தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: தேன்... வெங்காயச் சாறு... பால்... பூண்டு!

காலையில் இரண்டு நீர் பொருட்களைச் சேர்த்து உண்பதால் ஏற்படும் நன்மை என்ன? என்ற ஆராய்ச்சியை தங்களுடைய கேள்வியின் வாயிலாகச் செய்ய

எஸ். சுவாமிநாதன்

என் வயது 63. கடந்த ஒரு மாதகாலமாக நான் தினமும் காலையில் வெறும் வயிற்றில் 15-20ml வெங்காயச் சாறும், அதே அளவு தேனும் கலந்து சாப்பிட்டு வருகிறேன். இரவு படுக்கபோகும்போது 4 பற்கள் பூண்டை 1 டம்ளர் பாலில் போட்டு சுட வைத்து, பாலைக் குடித்துவிட்டு வெந்த பூண்டை சாப்பிட்டுவிடுகிறேன். இவைகள் இரத்த அழுத்தத்தைச் சீராக்கியும், அதிகமான கொழுப்புச் சத்தை குறைத்தும், இதயத்திற்கு செல்லும் இரத்தக்குழாயில் உள்ள அடைப்புகளை கரைத்து இரத்த ஓட்டத்தையும் சீராக்கும் என நண்பர் சொல்லி இவை இரண்டையும் குடித்துக் கொண்டு இருக்கிறேன். இது சரியா? உடல் உஷ்ணம் அடையுமா? தொடர்ந்து சாப்பிடலாமா?

ந.செல்வசுந்தரம், ஈரோடு.

காலையில் இரண்டு நீர் பொருட்களைச் சேர்த்து உண்பதால் ஏற்படும் நன்மை என்ன? என்ற ஆராய்ச்சியை தங்களுடைய கேள்வியின் வாயிலாகச் செய்ய வேண்டியிருக்கிறது. சின்ன வெங்காயத்தைத் தேனில் கலந்து சாப்பிடுவதால் உடற்சூடு, மூலம், பித்தத்தால் ஏற்படும் சிரங்குகள் மற்றும் வாய்ப்புண், சூட்டினால் ஏற்படும் பேதி ஆகியவற்றைக் குணப்படுத்தும். சிறுநீரை அதிகம் பெருக்கும். இதயத்திற்கு பலம் தரும். தேன் பொதுவாக உடல் வறட்சி தரும். உடலில் அதிநுட்பமான பகுதிகளிலும் எளிதில் ஊடுருவிப் பாய்வதால் சிறந்த ரசாயனப்பொருள். சீக்கிரத்தில் செரிமானம் ஆகும். பசியைத் தூண்டும். உணவை செரிக்கச் செய்யும். உடலுக்கு அழகு, பொலிவு, வலிவு, புஷ்டி, சூடு, போகசக்தி தரும் ஜீவசத்துள்ள உணவுப் பொருள்.

நீரில் நெருப்பு என்ற சொல் வழக்கு உண்டு. எதிர்பாராத இடத்தில் தோன்றும் பொருளை இப்படிக் குறிப்பிடுவார்கள். மேகத்தின் இடையே தோன்றும் வைத்யுத அக்னி  மின்னல், கடலின் இடையே அதன் தண்ணீரை அளவு மீறாமல் காக்கும் வாடவாக்னி, வயிற்றின் நீர்கசிவின் இடையே உள்ள ஜாடராக்னி என்ற இந்த மூன்றும் நீரில் நெருப்புகள். இந்த நெருப்பிற்கு ஆதாரம் நீர். செயலால் நெருப்பென ஊகிக்கிறோம். அதாவது தோற்றத்தில் நீராகவும், செயலில் நெருப்பாகவும் இருப்பவை. நெருப்பின் தன்மைகளில் ஒளி  எரிப்பு என்ற இரண்டு மின்னலிலும் வற்ற வைப்பது வாடவாக்னியிலும், பக்குவம் அடையச் செய்வது ஜாடராக்னியிலும் காணப்படும். ஜாடராக்னியின் தன்மை நீரில் ஒளிந்துள்ளது. அதனால் ஜீரண திரவங்களையே ஜாடராக்னி அதாவது பசித்தீ என்று மேலெழுந்தவாரியான கணிப்பு.

காலையில் நீங்கள் சாப்பிடும் வெங்காயச்சாறும் தேனும் சேரும்போது மேற்குறிப்பிட்ட பசித்தீயினுடைய நெருப்பிற்கு ஆதாரமாகிய ஜீரண திரவங்களைத் தூண்டுவதால் அதனுடைய சீரான செயல்பாடு என்றென்றும் நிலைக்கப் பெறும் என்பதால் தங்களுடைய ஆயுளானது சீரான, சத்தான, ஆரோக்கியமான உணவுவகைகளால் நீண்டு நோயற்ற வாழ்வினை அதுவே அமைத்துத் தரும்.

இரவில் பூண்டைப் பாலுடன் சேர்த்து வேக வைத்துச் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்ற ஆராய்ச்சியும் தேவைப்படுகிறது. நரம்பு மண்டலத்தில் இதன் சக்தி சீக்கிரமாகப் பரவும். நரம்புமண்டலத்தைத் தூண்டி வலுப்படுத்தும். ஆகையால் இடுப்புப்பிடிப்பு, சயாடிகா எனப்படும் இடுப்பு முதல் பின்தொடை வழியாகச் செல்லும் நரம்புச் சுருட்டல், முகத்தில் ஏற்படும் பக்கவாதம், உடலை ஒரு பக்கம் செயலிழக்கச் செய்யும் பக்கவாதம், தொண்டையைச் சார்ந்த உபாதைகள், கீல்வாயு போன்ற நோய்களை இதன் மூலம் நீங்கள் தவிர்க்கலாம், அடிவயிற்றில் வாயு அடைத்து மலமூத்திரக்கட்டுடன் எதிர்த்து இதயத்தில் அழுத்துவதால் மார்புவலி அதிகமாக இருக்கும்போது பாலில் வேக வைத்த பூண்டை சாப்பிட்டு, அதன்மேல் பாலையும் சூடாக குடிப்பதால் வயிற்று உப்புசம் குறைந்து, மலமூத்திரத் தடை விடுபட்டு

இதயஅழுத்தம் குறைந்து வலி குறையும். இதயம் வலுப்பெறும். நெய்ப்பும், சூடும் நிறைந்த பூண்டை பாலில் வேக வைப்பதால் அதனுடைய காரத்தையும், சூட்டையும் குறைக்கலாம். ஆனாலும், நீங்கள் குறிப்பிடுவதுபோல் நான்கு பல் பூண்டிற்கு மேல் சாப்பிடவேண்டாம். மற்ற நன்மைகளாகிய இரத்த அழுத்தத்தைச் சீராக்குவதும், அதிக கொழுப்புச் சத்தை குறைக்கவும், இதயத்திற்கு செல்லும் இரத்தக்குழாயில் உள்ள அடைப்புகளைக் கரைத்து இரத்த ஓட்டத்தை சீராக்குவதும் நெருப்பிற்கு ஆதாரமான நீரை இவ்விரு பிரயோகங்களும் சீராக்குவதன் மூலமாக நிச்சயம் நீங்கள் பெற முடியும். வாரத்தில் 3 அல்லது 4 நாட்கள் சாப்பிட்டாலே போதுமானது. 

(தொடரும்)

பேராசிரியர்  எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT