இலவச ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். வகுப்புகள்!
சென்னை, வடபழனியில் 2009-இல் இருந்து கடந்த 6 ஆண்டுகளாக "அறிஞர் அண்ணா பொதுநல மன்றம்' இயங்கி வருகிறது.
சென்னை, வடபழனியில் 2009-இல் இருந்து கடந்த 6 ஆண்டுகளாக "அறிஞர் அண்ணா பொதுநல மன்றம்' இயங்கி வருகிறது. இங்கு சிறுவர், சிறுமியர்களுக்கான பாடப் பயிற்சி அளிக்கும் மாலை வகுப்புகளும், பெண்களுக்கு உதவும் கைத்தொழில் பயிற்சி வகுப்புகளும் மேலும் பல நலத்திட்ட உதவிகளும் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றன. இதில் மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால் இங்கு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பயிற்சி வகுப்புகளும் நடைபெறுவதுதான். இது குறித்து மன்றத்தின் பொருளாளர் சா.கணேசன் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
""எங்கள் மன்றத்தின் சார்பாக கடந்த 5 ஆண்டுகளில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை படிக்கும் சிறுவர், சிறுமியருக்கு இரவுப் பள்ளியும், கணினிப் பயிற்சி வகுப்பும், பெண்களுக்கு உதவும் வகையில் தையற் பயிற்சி, ஆடை வடிவமைப்பு பயிற்சி, தஞ்சாவூர் ஓவியப் பயிற்சி போன்ற கைத் தொழில் பயிற்சிகள் அளித்து வருகிறோம். மேலும் பெண்கள் சுய தொழில் செய்து வருமானம் ஈட்டிக் கொள்ள பத்து தையல் இயந்திரங்களும் உள்ளன. இதில் எங்களிடம் தையற் பயிற்சி பெற்றவர்களில், வீட்டில் தையற் இயந்திரம் இல்லாதவர்கள் தங்களது சொந்த முயற்சியில் ஆர்டர்கள் பிடித்து வந்து இங்கு தைத்துக் கொண்டு செல்லும் வசதியும் செய்திருக்கிறோம். கடந்த 3 ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பயிற்சி வகுப்புகள், டி.என்.பி.எஸ்.சி பயிற்சி வகுப்புகள், ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி வகுப்புகளும் செயல்படுத்தி வருகிறோம். இந்தச் சிறப்புப் பயிற்சி வகுப்புகள், வார இறுதி நாளான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்று வருகின்றன.
சுமார் 7,000 நூல்களுக்கு மேல் இடம் பெற்றுள்ள நூலகமும் இங்கு உண்டு. அதுபோன்று வாசகர்களின் வசதிக்காக காலை, மாலை வெளிவரும் தினசரி நாளிதழ்களும், வார இதழ்களும் வைத்திருக்கிறோம்.
இம்மன்றத்தைத் தொடங்கிய புதிதில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்களே பெரும்பாலும் வந்து கொண்டிருந்தார்கள். ஆனால் தற்போது அந்த நிலைமாறியுள்ளது. காரணம், எங்கள் மன்றத்தின் தேர்ச்சி விகிதம் 100 சதவிகிதத்தை தொட்டுவிட்டதாலும், மாணவர்கள் பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் வாங்குவதாலும் தற்போது மாணவ, மாணவியரின் எண்ணிக்கையும் கூடியுள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் எங்கள் மன்றத்தில் டி.என்.பி.எஸ்.சி. பயிற்சி பெற்றோரில் 170க்கும் மேற்பட்டோர் தேர்ச்சிபெற்று அடுத்த கட்டத்தை நோக்கிச் சென்றுள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், வெளி ஊர்களில் இருந்தும், வெளி இடங்களில் இருந்தும் இங்கு வந்து எங்கள் மன்றத்திலேயே தங்கி பயிற்சி பெற்றும் செல்கிறார்கள். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பயிற்சி வகுப்புகளுக்கு வருவோருக்கு மதிய உணவும் அளித்து வருகிறோம்.
வெள்ளிக்கிழமைகளில் தேர்ந்த மருத்துவர்களை வரவழைத்து மருத்துவ முகாமும் நடத்தி வருகிறோம். நீரிழிவு நோய் முதல் அனைத்து நோய்களுக்கான மருத்துவமும், மாதத்தின் 2வது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் "அக்குபங்சர்' மருத்துவமும் செய்யப்படுகிறது. அதுபோன்று சட்ட உதவி தேவைப்படுவோருக்கு தினமும் ஆலோசனை வழங்க வழக்கறிஞர்களும் இருக்கிறார்கள். இளைஞர்களுக்கான உடற் பயிற்சிக் கூடம் காலை, மாலை இருவேளையும் செயல்பட்டு வருகிறது. மேலும் வசதியற்ற குடும்பங்களில் இறந்தவரின் உடல் வைக்கப்படும் குளிர்சாதனப் பெட்டியும், அதனைக் கொண்டு செல்ல வாகன வசதியும் அளித்து வருகிறோம்.
மேலும் வசதியற்றவர்களுக்கு இரண்டாம் ஞாயிற்றுக்கிழமைகளில் பிறந்த நாள் விழா, திருமண விழா போன்ற சுப நிகழ்ச்சிகள் நடத்தவும் இந்த மன்றத்தை அனுமதிக்கிறோம். இவை அனைத்தையும் முற்றிலும் இலவசமாகவேதான் வழங்கி வருகிறோம்.
இந்த மன்றத்தில் நடந்து வரும் பயிற்சி வகுப்புகள் அனைத்திற்கும் நன்கு தேர்ச்சிப்பெற்ற ஆசிரியர், ஆசிரியைகள் இருக்கின்றனர். வெள்ளி, சனிக்கிழமைகளில் மட்டும் 700 பேருக்கும் மேல் வருகின்றனர். மற்ற வார நாள்களில் தினசரி குறைந்தது 500 பேருக்கும் மேல் வருகின்றனர். உடற்பயிற்சிக்கு வருவோர், நாளிதழ்கள் படிக்கும் வாசகர்கள், மற்ற பயிற்சிகள் என்று ஒவ்வொன்றிற்கும் முறையான வருகைப் பதிவேடும் வைத்திருக்கிறோம். இந்த நலத் திட்டங்களால் இத்தனை பேர் பயனடைகிறார்கள் என்று நினைத்தபோது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது'' என்றார் முன்னாள் மேயர் சா. கணேசன்.
படங்கள்: அண்ணாமலை.