சென்னையில் உலா வந்த சரித்திர கார்கள்
அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை புகழ் பெற்ற கார்களை வைத்திருப்போருக்குச் சமுதாயத்தில் தனி மரியாதை உண்டு.
அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை புகழ் பெற்ற கார்களை வைத்திருப்போருக்குச் சமுதாயத்தில் தனி மரியாதை உண்டு.
பி.எம்.டபிள்யு, வோல்க்ஸ் வாகன், புகாட்டி வெரோன், ரோல்ஸ்ராய், மெர்சிடஸ் பென்ஸ், லம்பார்கினி, மெக்லரன் உள்ளிட்ட விலை மதிப்புமிக்க சொகுசுக் கார்களைப் பொருத்தவரை ஆண்டுகள் செல்லச் செல்ல உரிமையாளர்களுக்கு அது பாரம்பரியமிக்க சொத்தாக மாறிவிடுகிறது. ஆனால் ஏறத்தாழ 40 ஆண்டுகள் முதல் 90 ஆண்டுகள் வரையிலான கார்களை சென்னை பாரம்பரிய மோட்டார் சங்கம் (மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டாரிங் கிளப்) பராமரித்து அது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கடந்த 9 ஆண்டுகளாக சென்னையில் வெற்றிகரமாக நடத்தி வருகிறது.
அந்த வகையில் பத்தாவது ஆண்டு பாரம்பரிய கார்களின் பேரணி கடந்த வாரம் (ஆகஸ்ட் 24) சென்னை எழும்பூரில் உள்ள டான் பாஸ்கோ பள்ளியில் கோலாகலமாக நடைபெற்றது. அசோக் லேலண்ட் வினோத் தாசரி, டி.வி.எஸ். நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் ஆர்.தினேஷ் ஆகியோர் உற்சாகமாக கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.
Advertisement
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். பயன்படுத்திய தாஜ் கிங்ஸ்வே(1951), ஸ்டூடிபேக்கர் கார்கள், நடிகர் ஜெமினி கணேசன் பயன்படுத்திய ஃபோர்டு பர்ஃபெக்ட்(1952), தொழிலதிபர் டி.வி.சுந்தரம் ஐயங்கார் பயன்படுத்திய செவர்லே மாஸ்டர், பத்திரிகையாளரும் படத்தயாரிப்பாளருமான எஸ்.எஸ்.வாசன், ஏ.வி.மெய்யப்ப செட்டியார் பயன்படுத்திய வாக்ஸ்ஹால் (1932,1938) உள்ளிட்ட கார்கள் ஒவ்வொன்றாக அணிவகுத்து சென்றன. இது தவிர மோரீஸ் 8 சீரீஸ் (1936), சிட்ரான் ஹாட் ரெட் (1945), பியூக் 8 வூடி (1946) உள்ளிட்ட கார்களும் இதில் கலந்து கொண்டன.
ஸ்பர்டாங்க் சாலை, கல்லூரி சாலை, பாந்தியன் சாலையின் ஓரங்களில் இருபுறமும் பார்வையாளர்களின் கூட்டம் அலைமோதியது. ஆஸ்டின் சம்மி போன்ற சிறிய வகைக் கார்களைக் கண்ட குழந்தைகள் உற்சாக மிகுதியால் கைதட்டி ஆர்ப்பரித்தனர்.
நீண்ட... கார்களின் பேரணி முடிவுற்றதும் அதே பள்ளி வளாகத்தில் அனைத்து கார்களும் வரிசையாக நிறுத்தப்பட்டன. இதற்காகவே காத்திருந்தது போல பார்வையாளர்கள் கூட்டம் செல்பேசி, கேமிராக்களுடன் கார்களை நோக்கிப் படையெடுத்தது. குறிப்பாக எம்.ஜி.ஆர். கார் முன்பு நின்று புகைப்படம் எடுக்க கடும் போட்டி நிலவியது.
வெளிநாட்டு பெண்கள் கார்களின் அருகே ஒய்யாரமாக நின்றும், கார்களுக்குள் அமர்ந்தும் விதவிதமான கோணங்களில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
கண்காட்சியில் இடம் பெற்றிருந்த ஆஸ்டின் ரூபி (1937), ஆஸ்டின் 7 கார்களின் உரிமையாளர் சென்னையைச் சேர்ந்த அமித் கோயல் கூறுகையில், ""பாரம்பரிய கார்களை பராமரிப்பது எளிதான காரியம் அல்ல. கார்களுக்குத் தேவையான அசல் டயர்கள் உள்ளிட்ட உதிரி பாகங்களை இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்துதான் பொருத்தினேன். கார்கள் மீதுள்ள ஆர்வத்தின் காரணமாக பராமரிப்பு செலவைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. இந்த இரண்டு கார்களையும் என் குடும்பத்தின் ஒரு அங்கமாக நினைத்து பாதுகாத்து வருகிறேன்'' என்றார்.
இந்தக் கண்காட்சியை நடத்தி வரும் சென்னை பாரம்பரிய மோட்டார் சங்கம், மை டிவிஎஸ் நிறுவனத்தின் நிர்வாகிகள் கூறுகையில், ""பாரம்பரிய கார்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக இதுபோன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறோம். பிரபலங்களும், முக்கியப் பிரமுகர்களும், கார் ஆர்வலர்களும் பயன்படுத்திய கார்களை கூடுதல் கவனம் செலுத்தி சிறப்புத் தேர்ச்சி மிக்க பொறியாளர்களைக் கொண்டு பராமரித்து வருகிறோம். கார்கள் தயாரிக்கப்பட்ட ஆண்டு, எந்த வகையான கார், அதன் உரிமையாளர் உள்ளிட்ட விவரங்களை பார்வையாளர்கள் தெரிந்து கொள்வதற்காக அனைத்து கார்களின் முன் பகுதியிலும் அது குறித்த தகவல்கள் அடங்கிய அட்டைகளை வைத்திருக்கிறோம். பிரபலங்களின் கார்களின் முன்பு அவர்களது புகைப்படத்தையும் வைத்திருக்கிறோம்'' என்றனர்.
கண்காட்சியின் முடிவில் கார்களின் பழமை, தொழில்நுட்பம், சொகுசு, அசல் தன்மை, பராமரிப்பு உள்ளிட்ட சிறப்பம்சங்களை அடிப்படையாகக் கொண்டு பரிசுகள் வழங்கப்பட்டன. மிகவும் பழமையான காருக்கான பரிசு 1926-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட சிங்கர் காருக்கு வழங்கப்பட்டது. இதன் உரிமையாளர் நிஜாம் முஸ்வி ஆவார். இதே போன்று புதிதாக கண்காட்சியில் கலந்து கொண்ட கார்களில் சிறந்த காருக்கான பரிசு தொழில் அதிபர் டி.ஏ.எஸ்.ஜெயராமையாவின் பிளைமூத் (1957) காருக்கு வழங்கப்பட்டது. இவர் தற்போது வரை இந்தக் காரை தினமும் பயன்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
படங்கள் : அண்ணாமலை