முகப்பு
தினமணி கதிர்

இரும்பு மனிதன்!

பொதுவாக, ஒலிம்பிக் டிரையத்லானில் 1.5 கி.மீ. நீச்சல், 40 கி.மீ. சைக்கிள், 10 கி.மீ. ஓட்டம் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும்.

Updated On : 8 ஏப்ரல், 2016 at 3:31 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:29 PM

பொதுவாக, ஒலிம்பிக் டிரையத்லானில் 1.5 கி.மீ. நீச்சல், 40 கி.மீ. சைக்கிள், 10 கி.மீ. ஓட்டம் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும். இந்தத் தொலைவுகளை சற்று அதிகரித்து Iron man (இரும்பு மனிதன்) என்று அழைக்கப்படும் போட்டிகளை சென்னையில் வருடந்தோறும் ஜூலை மற்றும் டிசம்பரில் சென்னை ட்ரெக்கிங் கிளப் என்ற தன்னார்வ அமைப்பு நடத்தி வருகிறது. ஆர்வம் இருப்பவர்கள் சிறுசேரி அருகேயுள்ள ஒட்டியம்பாக்கம் குவாரியில் நடைபெறும் நீச்சல் பயிற்சியில் கலந்துகொண்டு போட்டியில் பங்கேற்கலாம். குறைந்தபட்சம் 12 வாரங்கள் தொடர்ச்சியான பயிற்சியில் இருந்தால் மட்டுமே இவ்வகையான போட்டியில் இலக்கை அடைய முடியும். வயது அதிகமாக உள்ளவர்களுக்கு சிறப்பு பயிற்சிகளும், பரிசுகளும் அளிக்கப்படுகின்றன.

கனமழை காரணமாக டிசம்பரில் நடைபெற வேண்டிய போட்டி சென்ற மார்ச் 5-ஆம் தேதி நடைபெற்றது. இதில் பங்கேற்று பதக்கம் பெற்ற ஷான் கருப்பசாமி அவரது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

சென்னை வேளச்சேரியில் வசித்து வரும் ஷான், பன்னாட்டு தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் இயக்குநராகப் பணிபுரிந்து வருகிறார்.

Advertisement

2 கி.மீ. நீச்சல், 90 கி.மீ. சைக்கிள், 21 கி.மீ. ஓட்டத்தை தொடர்ச்சியாக 10 மணி நேரத்துக்குள் முடிக்க வேண்டும் என்பதே அரை இரும்பு மனிதன் போட்டியின் இலக்கு. 10 மணி நேரம் கழித்து ஒரேயொரு விநாடி தாமதமாக இலக்கை அடைந்தாலும் பதக்கம் கிடையாது. இவ்வகையான போட்டி, பங்கேற்பாளர்களின் உடல், மன உறுதிக்கு கடும் சவாலானவை.

மாரத்தான் ஓடிக்கொண்டிருந்த ஷானுக்கு கணுக்காலில் ஏற்பட்ட உள்காயம் காரணமாக பிஸியோதெரபி சிகிச்சை எடுத்துக் கொண்டு ஓட்டப் பயிற்சியை மறந்திருந்தார். சென்னை ஒட்டியம்பாக்கம் குவாரியில் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ஒவ்வாமை காரணமாக சைனஸ் பிரச்னை வேறு. வேலை காரணமாக அமெரிக்கப் பயணம் என ஷான் முற்றிலுமாக அரை இரும்பு மனிதன் போட்டியை மறந்திருந்தார். போட்டியிலிருந்து விலகிவிடுவதென்று கிட்டத்தட்ட முடிவு செய்த சமயத்தில் சரியான காரியங்களைத் தொடங்க தக்க சமயம் வரட்டும் என்று காத்துக் கொண்டிருந்தால் நாம் தொடங்கவே போவதில்லை என்ற அவரது குழுவினரின் தாரக மந்திரம் முதலில் அவரை சைக்கிள் பயிற்சியில் ஈடுபட வைத்தது. சிறிது நாள்களுக்குப் பிறகு பிஸியோ மருத்துவரின் அனுமதியுடன் படிப்படியாக ஓட்டப் பயிற்சியிலும் ஈடுபட்டார்.

நீச்சல் உடை, கண்ணாடி, தலையுறை, சைக்கிள், ஹெல்மட், கையுறை, தண்ணீர் பாட்டில் என சுமார் 30 பொருள்களை வகையாகப் பிரித்து போட்டிக்குத் தயாரான ஷானுக்கு பந்தய தினத்தன்று ஏற்பட்ட மூக்கடைப்புக்கு சொட்டு மருந்து விட்டுக்கொண்டே குளத்துக்குச் சென்றார். அவருடன் 11 வயது முதல் 63 வயது வரையிலான போட்டியாளர்களும் களத்தில் இருந்தனர்.

2 கி.மீ. நீச்சல் இலக்கை ஒரு மணி இருபது நிமிடத்தில் நீந்திக் கடந்து மேலே ஏறும்போது ஷானுக்கு கெண்டைக்கால் பிடித்துக் கொண்டது. கெண்டைக்கால் பிடிப்புடன் 90 கி.மீ. சைக்கிள் இலக்கை எட்டிப்பிடிக்க விரைந்துள்ளார். தாழம்பூர், புதுப்பாக்கம் வழியாக கேளம்பாக்கம் வண்டலூர் சாலை என கரடுமுரடான பாதையில் நிதானமாக சைக்கிளை ஓட்டி மகாபலிபுரத்தை அடைந்து சுமார் 45 கி.மீ. கடந்திருந்தார். வந்த வழியே திரும்பி மீதமுள்ள தொலைவைக் கடக்க சைக்கிளை மிதித்தபோது வெயில் ஏறத்தொடங்கியிருந்தது.

நான்கரை மணி நேர சைக்கிள் பயணத்துக்குப் பிறகு, சைக்கிள் இலக்கை வெற்றிகரமாக எட்டிப்பிடித்த ஷான், மூன்றாவது கட்டமாக 21 கி.மீ. ஓட்டப் பந்தயத்துக்கு தயாரானார். மொத்த பந்தய நேரமான 10 மணி நேரத்தில் எஞ்சியியிருந்த 4 மணி நேரத்துக்குள் 21 கி.மீ. ஓடிக் கடக்க வேண்டும்.

சைக்கிள் போட்டி உடையிலிருந்து ஓட்டப் பந்தய உடைக்கு மாறி சுமார் 15 நிமிடம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு ஓடுவதற்குத் தயாரானபோது, இரும்பு குண்டுகளை காலில் கட்டிவிட்டதைப் போல ஷான் உணர்ந்துள்ளார். ஓடுவதாக நினைத்துக்கொண்டு, நடந்துகொண்டிருந்தாராம். 10 கி.மீ. தொலைவை ஓடிக் கடக்க இரண்டு மணி நேரம் எடுத்துக் கொண்டார். இடையிடையே ஐஸ் நீர் குளியல் எடுத்து, ஓட்டமும் நடையுமாக விரைந்த ஷானுக்கு கடைசி 5 கி.மீட்டர் தொலைவைக் கடக்க 50 நிமிடங்களே எஞ்சியிருந்தது. கிலோ மீட்டருக்கு 10 நிமிடங்கள் என்று விரைந்த ஷான், இலக்கு கண்ணில் தெரிந்ததும் தலைதெறிக்க ஓடியிருக்கிறார். இலக்கில் காத்துக்கொண்டிருந்த நேரக்காப்பாளர் மங்கலாகத் தெரிந்தார். பந்தய நேரத்துக்குள் இலக்கை எட்டிவிட்டேனா என்று நேரக்காப்பாளரிடம் மெல்லிய குரலில் மூச்சு வாங்க வினவினார். இரண்டு நிமிடங்களுக்கு முன்னதாக இலக்கை அடந்துவிட்டதாக நேரக்காப்பாளர் அறிவித்ததும் கட்டாந்தரை பஞ்சுமெத்தையாக மாற மல்லாந்து கிடந்தார். இலக்கில் காத்துக்கொண்டிருந்த அவரது மனைவி, குழந்தைகளுடன் கொண்டாடித் தீர்த்தார் அந்த அரை இரும்பு மனிதன் ஷான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.