முகப்பு
தினமணி கதிர்

மாற்றுத்திறனாளிகளுக்கான மலிவு விலை ஸ்கூட்டர்!

சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருகிறார்  நைதுருவன். இவர் மஸ்குலர் டைஸ்ட்ரோபி (Muscular Dystrophy) என்ற

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:12 AM
பகிர்:

சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருகிறார்  நைதுருவன். இவர் மஸ்குலர் டைஸ்ட்ரோபி (Muscular Dystrophy) என்ற குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி.  மஸ்குலர் டைஸ்ட்ரோபி  என்பது மெல்ல மெல்ல கால்களை வலுவிழக்கச் செய்து நடமாட முடியாமல் செய்துவிடும். இது எந்த வயதில் முற்றிலும் நடமாட்டத்தை நிறுத்தும் என்பதும் தெரியாத ஒன்று.  அவரது 20வது வயதில் சுத்தமாக கால்கள் செயலிழக்க, நடக்கமுடியாத நிலை ஏற்பட்டது.  இதில் வருத்தமான விஷயம் என்னவென்றால், அவரது தந்தை ஆராவமுதனுக்கும் இந்தக் குறைபாடு இருந்ததுதான். இவர்கள் தங்களது உபயோகத்துக்காக ஸ்கூட்டர் ஒன்றையும்  வீட்டில் மாடிப்படிகளில் ஏறி இறங்க லிப்ட், கட்டிலில் இருந்து தூக்கி விட ஒரு எலக்ட்ரிக் பேண்டையும் தயாரித்திருப்பதாக கேள்விப்பட்டு சந்தித்தோம்,இவர்களது தயாரிப்புகள்  ஆச்சரியப்படுத்தினாலும் நம்மை கவர்ந்தது மினி ஸ்கூட்டர்தான். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் தன்னைப் போல் நடக்க முடியாதவர்களுக்காக இந்த வண்டியைத் தயார் செய்து மார்க்கெட்டில் விடவேண்டும் என்பதே நைதுருவனின் லட்சியம். இது குறித்து அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

""சிறுவயதில் பாதையில் நடக்கும்போது சிறு கற்கள் தடுக்கினாலும் விழுந்துவிடுவேன். ஒருமுறை பலமாக விழுந்துவிட, அதன்பிறகு மெல்ல மெல்ல கால்கள் வளைந்துபோக ஆரம்பித்துவிட்டன. இதன் காரணமாக அறுவைச் சிகிச்சை செய்தார்கள்.  அதுவரை நன்றாக நடந்து கொண்டிருந்த எனக்கு அதன்பிறகு கால்களின் அசைவுகளில் மேலும் தடை ஏற்பட்டு, ஏதாவது பிடிமானத்துடன்தான் நடக்க முடிந்தது. பி.காம். முடித்ததும் வெளிநாடு சென்று படிக்க வேண்டும் என்று நினைத்தேன். அது நடக்கவில்லை. காரணம், அதுவரை ஓரளவு நடந்து கொண்டிருந்த அப்பா கிழே விழுந்ததில் சுத்தமாக நடமாட முடியாமல் சக்கர நாற்காலிக்கு மாறினார்.

இந்நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நானும் கீழே விழுந்ததில் முற்றிலும் நடக்க முடியாமல் போனது.  அப்பாவுக்கு 60 வயதில் நடக்க முடியாமல் ஆனது. எனக்கோ 20 வயதிலேயே இயலாமை வந்துவிட்டது. சிறு சிறு வேலைகளைக் கூட மற்றவரின் உதவி இல்லாமல் செய்ய முடியாது. இந்நிலையில் உடல்வேறு சற்று பருத்துப்போனதால் என்னால் வீல் சேரிலும் உட்கார முடியாத நிலை. இதனால் மாற்றுதிறனாளிகள் உபயோகப்படுத்தும் மோட்டார் வண்டியை வாங்க முயற்சி செய்தோம்.

ஆனால் அதன் விலை ரூ.80,000 முதல் ரூ.2 லட்சம் வரை இருந்தது. அவ்வளவு விலை கொடுத்து எங்களால் வாங்க முடியவில்லை. இதற்கிடையில் அப்பா என்ஜினீயர் என்பதால் அவருக்காக  பேட்டரியில் இயங்கும் சிறிய வடிவிலான ஒரு வண்டியைத் தயார் செய்து ஓட்டிக் கொண்டிருந்தார். அதற்கு ஒரு ஸ்பேரும் வைத்திருந்தார். அதனை நான் எடுத்துக் கொண்டேன்.

இவ்வகையான போராட்டத்துக்கிடையில் எம்.பி.ஏ முடித்துவிட்டு, அப்பா நடத்தி வந்த "மார்க்ஸ்' என்ற இ.சி.ஜி.  மிஷின் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டே  வேறு நிறுவனங்களுக்கும் வேலைதேடிச் சென்றேன். அனைத்து இடங்களிலும் நிராகரிக்கப்பட்டேன்.  இதனால் சோர்ந்து போன நேரத்தில்தான் திடீரென்று ஓர் எண்ணம் வந்தது. என்னைப் போல் நடக்க முடியாதவர்களுக்கு இந்த வண்டி மிகவும் உபயோகமாக இருக்குமே. இதையே ஏன்? ஒரு தொழிலாக எடுத்துச் செய்யக்கூடாது

என்று. அதுவரை நாங்கள் வீட்டிற்குள்ளேயே ஓடும்படியான மினி ஸ்கூட்டரைத்தான் தயார் செய்து வைத்திருந்தோம். அதன்பிறகு சாலையில் ஓட்டுவதற்கான வண்டியைத் தயார் செய்தோம். அதில் எங்களுக்கு வெற்றியும் கிடைத்தது.  இந்த வண்டியின் மூலம் 6 முதல் 7 கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய முடியும். இது கார், ஸ்கூட்டர்களில் உபயோகப்படுத்தும் பேட்டரியின் மூலம் தயார் செய்தது.  இதற்கு பெட்ரோல் தேவையில்லை. பேட்டரியை எட்டு மணிநேரம் போன் சார்ஜ் செய்வது போல் சார்ஜ் செய்தால்

போதும். இதற்கு ரூ.20,000 வரைதான் செலவு ஆகிறது.  இந்த வண்டியை மால்ஸ், ரிசார்ட், கோவில்கள் என வீல் சேர் எங்கெல்லாம் உபயோகப்படுத்த முடியுமோ அங்கெல்லாம் உபயோகப்படுத்தலாம். மேலும் இதனை மாற்றுத்திறனாளிகள் மட்டும் இல்லாமல் நடக்கச் சிரமப்படும் முதியவர்களும் உபயோகப்படுத்தலாம். 60 வயது வரை நன்றாக வாழ்ந்தவர்கள் திடீரென்று வீல் சேரில் அமர வேண்டும் என்றால் அவர்கள் மனதளவில் பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு இந்த ஸ்கூட்டரைக் கொடுத்து ஓட்டச் சொன்னால் இது மனதிற்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்.

இந்த வண்டியை தயாரிக்கும் நிறுவனத்திற்கு "நப்பின்னை' என பெயர் சூட்டியிருக்கிறேன். இதனை நிறையச் செய்து மார்கெட் செய்யலாம் என்று நினைத்தபோது. அதற்கான  நிதி எங்களிடம் இல்லை. வங்கியில் மாற்றுத் திறனாளிகளுக்குகென வங்கி உதவி மற்றும் என்.ஜி.ஓக்கள் மூலம் உதவி கிடைக்குமா? என முயற்சித்தேன்.

சாத்தியமாகவில்லை. தற்போது கிண்டி ஐ.ஐ.டியிலும் உதவி கோரி இருக்கிறேன்'' என்றார்.

படங்கள்: யு.கே.ரவி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.