முகப்பு
தினமணி கதிர்

சித்ரா செம பிஸி!

சித்ரா அவசரம் அவசரமாக அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தாள். அவள் புறப்படும் வரை வீடு திமிலோகப்படும். குளிப்பது, டிபன் சாப்பிடுவது, கிளம்புவது என்று எல்லாமே ஏக ரகளையினூடேதான் நடக்கும். எல்லாரும் ஒதுங்கி விடுவார்கள். அவள் கணவர்கூட வம்புக்கு வர மாட்டார்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:38 PM
பகிர்:

சித்ரா அவசரம் அவசரமாக அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தாள். அவள் புறப்படும் வரை வீடு திமிலோகப்படும். குளிப்பது, டிபன் சாப்பிடுவது, கிளம்புவது என்று எல்லாமே ஏக ரகளையினூடேதான் நடக்கும். எல்லாரும் ஒதுங்கி விடுவார்கள். அவள் கணவர்கூட வம்புக்கு வர மாட்டார்.

சித்ரா வீட்டை விட்டுக் கிளம்பிப் போய்விட்டால் வீடு புயலடித்து ஓய்ந்ததுபோல் ஆகிவிடும். எல்லாரும் பெருமூச்சு விடுவார்கள்.

சித்ரா டூவீலரில்தான் எங்கும் செல்வாள். கூட்டத்தில் இடித்துக் கொண்டு பேருந்தில் பயணிப்பது பிடிக்காமல் லோன் போட்டு வண்டியை வாங்கி விட்டாள். சித்ராவின் அலுவலகமும் அவள் கணவரின் அலுவலகமும் எதிர்எதிர் துருவம். எனவே அவரோடு வண்டியில் செல்வது முடியாமல் போனது. அதைவிட இருவரின் அலுவலக நேரமும் ஒத்துப் போகவில்லை.

ஆரம்ப நாள்களில் டூவீலரில் பின்னால் யாரையும் ஏற்றிச் செல்ல மாட்டாள். அதையே பிறகும் கடைப்பிடித்தாள்.

எப்படியோ அடித்துப் பிடித்துக்கொண்டு அலுவலகம் கிளம்பிவிட்டாலும் அலுவலகம் போய்ச் சேரும்போது அநேக நாள்கள் தாமதமாகிவிடும். டிராபிக் ஜாம், ஊர்வலங்கள், வாகன விபத்து, மாற்றுப்பாதையில் வண்டிகளைத் திருப்பியனுப்பப்பட்டது, டூவீலர் மக்கர் என காரணங்கள் வெவ்வேறாக இருக்கும். அட்டெண்டன்சுக்காக கணக்கு அதிகாரியிடம் சென்று நிற்பது ஆரம்ப நாள்களில் அவளுக்குக் கூச்சமாக இருந்தது. அதுவே அடுத்தடுத்து வாடிக்கையானதும் தெளிந்துவிட்டது. என்றாவது ஒருநாள் அதிகாரியும் முகத்தைச் சுளித்து அவருடைய அதிகாரத்தை நிலைநாட்ட முயல்வார். சித்ரா பெரிய பீடிகையோடு தாமதத்திற்கான காரணத்தை விளக்க ஆரம்பித்ததும் வருகைப் பதிவேட்டை எடுத்து அமைதியாக நீட்டி விடுவார். நமுட்டுச் சிரிப்போடு இனிஷியல் செய்துவிட்டு வந்து விடுவாள்.

சித்ராவின் நட்பு வட்டம் சற்று பெரியது. மனமகிழ் மன்றம், மகளிர் மன்றம், யூனியனின் மகளிர் பிரிவு, மாதாந்திர சீட்டு அங்கத்தினர் என எல்லாவற்றிலும் இருப்பவர்கள் அடங்கிய குழு. கேன்டீனுக்குப் போகும்போதும், மகளிர் மன்றம் போகும்போதும் பேச்சின் சப்தம் ஓங்கியிருக்கும். நடுநடுவே தெறித்து விழும் சிரிப்பு எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்துவிடும்!

""கவிதா, இந்தப் புடவையை எப்படிடி செலக்ட் செஞ்சே?''

""ஏன் சித்ரா, இதுக்கு என்ன?''

""தள்ளுபடி விற்பனையில்கூட எவளும் சீண்ட மாட்டா, நீ போய் எடுத்து வந்திருக்கே... வரிக்குதிரை உடம்பு மாதிரி ஒரு டிசைன்... நீயும் உன் ரசனையும்'' என்று சித்ரா சொன்னவுடன் கவிதாவுக்கு துக்கம் பீறிட்டுக்கொண்டு வந்துவிட்டது.

சித்ரா சமாளித்துக்கொண்டு, ""சரிடி, விடு... அடுத்த முறை போகும்போது கூப்பிடு, நானும் வர்றேன். இதைக் காம்பன்சேட் செய்யும் வகையில் சூப்பரா எடுத்து அசத்தி விடலாம்... சரியா'' என்று ஆறுதல் கூறி கவிதாவுக்கு ஐஸ் கிரீம் வாங்கித் தந்து சமாதானப்படுத்தினாள்.

அங்கு வந்த மைதிலி, ""சித்ரா மறந்துட்டியா... இன்று வெள்ளிக்கிழமை... மணி பதினொன்றரை ஆகப் போகிறது... துர்க்கைக்கு ராகு கால விளக்குப் போட வேண்டாமா?'' என்று நினைவுபடுத்திய அடுத்த வினாடி கவிதாவிடம் சொல்லிக் கொண்டு பரக்க பரக்க ஓடினாள்.

சிவன் கோயில் அலுவலகத்திற்குப் பக்கத்தில்தான். எல்லா சந்நிதிகளும் உண்டு. சித்ரா செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகு கால நேரத்தில் துர்க்கை சந்நிதியில் விளக்கேற்றி சுலோகம் படிப்பாள். எப்படியும் அரை மணி நேரத்திற்கு மேலாகவே ஓடிவிடும். ஒருமுறை கணக்கு அதிகாரி, ""அலுவலக நேரத்தில் இப்படியெல்லாம் செய்யக்கூடாது'' என்று சித்ராவிடம் கூறியதும் துர்க்கையைப் பற்றியும், விளக்கேற்றுவதின் பலன் பற்றியும், சுலோகத்தின் மகிமை பற்றியும் சுமார் முக்கால் மணி நேரம் விளக்கமளித்தாள். அதன் பின் அவர் கோயிலுக்குப் போவது பற்றிக் கேட்பதையே விட்டுவிட்டார்!

அதைவிட ஆச்சரியம், வீட்டிலிருக்கும் அவருடைய மனைவியை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகு கால நேரத்தில் எலுமிச்சை விளக்குகள் ஏற்றும்படி கேட்டுக் கொண்டதுதான்!

சித்ரா சீக்கிரமாக மதிய சாப்பாட்டை முடித்துக் கொண்டு கேரம் விளையாட வந்தாள். அடுத்த வாரம் திருவனந்தபுரத்தில் "அலுவலக சவுத்úஸான்' கேரம் மீட்டில் அவள் கலந்து கொள்ளத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாள்.

சித்ராவுக்கு இன்டோர் மற்றும் அவுட்டோர் விளையாட்டுகளிலும் ஆர்வம் அதிகம். கேரம், டேபிள் டென்னிஸ், செஸ், ஷட்டில்காக் ஆகியவற்றில் கலந்து கொண்டு ஒவ்வொரு வருடமும் தேர்வு பெற்று அலுவலகத்தின் சார்பாக வெவ்வேறு விளையாட்டில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் சென்று வருவாள். அலுவலகச் செலவிலேயே இந்தியாவை வலம் வந்து விட்டாள். அவள் செல்லாத மாநிலங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

வருட இறுதியில் செஸ் விளையாட்டிற்காக மும்பை செல்லப் போகிறாள். மும்பை செல்வது மூன்றாவது தடவை.

ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் அலுவலகத்தில் சேர்ந்த விமலா எந்த விளையாட்டுகளிலும் சோபிக்காது அலுவலக வேலைகளில் ஆழ்ந்து கிடந்தாள். வேலைக்கு வந்து சேர்ந்த சுருக்கில் அதே அலுவலகத்தில் பணிபுரிபவனைக் காதலித்து கல்யாணமும் செய்து கொண்டு விட்டாள்!

அதேநேரம் சித்ராவோ விளையாட்டுக்களில் கலக்கிக் கொண்டிருந்தாள். சீட்டில் உட்கார்ந்து அவள் வேலை செய்வது என்பது மிக மிக அபூர்வம். ஒன்று விளையாட்டுப் பயிற்சியில் இருப்பாள் அல்லது வெளி மாநிலத்தில் இருப்பாள். வருகைப் பதிவேட்டில் அதிகமான நாள்களில் "ஆபீஸ் டூட்டி' என்பதன் சுருக்கமாக "ஞஈ' என்று போட்டிருப்பார்கள்.

""கணக்கு அதிகாரி கூப்பிடுகிறார்'' என்று பியூன் சொல்லும்போது, ""புடவைக்காரர் கேன்டீனில் இருக்கிறார்... சொல்லச் சொன்னியே, அதான்'' என்று சித்ராவிடம் கிசுகிசுத்தாள் சுகந்தி.

அதிகாரியின் அறைக்குள் நுழைந்த சித்ரா அடுத்த வினாடியே வெளியில் வந்துவிட்டாள். கேன்டீனை நோக்கி விரைந்தாள்.

இருபது நிமிடங்களில் நான்கு புடவைகளை அள்ளிக் கொண்டு இருக்கைக்கு வந்தாள். எல்லாரும் சூழ்ந்து கொண்டு சித்ராவின் புடவை செலக்ஷனை சிலாகித்துப் பேசினர்.

""ஏன்டி, இவ்வளவு புடவைகளை தூக்கிக் கொண்டு வந்திருக்கே. நீயோ இந்தியா முழுவதும் சுற்றுபவள். அந்தந்த மாநிலங்களின் பாரம்பரிய புடவைகள், பிரத்யேக புடவைகள் என்று எல்லாவற்றையும் வாங்கி வந்து குவிச்சிருக்கே... இவையெல்லாம் எதுக்கடி?'' என்றாள் மீனா.

""இவையெல்லாம் என்னுடைய இரண்டு நாத்தனார்களுக்கு... அவர் எடுத்து வரச் சொன்னதால்தான் வாங்கி வந்திருக்கிறேன், போதுமா?'' என்றாள்.

மீனா அமைதியாகி விட்டாள்.

மீண்டும் கணக்கு அதிகாரி கூப்பிட்டார். சித்ரா உள்ளே செல்லும் சமயம் ஹைதராபாத் முத்துக்காரரைப் பார்த்து விட்டாள்.

"இது என்ன சோதனை... ஆபீசர் கூப்பிடும் நேரம் பார்த்து புடவைக்காரர், முத்துக்காரர் என்று வருகிறார்களே' என்று நினைத்தவாறே உள்ளே சென்றாள். பேசிவிட்டு வெளியே வரும்போது நேரமாகிவிட்டது.

முத்துக்காரர் தெலுங்கு நாயுடு. ஹைதராபாத்திலிருந்து மாதா மாதம் முத்து, பவழம், கிரிஸ்டல் என்று கொண்டு வருவார். விதவிதமான மாலைகளாகவும், வளையல்களாகவும் கொண்டு வருவார். உதிரி முத்துக்களும் வைத்திருப்பார். நிறுத்துக் கொடுப்பார். முத்து, பவழம், கிரிஸ்டல் எல்லாம் தரமானதாக இருக்கும். விலையும் மலிவாக இருக்கும். அதோடு தொகையை இரண்டு, மூன்று தவணைகளில் வாங்கிக் கொள்வார். அதனால் அவருக்கு எல்லா அரசு அலுவலகங்களிலும் நல்ல வரவேற்பு, விற்பனை.

சித்ரா தனக்கு எடுத்துக் கொள்ளவில்லை. பச்சை நிற கிரிஸ்டல் மாலையொன்றை கணக்கு அதிகாரிக்காக எடுத்துக் கொண்டாள். அது மிகவும் நன்றாக இருந்தது. வெளிச்சத்தின் ஒளி பட்டு டால் அடித்தது!

கணக்கு அதிகாரியிடம் மாலையைக் கொண்டுபோய் நீட்டினாள். பார்த்தவுடன் மிகவும் பிடித்துவிட்டது.

""சித்ரா, வெரிகுட் செலக்ஷன்... நல்ல சிவப்பாயிருக்கும் என் மனைவிக்கு இது மிகவும் நன்றாயிருக்கும். அவளுக்கும் இது நிச்சயம் பிடிக்கும்'' என்றார்.

அவர் முகத்தில் அப்படியொரு பிரகாசம்; ஜொலிப்பு!

""நாயுடுகாரு நல்ல தரமானதாகவே கொண்டு வருகிறார், சார்''

""கரெக்ட்... பார்த்தாலே தெரிகிறது... சரி, இது என்ன விலை''

சித்ரா விலையைச் சொன்னவுடன், ""வெரி வெரி சீப்'' என்று சொல்லியவாறே பர்சிலிருந்து தொகையை எடுத்துக் கொடுத்தார்.

""இரண்டு மூன்று தவணைகளாகக் கூட தரலாம், சார்''

""எதற்கு இதற்குப் போய் இன்சால்மெண்ட்... இப்பவே மொத்தமாகத் தந்து விடுகிறேன்''

""அப்போ நூறு ரூபாய் குறைத்துக் கொடுத்தால் போதும்... இந்தாருங்கள் நூறு ரூபாய், நான் பேசிக் கொள்கிறேன்''

கணக்கு அதிகாரிக்கு உச்சி குளிர்ந்தது.

""ரொம்ப தாங்க்ஸ், சித்ரா''

""சித்ரா, திங்கட்கிழமை சம்பள நாள். சீட்டு ஆக்ஷனை இன்னும் நடத்தவே இல்லையே. அப்புறம் எப்படி எல்லாரிடமும் பணம் வசூல் செய்ய முடியும்... நீ எங்கிருக்கிறாய் என்பதைக் கண்டுபிடிப்பதற்குள்ளேயே அலுப்பு வந்துவிட்டது'' என்று புலம்பினாள் சரஸ்வதி.

""சாரி சரஸ்வதி... சீட்டு மெம்பர்களை கேன்டீனுக்கு வரச் சொல்... பத்து நிமிஷத்தில் வந்து விடுகிறேன். சீட்டு ஏலத்தை நடத்தி விடலாம்... ஓகே''

திருவனந்தபுரம் புரொகிராம் பற்றி ஸ்போர்ட்ஸ் செகரட்டரி சித்ராவை அழைத்துப் பேசி முடித்தவுடன் கேன்டீனுக்கு ஓடினாள். எல்லாரும் மௌனமாக நின்றிருந்தனர். "தள்ளுச்சீட்டு தனக்குக் கிடைக்க வேண்டுமே' என்கிற கவலை அவரவர் முகத்தில் தெரிந்தது!

கடைசியில் பாப்பம்மாதான் சீட்டை எடுத்தாள். மகளைக் கல்லூரியில் சேர்ப்பதற்கு பணம் தேவை என்பதால் அதிகப்படியாகவே தள்ளி எடுத்து விட்டாள்.

""சரஸ்வதி, ஒவ்வொருவருக்கும் எவ்வளவு வரும் என்று கணக்குப் போட்டு திங்கள்கிழமை வசூல் செய்து பாப்பம்மாவிடம் கொடுத்துவிடு... பாவம், பணம் தேவையென்பதால் தள்ளியெடுத்திருக்கிறாள்''

சித்ரா, சரஸ்வதியிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு நகர்ந்தாள்.

சித்ரா வீட்டிற்கு வந்ததும் புடவைகளை மாமியாரிடம் தந்தாள். தான் பெற்ற பெண்களுக்கு மருமகள் புடவைகள் வாங்கி வந்ததில் அவ்வளவு சந்தோஷம்!

புடவைகளை சித்ராவின் கணவர் பார்த்துவிட்டு, ""ரொம்பவும் நன்றாயிருக்கின்றன, சித்ரா! சொன்னவுடனே சிரத்தையாக வாங்கி வந்து விட்டாயே. உனக்கிருக்கும் வேலைப்பளுவில் இதை வாங்க நேரமிருந்ததா?'' என்றார்.

கணவரின் வார்த்தைகள் சித்ராவுக்குப் பெருமையாக இருந்தன.

""அதை ஏன் கேட்கிறீர்கள்? இன்று பார்த்து செம வேலை... ரொம்ப ரொம்ப பிஸி... ஆனாலும் உங்கள் அருமைத் தங்கைகளுக்கு நீங்கள் சொல்லிவிட்ட பிறகு வாங்காமல் வர முடியுமா?''

கண்களைச் சிமிட்டியபடி கணவரைப் பார்த்து சித்ரா சொன்னவுடன் எல்லோரும் சிரித்து விட்டார்கள்!

சரித்திர நாவல் எழுதுவது எப்படி?

சரித்திர ஆராய்ச்சி செய்யவேண்டும். சரித்திர புத்தகங்களைப் படிப்பதில் எந்த இடத்தில் நல்ல கதைக்கு சரித்திரம் இடம் கொடுக்கிறது என்று பார்க்க வேண்டும். அந்த இடத்தைப் பற்றி - அந்தப் பகுதியின் காலத்தைப் பற்றி, அந்த கதையில் வாழ்ந்த மக்களின் நடை உடை பாவனைகள், போர் முறைகள், ஆயுதங்கள் இவற்றைப் பற்றி இருக்கும் நூல்களை ஆராய வேண்டும். அந்த ஆராய்ச்சியை உங்கள் கதையில் கற்பனையில் - சொல்வளத்தில் குழைத்து மக்களுக்கு அளிக்க வேண்டும். தவிர, வாழ்க்கையின் தத்துவங்களையும் நிரம்ப சொல்ல வேண்டும். இதுதான் சரித்திர கதையை எழுதும் வழி.

ஆதாரம் : "எழுதுவது எப்படி'

சாண்டில்யனின் நூலிலிருந்து.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.