தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: எண்ணெய் மருந்துகளால் ஏற்படும் பயன்கள்!

நான்கு வகையான எண்ணெய் சிகிச்சைமுறைகளால் உடல் உட்புற நரம்புகளை வலுப்படுத்தவும், நரம்புகளில் சேர்ந்துள்ள வாயுவினுடைய சீற்றத்தை அகற்றி அதன்

எஸ். சுவாமிநாதன்

எனக்கு வயது 67. நான் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக ceragem என்ற மின்சாரத்தூண்டுதல் சிகிச்சையைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன். இவ்வகை Stimulation சிகிச்சையைத் தொடர்ந்து மேற்கொள்வது நரம்புத் தளர்ச்சி நோயை உண்டாக்கும் என்று சொல்கிறார்கள். உடல் வலி நீங்க இச்சிகிச்சையை தினமும் அரைமணிநேரம் செய்து கொள்கிறேன். இதற்கு மாற்றாக ஆயுர்வேத எண்ணெய் சிகிச்சை பலன் தருமா?

-எஸ்.பாலாம்பாள், விருகம்பாக்கம் - சென்னை.

நான்கு வகையான எண்ணெய் சிகிச்சைமுறைகளால் உடல் உட்புற நரம்புகளை வலுப்படுத்தவும், நரம்புகளில் சேர்ந்துள்ள வாயுவினுடைய சீற்றத்தை அகற்றி அதன் மூலமாக ஒரு வலி நிவாரணியாகவும் பயனடையத்தக்க சிகிச்சைமுறைகளை அஷ்டாங்கஹ்ருதயம் எனும் ஆயுர்வேதநூல் எடுத்துக் கூறுகிறது. அவை -

1. அப்யங்கம் - தலையில் எண்ணெய் தேய்த்துக் கொள்வது

2. ஸேகம்  - தாரையாக தலையில் எண்ணெய்யை ஊற்றுவது

3. பிசு  - தலையில் எண்ணெய்யை ஊறவிடுவது

4. சிரோவஸ்தி - தலையில் தொப்பி போன்று அமைத்து அதனுள்ளே எண்ணெய்யை நிறைய ஊற்றி நிறுத்திவைப்பது.

மேற்குறிப்பிட்ட இந்த நான்கு சிகிச்சைமுறைகளும் படிப்படியான அளவில் தரத்தில் உயர்ந்தவை. தலையில் எண்ணெய் தேய்ப்பது என்பது மூளையில் உள்ள நரம்புகளை மட்டும் வலுப்படுத்தாமல் அதனுடைய வீரியமானது முதுகுத் தண்டுவடப்பகுதியின் உள்ளே அமைந்துள்ள  Cerebro Spinal Fluid  எனப்படும் மூளை முதுகுத்தண்டு வட நீர் பகுதிக்கும் வேண்டிய அளவு வலுவைக் கூட்டுவதால் அதன் வழியாக தண்டு வடநரம்புகளும் ஊட்டமடைந்து உடல்வலியை நன்கு குறைத்துவிடுகிறது. இதற்காகவே பிரத்யேகமான முறையில் ஒரு சில ஆயுர்வேத மூலிகைத் தைலங்கள் தயாரிக்கப்படுகின்றன. பலாகுடூச்யாதி, க்ஷீரபலா, கார்ப்பாஸாஸ்த்யாதி, மஞ்சிஷ்டாதி, அம்ருதாதி போன்ற பெயர்களில் வெளிவரக்கூடிய அம்மூலிகைத் தைலங்களில் தங்களுக்கு எது நன்றாக உடலுக்கு ஒத்துக் கொள்ளும் என்பதை ஆயுர்வேத மருத்துவரின் மூலமாக அறிந்து தலைக்குப் பயன்படுத்துவதால் நீடித்த பலனை நீங்கள் நிறைவாகப் பெறலாம்.

எண்ணெய் சிகிச்சை செய்து கொண்ட பிறகு நீர்க்கோர்வை ஏற்படாதிருக்க ராஸ்னாதி சூரணம், ஏலாதி சூரணம் போன்றவற்றில் ஒன்றை உச்சந்தலையில் தேய்த்துக் கொள்வதின் மூலமாக நீர்க்கோர்வையை தடுப்பது மட்டுமின்றி உடல் நரம்புவலிகளையும் இந்த சூரண மருந்துகள் நன்கு குணப்படுத்தக்கூடியவை. எண்ணெய் சிகிச்சை செய்து கொண்ட தினங்களில் வாயுவின் சீற்றத்தை ஏற்படுத்தும் பருப்புவகைகள், கிழங்குவகைகள், காரம், கசப்பு மற்றும் துவர்ப்புச் சுவை கொண்ட உணவுப் பண்டங்களை ஏற்பதைத் தவிர்க்கவேண்டும். அன்றைய தினம் மிளகு, சீரகம், பூண்டு ஆகியவை சேர்த்துத் தயாரிக்கப்பட்ட சூடான ரஸம், புழுங்கலரிசி சாதத்துடன் கலந்து கருவேப்பிலைத் துவையலுடன் சாப்பிடுவது மிகவும் நலம் தரும்.

நீங்கள் குறிப்பிடும் Ceragem சிகிச்சை ஒரு நரம்பு ஊக்கியாக செயல்பட்டாலும் அதனை அதிகமான அளவில் செய்து கொள்வதைத் தவிர்த்தல் நலம்.

நம்முடைய பாரம்பரிய சிகிச்சைமுறைகளாகிய எண்ணெய் தேய்ப்புமுறையானது தசைகளின் இறுக்கத்தைத் தளர்த்தித் தோலுக்கும், தசைக்கும் மென்மையை அளிக்கிறது. உடலிலுள்ள குழாய்களில் கபப்பூச்சு மிகுந்து அடைப்பு ஏற்படாமலும், வாயுவால் இறுக்கம் அதிகமாகி குழாய்கள் வழியே செல்பவைத் தடைபடாமலும், கபத்தையும் வாயுவையும் கட்டுப்படுத்தி உடலுக்கு இதமாக அவற்றை அமைக்கிறது. உள்ளே உள்ள பலவகைப்பட்டத் திசுக்களுக்கும் தேய்வையிட்டு நிரப்பத் தக்கச் சத்துக்களை இடைவிடாமல் அளிக்கும்படி குழாய்களில் இரத்தம் முதலானவற்றின் ஓட்டத்தைச் சீர்படுத்தியும், உடலில் சேர வேண்டியவற்றைச் சேர்த்தும் உதவுகின்றது. தோலின் அழுக்கையும், வறட்சியையும் நீக்கி மென்மை, வழவழப்பு, பளபளப்பு, நிறச்சிறப்பு இவற்றை அளிக்கின்றது. பொதுவாக உடல் வலுவை அதிகப்படுத்துகின்றது.

உடலில் தேய்ப்பதற்கான தான்வந்திரம், நாராயணம், பிண்டதைலம், கற்பூராதி, ஸஹசராதி, முரிவெண்ணெய், கொட்டம்சுக்காதி, கார்ப்பாஸாஸ்த்யாதி போன்ற தரமான எண்ணெய்களின் பயன்பாட்டினால் எண்ணற்ற நரம்பு உபாதைகளை நம்மால் நன்கு நீக்கிக் கொள்ள முடியும். உட்புற நரம்பு ஊக்கிகளாகிய தசமூலம், இந்துகாந்தம், விதார்யாதி, சுகுமாரம், தான்வந்திரம் போன்ற கஷாய மருந்துகளையும், உள்ளுக்குச் சாப்பிட உட்புறவழியாக நரம்புகளை நாம் வலுப்படுத்திக் கொள்ளலாம். எண்ணெய்த் தேய்ப்பும் இச்சிகிச்சையில் வெளிப்புறமாகச் சேர்ப்பதால் உள்ளும், புறமும் இவையனைத்தும் திறம்பட வேலை செய்து உங்களை மாற்றுச் சிகிச்சைமுறைகளிலிருந்து விடுபட்டு நல்லதோர் ஆரோக்கியத்தை நிரந்தரமாகப் பெறலாம்.

(தொடரும்)

ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,

நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)

செல் : 94444 41771

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT