலிகிராஃபர் கொலார்ட் மேன்ஷன்' என்ற நிறுவனத்துடன் இணைந்து அச்சகம் ஒன்றை நிறுவினார். 1474ஆம் ஆண்டு 700 பக்கங்கள் கொண்ட "தி ரெகுயெல்' என்ற மொழி பெயர்ப்பு புத்தகமொன்றை முதன்முறையாக ஆங்கிலத்தில் அச்சிட்டு வெளியிட்டார்.
1476ஆம் ஆண்டு மீண்டும் இங்கிலாந்துக்கே திரும்பிய அவர் வெஸ்ட் மினிஸ்டர் அபே அருகில் அச்சகமொன்றை நிறுவினார். அந்தச் சமயத்தில் ஈய எழுத்துக்கள் நடைமுறைக்கு வராத காலமாதலால் பெரும்பாலும் மரத்தில்தான் எழுத்துக்களைப் படங்களாகச் செதுக்கி அச்சிட்டு வந்தார்கள்.
அச்சகத் துறையில் சாதனைப் படைக்க வேண்டுமென்ற ஆர்வத்தில் ஏறக்குறைய 80 புத்தகங்களை அவர் அச்சடித்து வெளியிட்டார். அவற்றில் பெரும்பாலான புத்தகங்கள் மறுபதிப்பாகவும் வெளிவந்தன. மொழி பெயர்ப்பதிலும் சிரமம் இருந்தது. மூலப்
பிரதியில் உள்ள கருத்துக்கள் மாறுபடாமலிருக்க வேண்டுமல்லவா? அதே சமயம் தன்னிடம் வேலை பார்ப்பவர்களுக்கும் தகுந்த பயிற்சியை அளித்து திறமைசாலிகளாக உருவாக்கினார். ஆனால் எத்தனை அச்சகங்கள் வைத்திருந்தார்? எத்தனை புத்தகங்களை ஒரே சமயத்தில் வெளியிட்டார் என்ற விவரங்கள் தெளிவாக இல்லை. என்றாலும், சில புத்தகங்களைக் கால தாமதமாகவும் வெளியிட்டுள்ளார். சில புத்தகங்களை அசுர வேகத்தில் அச்சிட்டும் வெளியிட்டிருக்கிறார்.
துவக்கத்தில் ஒவ்வொரு பக்கத்திலும் 23 வரிகளே இடம் பெற்றிருந்தன. 1483ஆம் ஆண்டு வெளியான 115 பக்கங்கள் கொண்ட "பெஸ்டியல்' என்ற புத்தகத்தில் பக்கத்திற்கு 38 வரிகள் இடம் பெற்றிருந்தன. 24 நாட்களுக்குள் இந்தப் புத்தகத்தை அச்சிட்டு வெளியிட்டது அவரது சாதனையாகக் கருதப்பட்டது.
ஆரம்ப காலங்களில் அச்சகம் வைத்திருப்பவர்கள் விரைவில் இறந்துவிடுவார்கள் என்ற மூடநம்பிக்கை பரவலாக இருந்தது. இது குறித்து 1499ஆம் ஆண்டு கார்ட்டூன் கூட வெளிவந்தது. வில்லியம் காக்ஸ்டனின் மரணத்திற்கு பின்னர், அவரது நிறுவனத்தை அவரிடம் உதவியாளராக இருந்த வேக்கின் டி போர்ட் ஏற்றுக் கொள்ள 1500ஆம் ஆண்டு லண்டனில் உள்ள ஃப்ளீட் ஸ்டீரீட்டில் அந்த அச்சகம் இடம் பெயர்ந்தது. கூடவே அச்சுத் தொழிலில் புதிய திருப்பமும் ஏற்பட்டது.