எனக்கு வயது 55. கடந்த 2 வருடமாக காலை, மதியம், இரவு உணவில் புளி சம்பந்தப்பட்ட தக்காளி, புளித்த மோர், தயிர், இட்லி புளிக்காமல் இருந்தாலும் 2 மணி நேரத்திற்கு பிறகு மூக்கில் நீராக வடிந்து கண் எரிச்சலுடன் நாள் முழுவதும் சிரமப்படுகிறேன். 2 மணிநேரம் கழித்து எதுக்களித்து புளிப்பு, காரம் போன்ற திரவம் மட்டும் வெளியே வாந்தியாக வந்துவிடுகிறது. மற்ற வகை உணவுகள் நன்கு செரிமானமாகி பசியெடுத்துவிடுகிறது. இது எதனால்? இதை எப்படி குணப்படுத்துவது?
ந.த.வாணிதாசன், அலங்காநல்லூர்.
உணவைச் செரிமானம் செய்து அதை கீழ்நோக்கிச் செலுத்தும் பாசகம் எனும் பித்ததோஷம் சீரான நிலையில் செயல்பட்டால் இதுபோன்ற உபாதை தோன்றாது. அதனுடைய குணங்களாகிய சிறிது நெய்ப்பு, ஊடுருவும் தன்மை, சூடு, லேசான தன்மை, துர்கந்தம், மலமிளக்கும்தன்மை, நீர்த்ததன்மை போன்றவற்றுடைய ஏற்றக்குறைவுகளாலும் இதுபோன்ற அவஸ்தையை ஏற்படுத்தும்.
அதிலும் முக்கியமாக ஊடுருவும் தன்மையும், சூடான தன்மையும் அதிகரிக்கும்பொழுது செரிமானம் நடந்துகொண்டிருக்கும் நேரத்தில் இவற்றினுடைய உணவுக்குழாயில் மேல்நோக்கிய பயணமானது புளிப்பை ஏற்படுத்தி வாந்தியாக வெளியே கொண்டு வரும். இவை இரண்டும் லேசான தன்மையுடையதால் உணவை மேல் கொண்டு வராமல் அவை மட்டும் சீற்றம் பெற்று மேலெழும்பொழுது சிலருக்கு எரிச்சலுடன் கூடிய பித்தவாந்தி ஏற்படும். வரக்கூடிய வாந்தியில் நிறம் பச்சையாகவோ, மஞ்சளாகவோ, ஒரு சில கொழுப்பு பதார்த்தங்களுடன் காணப்படும்.
உணவுக்குழாயில் புண் ஏற்படவும் வாய்ப்புண்டு.
அதனால் நெருப்பும், காற்றும், ஆகாயமும் ஒருங்கே கொண்ட உணவுப் பொருட்களாகிய காரம், புளிப்பு, மசாலாப் பொருட்கள், பெருங்காயம், பூண்டு, பச்சைமிளகாய், சோம்பு, கரம் மசாலா, கடலை எண்ணெய், நல்லெண்ணெய், புளித்துப் போன மாவுபொருட்கள், மீன், சிக்கன், கருவாடு போன்ற உணவுவகைகளை நீங்கள் அவசியம் தவிர்க்க வேண்டும்.
சாத்வீக உணவுவகைகளான நெய், தேன், நெல்லிக்காய், புடலங்காய், பால், வெண்ணெய், கீரைகள், தண்ணீர், மோர், நீர்க்காய்களாகிய வெள்ளரி, பீர்க்கு, சுரைக்காய், தோசக்காய், கொடிக்காய்களாகிய கோவக்காய், பூசணிக்காய், பாகற்காய் ஆகியவற்றை உணவில் நீங்கள் தாராளமாக பொரியலாகவோ, கூட்டாகவோ சமைத்து உண்ணலாம். சாப்பிடும்பொழுது காரசாரமான விவாதங்களில் ஈடுபடாமல் மனதில் அமைதியுடன் மகிழ்ச்சியாக உணவேற்க இதுபோன்ற பிரச்னையை தவிர்க்கலாம்.
மேல்நோக்கிச் செல்லும் பித்தத்தை கீழ்நோக்கி ஆசனவாய் வழியாக செலுத்த வேண்டுமென்பது ஆயுர்வேதச் சிகிச்சையில் முக்கியதொரு சிகிச்சையாகும். அந்த வகையில் த்ரிவிருத் லேகியம் என்ற மருந்தை 10 நாட்களுக்கு ஒரு முறை பித்தத்தை வெளியேற்றுவதற்காக பயன்படுத்துவது நல்லது. காலையில் 8 மணியளவில் புழுங்கலரிசிக் கஞ்சியை வடிகட்டி கஞ்சி நீரினை மட்டும் மூன்று டம்ளர் (1 டம்ளர் 300 மி.லி) அளவில் வெதுவெதுப்பாகச் சிறிது உப்புக் கலந்து சாப்பிட்டு அது செரிமானம் ஆகும் வரை காத்திருக்கவும். காலையில் சுமார் 11 மணி அளவில் குடித்தக் கஞ்சி செரித்து நன்றாக பசி ஏற்பட்ட உடன் இந்த லேகிய மருந்தை 20 முதல் 25 கிராம் வரை நக்கிச் சாப்பிடவும்.
அதன் பிறகு வெந்நீர் குடித்தலும் வீட்டின் உள்ளே நடைப்பயிற்சியும் உள்ளங்கையை ஒன்றோடு ஒன்று தேய்த்துச் சூடாக்கி வைப்பதுமாகச் செய்துகொண்டிருக்க, அடுத்த 2 மணி நேரத்தில் நீர் பேதியாகி குடலில் உள்ள தேவையற்ற பித்தம் நன்றாக வெளியேறி விடும்.
பித்த நீரைக் கட்டுக்குள் வைத்திருக்கும் சங்கு பர்ப்பம், அப்ரகபஸ்மம், வராட்டிகா பஸ்மம், காமதுகா ரஸம் போன்றவை சாப்பிடத் தகுந்த நல்ல மருந்துகள். இவற்றில் ஏதேனும் ஒன்றிரண்டையோ அல்லது மூன்றையோ கலந்து சிறிது தேன், நெய் குழைத்து ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று தடவை உணவிற்குப் பிறகு அரை மணி நேரம் கழித்து நக்கிச் சாப்பிட புளித்த நீர் வாந்தியானது வராமல் மட்டுப்படும். சியவனப்பிராசம் என்னும் லேகிய மருந்தும் மிருத்வீகாதி எனும் லேகியமும், பரூசகாதி எனும் லேகியமும் காலை மாலை ஒன்றிரண்டு டீஸ்பூன் நக்கிச் சாப்பிடுவதற்கு ஏற்ற நல்ல மருந்துகளாகும்.
(தொடரும்)
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.