பேராசிரியர் டாக்டர் எச். தேவராஜ். படுகர் இனத்தில் பிறந்து, இன்று படித்தவர்கள் போற்றும் நிலைக்கு உயர்ந்துள்ளவர். சென்னைப் பல்கலைக் கழகத்தில் வேதியியல் துறையில் "டாக்டர்' பட்டம் பெற்றவர். இன்று பல்கலைக் கழக மானியக்குழுவின் (புதுதில்லி) துணைத் தலைவராகப் பொறுப்பில் இருப்பவர். அவரைச் சந்தித்தபோது...
உயர்கல்வி வளர்ச்சி நம் நாட்டில் சிறப்பாக அமைய, உங்கள் கருத்து என்ன?
பல்கலைக் கழகத் துணைவேந்தர்களை நல்ல ஆளுமைத்திறன் கொண்டவர்களாக நியமிக்க வேண்டும். அந்தந்த மாநில முதல்வர்களும் ஆளுநர்களும் தங்கள் நேரடிப் பார்வையில் அவர்களைப் பொறுப்பில் வைக்க வேண்டும். ஆசிரியர்களைத் தரமான தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும். சிறந்த ஆசிரியர்கள் நம் பல்கலைக் கழகங்களுக்கும் கல்லூரிகளுக்கும் கிடைத்துவிட்டால் மாணவர்களின் கல்வித்திறன் மிகச் சிறப்பாக ஒளிவிடும்.
அறிவியல் துறையில் இன்றைய மாணவர்கள் சிறந்த நிலைக்கு வர நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
எதையும் தாய்மொழியில் படித்து முதலில் தெளிய வேண்டும். நம் தமிழ்நாட்டில் மாணவர்களிடத்தில் அறிவியல் ஆர்வம் செழிக்க வேண்டும் என்றால் எளிமையான "அறிவியல் தமிழ்' பரவ வேண்டும். செம்மொழியான தமிழால் அது முடியும். முதலில் நமக்கு நல்லதொரு "அறிவியல் சொற்களஞ்சியம்' தேவை. அதை முதலில் உருவாக்க வேண்டும்.
ஒவ்வொரு பேராசிரியரும் குறைந்தது நூறு சொற்களையாவது உருவாக்க வேண்டும் என்று அரசே பணிக்க வேண்டும். இதைத் தமிழக முதல்வர் உடனடியாகச் செய்தால், அறிவியல் தமிழ் சிறப்பாக வளரும் என்பதில் ஐயமில்லை. நான் ஜெர்மனியில் சிலகாலம் இருந்தபோது, அங்கு எல்லாமே ஜெர்மன் மொழியில் கற்றுக் கொடுப்பதை நேரிலேயே கண்டேன். அந்த அளவிற்கு அவர்கள் தமது தாய்மொழியில் விஞ்ஞான கலைச் சொற்களை உருவாக்கி வைத்துள்ளார்கள்.
வெற்றியின் திசையில் பயணிக்க, நீங்கள் சொல்ல விரும்பும் கருத்துகள்...?
எந்தப் படிப்பில் ஆர்வம் இருக்கிறதோ அதில் கவனத்துடன் மாணவர்கள் ஈடுபட வேண்டும். கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி அதில் முன்னேற வேண்டும். "வாழ்ந்து காட்டுவோம்', "வெற்றி நிச்சயம்' என்ற குரல்களை ஆங்காங்கே கேட்கிறோம். என்னைக் கேட்டால், கிடைத்த சூழலில் நிகழ்காலத்தில் வாழப் பழகிக் கொண்டால் அதுவே பெரிய வெற்றி.
உலக நாடுகள் பலவற்றையும் நான் சுற்றி இருக்கிறேன். ஆனால், நம் இந்தியாவில்தான் ஆசிரியர்களைக் குருவாக வணங்குகிறோம். "குருகுலம்' என்ற அமைப்பே இங்குதான் உள்ளது. அதனால், ஆசிரியர்களின் அறிவுரைப்படி நாம் முடிவெடுக்கத் தொடங்கினாலே வெற்றிகள் எளிதாக அமையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.