முகப்பு
தினமணி கதிர்

நினைத்தாலே இனிக்கும்!

அப்பாவின் கடின உழைப்பு, எது செய்தாலும் அதை முழுமையா செய்யணும்ங்கிற எண்ணம், உண்மையும், நேர்மையும்தான் கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்து

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:42 AM
பகிர்:

நமக்கெல்லாம் "ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ்' என்றதும் அதன் "மைசூர்பா' சுவைதான் தெரியும். அதையடுத்து, ஒரு படி மேலே சென்றால், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனர் முரளியை நல்ல பண்பட்ட ஒரு தொழிலதிபராகத் தெரியும். அதையும் தாண்டி அவருக்குள் இன்னொரு குணமும் இருக்கிறது. அது நல்ல மனிதநேயம். "நாள்தோறும் நல்லது செய்வோம்' என்ற பெயரில் வெளியுலகுக்குத் தெரியாமல் ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆதரவாகப் பல சேவைகளைச் செய்து வருகிறார். உதாரணமாக, சமீபத்தில் பார்வையற்ற குழந்தைகளை அழைத்து ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் ஒரு விருந்து கொடுத்துள்ளார். இது குறித்து முரளியிடம் பேசியபோது:

""1947இல் கோயம்புத்தூரில் அப்பா சின்னதா ஆரம்பித்த ஸ்தாபனம் இது. அப்பாவின் கடின உழைப்பு, எது செய்தாலும் அதை முழுமையா செய்யணும்ங்கிற எண்ணம், உண்மையும், நேர்மையும்தான் கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்து இன்று இவ்வளவு  பிரம்மாண்டமான ஸ்தாபனமாக இருக்கிறது. அப்பாவைப் பொருத்தவரை அவருடைய உலகமே அந்தக் கடைதான். அவர் கடையை நேசிச்சாருன்னு சொல்வதைவிட சுவாசிச்சாருன்னுதான் சொல்லணும். இதைதான் செய்யணும், அதை இப்படிதான் செய்யணுங்கிற முறை அவரிடம் இருந்தது. எதுவும் இயல்பா நடக்கணும் என்றும் நினைத்தார். எதையும் கட்டாயப்படுத்தி செய்ய முடியாது என்றும் சொல்வார்.  அதேசமயம், சத்தம் போடுகிற இடத்தில் சத்தம் போட்டு, தட்டிக் கொடுக்கிற இடத்தில் தட்டிக் கொடுப்பதுதான் அப்பாவின் தொழில் ரகசியம். 

ஒரு கட்டத்தில் அவருடைய மொழி, பாடிலாங்வேஜ், அவருக்குக் கிடைத்த மதிப்பு என எல்லாமும் எனக்குப் பிடித்திருந்தது. பொதுவா ஒவ்வொரு குழந்தைக்கும் அவங்க அப்பாதான் முதல் ஹீரோன்னு சொல்லுவாங்க. எனக்கும்  எங்க அப்பாதான் ஹீரோ. சவால்களோ, பிரச்னைகளோ வந்தா, அதை நினைத்துக் கலங்கக் கூடாது. அதைத் தூக்கிப்போட்டுவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய்டணும்னு சொல்வார். விவரம் தெரிந்த நாளில் இருந்து இதைப் பார்த்து பார்த்து வளர்ந்ததால எனக்கும் அண்ணனுக்கும் அதை ஈசியா கிரகிச்சுக்க முடிந்தது. அப்பா எப்பவும் எங்களுக்கு அட்வைஸரா இருந்ததில்ல. எக்ஸôம்பிளாதான் இருந்தார். பள்ளி முடிந்த பிறகு நாங்களாகவே ஹோட்டலுக்குச் சென்று அப்பாவுக்கு ஒத்தாசையாக இருப்போம். டேபிள் சுத்தம் செய்வதில் இருந்து தோசை போடறது, காபி போடறதுன்னு எல்லா வேலையும் செய்வேன். நல்லா பில்டர் காபி போட்டு நுரையடிச்சு, நுரையாலேயே "நஓஆ' (ஸ்ரீகிருஷ்ணா பவன்)னு எழுதுவேன். அதுல எனக்கு ஒரு பெருமை.

 அப்பா மேல எனக்கு இருந்த நம்பிக்கை, அண்ணன் கிருஷ்ணன் மேல எனக்கு இருந்த நம்பிக்கை அவர்கள் இருவருக்கும் என் மீது இருந்த நம்பிக்கை, எங்கள் மீது அம்மாவுக்கும், என் அக்கா புஷ்பா, ஜெயா இருவருக்கும் இருந்த நம்பிக்கை. உறவு இப்படிதான் இருக்கணும்ங்கிற எண்ணத்தை எனக்குள் விதைத்தது.  இந்த நம்பிக்கை எனக்கு எல்லாவற்றையும் இயல்பாக எடுத்துக்கொள்கிற தன்மையைக் கொடுத்தது. "பொறுத்தார் பூமி ஆள்வார்னு' சின்ன வயசுல அம்மா அடிக்கடி சொல்வதைக்  கேட்டிருக்கிறேன். அதனால் எனக்குள் பகைங்கிறதே இல்லாமல் போனது.  அடுத்து முக்கியமானது நட்பு, நண்பர்கள் வரும் வயதில்தான் நாம் வாழ்க்கையைத் தீர்மானிக்கிற பக்குவத்திற்கு வருகிறோம். நல்ல நண்பர்கள் அமையவில்லை என்றால் வாழ்க்கை திசை மாறிவிடும். அந்த வகையிலும் நான் கொடுத்து வச்சிருக்கேன்.

 பின்னர் வியாபாரத்தை அண்ணன் கவனிக்க ஆரம்பித்தார். அப்பாவிடம் இருந்த எல்லா திறமைகளும் அண்ணனிடமும் இருந்தது. அண்ணனின் அரவணைப்பும், அண்ணி உஷாவின் பாசமும் அவர்கள் மீது கூடுதல் மரியாதையை உருவாக்கிற்று. அண்ணன் என்னைவிட ஆறு வயது மூத்தவர். அப்பாவை அப்படியே ஃபாலோ பண்ணினார். அது எனக்கு நாமும் இப்படிதான் இருக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தியது. சின்ன வயதில் அடிக்கடி ராமாயணம் கேட்பேன். அதில் வரும் லட்சுமணன் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் அண்ணனை ராமனாகவும், என்னை லட்சுமணனாகவும் நினைத்தேன். இதற்கு இன்னொரு காரணம், என் சித்தப்பா. அவருக்கும் அப்பாவுக்கும் இடையில் இருந்த பாசம் அத்தகையது. சித்தப்பா, சித்தி, அத்தை, பாட்டின்னு எல்லாரும் கூட்டு குடும்பமா வாழ்ந்தோம். கிட்டத்தட்ட 25 பேர் ஒரே வீட்டில் ஒண்ணா இருந்தோம். அந்த சந்தோஷம் ஒரு மகிழ்ச்சியான கொண்டாட்டம்.

 பிறகு 27 வயதில் திருமணம். அம்மா பார்த்து இந்தப் பொண்ணை கல்யாணம் செஞ்சுக்கோ } உன் வாழ்க்கை நல்லா இருக்கும்னு சொன்னாங்க. மறுபேச்சில்லாம சரின்னு சொன்னேன்.

என் மனைவி பேரு கலா. அம்மா எப்படி என்னைக் கவனிச்சுக்கிட்டாங்களோ அப்படி என்னைக் கவனிச்சுக்குறாங்க. அடுத்து என் குழந்தைகள் ஸ்ருதி, ஸ்நேகா அவர்கள் எனக்கு கிடைத்த வரம். அவங்க தன்னோட அம்மாவைப்போலவே இயல்பா வளர்ந்திட்டாங்க.

 என் பெரிய மகளுக்கு 3 வயதாகும்போது ஒருநாள் அப்பாகிட்ட சென்னைக்குப் போய் தொழில் பண்றேன்னு சொன்னேன். அம்மா ரொம்ப பயந்தாங்க. அப்பா உன்னால் முடியுமான்னு கேட்டார். முடியும்னு சொன்னேன். சுத்தமா இருன்னு சொன்னார். மறுபடியும் கேட்டார் தமிழ் தெரியுமில்ல, சொன்னா புரியுமில்ல, சுத்தமா இருக்கணும்னு சொன்னார். தைரியலஷ்மியைக் கூட்டிகிட்டுப் போ, அஷ்டலஷ்மியும் உன் பின்னால் வருவாங்கன்னு சொன்னார்.

1996ல சென்னைக்கு வந்தேன். தி.நகர் வந்திறங்கும்போது எதுவுமே தெரியாது. எல்லாமே புதுசா இருந்தது. ஒரு வீடு வாடகைக்குப் பிடித்தேன். சாமான் எல்லாம் அதில் கொண்டு வச்சிட்டு பாண்டிபஜார்ல வந்து கடையைப் பிடித்தேன். முதல் நாள் காலை ஏழு மணிக்கு "மைசூர்பா' போட ஆரம்பித்தேன். இரவு பத்து மணிவரை "க்யூ' இருந்தது. சென்னை மக்கள்  அப்படியே என்னை அணைச்சுக்கிட்டாங்க. ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாம இந்த மக்கள் என்னை ஏற்றுக்கொள்ளும்போது நான் ஏன் இவர்களை ஏற்றுக்கொள்ளக்கூடாதுன்னு தோணுச்சு.

ஒரு வருடம் கழித்து அப்பாவைப் போய் பார்த்தேன். அப்பா நல்லா இருக்கியான்னு கேட்டார். ரொம்ப நல்லா இருக்கேன்னு சொன்னேன். அப்படியாப்பானு ரொம்ப சந்தோஷப்பட்டார். ஒரு வார்த்தை சொன்னார். ""உன்னை சந்தோஷமா வெச்சுகிட்ட அந்த மக்களுக்கு நீ என்ன திருப்பி செய்யப்போறேன்னு''  கேட்டார். அப்பா திடீர்னு இப்படி கேட்டதும் ஒண்ணும் புரியல. திகைத்தேன். அப்பா மீண்டும் சொன்னார். ""பணமோ, பொருளோ அவங்க எதிர்பார்க்க மாட்டாங்க. இல்லாதவங்களுக்குச் சேவை செய்யுன்னு'' சொன்னார். இப்போ என் வளர்ச்சியைப் பார்க்க அப்பா இல்லை. ஆனால் அவர் சொன்ன வார்த்தை மட்டும் என் காதுகளில் எப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அதனால என் திருப்திக்காக முடிஞ்ச உதவிகளை இயலாதவர்களுக்குச் செய்துகிட்டு இருக்கேன். இந்த அனைத்திற்கும் எனக்கு பக்க பலமாக இருப்பவர்கள் என் மைத்துனர்கள் நட்ராஜ், சந்திரன் இருவரும்.

ஒவ்வொரு டிரண்ட் மாறும்போதும் என்ன புதுமை கொண்டுவரலாம்னு யோசிச்சுக்கிட்டே இருப்பேன். இப்போ சமீபத்தில்தான் கிருஷ்ணஜெயந்தி முடிந்தது. இப்போ இருக்கிற அவசர உலகத்தில் யாருக்கும் பட்சணங்கள் செய்வதற்கு நேரமில்லை. அதனால் நாங்க யோசிச்சோம். முறுக்கு, சீடை, நாவல் பழம்னு நெய்வேத்தியத்திற்குத் தேவையான அத்தனையும் கம்பிளீட்டா ஒரு பேக்கேஜா கொடுத்தோம். நல்ல வரவேற்பு கிடைத்தது. அதையடுத்து விநாயகர் சதுர்த்திக்கு விநாயகர் சிலை முதற்கொண்டு பட்சணங்கள் வரை அனைத்தும் ஒரு பேக்கேஜா வைத்தோம். வீட்டைச் சுத்தம் செய்துவிட்டு வந்து பிள்ளையாரை வாங்கிட்டுப் போய் அப்படியே வெச்சுப் படைக்கலாம். அதற்கும் வரவேற்பு இருந்தது. அதுபோல தீபாவளி நேரத்துல எங்ககிட்ட ஸ்வீட்ஸ் கிடைக்காது சீக்கிரம் தீர்ந்திடும்னு நினைப்பாங்க. அதுக்காக 48 மணி நேரம் ஸ்வீட்ஸ் கிடைக்க ஏற்பாடு செய்கிறோம்.

இப்போ புதுசா "போளிசா'ன்னு அறிமுகப்படுத்தியிருக்கிறோம். நம்ம வீட்டில் செய்கிற போளி போன்றது. அதுவே கொஞ்சம் மார்டனா கொடுக்கிறோம். நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பித்திருக்கிறது.

பொதுவா நான் விற்கிற எல்லா பண்டங்களுமே நம்ம பாரம்பரியத்துல உள்ளதுதான் அந்த விஷயத்துல எப்பவும் கவனமாக இருக்கிறேன்''என்றார் முரளி.

படங்கள்: ஏ.எஸ்.கணேஷ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.