தினமணி கதிர்

திரைக்கதிர்

தற்போது தெலுங்கில் காஜல், ஸ்ருதி போன்றவர்களுக்கு சவாலாக உள்ளார் ரகுல் பிரீத் சிங். முன்னணி இடத்தைப்

ஜி. அசோக்

தற்போது தெலுங்கில் காஜல், ஸ்ருதி போன்றவர்களுக்கு சவாலாக உள்ளார் ரகுல் பிரீத் சிங். முன்னணி இடத்தைப் பிடிக்க மகேஷ்பாபுவின் ஹிட் படங்கள் முக்கியமானது என கருதும் ரகுல், அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தார். பல தருணங்களில் இந்த வாய்ப்பு அவருக்கு கை கூடவில்லை. "பிரமோத்சவம்' படத்தில் நடிக்கும்   ரகுலுக்கு 2-வது ஹீரோயினாக சமந்தா நடிக்கிறார்.

இளம் ஹீரோயின்கள் பலருக்கு அஜித், விஜய், விக்ரம், சூர்யா போன்றவர்களுடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்பது விருப்பமாக உள்ளது. இது குறித்த தங்களது கருத்துக்களை வெளிப்படையாகவே அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.  குறிப்பாக அஜித்துடன் ஜோடி சேர விரும்பும் ஹீரோயின்கள் அதிகம். தற்போது "சிறுத்தை' சிவா இயக்கும் படத்தில் நடிக்கிறார் அஜித். ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இந்தப் படத்தில் அஜித்தின் தங்கையாக வரும் கதாபாத்திரம் முக்கிய இடம் பெறுவதால் பிரபலமான ஒரு நடிகையை ஒப்பந்தம் செய்யலாம் என எண்ணினார் இயக்குநர். அஜித்துடன் நடிக்கிறீர்களா? என்றதும் பல இளம் ஹீரோயின்கள் நான் தயார் என முன்னுக்கு வந்தனர். ஆனால், அது தங்கை கதாபாத்திரம் என்றதும் அதிலிருந்து "ஜகா' வாங்கி விட்டனர். பிந்து மாதவி, ஸ்ரீதிவ்யா, நித்யாமேனன் ஆகியோரை அணுகினார்கள். அவர்களும் பிடிக்கொடுக்காமல் நழுவிக் கொண்டனர். அஜித்துடன் நடிக்க அவ்வப்போது விருப்பம் தெரிவித்து வருபவர் லட்சுமிமேனன். இப்போது அவரை அணுகியிருக்கிறார் இயக்குநர். கதையை கேட்ட லட்சுமிமேனன் தீவிரமாக யோசிப்பதாகத் தெரிகிறது. லட்சுமிமேனன் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது அஜித் படக்குழு.

பாலிவுட்டில் முன்னணி இடத்தில் இருந்த போதே, அஜய்தேவ்கானை காதல் திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து ஒதுங்கினார் கஜோல். அதன் பின்னர் பல வாய்ப்புகள் வந்த பின்பும் நடிப்பதைத் தவிர்த்தார். தொடர்ந்து வரும் வாய்ப்புகளில் என் மனதை எதுவும் கவரவில்லை என அதற்கு காரணங்களைச் சொல்லி வந்தார்.

இந்நிலையில் தற்போது ஷாரூக்கான் நடிக்கும் "தில்வாலே' என்ற ஹிந்தி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இதற்கான சம்பளமாக கஜோலுக்கு ரூ.5 கோடி பேசப்பட்டுள்ளது. திருமணத்துக்குப் பின்பு நடிக்க வரும் நடிகைகள் யாரும் இந்தளவுக்கு சம்பளம் பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரோஹித் ஷெட்டி இயக்கும் இப்படத்தில் வருண் தவான், கிருத்தி சனோன் ஆகியோரும் நடிக்கின்றனர். திருமணத்துக்குப் பின்பு "இங்கிலீஷ் விங்கிலிஷ்' படத்தின் மூலம் நடிக்க வந்த ஸ்ரீதேவிக்கு ரூ.1.50 கோடிதான் சம்பளம் தரப்பட்டது. அது போல் மாதுரி தீட்சித் ரூ.2 கோடி சம்பளம் பெற்றார். மலையாளத்தில் மஞ்சுவாரியாருக்கு கோடிகளில் சம்பளம் இல்லை. சமீபத்தில் தமிழில் நடித்து வரும் ஜோதிகாவின் சம்பளமும் லட்சங்களில்தான் பேசப்பட்டுள்ளது. அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு சிறிது இடைவெளிக்குப் பின் சினிமாவுக்கு திரும்பியுள்ள ஐஸ்வர்யாராய்க்கு இணையாக கஜோலுக்கு சம்பளம் தரப்பட்டுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தன் தேர்ந்த நடிப்பால் ஹிந்தி, தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றவர் நந்திதாதாஸ். பிடித்திருந்தால் எவ்வித கதாபாத்திரத்தையும் தயக்கமில்லாமல் ஏற்று நடிப்பார். சமீப காலமாக நடிப்பதை தவிர்த்து வரும் நந்திதா, படம் இயக்குவதில் அதீத ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த 2008-ஆம் ஆண்டு "ஃபிராக்' என்ற படத்தை ஹிந்தி, உருது, குஜராத்தி ஆகிய மொழிகளில் இயக்கினார். தற்போது ஆஸ்திரேலியா படமொன்றை இயக்கி வருகிறார். இது பற்றி சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டியில்... ""இயக்குநர் ஆர்வம்தான் என்னிடத்தில் இப்போது அதிகமாக உள்ளது. "சாத் ஹசன் மான்டோ' என்ற படத்தை இயக்கி வருகிறேன். அதே சமயத்தில் ஆஸ்திரேலியா பாரம்பரிய மக்களுடன் இந்திய பெண் ஒருவர் வாழும் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகும் படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தது. ஹாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் நிறைய வருகின்றன. இந்திய பெண்களை பற்றி அவர்கள் யோசிக்கும் நிகழ்வுகள் எல்லாம் ஒரே மாதிரியாக உள்ளன. அதை மாற்றிக் காட்டவே அந்தப் படங்களில் நடிக்கவில்லை. தற்போது இயக்குவது மட்டுமே என் வேலை. நடிப்பது பற்றி யோசிக்கவில்லை'' என தெரிவித்துள்ளார் நந்திதாதாஸ்.

வெளிவருவதற்கு முன்பே பல்வேறு அடையாளங்களை பெற்றுள்ளது "காக்கா முட்டை.' அறிமுக இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், இரண்டு சிறுவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தியது. கடந்த 2014-ம் ஆண்டு டொராண்டோ சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிட தேர்வானது. அதைத் தொடர்ந்து இரண்டு தேசிய விருதுகளையும் பெற்றுள்ளது. இந்நிலையில், இந்த படம் தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் 3 விருதுகளை வாங்கியுள்ளது. சிறந்த திரைப்படத்திற்கான விருது, பார்வையாளர்களின் தேர்வு, சிறந்த நடிகர்களுக்கான கிராண்ட் ஜூரி விருது என இந்த மூன்று விருதுகளையும் "காக்கா முட்டை' படம் வென்றுள்ளது. இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும், வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியும் இணைந்து தயாரித்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தமிழகம் முழுவதும் விரைவில் வெளியிட உள்ளது.

ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் விஜய் - மோகன்லால் நடித்து வெளிவந்த "ஜில்லா' டோலிவுட்டில் ரீமேக் செய்யப்படுவதாக செய்திகள் வெளியாயின. இதில் நடிப்பவர்கள் குறித்த பல்வேறு செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தன. வெங்கடேஷ் - ரவிதேஜா அல்லது வெங்கடேஷ் - ராணா நடிப்பார்கள் என கூறப்பட்டது. இதற்கிடையில் மோகன்லால் வேடத்தில் என்.டி.பாலகிருஷ்ணன் நடிக்க விரும்புவதாகக் கூறப்பட்டது. இதில் எதுவும் இப்போது நடக்கவில்லை. தற்போது ரீமேக் செய்யும் முடிவைக் கைவிட்டு தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக பிரமானந்தம் உள்ளிட்டோரின் காமெடி காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே தமிழில் நடித்திருக்கும் காஜல், பிரதீப்ராவத், சம்பத் ராஜ் போன்றவர்கள் டோலிவுட் ரசிகர்களுக்கு தெரிந்த முகம் என்பதால் டப்பிங் செய்வதற்கு ஏற்ற படம் எனக் கருதுகின்றனர். இதனால் இதுவரை நடந்த படப்பிடிப்பை கைவிட முடிவு செய்துள்ளனர். படத்திற்கான டைட்டில் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

இந்நிலையில் விஜய்யின் "கத்தி' படத்தில் ஜூனியர் என்.டி.ஆர். நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT