முகப்பு
தினமணி கதிர்

சென்னைக்கு இது புதுசு!

சென்னையில் இத்தனை பெரிய அளவுக்கு ஓவிய, நவீன சிற்ப, புகைப்பட விழா நடந்திருப்பதாக நமக்குத் தெரியவில்லை.  இத்தனை ஓவியக் கலைஞர்கள்,

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

சென்னையில் இத்தனை பெரிய அளவுக்கு ஓவிய, நவீன சிற்ப, புகைப்பட விழா நடந்திருப்பதாக நமக்குத் தெரியவில்லை.  இத்தனை ஓவியக் கலைஞர்கள், வெவ்வேறு இடங்களில் தங்கள் படைப்புகளை இதுவரை மக்களின் பார்வைக்குக் கொண்டு சென்றதாகவும் தெரியவில்லை.

சென்னைக் கலைவிழா 2014-இன் ஒரு பகுதியாக ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி மதிலின் வெள்ளைச் சுவர்களில் பாரம்பரிய வண்ண ஓவியங்களை பாதச் சுவடுகளில் தொடங்கி, இயற்கைக் காட்சிகள் வரை கல்லூரி மாணவிகளும், எபிலிடி பவுண்டேஷனைச் சேர்ந்தவர்களுமாக வரைந்திருந்தது பார்வையைக் கவரும் அம்சம்.  ""மும்பை, தில்லி, சென்னை ஓவியர்கள் சீமா கோஹிலி, தனுஜா ரானே மற்றும் ஜேக்கப் ஜெபராஜ் இவர்களுக்குப் பயிற்சி அளித்து இந்த ஓவியங்களை வரையச் செய்தார்கள்'' என்றார் ரோஹிணி. 

க்ரீம்ஸ் சாலையிலுள்ள லலித் கலா அகாடமி, கொத்துக் கொத்தாக ஓவியர்களும், நவீன சிற்பிகளுமாக நிறைந்து வழிந்தது.    

""நம் வாழ்க்கையிலும் சமூகத்திலும் கலையுணர்வுக்கு உள்ள இடத்தை எடுத்துக் காட்டத்தான் இந்த முயற்சி.  இதில் இந்தியத் தொழில் கூட்டமைப்பின் உதவியோடு மாணவ சமுதாயத்தையும் இணைத்துக் கொண்டோம்.  கடந்த இரண்டு ஆண்டு கால சென்னைக் கலை விழா எங்களுக்கு அளித்த உற்சாகம்தான் இந்த ஆண்டு நிகழ்ச்சிக்குத் தூண்டுதலாக அமைந்தது.  ஒரே இடத்தில் அல்லாமல், பல இடங்களில் பல்வேறு வகை  ஓவிய, புகைப்படக் காட்சிகளை மக்கள் பார்க்கலாம்'' என்றார் சஞ்சய் துல்சியான்.  இவர்தான் இந்த விழாவின் அச்சாணி. 

""கடந்த சில ஆண்டுகளாகக் கலைத் துறையில் பிரமிக்கத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், சென்னைக் கலை விழா வித்தியாசமானது, தனித்துவமானது.  மெரீனா கடற்கரையில் புகைப்படக் காட்சி, லலித் கலா அகடமியில் குரூப் எக்ஸிபிஷன், தவிர தக்ஷிண சித்ரா, எக்ஸ்பிரஸ் அவென்யூ, சோழமண்டல் ஆகிய இடங்களில் சில படைப்புகள்.   போகஸ் காலரி, ஸ்ரீபார்வதி காலரி, வின்யாசா காலரி என்று பல காலரிகளில் ஏற்கெனவே தொடர்ந்து வரும் நம்முடைய பாரம்பரியம், கலாசார பாரம்பரியம், நாம் கண்டெடுக்க வேண்டிய பாரம்பரியம் என்று பல ஓவியப் பதிவுகளைக் காணலாம்'' என்று விளக்கம் தந்தார் கிரிஷ் சஹானே.  இவர்தான் இந்தக் கலைவிழாவின் கலை இயக்குநர்.

இந்த பிரம்மாண்ட விழாவின் பின்னணியில் சோழமண்டல் ஓவியர்கள் கிராமமும் தக்ஷிண சித்ராவும் தவிர, ஒன்பது ஆர்ட் காலரிகள் பங்கு கொண்டிருக்கின்றன.  இந்த பிரமிக்க வைக்கும் விழாவில் பங்கெடுத்துக் கொண்டிருக்கும் ஓவியர்களின் பட்டியலில் இந்தியாவின் தலை சிறந்த ஓவியர்கள் அத்தனை பேரும் இடம் பெற்றிருக்கிறார்கள்.  மெட்ராஸ் மூவ்மென்ட் அல்லது சென்னை இயக்கத்தின் ஓவியர்கள் - சி. டக்ளஸ், கே. முரளிதரன், ஆர்.எம். பழனியப்பன் மற்றும் எஸ். நந்தகோபால் ஆகியோர் அடையாளங்கள், குறியீடுகளை வெளிப்படுத்துகிறார்கள் என்றால்,  ரீனா சைனி கல்லட்டின் படைப்புகள் (கற்பனை          சிலந்திக்கூடு, வண்ணத் திரை, வீழ்ந்த தூண் முதலியவை) சிந்திக்க வைக்கின்றன.

சோழமண்டலம் ஓவிய கிராமத்துக்கே ஒரு தனி இடம் உண்டு. ஆதிமூலம் அவர்களின் மகன் அபராஜிதன், சந்த்ரு சந்திரசேகரன், எபனீசர் சுந்தர் சிங், கிருஷ்ண்ப்ரியா, மாய அந்தோணிராஜ், மைக்கல் இருதயராஜ், கூத்துப்பட்டறை ந. முத்துசாமியின் மகன் நடேஷ், நரேந்திரன், ஷர்மிளா மோகன் தாஸ் என்று தங்கள் படைப்பால் அசத்துபவர்களின் பட்டியல் இது.  அப்ஸ்ட்ராக்ட் ஓவியத்தில் கைதேர்ந்த கணேஷ் செல்வராஜ், நாராயணன் வீரராகவன், மற்றும் போதிசத்வர் இன்னொரு வகை.  இதே சோழமண்டலில், தங்கள் ஐந்தாண்டு நிகழ்காலக் கலை ஓவிய-சிற்ப வடிவங்களைக் காட்சிக்கு வைத்திருப்போர் பட்டியல் மிக நீண்டது. ஆனால் வி.விசுவநாதன், எஸ்.ஜி. வாசுதேவ், எம். சேனாபதி பெயர்கள் நம் நினைவுப் பாதையில் நிச்சயம் மணியடித்து நம்மை அழைக்கும் பெயர்கள்.

தக்ஷிண சித்ராவின் வரிஜா ஆர்ட் காலரியில், அஞ்சலி ஸ்ரீனிவாசனின் கண்ணாடி வளையல்கள் புதிய கற்பனை. போகஸ் ஆர்ட் காலரியில் அச்சுதன் கூடலூர், அமிதாப் சென்குப்தா, தீரஜ் சௌத்ரி, ஆர்.பி. பாஸ்கரன் என்ற நால்வர் கூட்டணி என்றால், ஃபோரம் ஆர்ட் காலரியில் ஏ.வி. இளங்கோ, தேஜோ மேனன், பி. இளஞ்செழியன், சிவராமாச்சாரி, எஸ். நந்தகோபால், பிஸ்வஜித் பாலசுப்பிரமணியன், சைலேஷ், ஹர்ஷா பிஸ்வஜித் என்று ஓவிய உலகில் ஆழமான தடம் பதித்தவர்களின் ஓவியங்கள்  (குனிந்த மனிதனின் முதுகில் நிற்கும் யானை - சைலேஷின் ஓவியம்)  பாரம் காலரியில் எஸ்.என். சுஜித்தின் மூவர் பரிமாணங்கள் முற்றிலும் மாறுபட்ட கற்பனை. ஸ்ரீபார்வதி காலரியில் சி.டக்ளஸ்.

புகைப்படக் கலையில் நிகரற்றவர் ரகு ராய்.  வித்தியாசமான கோணங்களில் அமைந்திருக்கும் இவர் புகைப்படங்களை, காலா வேதா மற்றும் ஷில்பா ஆர்கிடெக்ட்ஸ் பெருமையுடன் காட்சிப்படுத்தியிருக்கிறது.  இவர்கள் குறிக்கோள் சம்பிரதாயமான படைப்புகளையும் தாண்டிச் செல்ல வேண்டும் என்பதுதானாம்.  வின்யாசா காலரியில், ஜீஸûஸப் பல வடிவங்களில் காணலாம்.  கண்ணை ஈர்ப்பவை தோட்டாதரணியின் வாட்டர் கலர் ஓவியமும், சனாதன் திண்டாவின் அக்லிக் ஓவியமும். விவேக் விலாசினியின் கதகளி வகை டிஜிடல் வடிவமும்.

இருங்கள், இருங்கள், இன்னும் ஓவியர்கள் பட்டியல் முடியவில்லை  லலித் கலா அகாடமியில் அனிதா துபே முதல் விவான் சுந்தரம் வரை சுமார் ஒரு டஜன் ஓவியர்கள் தங்கள் கைவண்ணத்தைக் காட்டியிருக்கிறார்கள்.  வீட்டுக்குச் சாயம் பூசும்போது, சணல் கயிறால் அங்கங்கே கட்டிய ஏணியைப் பயன்படுத்துவார்கள் அல்லவா?  அதைக்கூட ஒரு காட்சிப் பொருளாக வைத்திருக்கிறார் ஜிதிஷ் கல்லட்.  குறிப்பிட வேண்டிய ஓவியம், சுவர்களின் நடத்தை என்ற தலைப்பில் மதுபன் மித்ராவும், மனஸ் பட்டாசார்யாவும் இணைந்து உருவாக்கியிருக்கும் ஒரு ஸ்டில் புகைப்படம். வண்ணமயமான நெகடிவ் போல இருப்பதே ஓர் ஓவியம் மாதிரி இருக்கிறது  எக்ஸ்பிரஸ் அவென்யூவில் மித்து சென்னின் பூக்கள் விற்கும் பெண்மணியும் கண்ணாடித் தாள் போர்வையில் தொங்கும் வண்ண மாலைகளும்  (தலைப்பு: ஷாப் லிப்டிங்)

வேளச்சேரி பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் அனிமேஷன் படைப்புகளாம்.  (மன்னிக்கவும், பார்க்க முடியவில்லை) 

எலியட்ஸ் பீச்சிலும், மெரினா பீச்சிலும், ஐ.ஐ.டி.யிலும் பிரம்மாண்ட புகைப்படக் காட்சிகள். மிரியம் மெலோனி, மாக்ஸ் பிங்கர்ஸ், நாதன் ஜி.புகைப் படங்களைப் பலரும் பார்த்திருக்கக்கூடும்.  மெரினாவில் சென்னை அன்றும்-இன்றும்.  பழைய மவுன்ட் ரோடும், சென்ட்ரல் ஸ்டேஷனையும் விடுங்கள்.  எழும்பூர் ஸ்டேஷனில் மூன்றாம் வகுப்புப் பயணிகள் கறுப்பு-வெள்ளைப் படம் நிச்சயம் புன்னகையை வரவழைக்கும்.

ஹயாட் ரீஜென்சியில் புகைப்படங்களையே கலைவடிவில் பிடித்திருப்பவர்களின் படைப்புகள்.  மனிஷா கேரா பாஸ்வானி கையில் காமிராவை வைத்துக்கொண்டு, மாற்றி யோசிப்பவர் அணியில் முதலிடம் வகிப்பவர் என்று அவர் படங்கள் தெரிவிக்கின்றன.

இத்தனையும் போதாது என்று, ஹயாட் ரீஜென்சியில் பிற்பகல் கலந்துரையாடல்கள்.  தலைப்பே தலைசுற்ற வைக்கிற ரகம்: கடந்தகாலத்தின் எதிர்காலம் அதில் ஒன்று.  அதை அடுத்து, அஞ்சலி ஸ்ரீனிவாசன், சதானந்த் மேனன் மற்றும் கர்நாடக இசைப் பாடகர் டி.எம். கிருஷ்ணா

பங்கேற்ற சுவாரசியமான விவாத அரங்கு. சென்னை கர்நாடக இசைக்கும், பரத நாட்டியத்துக்கும் பிறந்தவீடு மாதிரி.  அவற்றின் பழைமையைப் பாரம்பரிய சுவாசத்துடன் பாதுகாத்து அவற்றின் பாரம்பரியப் பெருமையைத் தக்க வைக்க முடியுமா, அவற்றில் மாற்றங்களைப் புகுத்தினால் ரசிகர்கள் தாங்குவார்களா, தாக்குவார்களா - விவாதக் கருப் பொருள் இது.

இதெல்லாம் போக, பல ஓவியர்களின் வண்ண ஓவியங்கள் ஹயாட் ரீஜென்சியில், ரோட்டரி சங்கப் பணிகளின் உதவிக்காக ஏலம் விட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  ஏராளமான தொழிலகங்கள் இந்த மெகா ஓவியக் கலை விழாவுக்கு உறுதுணையாக இருப்பதால், பல ஓவியங்கள் பல்லாயிரக்கணக்கான தொகைக்கு ஏலம் போயிருக்கும்.

சென்னைக்கு டிசம்பர் இசை விழாதான் உலகின் வேறு எந்த நகரிலும் நடைபெறாத பிரம்மாண்டத்தைத் தந்துகொண்டிருந்தது.  ஓவியக் கலை உலகும் இப்போது இங்கே வந்து ஒரு கலக்குக் கலக்க சென்னை கொடுத்து வைத்திருக்கிறது.

முழு கட்டுரையைப் படிக்க →