தினமணி கதிர்

திரைக்கதிர்

சினிமா, இலக்கியம், தயாரிப்பு, இயக்கம், தொழில்நுட்பம் என பல்வேறு துறைகளிலும் திறமை கொண்ட கமல், அதை

ஜி. அசோக்

சினிமா, இலக்கியம், தயாரிப்பு, இயக்கம், தொழில்நுட்பம் என பல்வேறு துறைகளிலும் திறமை கொண்ட கமல், அதை இளம் தலைமுறைக்கு கடத்திச் செல்கிற வகையில் "உலக நாயகன் யூ டியூப்' என்ற பெயரில் இணைய தளத்தில் யூ டியூப் சேனல் தொடங்கியிருக்கிறார். இதில் ஏற்கெனவே 2,500 பேர் சந்தாதாரர்களாகவும், 75 ஆயிரம் பேர் பார்வையாளர்களாகவும் இணைந்திருக்கின்றனர். "தி விலாக் கேவாய் மொழி' என்ற பிளாக்கில் கமல் தனது கருத்துக்களை இதில் வெளியிட உள்ளார். தற்போது சோதனை முறையில் இயங்கி வரும் இந்த பிளாக், சிறிது சிறிதாக புதுப் பொலிவு பெற இருக்கிறது. ஆரம்ப காலந் தொட்டு கமலோடு பயணித்த பல படைப்பாளிகள் இதில் பங்கேற்று பேச இருக்கின்றனர். தற்போது கமலுக்கு பெரிதும் பிடித்த இயக்குநரான ஆர்.சி.சக்தி, சமீபமாக கமலின் அபிமானத்தை பெற்றுள்ள இசையமைப்பாளர் ஜிப்ரான் போன்றவர்களின் கேள்வி, பதில் பகுதி இடம் பெற்று வருகிறது. அடுத்து நடிகர் நாசர் பதிலளிக்கிறார். "ஹே ராம்', "அபூர்வ சகோதரர்கள்' பற்றிய பல்வேறு தகவல்களையும் இந்த சேனலில் கமல் தெரிவிக்க முடிவு செய்திருப்பதுடன் அவரது கவிதை, இலக்கியம் சார்ந்த பகுதிகளும் இதில் இடம் பெறுகின்றன. கேள்வி - பதில் பகுதியும் விரைவில் தொடங்கவுள்ளது. 

"என்னமோ நடக்குது' படத்தின் மூலம் பரவலான பாராட்டுக்களைப் பெற்ற ராஜபாண்டி - விஜய் வசந்த் கூட்டணி மீண்டும் இணைகிறது. "சிகண்டி' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், நடிகர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. விஜய் வசந்துக்கு ஜோடியாக நிகிஷா பட்டேல் நடிக்கிறார். நாசர், சரண்யா, மனோஜ் கே.பாரதி முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளனர். அழுத்தமான வேறுபட்ட கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடிக்கிறார். இன்னொரு கதாபாத்திரத்தில் நடிக்க சூரியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அரசு தொடக்கப்பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன. வியாபாரமாகி விட்ட கல்வி சூழல், அரசின் பள்ளிகளை இயங்க விடாமல் செய்கிறது. கீழ் மட்ட ஏழைப் பிள்ளைகளும் தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கப்படுகிறார்கள். இதைக் கதைக் கருவாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை வடிமைக்கப்பட்டுள்ளது.

முன்னணி இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள கமர்ஷியல் படங்களை மட்டுமே நம்பினார் விஜய். கிட்டத்தட்ட அனைத்து படங்களிலும் ஒரே விதமான தோற்றங்களிலேயே அவரை பார்க்க முடிந்தது. "வேட்டைக்காரன்", "சுறா' ஆகிய படங்களுக்கு வெளியான விமர்சனங்கள் அவரை யோசிக்க வைத்தன. இதையடுத்து தன் சினிமா போக்கில் கொஞ்சம் மாற்றங்களைக் கொண்டு வந்தார். ஷங்கரின் "நண்பன்', ஏ.ஆர்.முருகதாஸின் "துப்பாக்கி', "கத்தி' என கதையைத் தேர்வு செய்வதிலும் வித்தியாசங்களைக் காட்டினார். தற்போது இதிலிருந்து மாறுபடும் விதமாக முதன் முதலாக குள்ளனாக நடிக்க உள்ளார். சிம்புதேவன் இயக்கும் சரித்திர கால படத்துக்காக இரட்டை வேடங்களில் நடித்து வரும் விஜய்யின் ஒரு வேடம் குள்ளன் கதாபாத்திரம்.  தமிழக வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற மன்னர் ஒருவரின் வாழ்க்கையைத் தழுவி உருவாகும் இக்கதையில், மன்னர் வேடத்தில் இயல்பான தோற்றத்திலும், கதையின் முக்கியத்துவம் வாய்ந்த இன்னொரு கதாபாத்திரத்துக்கு மூன்று அடி மட்டுமே உயரம் கொண்ட தோற்றத்தில் வித்தியாசமாக நடிக்கவுள்ளார் விஜய். "அபூர்வ சகோதர்கள்' படத்தில் கமல்ஹாசன் நடித்த குள்ளன் வேடத்துக்குப் பின் எந்த ஹீரோவும் இதுபோல் நடிக்கவில்லை.

கோலிவுட் ஹீரோவுடன் ஏற்பட்ட காதல் தோல்வியால் டோலிவுட்டுக்கு போனார் தமன்னா. சுமார் 2 வருடங்கள் கழித்து தற்போது கோலிவுட் திரும்பியிருக்கிறார். காமெடி படங்களுக்கு பெயர் போன ராஜேஷ்.எம் இயக்கத்தில் ஆர்யாவின் ஜோடியாக நடிக்க வந்திருக்கிறார். இதுவும் காமெடியை பிரதானமாக கொண்டு உருவாகியுள்ள திரைக்கதை. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது. ஆர்யா, தமன்னா, சந்தானம் பங்கேற்ற காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இதுவரை இல்லாத அளவுக்கு படப்பிடிப்பை சுற்றிலும் கெடு பிடிகள். படப்பிடிப்பு தளத்தை சுற்றி பாதுகாப்புக்கு ஆள்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். "படப்பிடிப்புக்கான அடையாள அட்டை இல்லாமல் யார் வந்தாலும் உள்ளே விட வேண்டாம்' என இயக்குநர் தரப்பிலிருந்து கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளதே இதற்கு காரணம். ரஜினிகாந்தின் "லிங்கா' படப்பிடிப்பு குறித்த படங்களே நெட்டில் உலா வரும் போது, இந்தப் படத்துக்கு ஏன் இத்தனை கெடு பிடி? என கேட்பவர்களுக்கு.... "தற்போது நடிக்க வந்திருக்கும் தமன்னாவை, செய்தியாளர்கள் சந்தித்து காதல் தோல்வி பற்றி மீண்டும் கேள்விகளை எழுப்பி விடுவார்கள். அப்படியான கேள்விகளை அவர் எதிர்கொள்ள விரும்பவில்லை. செய்தியாளர்கள் யாரையும் பார்க்க விருப்பம் தெரிவிக்கவில்லை. அதனால்தான் இந்த அளவுக்கு கெடு பிடி'' என்கிறது படக்குழு.

தமிழ் சினிமாக்களைப் பொறுத்தவரை ஹீரோக்களை சுற்றித்தான் கதைக்களம் அமைக்கப்படுகிறது. ரஜினி படம் என்றால் அவர் மட்டுமேதான் படம் முழுக்க ஆதிக்கம் செலுத்துவார். அதே சமயத்தில் "சந்திரமுகி' படத்தில் ஜோதிகா, "படையப்பா' படத்தில் ரம்யாகிருஷ்ணன் கதாபாத்திரங்கள் பரபரப்பாக பேசப்பட்டன. "லிங்கா' படத்தை பொறுத்தவரை அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா என இரு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். இப்படத்தின் "ரஷ்' காட்சிகளை பார்த்த சிலர் அனுஷ்காவை விட சோனாக்ஷி சின்ஹாவுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றனர். கதையின் ப்ளாஷ் பேக் காட்சிகளில் வரும் சோனாக்ஷி, ரஜினிக்கு உறுதுணையாக இருக்கும் வேடத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறாராம். அதே சமயத்தில் படத்தின் நிகழ்கால காட்சிகளில் அனுஷ்கா இயல்பான நகரத்துப் பெண் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சென்சார் குழு படத்துக்கு "யு' சான்றிதழ் வழங்கியுள்ளது. படம் மூன்று மணி நேரம் ஓடுகிறது. டிசம்பர் 12-ஆம் தேதி உலகம் முழுவதும் 5 ஆயிரம் திரையரங்குகளில் படம் வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT