முகப்பு
தினமணி கதிர்

மருத்துவம்

டாக்டர் ஈஸ்வரனுக்கு உடல் முழுவதும் தடிப்பு, தடிப்பாக இருக்கிறது.

Updated On : 19 ஜனவரி, 2014 at 12:46 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 9:35 AM

டாக்டர் ஈஸ்வரனுக்கு உடல் முழுவதும் தடிப்பு, தடிப்பாக இருக்கிறது. எப்போதும் அந்தத் தடித்த இடங்களில் சொறிந்து கொண்டே இருக்கவேண்டும் போல் தோன்றுகிறது.
 எம்.பி.பி.எஸ்ஸில் அவர் படித்த மருத்துவத்தை எல்லாம் உபயோகப்படுத்திப் பார்த்து விட்டார். அலர்ஜியால் ஏற்பட்டிருக்கும் என்று நினைத்த அவர், அதற்கு மாத்திரை சாப்பிட்டுப் பார்த்து விட்டார். மாத்திரை சாப்பிடும் போது குறைகிறது. அடுத்த நாளே மீண்டும் உடல் முழுவதும் அரிப்பு எடுக்கிறது. சொறியக் கூடாது என்று எவ்வளவோ மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டாலும் அவரால் முடியவில்லை. கை அவரை அறியாமல் சொறிகிறது.
 அவருடைய நண்பர் கார்த்திக் திருநெல்வேலியில் ஸ்கின் ஸ்பெஷலிஸ்டாக இருக்கிறார். அவருக்கு போன் பண்ணிக் கேட்டார். அவரும் சில மாத்திரைகளைச் சொன்னார். அதையும் போட்டாகி விட்டது. அதுவும் அப்படித்தான். மாத்திரை சாப்பிடும்போது சரியாகிறது. அடுத்த நாளே பதுங்கியிருந்து பாய்கிறது.
 போன வாரம் கார்த்திக்கை நேரில் போய்ப் பார்த்துவிட்டும் வந்தாகிவிட்டது. அவரும் அலர்ஜிதான் என்று சொல்லிவிட்டார். ஆனால் அரிப்பு நின்றபாடில்லை.
 ஈஸ்வரனுக்கு, தான் படித்த எம்.பி.பி.எஸ். படிப்பின் மேலேயே சந்தேகம் வந்து விட்டது. உடலில் உண்டாகும் ஒரு சொறியைப் போக்குவதற்கு மருந்து இல்லையா? மாதக் கணக்காக இந்தச் சொறியோடு அல்லாடிக் கொண்டிருக்கிறேனே என்று நினைத்த அவர், நாகர்கோவிலுக்கு அருகே புத்தேரியில் இருக்கும் ஒரு ஸ்கின் ஸ்பெஷலிஸ்டைப் பார்ப்பதற்குப் புறப்பட்டார்.
 காரை எடுத்துக் கொண்டு புத்தேரிக்குப் புறப்படும்போது மனதில் எந்தச் சஞ்சலமும் இல்லை. புத்தேரிக்குப் போய் ஆஸ்பிட்டலில் காத்துக் கொண்டிருக்கும்போதுதான் மனம் சஞ்சலப்படத் தொடங்கியது.
 டாக்டராக இருக்கும் நான், இன்னொரு டாக்டரைப் பார்ப்பதற்குக் காத்திருக்க வேண்டியிருக்கிறதே என்று நினைத்த அவரால், தொடர்ந்து அங்கே உட்கார முடியவில்லை. நாற்காலியை விட்டு வெளியே எழுந்து வந்தார். அங்கே சுவரில் பதிந்திருந்த கடிகாரத்தைப் பார்த்தார். மணி ஆறு என்று காட்டியது.
 ஐந்து மணிக்கு வரவேண்டிய டாக்டர் இன்னும் வரவில்லை. குறிப்பிட்ட நேரத்திற்கு வர முடியாத ஒருவரால் எப்படி டாக்டர் தொழிலைச் சரியாகச் செய்ய முடியும்? என்று அவரது மனம் கேள்வி
 கேட்டது.
 பலமுறை ஈஸ்வரனே தனது கிளினிக்கிற்கு லேட்டாகப் போனது நினைவுக்கு வந்தது. அப்போது எல்லாம் லேட்டாகப் போவதைப் பற்றி அவர் கவலைப்பட்டதே இல்லை. இப்போது அவர் காத்துக் கொண்டிருக்கும்போதுதான் அந்தக் காத்திருப்பின் வலி குத்தியது.
 பத்து பதினைந்து நிமிடம் அங்கும் இங்கும் நடந்தபடி இருந்த ஈஸ்வரன் மீண்டும் ஆஸ்பிட்டலின் வராந்தாவுக்கு வந்தார்.
 அவர் உட்கார்ந்திருந்த இடத்தில் வேறு யாரோ ஒருவர் உட்கார்ந்திருந்தார்.
 அந்த ஆஸ்பிட்டலில் அட்டெண்டராக இருக்கும் பெண்ணிடம் போய், ""நான் ஒரு டாக்டர்'' என்று சொல்லலாமா என்று நினைத்தார். அப்படிச் சொன்னாலும் பெரிதாக ஒன்றும் நடந்து விடப்போவது இல்லை என்பது அவருக்குப் புரிந்தது. நாகர்கோவிலில் ஈஸ்வரன் டாக்டராக இருந்தாலும் இங்கே புத்தேரியில் அவர் ஒரு நோயாளியாக இருக்கிறார்.
 அவரது கையில் அங்கங்கே சிவப்பாகத் தடித்து இருப்பதைப் பார்த்தால் யாரும் கொஞ்சம் தள்ளித்தான் உட்காருவார்கள். டாக்டருக்கு வரக்கூடாது என்று அந்த நோய்க்குத் தெரியவா செய்யும்?
 இப்போது உட்கார்வதற்கு ஓர் இடம் கிடைத்தால் பரவாயில்லை என்று தோன்றியது டாக்டர் ஈஸ்வரனுக்கு. யாரும் நாற்காலியை விட்டு எழுந்திருக்கவில்லை. டாக்டர் வரும் நேரம் என்பதால் எல்லாரும் அசையாமல் ஆணி அடித்ததைப் போல் உட்கார்ந்திருந்தார்கள்.
 அட்டெண்டர் பெண் திடீரென்று எழுந்து நின்று இரண்டு கைகளையும் குவித்து வணக்கம் என்று சொன்னாள். நாற்காலியில் இருந்த நோயாளிகள் எல்லாரும் எழுந்தார்கள். அவர்களில் ஓரிருவர் "வணக்கம்' என்றும் "குட் ஈவினிங்' என்றும் சொன்னார்கள். யாருக்கும் தனிப்பட்ட வகையில் வணக்கம் சொல்லாமல் பொதுவாகத் தலையை அசைத்தபடி தனது அறைக்குப் போனார் அந்த டாக்டர்.
 டாக்டரின் அழைப்புக்காக எல்லோரும் காத்துக் கொண்டிருந்தார்கள். பத்து நிமிடம் கழிந்தது. டாக்டரின் அறையிலிருந்து மணிச் சத்தம் கேட்கவில்லை.
 ஈஸ்வரனுக்குக் கொஞ்சம் கோபம் வந்தது. இவ்வளவு நோயாளிகள் வெளியே காத்துக் கொண்டிருக்கிறார்கள். வந்ததே ஒன்றரை மணிநேரம் லேட். வந்த பிறகும் நோயாளியைக் கூப்பிட்டுப் பார்க்காமல் அப்படி என்ன செய்கிறார் என்ற மனத்தின் முணுமுணுப்பு வெளியே கேட்டுவிடாமல் பத்திரமாக அடக்கிக் கொண்டார்.
 அதன் பிறகும் பத்து நிமிடங்களுக்குப் பிறகுதான் டாக்டர் மணி அடித்தார். முதல் எண் டோக்கன்காரர் உள்ளே போவதற்கு முயன்றார். அவரைத் தடுத்து நிறுத்திய அட்டெண்டர் உள்ளே போனார். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு வெளியே வந்த அந்தப் பெண், முதல் எண் கொண்ட டோக்கன்காரரை உள்ளே அனுப்பினாள்.
 மணி ஏழு ஆனது. முதல் நோயாளியே இன்னும் வெளியே வரவில்லை. டாக்டர் ஈஸ்வரனுக்குப் பதினைந்தாம் டோக்கன். அவர் டாக்டரைப் பார்ப்பதற்கு எப்படியும் ஒன்பது மணிக்குமேல் ஆகிவிடும் போல் தோன்றியது.
 நல்ல வேளை. அவரது கிளினிக்கிற்கு இன்று விடுமுறை விட்டிருந்தார். இல்லை என்றால் அவரது கிளினிக்கிலும் இப்படித்தான் நோயாளிகள் வந்து காத்துக் கொண்டிருப்பார்கள்.
 சில மாதங்களாகவே இந்தச் சொறியுடன் போராடுவதால் டாக்டர் ஈஸ்வரனின் மனம் மிகவும் கலங்கிப் போய் இருந்தது. இல்லை என்றால் இந்த டாக்டரிடம் அப்பாயின்மென்ட் ஏற்பாடு செய்து விட்டு வீட்டிலேயே போய்ப் பார்த்திருக்கலாம். அப்படி அப்பாயின்மென்ட் வாங்குவதாக இருந்தால் நண்பர் கார்த்திக் மூலமாகத்தான் வாங்க வேண்டும்.
 கார்த்திக்கும் தோல் மருத்துவர். இவரும் தோல் மருத்துவர். கார்த்திக்கை நம்பாமல் வேறு ஒரு ஸ்கின் ஸ்பெஷலிஸ்டைப் பார்ப்பதாகக் கார்த்திக் நினைத்துக் கொண்டால் என்ன செய்வது? அதனால்தான் நோயாளியாக நோயாளிகளுடனே வந்திருந்தார் டாக்டர் ஈஸ்வரன்.
 அவரது வலது முழங்கையில் சொறி ஏற்பட்டது. அவரை அறியாமல் அடுத்த கை அதைச் சொறிந்து கொண்டிருந்தது. சொறிந்த இடத்தில் வலிக்கத் தொடங்கியதும்தான் அவர் சொறிவது அவருக்கே தெரிந்தது. சொறிந்த இடத்தைக் கையால் தடவி விட்டபடி டாக்டர் இருக்கும் கேபினைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
 பதின்மூன்றாம் எண் கொண்டவர் இல்லை. பதினான்காம் டோக்கன் உள்ளே போனார். அடுத்தபடியாக உள்ளே போவதற்குத் தயாரானார் டாக்டர் ஈஸ்வரன். அரைமணிநேரம் ஆன பிறகும் பதினான்காம் டோக்கன்காரர் வெளியே வந்த பாடில்லை.
 "டாக்டரிடம் போனால் நோயைச் சொல்லி மாத்திரையை எழுதி வாங்கிவிட்டு வரவேண்டியது தானே? குடும்பக் கதையை உள்ளே போய் பேசிக்கிட்டிருக்கிறார். இல்லேன்னா ஏன் இவ்வளவு நேரம் ஆகுது?' என்று நினைத்த டாக்டர் ஈஸ்வரன் மெல்ல எழுந்தார்.
 அவர் எழுந்து நிற்பதற்கும் பதினான்காம் டோக்கன்காரர் வெளியே வருவதற்கும் சரியாக இருந்தது. அட்டெண்டர் பெண் சொல்வதற்கு முன்பாகவே உள்ளே நுழைந்தார் டாக்டர் ஈஸ்வரன்.
 ""வணக்கம் சார்'' என்று சொன்ன டாக்டர் ஈஸ்வரனுக்குப் பதில் வணக்கம் சொல்லாமல் நோயாளியின் இருக்கையில் உட்காரச் சொன்னார் டாக்டர்.
 ""உடம்புக்கு என்ன?'' என்று கேட்ட அந்த ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட் திடீரென்று டாக்டர் ஈஸ்வரனின் முகத்தையே உற்றுப் பார்த்தார். டாக்டர் பார்த்ததும் டாக்டர் ஈஸ்வரனுக்குக் கொஞ்சம் சந்தோஷம் வந்தது.
 ""நான் டாக்டர் கார்த்திக்கின் ஃபிரெண்டு. நாகர்கோவில்ல கிளினிக் வச்சிருக்கேன்'' என்றார் ஈஸ்வரன்.
 ""ஓ . . . அப்படியா?'' என்ற டாக்டர், என்ன பிராப்ளம் என்று கேட்டார்.
 டாக்டர் ஈஸ்வரனுக்கு, தான் ஒரு டாக்டர் என்று சொன்ன பிறகும் அதைப் பற்றிப் பேசாமல் நேராக நோயைக் கேட்டது பிடிக்கவில்லை. இருந்தாலும் அதற்காக நோயைப்பற்றிச் சொல்லாமல் இருக்க முடியுமா?
 தனது தொடர் சொறி நோய் பற்றிச் சொன்னார். சாப்பிட்ட மாத்திரைகளின் பட்டியலை ஒப்பித்தார்.
 எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த அந்த டாக்டர், ""வெறும் அலர்ஜிதான் சார். எந்த மாத்திரையும் சாப்பிடல்லைன்னாலும் தானாகவே சரியாயிடும். இருந்தாலும் நான் தர்ற மாத்திரையை மூணு வேளை மூணு நாள் சாப்பிடுங்க'' என்று டாக்டர் ஈஸ்வரனுக்கும் தெரியாத எழுத்தில் பிரிஸ்கிரிப்ஷன் எழுதிக் கொடுத்தார்.
 வெளியே வந்து அந்தப் பிரிஸ்கிரிப்ஷனில் குறிப்பிட்டிருந்த மெடிக்கல் ஷாப்பில் மாத்திரையை வாங்கிவிட்டு வந்தார் டாக்டர் ஈஸ்வரன்.
 
 மூன்று நாள் கழிந்து விட்டது. இந்த மூன்று நாளும் சொறி வரவில்லை. மூன்று நாள் முடிந்ததும் அரிப்பு வரும் என்ற டாக்டர் ஈஸ்வரனின் நம்பிக்கை வீணாக வில்லை. அடுத்த நாளே விடாமல் அரிப்பு ஏற்பட்டது.
 "என்னடா வாழ்க்கை? மனித உடலில் உண்டாகும் ஒரு சின்ன சொறியைக் கூட நம்மால் போக்க முடியவில்லை. பெரிதாக வாழ்ந்து என்ன சாதித்துவிடப் போகிறோம்?' என்று நினைத்தபடி கிளினிக்கிற்குப் போகாமல் வீட்டில் படுத்திருந்தார் டாக்டர் ஈஸ்வரன்.
 மனைவியும் குழந்தைகளும் உள்ளே இருந்தார்கள்.
 கொஞ்ச நேரம் கழிந்ததும் படுக்கையில் படுத்திருந்த ஈஸ்வரன் ஹாலில் வந்து உட்கார்ந்தார். ஒரு சட்டையை எடுத்துப் போடுவதற்கும் சோம்பேறித்தனமாக இருந்ததால் வெற்று உடம்புடனேயே இருந்தார்.
 சாயங்காலம் மணி ஆறு இருக்கும்.
 காலிங் பெல் ஒலித்தது. யாராய் இருக்கும் என்றபடி எழுந்து வந்து கதவைத் திறந்தார் டாக்டர் ஈஸ்வரன்.
 வெளியே ஒருவர் தாடியுடன் நின்று கொண்டிருந்தார். என்ன? என்பதுபோல் நிமிர்ந்து பார்த்தார் டாக்டர் ஈஸ்வரன்.
 ""ஐயா மருத்துவா மலையில இருக்கிற அம்மன் கோவில்ல கஞ்சி காச்சி ஊத்துறோம். அம்மா வருஷந்தோறும் அரிசி தருவாங்க. அதுதான் வாங்கிட்டுப் போலாம்னு வந்தோம்'' என்று அவர் சொல்லி முடிப்பதற்குள் டாக்டரின் மனைவி வந்தாள்.
 வெளியே கிடக்கும் நாற்காலியைக் காட்டி அந்தப் பெரியவரை அதில் அமரச் சொன்னாள். உள்ளே போய் ஒரு பெட்டியில் பத்துப் பக்கா அரிசியை அளந்து கொண்டு வந்து கொடுத்தாள்.
 அரிசியை வாங்கிய அவர், ""ரொம்ப நன்றிம்மா'' என்று சொன்னார். அதன் பிறகும் அந்த இடத்தை விட்டுப் போகாமல் நின்றார்.
 ""என்ன பெரியவரே அரிசி போதாதா? இன்னும் கொஞ்சம் வேணுமா?'' என்று கேட்டாள் டாக்டரின் மனைவி.
 ""அதெல்லாம் போதும்மா. ஒங்ககிட்ட ஒரு காரியம் சொல்லலாம்னு நெனைக்கிறேன். அம்மா தப்பா நெனைச்சுக்கப்புடாது''
 ""சும்மா சொல்லுங்க பெரியவரே''
 ""அய்யா உடம்பைப் பாத்தேன். தடிப்புத் தடிப்பா இருக்குது''
 ""பல மாசமா அதோட கெடந்து கஷ்டப்படுறாங்க. அதுனாலதான் இன்னைக்கி கிளினிக்குக்குக் கூடப் போகாம இருக்காங்க''
 ""ஐயா டாக்டருன்னு எனக்குத் தெரியும். நான் சொல்றேன்னு தப்பா நெனைக்காதீங்க. அதைப் பாத்தா வெஷக்கடி போல இருக்கு. கன்னியாகுமரிக்கும் கோவளத்துக்கும் எடையில ஒரு வைத்தியரு இருக்காரு. பேரு கூட சங்கர பாண்டின்னு சொல்லுவாங்க. அவருகிட்டே போய் மூணு வேளை ஊதினா, எப்பேர்ப்பட்ட வெஷக்கடியும் இருந்த எடமில்லாம போயிடும். காலையில ஆறு மணிக்கும் சாயங்காலம் ஆறு மணிக்கும் ஊதணும். நீங்க ஒரு நடை அங்க போய்ட்டு வாங்க'' என்ற அந்தப் பெரியவர், ""வாறேம்மா'' என்று கும்பிட்டபடி போனார்.
 அந்தப் பெரியவர் சொன்னதை எல்லாம் உள்ளே கேட்டுக் கொண்டுதான் இருந்தார் டாக்டர் ஈஸ்வரன். அவருக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. அவரிடம் மருத்துவத்திற்கு வருபவர் யாராவது கை வைத்தியம் பார்த்தேன் என்று சொன்னால் போதும், அவருக்குக் கோபம் வந்து விடும். ""கை வைத்தியத்தையே பாக்க வேண்டியது தானே அப்புறமா ஏன் இங்கே வாறீங்க?'' என்று சத்தம் போடுவார்.
 தனக்கு வந்திருக்கும் தடிப்பு நோயைத் தன்னுடைய அலோபதி வைத்தியத்தால் குணப்படுத்த முடியவில்லை என்பது அவருக்குத் தெளிவாகப் புரிந்தது.
 உள்ளே வந்து தன்னையே பார்த்துக் கொண்டிருந்த மனைவியைப் பார்த்தார் டாக்டர் ஈஸ்வரன்.
 ""நாளைக்குக் காலையில அந்த வைத்தியரைப் போய்ப் பார்க்கலாமா?'' என்று அவரது மனைவி சொன்னதும் "சரி' என்பது போல் தலையை மட்டும் அசைத்தார்.
 
 காலையில் ஐந்தரை மணிக்குக் கோவளத்திற்கு அருகில் இருந்த அந்த வைத்தியரின் குடிசையின் முன் டாக்டர் ஈஸ்வரனின் கார் போய் நின்றது.
 அதிகாலை நேரத்தில் காரைப் பார்த்ததும் வைத்தியர் சங்கரபாண்டி வெளியே வந்தார்.
 ""ஐயா என்ன விஷயம்?'' என்றபடி கைகளைக் குவித்து வணக்கம் சொன்னார்.
 ""ஒடம்பெல்லாம் தடிப்பா இருக்கு. . . அதுதான் ஊதிக்கிட்டுப் போலாம்னு வந்தோம்'' என்று டாக்டரின் மனைவி சொன்னதும் அவர்களை உட்கார வைத்து விட்டு, கடற்கரைப் பக்கமாகப் போனார் வைத்தியர்.
 ஐந்து நிமிடங்களுக்குள் கையில் கசக்கியபடி சில பச்சிலைகளைக் கொண்டுவந்தார். அதை மருந்து இடிக்கும் உரலில் போட்டு இடித்தார். இடிக்கும் போது வேறு சில மருந்துகளையும் வீட்டுக்குள்ளிருந்து கொண்டு வந்து போட்டு இடித்தார்.
 டாக்டர் ஈஸ்வரனை அங்கே இருந்த கட்டிலில் வானத்தைப் பார்த்தபடி படுக்கச் சொன்னார். இடித்து வைத்திருந்த மருந்தைத் தனது வாய்க்குள் போட்டுக் குதப்பியபடி கிழக்கே பார்த்து, கண்களை மூடியபடி நின்றார். கை எடுத்துக் கும்பிட்டார்.
 நேராக டாக்டர் படுத்திருந்த கட்டிலின் அருகில் வந்தார். குனிந்து டாக்டரின் மூக்கில் சரியாகத் தனது வாயை வைத்து ஊதினார்.
 டாக்டருக்கு முதலில் ஒரே எரிச்சலாக இருந்தது. கொஞ்ச நேரத்தில் உடல் குளிர்வது போல் இருந்தது.
 மூன்று முறை மூச்சைத் தம் பிடித்துக் கொண்டு ஊதினார். அதன் பிறகு வாயிலிருந்த அந்தப் பச்சிலைக் கலவையைத் துப்பியபடி, ""சாயங்காலம் ஆறுமணிக்கும் நாளைக்குக் காலையில ஆறு மணிக்கும் வாங்க. மூணு நாளைக்கி கருவாடு, இறைச்சி எதுவும் சாப்பிடாதீங்க'' என்றபடி உள்ளே போனார் வைத்தியர்.
 அவரிடம் நூறு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து நீட்டினார் டாக்டர் ஈஸ்வரன்.
 ""இந்த வைத்தியத்துக்குக் காசு வாங்கக் கூடாதுங்க. எங்க மாமா இதைச் செய்துகிட்டிருந்தாரு. அவருக்குப் பெறகு நான் செய்யறேன். அவரும் காசு வாங்கமாட்டாரு. நானும் காசு வாங்க மாட்டேன். கொணமாயிடும். நீங்க போய்ட்டு வாங்க'' என்றார் வைத்தியர்.
 டாக்டர் ஈஸ்வரன் தனது கையில் வைத்திருந்த நூறு ரூபாயைக் கையில் வைத்தபடி அவரையே பார்த்துக்கொண்டிருந்தார்.
 ""ரூவா வாங்கினா பலிக்காதுன்னு எங்க மாமா சொல்லியிருக்காரு. அதனால ஒண்ணும் வேண்டாம். சாயங்காலம் வாங்க'' என்ற வைத்தியர் எதையும் எதிர் பார்க்காமல் குடிசைக்குள் போனார்.
 வெளியில் நின்றபடியே, ""ரொம்ப நன்றிய்யா'' என்றார் டாக்டரின் மனைவி.
 வாசல்படி தாண்டி உள்ளே போயிருந்த அந்த வைத்தியர் திரும்பிப் பார்த்துக் கும்பிட்டார்.
 முதல் வேளை ஊதியதிலேயே தடிப்பு குறையத் தொடங்கியது. மூன்று வேளை வைத்தியரிடம் ஊதியதும் சொறி முழுவதும் நின்று விட்டது.
 இப்போது எல்லாம் தனது கிளினிக்கிற்கு வரும் நோயாளிகளிடம் கைவைத்தியம் பார்க்கவும் சொல்கிறார் டாக்டர் ஈஸ்வரன்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.